மீபொருண்மையியலும் சில படைப்புக்களும். (Metaphysics & Creations)
மீபொருண்மையியலும் சில படைப்புக்களும். (Metaphysics & Creations)
•••••••••••
""எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு""
இந்தக் குறள் தான் தமிழின் இலக்கியப் படிமுறை வளர்ச்சியின் ஆரம்பகால மீபொருண்மையியல் கூற்று எனலாம். மீவியற்பியல், பெளதீக அதீதவியல், மாய உருத்திரிபு என்று பல விகற்ப பெயர்களால் அழைக்கப்படுகிறது.
'மீ' என்றால் ஏற்றம் எனவும், 'பொருண்மை' என்பது
பொருளின் தன்மை என வந்து ஏற்றப்பொருண்மையியல் என்றும் பெயர் கொள்ளலாம்.
பொதுவாக கிரேக்கர்களால் Meta எனும் சொல்லிற்கு Beyond (அப்பாற்பட்டது) என்று அர்த்தம். மெட்டாபிசிக்ஸ் என்பதை "பெளதீகத்திற்கு அப்பாற்பட்டது" என்று உத்தேசமாக பொருள் கொள்ளலாம். மெய்யியல் கோட்பாடான மீபொருண்மையியல் இருப்பு மற்றும் உலகம் போன்ற ஆத்மார்தமான கேள்விகளுக்கு எழுவாயில் இருந்து
"இருப்பது என்ன?"
"உலகம் இருக்கும் விதம் என்ன?" போன்ற கேள்விகளை எழுப்பி விடைகாண முயற்சிக்கும் ஒரு மெய்யியல் நடைமுறைதாம்.
சாங்கியமும், வேதாந்தமும் எப்படி ஒரு மதம் சார்ந்த தத்துவார்த்த சிந்தனையாக உருப்பெற்றதோ அதேபோல் தான் மீபொருண்மையியல் படிமமும் படிப்படியாக காலந்தோறும் செல்வாக்குற்று ஒரு தொன்ம படிவமாக மாற்றமுற்றுள்ளது. இந்த மெய்யியல் நிலைப்பாடானது இலக்கியம், திரைப்படம், பாடல்கள் முதலான படைப்பியல் பெருங்கூறுகளில் செல்வாக்கினைச் செலுத்தி வருகின்றது.
நவீன தமிழ்ப் படைப்பிலக்கியங்களில்
மீபொருண்மையியலின் செல்வாக்கு வெளி மிக அரிதாகும். புதுமைப்பித்தனின் திரில்லர் சிறுகதையான 'பிரம்ம ராட்ஸஸ், பிரமிளின் குறுங்காவியமான 'ஆயி', யுவன் சந்திரசேகரின் 'குள்ளச்சித்தன் சரிதம்' நாவல், மற்றும் கவிதைகள், எஸ்.ராவின் 'யாமம்' நாவல், கவிஞர் நரன் கவிதைகள், தேவதச்சன் மற்றும் தேவதேவன் கவிதைகள் என்று சிலரை மீபொருண்மை வெளிக்கு அழைத்து வரலாம். மற்றும் மெட்டாபிசிக்ஸ் பற்றிய கருத்துக்கள் பேசிய சில ஹாலிவூட் திரைப்படங்களையும் இந்த வெளிக்குக் கொண்டுவரமுனைந்துள்ளேன்.
"....அவன் அப்பொழுது நின்ற இடம், அப்புறத்து அண்டமன்று; கிரக கோளங்கள் சுழலும் வெளியன்று; அது பூலோகந்தான். அவனுடைய வாசஸ்தலமாயிருந்த குகையின் பலிபீடத்தில் அவனுடைய ஆசையின் நிலைக்களமான பழைய தேகம், துகள்களாகச் சிதைவுபட்டுக் கிடந்தது. ஜடத்திலே வெறும் ஆகர்ஷண சக்திபோல், சூட்சுமமான உருவற்ற கம்பிபோல், பார்வைக்குத் தென்படாத ஒளிரேகைபோல் அவ்வுடல் அவனுக்குக் காட்சியளித்து வந்தது....""
இது புதுமைப்பித்தனின் சிறுகதைத் துண்டம் ஒன்று. இதில் அடுக்கிவருகின்ற ஜடப்பொருட்களின் வெளி தமிழில் பிரக்ஞைபூர்வமான மீபொருண்மையியல் அடைவுக்குத் தகுந்த சான்று எனலாம். பிரம்ம ராட்சஸ் கதையானது பௌதிக "இருப்பு" பற்றியும், பொருள்களின் பண்புகள், இடம், காலம், காரண காரியம், நிகழும் தன்மை போன்றவை பற்றிக் கூறி மீபொருண்மையியலை மேலும் தன்னிலையில் ஆராய வைக்கிறது. கூடவே புதுமைப்பித்தன் அண்டவியல்/ பாருலகியல் (Cosmology) பற்றிய இடைச்செருகல்களையும் ஊடுகடத்தி ஒரு பூரண அறிவியல் வெளியை தமிழ் படைப்புலகிற்குத் தந்திருப்பார்.
இதே போன்ற கோணத்தில் 2012
ல் அன்ட்ரூ ஸ்டான்ரன் (Andrew Stanton) இயக்கத்தில், 'A Princess of Mars' என்ற நூலை மையப்படுத்தி வெளியான ஜான் கார்டர் (John Carter) எனும் திரைப்படத்தைக் கூறலாம். பூலோகம்-பாருலகம்-துகள்கள் என்பவற்றின் ஐம்பூதம் தாண்டிய அண்டவெளி படம் எனலாம். கிட்டத்தட்ட புதுமைப்பித்தனின் பிரம்ம ராட்சஸ் சிறுகதைக்கு ஹாலிவூட் சாயம் பூசினால் ஜான் கார்டர் போல்தான் வரும்.
2003 ல் வெளிவந்த குள்ளச்சித்தன் சரிதம் நாவல் கூட ஒரு பின்நவீனத்துவப் பாணியில் படைக்கப்பட்டிருந்தது. கப்ரியல் கார்சியா மார்க்கஸின் மாய யதார்த்தம் (Magic Realism) நாவலில் குடிகொண்டிருக்கக் காணலாம். பல தனிக்கதைகள் மையப்புள்ளிகள் இல்லாது மீபொருண்மையியல் மூலகங்களை முன்வைத்துக் கதைசொல்லிப் போகும்.
""இந்த மணல் பரப்பின் ஒவ்வொரு துகளுக்கும் ஒரு பிரத்தியேக சரித்திரம் உண்டு."" என்று நாவலின் ஒலிப்பிலேயே சில பௌதிக எண்ணங்கள் (மணல்- துகள்- சரித்திரம்) கருத்தியலை பொருளுறச் செய்கிறது.
""...பறவைகள் அரசாள வந்திருந்தால், மனிதர்கள் காட்சிப் பொருட்களாயிருப்பார்கள். மனிதர்களின் சம்போகம்
பற்றி மயில்கள் குறிப்பெடுத்திருக்கும்."" என்பதில் ஒரு மாய எதார்த்த உயிர்ப்பை மிக வெளிப்படையாகவே காணலாம்.
கவிஞர் நரனின் கவிதைகளானவை சற்று மாறுபட்ட இயற்கைவள சிந்தனை மிக்கவை. ஒரு ஜென் நிலையையும், மஞ்சள் கோப்பி அருந்துவது போன்ற அத்துவான தனிமையையும் கொண்டுவரும் அலாதி இன்பம் கொண்டது. அவரது உப்புநீர் முதலை கவிதைத் தொகுப்பு அதற்கு சான்று பகரும்.
'கானகம்' என்ற தலைப்பில் வரும் கவிதையில்;
""புத்தகத்தின்
73ம் பக்கம்
கிழிக்கப்பட்டிருக்கிறது
அதில் தான்
தம் கரும்புரவியை
மேய்ந்து வரும்படிக்கு
அவிழ்த்துவிட்டிருந்தான் வீரன்
கிழிந்த பக்கத்தைத் தேடி அலைகிறான்
வாசகன்
குதிரையும் வீரனும் ஒருவரையொருவர்
தேடி அலைகின்றனர்
கிழிந்து விழுந்த கானகத்தில்""
இக்கவிதையின் சாராம்சம் காண சீன இலக்கியக் கொள்கையான ஒன்று இரண்டாகப் பிரிதல் ( One Divides into Two ) என்ற இணைமுரணியல் கொள்கையின் பிரகாரம் மெட்டபிசிக்ஸ் தொடர்புறும் தளம் பற்றி துலாம்பரமாகத் தெளிவுபடுத்தலாம். ஒரு கிழிதலில், புத்தகப் பக்கத்தை வாசகன் தேடுவதும், குதிரையும் வீரனும் ஒருவரை ஒருவர் தேடுவதும் இணைமுரணியல் என்று கருதினால் பக்கத்திலிருந்து வெளிவந்த குதிரையினை மீபொருண்மையியல் என்றே கருதத் தகும். இவ்வுலகம் சாதாரண பொருட்களால் தான் ஆக்கப்பட்டது என்ற புதுயதார்த்தமும் (Neorealism) இக்கவிதையில் முளைவிடக்காணலாம். தனி முழுமை பிளவுறலும் அதன் பிளவுற்ற முரண்பகுதிகளை அறிந்திடலும் தான் இணைமுரணியலின் சாரமாக உள்ள அதேநேரம் மாய எதார்த்தப்பிணைப்புகள் தான் மீபொருண்மைவாதக் கவிதையின் இறுதிச் சாராம்சத்தைப் பூர்த்தியடையச் செய்கிறது எனில் மிகையல்ல.
நரனின் முதலை என்றொரு கவிதையில்;
"உப்புநீர் முதலையொன்று துயில்கிறது.
தலையை நீருக்குள்ளும்
உடலை வெண்மணலிலும்
கிடத்தியபடி
அப்போது அதனுடல்
கார்காலத்தில் தொடங்கி
கோடைகாலம்வரை நீண்டிருந்தது."
உப்புநீர் முதலையின் சாங்கிய நிலையில் நீருக்குள் உள்ள தலை கார்காலத்தையும், மணலில் உள்ள உடல் கோடைகாலத்தையும் மையப்படுத்தி வெளி-நேரத் தொடரியம் போல உயிர்ப்பொருளின் காலப்பொருண்மை நீண்டுகொண்டே போகிறது என்ற தத்துவார்த்த மையப்புள்ளியை இங்கு முன்வைக்கலாம். நரனின் கவிதைகள் சமகாலத்தில் Magnum Opus படைப்புகள் என்றே கூறவேண்டும்.
2007 ல் வெளியான Youth Without Youth என்ற பிரான்சிஸ் போர்ட் கோப்பலாவின் திரைப்படம் மெட்டாபிசிக்ஸ் சம்பந்தமான ஒரு கவித்துவ மீபொருண்மை திரைப்படமாகும்.
'உருவமில்லை, உணர்வில்லை, சிந்தையில்லை, தெரிவுகளில்லை, மனக்கிளச்சிகளுமில்லை இவற்றைக்கடந்து எங்குமே போகலாம்' என்ற கருத்தமைவில் திரைப்படம் நகர்ந்து செல்லும்.
நரனின் கவிதைகள் போல.
மீபொருண்மையியல் எனும் மெய்யியல் கோட்பாடு தமிழின் நவீன கவிதைகளிலும் நாவல்களிலும் எதிரொலித்தது சற்றுக் குறைவுதான். ஆனால் பின்வரும் ஆங்கிலத் திரைப்படங்களின் காட்சிநிலை இக்கோட்பாட்டை எம்மவரும் உள்வாங்க வாய்ப்பாக இருக்கும்.
திரைப்படங்களாவன;
1. The Fountain (2006)
2. Enter the Void (2009)
3. I Origins (2014)
4. Eureka (2000)
5. Upstream Color (2013)
6. Mr. Nobody (2009)
7. The Seventh Seal (1957)
8. The Tree of Life (2011)
9. Spring, Summer, Fall, Winter… Spring (2003)
10. The Double Life of Veronique (1991)
இதுபோன்ற மேற்கத்திய தத்துவங்கள் தமிழிலக்கியப் பரம்பல்களில் இலக்கிய காலவமைதிக்குப் பெரும் பங்காற்றும் புதிய முயற்சிகள்தாம்.
"I met Death today. We are playing chess"
-Ingmar Bergman.
Comments
Post a Comment