சுயாந்தன் கவிதைகள்- மலைகள் இதழில் பிரசுரமானது.

1. நீங்கள் தந்த துப்பாக்கிகள்.
========
நாங்களும் எங்கள் எதிரிகளும்
ஆரம்பகாலங்களில்
“Pistol” களால் மட்டுமே சண்டையிட்டோம்.

பின்னொரு நாளில்,
எங்களுக்கு T-56 துப்பாக்கி தந்தீர்கள்.
எதிரிகளுக்கு AK-47 கொடுத்தீர்கள்.

சில மாதங்களில்,
எங்களுக்கு RPG உந்துகணைகள்
கழிவீடுகளில் தந்தீர்கள்.
சத்துருக்களுக்கு “டாங்கி” களை வழங்கினீர்கள்.

சில வருடங்களில்,
எங்களை சமாதானம் பேச அழைத்தீர்கள்.
எதிரிகளுக்கோ 4G போர் விமானங்களைக் கொடுத்தீர்கள்.

இப்படியே உங்கள் வியாபாரத்தில்,
நாங்கள்-எங்கள்-எதிரிகளையும்,
எங்கள்-எதிரிகள்-எங்களையும்
பலியெடுத்தவாறே பகைமையை வளர்த்தோம்.

நீங்கள் எங்களுக்கான துரோகிகளையும் எங்களுக்கு விற்றுள்ளீர்கள் என்பதறியாமல்….

மதரஸாக்கள்.
மடாலயங்கள்.
கோவில்கள்.
தேவாலயங்கள்.
அனைத்தையுமே Atheism பேசி நிர்மூலமாக்கினோம்.
கல்விமான்களின் ரத்தங்களை அங்குடைந்த செங்கற்களில் தெளித்தோம்.

உங்களது வியாபாரத்தில்,
எமது பெற்றோரையும்
எமது ஆசிரியரையும்
எமது சிறார்களையும்
எமது பெண்களையும்
எமது உயிரையும்
எமது போராளிகளையும்
எமது மானத்தையும்
எமது எதிரிகளையும்
அதிகமாக இழந்தோம்.

ஆனால் எங்களது துரோகிகள் மாத்திரம் உங்களது போற்றுதலில் உயிருடன் உள்ளனர்.
அவர்கள்,
வேறொரு புரட்சி பற்றியும்,
சுயமரியாதை இயக்கம் பற்றியும்
பேசிக்கொண்டு தேர்தலுக்கு வாக்குச் சேகரிக்கின்றனர்.

மக்கள் துரோகிகளை மன்னித்து,
துரோகங்களை மறந்து,
கையில் மை வைக்கும்
அரசாங்க ஊழியனின்
முகத்தைப் பார்த்து
நீளமான பனிபடர்ந்த
வீதிகளில் கையில்
“டோர்ச் லைட்டு” டன்
வாக்களிக்க லைனில் நிற்கின்றனர்.

ஒரு விதவை
‘மன்னிக்க வேண்டும்’
ஓராயிரம் விதவைகளுக்கான
Line விரைவில் தயாராகிறது என்ற ஓசை எங்கிருந்தோ ஒலிக்கிறது.

ஆரம்பத்தில் எங்களுக்குப் பிஸ்டல் தந்தது யாரென்ற கேள்வியை ஒரு விதையின் மகன் என்னிடம் கேட்கத் தொடங்குகிறான்…….

“சரி போகட்டும்” என்ற பதிலை பதில் சொல்ல முடியாமல் அவனுக்குச் சொல்லிவிட்டு,
பழையபடி சந்திக் கடைகளில் பேப்பர் வாசித்து அரசியல் பேசக் கிளம்பிவிடுகிறேன்……

2. வக்கிரம்.
=======
சாலையின் கனரக வாகனத்தில் மிதிபட்டு செத்துப்
போனது-கின்று-கிறு
அணில்.

நேற்றெல்லாம்;

பாதி வெட்டப்பட்ட மாமரக் குற்றியில்,
சேவல் கிளறித் திரிந்த கமுகு மரநிழலில்,
வேலியில் தனித்து நின்ற ஒற்றைப் பனையில்,
காயப்போடப்பட்ட இளம் பெண்ணின் உள்ளாடைகளில்,
சுவரில் ஒட்டப்பட்ட கமல் ஹாஸனின் புகைப்பட மீசையில்,
மின்சாரம் பாய்கின்ற சிறிய வயர்களில்,

வீடில்லா வாழ்க்கை வாழ்ந்து “சித்தராகிப்” போனது.

தனது குட்டிக்கு மட்டும்
நான் தனித்திருக்கும்
எனது வீட்டு மின்பெட்டியில்
இளம் பெண்ணொருத்தியின் உள்ளாடை கொணர்ந்து
வீடுகட்டிக் கொடுத்துள்ளது.

நான்கூட ரசனைக் குறிப்புகள் எழுதாமல் ரசிப்பதுண்டு.
ஒரு சொல்லுக்காக
ஒரு வரிக்காக
ஒரு பந்திக்காக
ஒரு கவிதைக்காக
ஒரு தொகுப்புக்காக
ஒரு மொழிக்காக
ஒரு மொழிபெயர்ப்புக்காக…..

இனி,
செத்துப்போன அணிலின் மரணம் போல,
எனது ரசனையும்
இன்னொரு கூட்டையும், அணிலையும், உள்ளாடைகளையும் தேடியலையலாம்…….
============
http://malaigal.com/?p=9624

இ. சுயாந்தன்.

Comments

Popular Posts