விரதம் இருக்கும் புத்தர்

விரதம் இருக்கும் புத்தர்.
=====
வீதி குடிகொள்ளும் நிசப்தம்.
வீட்டுக்கு வெளியே ராணுவக் காலடியில் என் மூத்த அண்ணனின் மண்டையோட்டு சப்தம்.

புத்தன் குடியிருந்த கோயில்.
புதன் முதல் செவ்வாய் வரை பிக்குகளுக்காம்.
சில பூசாரிகளையும் கொன்றனர் அவர்களே- இன்று வியாழன்.

பூமிக்கு உள்ளே ஒரு சூரியன்.
பனித்துளி கற்பைப் பறிகொடுத்த கதை என்னவென்றே
என்தம்பி வந்துசொல்வான் சிறைதாண்டி தன் பிணக்கையின் ஓரத்தில் குத்திய குறியீட்டுப் பச்சையால்.

காக்கைகளின் ஓய்விடம் என்வீடு.
பாரதியின் நந்தலாலா செத்துவிட்ட கதையறிவேன் போன தசாப்தங்களில், என்றாலும் ஒரு அக்கினிக்குஞ்சு தேடி அலைகிறேன் கல்லறைக் கற்களிடம்…

வயல்வெளியில் தனித்த மூங்கில்.
இசைக்க அழைக்கும் காற்றெல்லாம் தீயழிந்த உருவத்துடன் உள்ளே புகுந்து என் தனிமைகளையும், நாட்டின் சிறைகளையும் மேலும் மேலும் நிரப்பாமல் இருக்க
நானே காற்றாக மாற முன்னங்கால்களை நகர்துகிறேன்….

சில நண்டுகளின் உதவியுடன்…

•••
மலைகள் இதழில்...
http://malaigal.com/?p=9507

Comments

Popular Posts