இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் ஒரு பார்வை
இந்து மதம் என்பது சாதியப் பிரிவால் மட்டுமே வலுப்பெற்றுள்ளது என்ற வலுவான கோஷம் அண்மைக்காலமாக உண்டாக்கப்பட்டுள்ளது. அதனைப் பிரச்சார நோக்கில் பலர் கொண்டு செல்கின்றனர். அடிமைத்தனத்தை வலியுறுத்திய ஹேகல் முதலியவர்களை இங்கே பெரிய இடத்தில் வைத்திருக்கும் இடதுசாரிகளும் திராவிடச் சிந்தனையாளர்களும் அரசியல் காரணங்களுக்காக இந்து மதத்தை மிக ஆழமாக இழிவுபடுத்துவதைக் காணமுடிகிறது. இதனால் இந்து ஞான மரபு என்பது மிக ஆழமாகப் பாதிக்கப்படுகிறது. அண்மையில் ஒரு தமிழ் டயஸ்போரா கூறினார் இந்துஞான மரபு என்பதே ஒரு போலியான கட்டுக்கதை என்று. அவர் எதற்காக அந்த வாதத்தை முன்வைக்கிறார் என்று ஆழமாக யோசித்துப் பேசும் பேச்சைக் கொண்டு பார்த்ததும் புரிந்து கொள்ள முடிந்தது. இலங்கையில் இந்திய அமைதிப்படையினர் மேற்கொண்ட அட்டூழியங்களுக்கு அவர் முகம் கொடுத்துள்ளார். அப்பபோது குடும்பத்துடன் புலம்பெயர்ந்து அய்ரோப்பா சென்றுள்ளார். அதனால் இந்திய மரபும் இந்து மதமும் வீணானவை என்ற கருத்தினைத் தனக்குள் போட்டுவைத்துள்ளார். எப்போதும் முன் முடிபுகளுடன் உரையாடுகிறார். இதைத்தான் பல தசாப்தங்களாக இங்குள்ள பலர் செய்து வருகின்றனர். இது ஒருசில காலங்கள் மட்டுமே முலாம் பூசி வைக்கப்படும். ஞான மரபின் அடித்தளம் அய்ந்தாயிரம் வருடகாலப் பழம்பெருமை கொண்டது. அதன் உண்மைகளை வெளிக்கொணரத் தொடங்கும்போது இவர்களது சருகு வேலிகள் காணாமல் போய்விடுகிறது.
இணையம் வந்த பிறகு பல்வேறு வதந்திகளையும் அடிப்படை நியாயமில்லாத கருத்துக்களையும் பலர் ஏற்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக இலக்கியத் தளத்தில் பல போலிக் கருத்துக்கள் நடமாடுகின்றன. இலக்கியம் ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பு என்பதாலும் அது அடுத்துவரும் தலைமுறைக்கு இன்னொரு வழிகாட்டி என்பதாலும் அதைப்பற்றித் தொடர்ந்து பேசுகிறோம். அண்மையில் ஒரு நண்பர் பேசும்போது கூறினார் இங்குள்ள கிறிஸ்த்தவ மிசனரிகளின் பிரச்சாரகர்கள் திருக்குறள் ஒரு கிறிஸ்த்தவ நூல் என்றும் அதனை இயற்றியது கிறிஸ்த்தவர் தானென்றும் கூறுகிறார்களே இது உண்மையா என்றார். இதனையே பத்து வருடங்களுக்கு முன்பு கேட்டிருந்தால் நிச்சயமாக ஆத்திரப் பட்டு எதையாவது கூறியிருப்பேன். இப்போது இதற்கு நிதானித்துப் பதில்கூறும் நிலையிலுள்ளதால் அவருக்குச் சில விளக்கங்களைக் கூறினேன். திருக்குறள் இந்திய ஞான மரபில் உண்டான முக்கியமான தரிசனங்களைக் கொண்டு உருவான ஒரு நூல். அதன் அறக் கருத்துக்களுக்கு இந்து ஞான மரபில் வந்த தரிசனங்களே காரணமாக உள்ளன. இவற்றை இந்திய ஞான மரபு என்றும் வகுக்கலாம். ஆசீவகச் சிந்தனைகளைத் தரிசனமாக முன்வைத்தவைதான் குறளிலுள்ள பல வரிகள் என்றும் சிறிய விளக்கத்தை அளித்தேன். அவருக்குக் காலம் பற்றிய விளக்கத்தை வழங்குவதைவிட அவர் கேட்டதன் அடிப்படைகளைப் புரிய வைத்தால் மறுபடியும் குழம்பிவிடமாட்டார். பின்பு அவருடைய மேலதிக தெளிவுக்காக ஜெயமோகன் எழுதிய "இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்" என்ற நூலையும் பரிந்துரைத்தேன். இதனுடன் அல்லாமல் கா.சிவத்தம்பி ஆராய்ந்து எழுதிய "தமிழிலக்கியத்தில் மதமும் மானிடமும்" என்ற நூலையும் ஒருமுறை வாசித்து வரலாற்றுத் தெளிவைப் பெறுமாறு கோரினேன். முக்கியமாக சிவத்தம்பி இந்த நூலில் ஒரேயொரு இடத்தில்தான் தனது தவறை விட்டுள்ளார். "தமிழிலக்கியத்தில் மானுடம்" என்ற கட்டுரையில் "உலகாயுதச் சித்தர் பாடல்" என்று ஒரு சித்தர் பாடலைச் சித்தர் மரபுப் பாடலாகவே குறிப்பிட்டுத் தனது கட்டுரையைக் கொண்டு சென்றார். அது வேறொருவரால் அண்மைய காலங்களில் இணைக்கப்பட்ட பாடல் என்று அறியமுடிகிறது. அப்பாடலை உலகாயுதச் சித்தர் எழுதியதல்ல. இந்த ஒரு தவறைத் தவிர்த்து அந்த நூல் இலக்கியத்தில் மதங்கள் பற்றிய பிராரம்பப் பார்வையைத் தந்து சென்றது.
ஆனால் ஜெயமோகனின் இந்து ஞான மரபு பற்றிய நூல் அப்படியல்ல. மிக ஆழமான மேற்கோள்களைக் கொண்டு இந்து ஞான மரபின் உயிரோட்டமான பகுதிகள் ஆராயப்பட்டுள்ளது. குறிப்பாகக் கவித்துவமாக இருந்த வேதப் பகுதிகள் எப்படி தர்க்கங்களாக மாறின என்றும், அவற்றுள் இருந்த தரிசனங்கள் எப்படி தத்துவ மரபை வளர்த்தன என்ற பார்வையும் மிகத் தெளிவாக உரையாடப்பட்டுள்ளது. இந்து ஞான மரபிலுள்ள
1. சாங்கியம்
2. யோகம்
3. நியாயம்
4. வைசேஷிகம்
5. உத்தரமீமாம்சை
6. பூர்வமீமாம்சை
ஆகிய ஆறு தரிசனங்களின் அடிப்படைக் கூறுகளும் அவை பிற்கால இந்துத் தத்துவ மரபுக்கு எப்படி கால்கோளாயின என்றும் மிகத் தெளிவாக உரையாடப்பட்டுள்ளது. இது தவிர அவைதீக மதங்களான பௌத்தம், சமணம் பற்றியும் அவற்றை வைதீக மதங்கள் வன்முறை ரீதியில் ஒடுக்கியதற்கான ஆதாரங்கள் பொய்யானவை என்றும் மிகத் தெளிவாக விவாதிக்கப்படுகிறது. அவைதீக மதங்களின் வீழ்ச்சிக்கு வேதாந்தியான சங்கரரின் அத்வைதமே உதவியது என்பது ஜெயமோகனின் வாதம். உண்மையில் எந்த மதங்களையும் வன்முறை ரீதியில் துடைத்தழிக்க முடியாது. அதனைத் தத்துவார்த்த ரீதியில் எதிர்கொள்ளவே வேதாந்தங்கள் தோற்றம் பெற்றன. அவைதீக மதங்களுடன் பெரும் விவாதம் செய்தன. முடிவில் சங்கரர் வெற்றி பெற்றார் என்பதே உண்மை வரலாறு. இன்றும் அரசியலுக்காகப் பலர் வேதத்தை ஏற்றுக்கொண்ட வைதீக மதங்கள் வேதத்தை நிராகரித்து விவாதம் செய்த அவைதீக மதங்களை வன்முறைகொண்டு துவம்சம் செய்தன என்பதை எந்த ஒரு வரலாற்றுப் பிரக்ஞை உள்ளவனும் ஏற்க மாட்டான். அத்துடன் வேதத்தை முதன் முதலில் எதிர்த்து விவாதம் செய்ததே உபதிஷதங்கள்தான். வேதக் கருத்துக்கு மாறான பல கருத்துக்கள் உபநிஷதத்திலுள்ளன.
இன்று இந்து மதம் என்று நாம் குறிப்பிடும் மதங்கள் ஆறு வகையானவை. இந்த ஆறையும் உள்ளடக்கியதுதான் இந்துப்பெருமதம்.
1. சைவம்
2. வைணவம்
3. சாக்தம்
4. கௌமாரம்
5. காணபத்யம்
6. சௌரம்
2. வைணவம்
3. சாக்தம்
4. கௌமாரம்
5. காணபத்யம்
6. சௌரம்
இதைவிட பல சிறுதெய்வ வழிபாடுகளும், பிரதேச வழக்குத் தெய்வ வழிபாடுகளும் உள்ளன. இவை சமகாலத்தில் இந்து மதத்துடன் இணைகின்றன. அல்லது இந்துப் பெருமதம் என்ற மரபுக்குள் வருகின்றன. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பழங்குடி மரபுகள் இந்து மதத்துக்குள் இணைந்துள்ளன. அதனுடன் அல்லாமல் நாடுகடந்த பல இந்து ஞான மரபுகளும் இதனுள் உள்ளடங்குகின்றன.
பல ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து விதந்தோதுவது இந்து மதம் என்பது வெறுமனே வர்ணாச்சிரமத்தைப் போற்றுவது, சடங்குகளை மேற்கொள்வது, யாத்திரை மற்றும் ஆலய வழிபாட்டுடன் நின்று விடுவது என்ற மிக மேலோட்டமான கருத்தையே கொண்டு எழுதுகின்றனர். இவற்றைத் தவிர எந்த சான மரபுமற்ற அற்ற ஒரு மதம்தான் இந்து மதம் என்று கூறியுள்ளனர். இன்றும் கூறுகின்றனர். இதற்குக் காரணம் இந்துமதம் பற்றிய புரிதலை வரலாற்று நோக்கிலும், தரிசனங்களின் துணையுடனும் ஆராயாமைதான் என்றால் மிகையல்ல. தரிசனங்களைப் பகுத்து அவை இந்து மதத்தின் இந்து ஞான மரபின் எவ்வகையில் உள்ளடங்குகின்றன என்ற தெளிவு கிடைத்திருந்தால் இப்படியான இகழ்வுகளைத் தவிர்க்கலாம். அல்லது வேறு கொணத்தில் ஆராய்ந்திருக்க முடியும்.
தரிசனம் என்பது பற்றி ஜெயமோகன் இந்த நூலில் கூறுவது;
"ஒரு கருத்து (idea) தர்க்கபூர்வமாக விவாதிக்கப்படும் போது சித்தாந்தம் அல்லது கொள்கை (theory) ஆகிவிடுகிறது. அதை வாழ்க்கையின் எல்லாத் தளங்களுக்கும் விரித்தெடுக்கும் போது அது தரிசனம் (vision) ஆக மாறுகிறது. பிராய்டியம் என்பது ஒரு கொள்கை மட்டுமே. மார்க்ஸியம் என்பது ஒரு தரிசனம். காரணம், மார்க்ஸியமானது அரசியல், பொருளாதாரம், ஒழுக்கவியல், இலக்கியம் என்று எல்லாத் தளங்களுக்கும் பொருத்திப் பார்க்கப்படுகிறது."
இந்துஞான மரபில் உள்ள தரிசனங்களைப் புரிந்து கொள்வதற்கான முன் விளக்கம் இதுதான். கருத்தை விவாதித்து கொள்கையாக்குவதும் அந்தக் கொள்கையைச் சமூக வாழ்க்கைக்குக் கொண்டு சென்று தரிசனம் ஆக்குவதும் இங்கே இந்து ஞான மரபின் அடிப்படையாகும்.
நமது அன்றாட நிகழ்வுகளிலும் வழிபாட்டு முறைகளிலும் கலந்துள்ளது தரிசனங்களேயாகும். ஏனென்பதற்கான விளக்கம்தான் மேலே தரப்பட்டுள்ளது. இந்த இந்து-இந்திய மரபுக்குள் மேலைத்தேயத்திலிருந்து எந்த ஒரு புதிய கருத்தியல் முளைகொண்டாலும் அதன் ஆழ்வடிவில் இருப்பது இந்துத் தத்துவ மரபேயாகும். உதாரணமாக இலங்கையில் பின்பற்றப்படும் பௌத்தம் முழுமையாக இந்துத் தரிசனங்களை உள்வாங்கியதாகும்.
பௌத்தம் அவைதீக மதம் என்று கூறப்படுகிறது. அவைதீக மதங்கள் வேதத்தை ஏற்பவையல்ல. வேதத்தை ஏற்காவிட்டால் அவை யாகம் வேள்வி முதலியவற்றிலும் பற்றற்றவையாகவே இருக்கும். ஆனால் இலங்கையின் பௌத்தர்களும் ஆட்சியாளர்களும் தமது அரசியல் காரணங்களுக்காகவும் இதர நிகழ்வுகளுக்கும் யாகம் வளர்ப்பதுண்டு. வேதம் சொன்ன அதேகமானவற்றை ஏற்பவர்கள்தான் இங்குள்ள பௌத்தர்கள். இதுதான் இந்து ஞான மரபின் தரிசனங்கள் நமது ஆழ்மனதில் குடிகொண்டுள்ளதற்கான மிக அண்மைய உதாரணம்.
இதனையே "பேரப்பிள்ளைகளின் மரபணுக்களில் வாழும் தாத்தா பாட்டிகளைப்போல இத்தரிசனங்கள் நமது மரபின் எல்லா சிந்தனைகளிலும் வாழ்கின்றன" என்று ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஆறு தரிசனங்கள் பற்றி இந்த நூல் மிகத் தெளிவாக உரையாடுகிறது. மிக முக்கியமான விவாதங்களை முன்வைக்கின்றது. பல மார்க்ஸியர்கள் இந்து ஞான மரபு என்பது போலி என்கிறார்கள். ஆனால் அந்த இடதுசாரிகள் தருகின்ற ஆதாரமற்ற வசைகளைவிட ஜெயமோகன் முன்வைக்கும் வாதப்பிரதிவாதங்கள் மிக முக்கியமான கட்டத்தில் எம்மைத் தெளிவுபடுத்துகின்றது.
பல தனித்தமிழ் ஆர்வலர்கள் கூறுவது இந்து என்பது வேறு சைவம் என்பது வேறு என்று. இரண்டுக்கும் தொடர்பு இல்லை என்று. சைவ சித்தாந்தத்தில்கூட இந்தத் தரிசனங்களின் அதீத செல்வாக்கைக் காணமுடியும். பொருள்முதல்வாத மற்றும் கருத்து முதல் வாத அம்சங்கள் நிரம்பியதாகவே சைவ சித்தாந்தம் அடங்கியுள்ளது. இது வேதாந்தங்களுடன் விவாதம் செய்தே வளர்ந்துள்ளது. உதாரணமாக சிவஞானபோதம் என்ற சைவ சித்தாந்தத்தின் ஆதாரநூல் வடமொழியில் இருந்து பெயர்க்கப்பட்டதுதான். அத்துடன் அய்ந்தாம் நூற்றாண்டின் குப்தர்காலத்தில் வேள்விமரபு ஆலயமரபுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. அதே போல சைவசித்தாந்தத்தின் பல இடங்களில் இதன் செல்வாக்கைக் காணமுடியும். இதுவே பிற்கால மரபில் வளர்ந்து இன்றும் இதன் தொடர்ச்சியைக் காணமுடிகிறது. "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்" என்ற பழந்தமிழ் பாடலில் உருப்பெற்றுவிட்டது பாரதப் பெருந்தேசம் என்பதன் ஒன்றுபட்ட கருத்தியல். அந்த ஒன்றிணைவுக்காக மதமாகிப் பரவலடைந்து தத்துவ மரபுகளாகித் தரிசனமாக மலர்ந்து நிற்கிறது அதன் பழம்பெரும் ஞானமரபு.
(சைவசித்தாந்தம் பற்றிய மேலதிக விளக்கங்களுக்கு கா.சிவத்தம்பி எழுதிய "சைவ சித்தாந்தம் ஒரு சமூக வரலாற்று நோக்கு" என்ற கட்டுரையைக் காண்க. இதனை ஜெயமோகனின் ஞானமரபு நூலுடன் ஒப்பீடு பார்க்கவும்.)
ஜெயமோகனின் இந்நூலில் தரிசனங்களின் பின்னணி பற்றி சுருக்கமாக ஆராயப்படுகிறது. தரிசனங்கள் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி வரலாற்றுத் துணையுடன் விளக்கப்படுகிறது. இவற்றின் மீது புரிதல் ஏற்பட்டால் அடுத்துவரும் அத்தியாயங்களிலுள்ள தரிசனங்கள் பற்றி இலகுவாகவே உணரமுடியும்.
1. வேதகாலம்
2. உபநிஷத காலம்
3. தரிசன காலகட்டம்
4. அவைதிக மதங்களின் காலகட்டம்
5. பக்திக் காலகட்டம்
6. பிற்கால வேதாந்தங்களின் காலகட்டம்
7. இந்து மறுமலர்ச்சிக் காலகட்டம்
8. இந்து நவீன போக்குகளின் காலகட்டம்.
1. வேதகாலம்
2. உபநிஷத காலம்
3. தரிசன காலகட்டம்
4. அவைதிக மதங்களின் காலகட்டம்
5. பக்திக் காலகட்டம்
6. பிற்கால வேதாந்தங்களின் காலகட்டம்
7. இந்து மறுமலர்ச்சிக் காலகட்டம்
8. இந்து நவீன போக்குகளின் காலகட்டம்.
இந்து ஞான மரபின் தொடக்கப் புள்ளி வேதங்களாகும். இவை வெறுமனே பிரார்த்தனைப் பாடல்களால் ஆனவை. வாய்மொழியாகப் பாடப்பட்ட இவை சடங்குகளையும் கொண்டாட்டங்களையும் வலியுறுத்துகின்றன. இதில் கவித்துவம் அதிகமுள்ளதாகவும், தத்துவ அடிப்படைகள் அதைவிடக் குறைவு என்றும் ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார். ரிக், யசுர், சாமம், அதர்வனம் ஆகிய நான்கு வேதங்களைக் கொண்டே இந்து ஞான மரபின் தொடக்கப்புள்ளி வரையறுக்கப்படுகிறது. இதில் வேதமரபு பௌராணிக மரபாக மாறியதால் அதர்வனம் நிராகரிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் இதிலுள்ள தாந்திரீக அம்சங்களாகும். கேரளா, ஒரிசா, வங்காளம் பகுதிகளிலுள்ள தாந்திரீக மதங்கள் அதனை ஏற்றுக்கொண்டன. இலங்கையிலுள்ள பலர் இதுபற்றிப் பேசுவர். குறிப்பாக மட்டக்களப்பிலுள்ள பலர் மலையாள மாந்திரீகத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக இன்றும் உள்ளனர். எதுவானாலும் இதனை இந்து ஞான மரபின் நீட்சி என்றுதான் கூறவேண்டும்.
அடுத்து வருவது உபநிஷதங்கள். இவற்றிலிருந்தே இந்து ஞான மரபுக்கான அனைத்துத் தத்துவங்களும் வேர்கொள்ளத் தொடங்குகின்றன. குருசீட விவாதமாகவே இவை இடம்பெற்றுள்ளன. வேதங்களில் கேட்கப்பட்டு விடையளிக்கப்படாத விடயங்களுக்கு விரிவாக தர்க்க பூர்வமாக உரையாடப்பட்டுள்ளது. அத்துடன் உபதிஷதங்களின் அநேக இடங்களில் வேதங்கள் நிராகரிக்கப்படுகின்றன என்ற கருத்தையும் ஜெயமோகன் பதிவுசெய்கிறார். ஒரு சிந்தனை மரபின் வளர்ச்சியாகவே இதனைக் கருதமுடியும். ஆன்மீகப் பார்வைகொண்ட ஆய்வாளர்கள் இக்காலத்தை வேதங்களின் தொடர்ச்சி என்றும் உலகியல் பார்வை கொண்ட தத்துவக்காரர்கள் இக்காலத்தை வேதமறுப்புக்காலம் என்றும் வாதிடுகின்றனர். இதற்காகப் பரஸ்பரம் ஆதாரங்களையும் முன்வைக்கின்றனர். இந்த இரண்டும் உண்மை என்பதே ஜெயமோகனின் வாதம். சாந்தோக்கிய உபநிடதம் பிராமணர்களை ஊளையிடும் நாய்களுக்கு ஒப்பிடுகிறது என்றும் கூறுகிறார். சடங்கு சார்ந்த ஆசாரங்களை உபநிடதம் மறுக்கிறது. ஒருவகையில் இந்த இரண்டும் உண்மையாக இருந்தமையால்தான் இந்துமதத்தின் பன்மைத்துவம் மீது சந்தேகங்களை வைக்கமுடியாமைக்குக் காரணமாகின்றன. இதனை எனது பாடசாலைக் காலங்களில் கற்ற இந்து நாகரிகம் என்ற பாடத்திட்டங்களில் சிறு குறிப்பாகக் கூடக் காணமுடியாது. இந்த பன்மைத்துவங்கள் இந்து ஞானமரபில் இருந்துள்ளன என்ற விவாதம் இருந்திருந்தாலௌ போதும் மரபோடு இணைந்து பல சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை முன்வைத்திருக்கலாம். அயோத்திதாசப் பண்டிதர் மேற்கொண்டதுபோல.
அடுத்து தருக்கம் வலுவடைந்து தரிசன காலகட்டம் ஏற்பட்டது. இதையடுத்து வேதங்களை மறுக்கும் அவைதிக மதங்களின் காலகட்டம் தோற்றம் பெற்றது. இவற்றின் தோற்றத்துக்கு முன்பாகவே வேதகாலத்தில் வேதங்களையும் புரோகிதத்தையும் மறுக்கும் சார்வாக மரபு தோற்றம் பெற்றிருந்தது. வேதகாலத்தின் முதலாவது அவைதிக மதம் சார்வாகமாகும். இது தத்துவத்திலும் தரிசனத்திலும் சில கோளாறுகளைக் கொண்டிருந்ததால் மதமாக உருவெடுக்கவில்லை. அவைதிக மதங்களில் குறிப்பிடத்தக்கது ஆஜீவகம். இதுவே கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சிந்தனை மரபின் தொடர்ச்சி. மற்றும் திருக்குறளிலுள்ள ஊழ் பற்றிய வரிகள். இந்த ஆஜீவகத்தின் தொடர்ச்சிதான் சமணம் மற்றும் பௌத்தம். இவை மூன்றும் வேதங்களை மறுப்பவை. ஆனால் வேதங்களுடன் விவாதம் செய்தவை. அல்லது அதன் செல்வாக்கு இதற்குள் இருந்தே தீரும். இந்திய ஞான மரபின் உச்சங்களாக பௌத்தம் மற்றும் சமணம் இந்த இரண்டும் கருதப்படுகின்றன. சமணம் ஆத்மாவை ஏற்கும் அதே நேரம் பௌத்தம் அதனை ஏற்பதில்லை என்ற தெளிவு இங்கே நம்மிடையே ஏற்படவேண்டும். ஆனால் இவை அனைத்துக்கும் அடிப்படை இந்துஞான மரபுதான்.
அவைதிக மதங்கள் இந்தியா முழுக்கப் பரவியது. அதனால் வைதிக மதங்கள் எதிர்க்கத் தொடங்கின. தமது வைதிக நிலைப்பாடுகளைத் தளர்வுகளைச் செய்தனர். இக்காலமே பக்திகாலகட்டம் என்று அழைக்கப்படுகிறது. பௌத்தம் மற்றும் சமணம் ஆகிய மதங்களை எதிர்ப்பதற்கான பக்தி இயக்கம் தென்னிந்தியாவில் தொடங்கி வடக்கே பரவியது. அவைதிக மதங்களை எதிர்க்கப் பிற்காலத்தில் உருவானதுதான் வேதாந்த காலகட்டம். சங்கரர், இராமானுஜர், மத்துவர் முதலியோரின் அத்வைதம் விசிஷ்டாத்துவைதம் மற்றும் துவைதம் ஆகிய மூன்று தனிப்போக்குகள் உண்டாகின. முற்கால வேதாந்தம் என்று உபதிடதங்களைக் கூறுவர். பிற்கால வேதாந்தங்கள் என்று அவைதிக மதங்களைத் தத்துவ தருக்க ரீதியில் எதிர்க்க வந்த காலகட்டத்தையே வகைப்படுத்துவர் என்ற தெளிவு இருக்க வேண்டும். அதே நேரம் அவைதிக மதங்களை எதிர்த்த வேதாந்தியான சங்கரர் பௌத்த தருக்க மரபு கொண்டே அதனைச் செய்தார் என்பது இங்கே விசேட அம்சமாகும். இது பற்றி ஜெயமோகன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளது.
"இந்து மரபின் மெய்ஞானத்தை முழுக்க இவ்வாறு தத்துவார்த்தமாக மறுவிளக்கம் அளித்து சங்கரர் புதுப்பிறவி எடுக்கச் செய்தார். இதன் விளைவாகவே இந்து ஞான மரபு புத்துயிர் பெற்றது. வைதிக மரபு அவைதிக மரபினை வென்றது. சிலர் இன்று கூறுவதுபோல பௌத்த, சமண மதங்களை வைதிக மதம் வன்முறை மூலம் துரத்தியது என்பது சரியல்ல. எந்த மதத்தையும் வன்முறை மூலம் அழிக்க முடியாது என்பதையே வரலாறு காட்டுகிறது. ரோமசாம்ராஜ்யத்தால் கிறிஸ்தவத்தை அழிக்க முடியவில்லை. முகலாயர்களால் சின்னஞ்சிறு சீக்கிய மதத்தைக் கூட அழிக்க முடியவில்லை. பௌத்தமும் சமணமும் பக்தி மரபாலும் புது வேதாந்த மரபாலும் தோற்கடிக்கப்பட்டன என்பதே உண்மையாகும்."
பதினெட்டாம் நூற்றாண்டில் உண்டான இந்து மறுமலர்ச்சிக் காலகட்டம் மிக முக்கியமானதொரு காலகட்டமாகும். முகாலய மற்றும் ஆங்கில ஆட்சியால் சிதைபட்டுப்போன இந்து மரபை மீட்கவேண்டிய தேவை இக்காலத்தில் ஏற்பட்டது. இக்காலத்தில் வைதிக மற்றும் புரோகிதச் சார்பான ஆரிய சமாஜம் தயானந்த சரஸ்வதி தலைமையிலும் அதனை விமர்சிக்கும் வகையில் வேறுபலரால் பிரம்ம சமாஜம் என்ற பெயரிலும் தோற்றம் பெற்றது. இக்காலத்தில் மெய்ஞானத்தை உலக ஞான மரபுகளுடன் எடுத்தாண்ட அறிஞர்களும் உளர். இதற்கு விவேகானந்தர், அரவிந்தர், வள்ளலார், நாராயணகுரு முதலியோரும் சான்றாக உள்ளனர். இவர்களது பணி இந்து ஞான மரபினைப் பெருமளவில் எழுச்சிகாண வைத்தது. இக்கால கட்டத்தில்தான் இந்து ஞான மரபுகளை அழிக்கும் வகையில் ஈவேரா உள்ளிட்டோரால் பகுத்தறிவு என்ற பெயரில் ஒரு இயக்கம் தொழிற்பட்டு பிற்பாடு திராவிட இயக்கமாக எழுச்சி கண்டது. இதனை ஆங்கிலேயர் உண்டாக்கியது மதமாற்றத்துக்காகவும் இன உயர்வு மனப்பான்மைக்காகவும் என்று பிற்கால ஆராய்ச்சிகள் வெளிக்கொணர்ந்துள்ளன.
நவீன போக்குகளின் காலகட்டம் என்பது தற்காலத்தைக் குறிக்கிறது. இந்து ஞான மரபு சம காலத்தில் எப்படி உள்ளது என்பது பற்றிய குறிப்புகள் உள்ளன. இதற்கு உதாரணமாக ஓஷோ குறிப்பிடப்பட்டுள்ளார். சமகாலத்தில் இந்து ஞான மரபின் ஒரு தரிசனமாகவுள்ள யோகம்தான் அதிக செல்வாக்கைச் செலுத்துகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஓஷோவின் தொடர்ச்சியாகவே சத்குரு ஜக்கி வாசுதேவை நாம் காணவேண்டும்.
தரிசனங்களைப் பற்றிய புரிதலை நாம் ஒரு வரைப்படமாகப் புரிந்து கொண்டால் இந்நூலைப் படிக்கும்போது இது பற்றி மேலும் தெளிவு ஏற்படும். இந்தியச் சிந்தனைகள் வெறுமனே ஆன்மீகமானவை என்பதை என்பதை ஜெயமோகன் மறுக்கிறார். மார்க்சிய மற்றும் மேலைக் கோட்பாட்டாளர்களையும் மரபார்ந்த சிந்தனையாளர்களையும் கற்றுத் தேர்ந்தவர் என்ற முறையில் ஜெயமோகன் பௌதிக, ஆன்மீக என்ற இரண்டு வகையில் நமது இந்து ஞான மரபினை வகைப்படுத்துகின்றார்.
"ஆன்மிகம், பௌதிகம் என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்வோம். புலன்களால் அறியப்படக்கூடிய பொருட்களினால் ஆனதுதான் இந்த பிரபஞ்சமும் இங்குள்ள வாழ்க்கையும் என்று நம்புவது பௌதிக வாதம். வாழ்வின் சாராம்சத்தை அறியவும் இந்தப் பொருள்களையே ஆராய வேண்டுமென அது கூறுகிறது. மாறாக இந்தப் பொருள் மய உலகம் அதற்கு அப்பால் உள்ள ஏதோ ஒரு சக்தியின் வெளிப்பாடு மட்டுமே என்று நம்புவதே ஆன்மிகவாதம். ஆன்மா என்றால் சாரம். ஆன்மிகம் என்றால் சாராம்சத்தை அடிப்படையாகக் காணும் பார்வை. மனிதனின் சாரம் ஆத்மா. பிரபஞ்சத்தின் சாரம் பரமாத்மா. வெளியே தெரிவது பொய் அல்லது மனமயக்கம் என நம்புகிறவர்கள் ஆன்மிகவாதிகள்."
இதிலிருந்தே நமது ஞான மரபின் தரிசனங்களைப் பகுத்துக் கொள்ள வேண்டும். பௌதிகவாதம் ஆன்மிகவாதம் இந்த இரண்டும் இருந்து வருவதால்தான் இந்துஞான மரபு ஆரோக்கியமாக வளர்ந்தது என்றும் கருதலாம். இடைக்காலத்தில் பௌதிகவாத மரபு மங்கலடைந்ததும் ஆன்மீக மரபு வெற்றுச் சடங்குகளுக்குள் மூழ்கியுள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு தரப்பின் எதிர்வினைகள்தான் ஞான மரபினை வளப்படுத்தக்கூடியது. மாறாக இல்லையென்றால் தேக்கநிலையே ஏற்படும். தொடர் விவாதங்களால் மாறி மாறி உள்வாங்கல்களும் ஏற்படும். உதாரணமாக ஆன்மீக மரபினை வலியுறுத்தும் பகவத்கீதையானது சாங்கியம், யோகம் முதலிய பௌதிகத் தரிசனங்களை உள்வாங்கிக் கொண்டுள்ளது. அதேபோல பௌதிகவாதத்தை ஆரம்பத்தில் வலியுறுத்தும் பௌத்தம் வேதாந்த மரபுடன் விவாதித்து மாயாவாதத்தை உள்வாங்கிபு பயணிக்கிறது. இது மாஹாயன பௌத்த மரபுக்கு நிகழ்கிறது. தேராவாத பௌத்தம் சைவ சித்தாந்த மரபுகளை உள்வாங்கிய ஒன்றாகவே கருதவேண்டியுள்ளது.
1. பௌதிகவாதத் தரிசனங்கள்.
A. சார்வாகம் (முழுமையான தரிசனமல்ல)
B. சாங்கியம்
C. யோகம்
D. நியாயம்
E. வைசேஷிகம்
B. சாங்கியம்
C. யோகம்
D. நியாயம்
E. வைசேஷிகம்
2. ஆன்மிகவாதத் தரிசனங்கள்.
A. பூர்வமீமாம்சை
B. உத்தரமீமாம்சை (வேதாந்தம்)
B. உத்தரமீமாம்சை (வேதாந்தம்)
3. இந்துஞான மரபுடன் விவாதித்து மதங்களாக உருவாகிய பௌதிகவாதங்கள்.
A. பௌத்தம்
B. சமணம்
B. சமணம்
இதைத்தான் நாம் இந்து ஞான மரபுக்கான அடிப்படை வரைப்படமாகக் கொள்ள வேண்டும். இதனை ஆராய்ந்த இடதுசாரிகள் ஆன்மிக வாதத்தை கருத்து முதல் வாதம் என்றும் பௌதிகவாதத்தை பொருள்முதல்வாதம் என்றும் கூறுவர். உலக மரபுடன் தொடர்புற்று விவாதிக்கும் உயர் வகையில் இந்து ஞான மரபு இருந்துள்ளது என்பதனை இங்குநாம் கூறியாகவேண்டும். இதற்குள் சில இடதுசாரிகள் முன்வைப்பது ஆன்மிகமரபு, அதாவது கருத்துமுதல்வாதம்தான் பிற்போக்கான மூடத்தனத்தை இந்தியாவில் வளர்த்தது என்கின்றனர். இன்றும் தொடர்ந்து கூறிவருகின்றனர். ஆனால் விவேகானந்தர், அரவிந்தர், பாரதியார் முதலிய ஆன்மீக நாட்டமும் மெய்ஞானத் தெளிவும் கொண்ட பலர் இளைஞர்களை ஒன்றிணைத்து மூடக் கொள்கைகளையும் பிற்போக்குத் தனத்தையும் களைந்தனர். இதற்கு ஒருபடி மேலே போய் விவேகனந்தர் உலகம் முழுமையும் இந்து ஞான மரபினைப் பரப்பினார். இலங்கையில் விவேகானந்தருக்கு இன்றும் பெருமளவு மரியாதை வழங்கப்படுகிறது. அவரைப் போற்றும் முகமாக மாவட்ட ரீதியில் சிலைகூட நிறுவியுள்ளனர். இது பற்றிய ஒரு உரையாடல் நிகழும்போது ஒரு இடதுசாரி என்னிடம் கூறினார் விவேகானந்தர் வர்ணாச்சிரமத்தை ஆதரிப்பவரல்லவா. அவருக்கு எதற்குச் சிலை வைக்கிறார்கள் என்று. நிச்சயமாக இதுபோன்ற தற்குறி அறிவுஜீவிகளைத் தெளிவுபடுத்தவே இந்த நூலை ஜெயமோகன் எழுதியுள்ளார். பல்லாயிரமாண்டுகாலம் பன்மைத்துவமாக விவாதித்து வளர்ந்துவரும் இந்து ஞான மரபினை வெறுமனே வர்ணாச்சிரமத்துடன் முடித்துக்கொள்ளும் இவர்களது அறியாமையை இந்த நூல் தெளிவுபடுத்தும்.
சாங்கியம் என்ற பௌதீகவாதத் தரிசனத்தை கருத்துமுதல்வாத வைதீக மரபு வன்முறை கொண்டு அழித்துவிட்டது என்ற விவாதத்தை அண்மைய பின் நவீனர்களும் வெறுப்பு அரசியலுக்குத் தமது எழுத்தைப் பிரயோகிப்போரும் மதமாற்றங்களை ஆதரிப்போரும் பேசத் தொடங்கியுள்ளனர். நீங்கள் இந்துவா என்ற கேள்விக்கு ஆம் என்ற பதிலைக் கூறுவதையே சிலர் மறுத்துவிட்டு இல்லை நான் ஆசீவகன் என்று கூறுகின்றனர். இந்த மெத்தனப் பதிலைக் கூறும் இவர்களுக்குத் தெரிவதில்லை ஆசீவகம் என்ற பொருள்முதல்வாத எண்ணப்பாட்டுக்குள் இருப்பதுவும் வைதீக ஆன்மீக மரபு என்று. இங்கிருந்தே விவாதம் செய்து அவை தம்மை வளர்ந்துக் கொண்டன. அதற்காக அந்த மரபு வைதீகத்தை அவை அடியோடு புறக்கணிக்கவில்லை. கருத்து ரீதியில் எதிர்கொண்டது. ஆனால் இன்று அந்தத் தன்மையை நாம் காண முடியாது. போலியான மேலைக் கோட்பாடுகளைக் கொணர்ந்து திணிக்கின்றனர். ஆனால் சரியான புரிதலுள்ளவர்கள் நிராகரிக்கின்றனர்.
இந்திய ஞான மரபு எப்போதும் பன்மைத்துவமான சிந்தனைகளையே முன்வைத்து வந்தது. அதில் யோகம் என்கிற ஒரு தரிசனம் மிக முக்கியமானது. இதனைத் தூய்மையான அறிதல் முறை என்று ஜெயமோகன் தமிழ்ப்படுத்துகிறார். சாங்கியத் தரிசனத்தின் தொடர்ச்சிதான் இந்த யோக தரிசனம். இந்திய ஞான மரபில் இதனை உள்வாங்காத மதங்களையே காணமுடியாது. இன்று அடிப்படைவாதங்கள் சூழ்ந்து மதமாற்றங்களும் இன்ன பிற வன்முறைகளும் இருக்கின்றன என்பதைத் தாண்டி இஸ்லாத்திலுள்ள சூஃபியிசம் கூட இந்து ஞான மரபிலுள்ள யோகம் என்பதை உள்வாங்கியதுதான். இதனாலுதான் இந்த அமைதி மரபினை வஹாபிகள் எதிர்க்கின்றனர். இந்த சூஃபியிசம் இஸ்லாத்தின் சித்த மரபு என்றும் கூறலாம். அஹம் ப்ரம்மாஸ்மி என்பதும் அனல் ஹக் என்பதும் ஒன்றுதான். அதாவணு நானே பிரம்மம் அல்லது அல்லாஹ். இதனை இந்திய ஞான மரபில் அளித்தது யோக தரிசனமாகும். இந்தத் தரிசனம் இந்திய மரபார்ந்த கிறிஸ்த்தவம் மற்றும் பௌத்த மதங்களில் அதிக பாதிப்பைச் செலுத்தியுள்ளது. பௌத்தம் முற்றிலும் யோக மரபால் உண்டான ஆழ் தொடர்புப் பிணைப்பு என்றே கூறவேண்டும்.
யோகம் என்பதைப் பலர் மதம் என்றும் வழிபாட்டு முறை என்றும் கருதுகின்றனர். இது அடிப்படையில் ஒரு தியானம் சார்ந்த மனப்பயிற்சி. இதனைப் பல இந்திய யோக ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். சமீபத்தைய உதாரணம் சத்குரு ஜக்கி வாசுதேவ். இவருக்கு முந்தைய உதாரணம் ஓஷோ. ஓஷோ கூட யோக தரிசனத்திலிருந்து தனது முழுமையான அறிதல் முறைகளை உலகத்துக்கு வழங்கியவர்தான். யோக மரபின் தொடர்ச்சி இன்று உலகம் முழுமைக்கும் பரந்துள்ளது. இன்று அனைவராலும் பெரிதும் பேசப்படுகின்ற ஜென் நிலை என்பதே இந்து ஞான மரபிலிருந்து சென்ற யோகத்திலிருந்து கடன் வாங்கப்பட்டதுதான். இவற்றை நாம் மறந்துவிட்டோம். குறிப்பாகப் பகுத்தறிவுவாதம் என்கிற அரசியல் நிலைப்பாடுகளை மையப்படுத்தி அடிப்படையான பல ஞான மரபுகள் மறைக்கப்பட்டுள்ளன. அல்லது திரிக்கப்பட்டுள்ளன.
இந்த நூல் தரிசனங்கள் பற்றி மிக விரிவாகவும் எளிமையாகவும் உரையாடுகிறது. அவை பற்றிய விரிவான விளக்கத்தை நான் இங்கே எழுதவில்லை. அதனை இன்னும் ஆழமான புரிதல்களோடும் சில மூலத் தரிசன நூல்களைக் கற்ற பிறகும் எழுதலாம் என்றுள்ளேன். இந்த நூலை எழுதிய ஜெயமோகன் இந்து ஞான மரபினை கை இடுக்கில் வைத்துள்ளவராகவே தெரிகிறார். பல ஆன்மிக அறிஞர்களின் நூல்களை உள்வாங்கி அதே நேரம் தனக்குரிய பாணியில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த நூல் இன்றைய சந்ததிகளும் இந்து ஞான மரபின் மீதான ஆழமான புரிதலை நிகழ்த்தவும் வாசிக்கவேண்டிய நூலாகக் கருதுகிறேன். இந்நூலின் மூலம் இந்து ஞான மரபுகளைத் தெளிவுபடுத்திய ஜெயமோகனுக்கு இத்தருணத்தில் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன். இந்நூலை வாசிக்க முன்பாக குறைந்தபட்சம் அயோத்திதாச பண்டிதரின் ஆய்வுகளையாவது வாசித்துவிட்டு நகர்வது ஒவ்வொருவருக்கும் மேலதிக புரிதல்களை ஏற்படுத்தும்.
(மிக முக்கியமாக யோகம் மற்றும் பூர்வமீமாம்சை ஆகிய இரண்டு தரிசனங்கள் பற்றிய மிக விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இன்னொரு தருணத்தில் இந்நூல் பற்றியும் தரிசனங்கள் பற்றியும் மிக விரிவாக உரையாடுகிறேன்.)
தொடர்புடைய பதிவுகள்.
தொடர்புடைய பதிவுகள்.
00
Comments
Post a Comment