திறனாய்வுக் கட்டுரை
இந்த மாத ஜீவநதி இதழில் ஈழப் பெண் கவிஞர் "ஒளவை" யின் கவிதைகள் பற்றிய எனது கட்டுரை.
============
ஒளவையின் 'எல்லை கடத்தலும்', "நாம்" பற்றிய சுயபார்வையில் ஒரு ஓவியமும்.
••••••••••
"உனது பிழையா?
எனது பிழையா?
வரலாற்றுச் சாபமா - போகட்டும்.
கருத்துக்களுக்கு விமர்சனம் எழுதி எழுதி
மூட்டுக்கள் செயலிழந்து போனதால்
இலக்கியக்குழுவிலும்,
அரசியல் குழுவிலும்
தனிநபர் தாக்குதல் தொடங்கியுள்ளது.
ஏ.கே தூக்கும் பலத்தை இழந்ததால் பேனையும் வாயும்
அதன் பணி தொடர்கின்றன."
இது அண்மையில் வாசித்த ஈழக்கவிஞர் ஒளவையின் "எல்லை கடத்தல்" எனும் தொகுப்பிலிருந்து, 'எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை" என்ற கவிதையின் நடுப்பகுதி. 2000 ஆம் ஆண்டு எழுதப்பட்டிருந்தது. நாம் பற்றிய சுய பார்வைக்கு நல்ல சான்றாதாரத்துடன் கட்டுரையை நகர்த்தவே இக்கவிதையை இங்கறிமுகஞ் செய்தேன். பெண்ணியப் பார்வைகளின் அதீத யதார்த்தத்தைப் பால் நிலையில் பெண் எழுத்தாளர்களால் மட்டுமே அகப்புற கருத்து நிலையில் முன்வைக்க முடியும். அதற்கு சான்றாக ஒளவையின் கவிதைகளே உள்ளன.(விமர்சனப் பார்வையில் என் தனிக்கருத்து)
'சமூகவெளியின் கால அடுக்குகளை உணராதவர்களால் அரசியல் கவிதைகளை எழுதமுடியாது' இது கலாப்ரியாவின் வாக்கியம். இது போன்ற நெடுங்கட்டுரைகளின் சாராம்ச நோக்கிற்கு இக்கருத்து அதிசக்திவாய்ந்த உண்மைதாம்.
இங்கு 'நாம் எனும் சுய-பார்வை'; பால்நிலை சாராத, ஜாதி, பிரதேச மற்றும் மத வாதங்களை அகற்றிய மொழியியல் நோக்கு எனலாம். சுயதூண்டுகை மூலமான உளவியல் மருட்சிகள் (Psychotic Hallucinations) ஓவியங்களில் மாத்திரமின்றி நம் மொழிசார் கவிதைகளிலும் அத்தன்மை இருப்பது பிரக்ஞைபூர்வமான உண்மை. அது யுத்தகால யதார்த்தங்களாகவோ, ஆணாதிக்க வன்புணர்வு சார் மனோநிலையாகவோ அல்லது தனிமனித உணர்வு சம்பந்தப்பட்ட ஏனைய சித்தாந்தங்களாகவோ இருக்கலாம். அவை காலம், இடம் அல்லது பௌதீகப் பொருண்மை, சார்ந்து ஏதேனும் ஒரு கோணத்தில் மூலக்கருத்துக்களை விமர்சன ரீதியில் விட்டுச் செல்லும். அதுபோலத்தான் சர்ரியலிச ஓவியர் சல்வடோர் டாலி (Salvador Dali) யின் "நீங்காத நினைவு" (The Persistence Of Memory) என்ற மனோவியல் விமர்சன முறையில் படைக்கப்பட்ட ஓவியமும், ஈழக்கவிஞரின் சுயபார்வை சார்ந்த சமூகப் பிரக்ஞையும் எங்ஙனம் ஆலிங்கனம் கொள்கிறது என்பதை தெளிவாக காணலாம்.
'போராடவந்தவள் மனைவியாய்
சமையலறையில் அடைபட்டிருக்கிறாள்.
புலம்பெயர்வதைத் துரோகமென்றவர்
பெயர்ந்த நிலத்தில் வீடு கட்டுகிறார்.
சித்திரவதை முகாமுக்குப் பொறுப்பாக இருந்தவன் குழந்தை பெறும் மனைவிக்காக அழுகிறான்.
முகமற்றுப் போனவர்கள் யார்?."
இப்படிச் சமூகக் கண்ணோட்டத்தில் கன்னங்களில் கவிதைகளால் செருப்படி வழங்க கவிஞர்களால் தான் முடியும் போல. ஆணாதிக்கம், தன்னிலை நியாயம், யுத்தகால பிரபுத்துவம்அதீத சுயநலம் மற்றும் பாசிஸம். உள்ளிட்ட கடைந்தெடுத்த சமூகவியல் எதிர்நலப் பண்புச்சுட்டிகளை வைத்து முகழிழந்து போனவர்கள் யாரென்று கேட்பதுடன், தான் (Self) பல இன்னல்களால் பாதிக்கப்பட்டிருப்பதைக் கூறி அதனை இளையோர் சிந்திக்க வேண்டிய செயல்நிலை யதார்த்தம் அங்கு உட்பரவவும் காணலாம். இதற்கான விடையை, 'இரவல் கருத்தில் சவாரி செய்தவர்
முகமிழந்து போனார்.
காலம் பதில் சொன்னபடி நகர்கிறது'.
என்று சாதாரண பாஷை வடிவில் (Prose) சொல்லியிருப்பார். போராட்டம், புலம்பெயர்வு, சித்திரவதை என்ற மூவகை மானிடநிலை அல்லது உணர்வு சம்பந்தப்பட்ட இடங்களில் வரும் தொய்வுக்கு ஒரு காரணம் அது சுயசிந்தையற்று முடுக்கிவிடப்பட்ட பாசிஸம் தான் என்று எண்ணத் தோன்றுகிறது.
மீளவும் ஒரு வன்முறைக் கலாசாரங்களும், சகோதரப் படுகொலைகளும் தேவையற்ற ஒன்று என்று தான் எண்ணவிளைகிறது.
இக்கவிதையினை அதீத சர்ரியலியத் (Surrealism) தொனியில் கூறியிருந்தால் ஒருவேளை நம்மவர்கள் ஏற்றுக்கொண்டிருப்பார்களோ தெரியவில்லை. அல்லது அவர்களிடம் மூன்று தசாப்தமாக ஊறிக்கிடந்த பாசிஸ உணர்வுகள் அதற்குத் தடையிடவும் செய்யலாம். இந்த விமர்சனத்துக்கு எதிர்விமர்சனம் செய்பவர்கள் நீங்கள் வாழும் சமூகத்தின் கடப்பாடுகளில் தீவிர தமிழ்த் தேசியம் உங்களுக்கு அடிப்படைவாதத்தைத் தவிர வேறென்ன பெற்றுத்தந்தது என்று ஆராய்ந்து நிறுவுங்கள். சுயமரியாதையைக் கற்றுத் தந்தார்களா?
உல இலக்கிய, சினிமா சார்ந்த காட்சிநிலைகளை அறிமுகம் செய்தார்களா?
என்றாவது ஆகக் குறைந்த கேள்விகளைத் தொடுத்தால் கூட பதில் இல்லவே இல்லைதாம்.
ஆனால் இந்த ஓவியத்தின் சிந்தனை கோட்பாடு ஆழ்மனவெளிப்பாட்டின் அகப்புற பிரதிபலிப்பு எனலாம்.
மனிதனின் மனதை விடுதலை செய்து, சமூகத்தையும், தனிமனிதனையும் சுதந்திரமாகச் சிந்திக்கச் செய்யலாம் என்று இலக்கிய சர்ரியலிசத் தன்மைகள் கூறுகின்றன. அதனை "நீங்காத நினைவுகள்" (The Persistence Of Memory) என்ற ஓவியம் கூட சிறப்பாகக் கைக்கொண்டுள்ளது ஓவியத்தின் குவிவுப் பார்வைகளால் இதனை விமர்சன நோக்கில் ஆமோதிக்கலாம். பொக்கற் கடிகாரம் உருகி ஓடுவது ஓவியத்தின் மையப் பொருள். மென்மையும், வன்மையும் பண்பியல் ரீதியில் ஒன்றோடொன்று தொடர்பு கொள்கையிலே; ஒழுங்கு என நாம் கருதும் தன்மையைக் "கடுமை" என எடுத்துக்கொண்டால், சில சமயங்களில் கால ஓட்டத்தில் அதன் தன்மைகள் மாறும், ஓவியத்தில் நின்று கூறினால் அது உருகிவிடுகிற "மென்மை" ஆகும். இவை காலம் மற்றும் நேரத்தை முதுகெலும்பாகக் கொண்டதனால், காலமும், இடமும் தளர்ச்சியானது என்று நாம் உணரும் தன்மையே ஆழ்மன அனுபவம். அதே தன்மையில் யுத்தகாலக் கவிதைக்குள் சங்கேதமாக ஒலிக்கின்ற ஆயுதக்குழுக்கள் மீதான ஆரம்பகால நம்பிக்கைகளை "கடுமை" (விடுதலையணர்வு) என எடுத்தாலும், காலப்போக்கில் அவற்றின் அட்டூழியம் சிந்தனை நோக்கில் ஒருவித "தளர்ச்சியை" (அவநம்பிக்கை) அல்லது அவர்கள் மீதான வெறுப்பை அளிக்கின்றது எனலாம். விடுதலையுணர்வு உருகியோடி புரட்சியாளரிடம் அவநம்பிக்கைகள் திளைக்கக் காணலாம். இதனை ஒளவை அவர்கள் சிந்தனையில் காழ்ப்புணர்வைக் கொட்டித் தீர்க்கும் ஒருவித கவிதை மொழி சார்ந்த சிந்தனை நுட்பத்தையே மையமாகக் கைக்கொண்டிருந்தார். அல்லது அக்கால அடக்குமுறைகளின் அச்சத்தால் அவர் இன்னும் சில ஆழ்மனப்படிமங்களை எழுதாமலே போயிருக்கலாம். ஆனால் இந்த ஓவியத்தைக் "கையால் வரைந்த கனவோவியம்/நிழற்படம்" (Hand Painted Dream Photograph) என்று கூறத்தக்கதாகவே அவரது சிந்தனை சார்ந்த சுயதூண்டுகை மருட்சிகள் அமைந்திருந்தன. இரண்டு படைப்பிலும் இடம் என்பது அவரவர் தேசங்களே மையமிட்டுள்ளன. ஓவியத்தில் ஸ்பெய்னின் கப்டி கிரியஸ்(Cap de Creus) எனும் முனையிலுள்ள பாறைப்பகுதியும், கவிதையில் வடகிழக்குப் பகுதியும் இடம்பெற்றிருக்கும். இவற்றின் ஒப்பியலில் பிரதேசம் சார்ந்த மூலகங்கள் கருத்துநிலையுடன் ஓரளவேனும் உள்வாங்கியே இருந்துள்ளது. குறிப்பாக கவிதையில் போராட்டமும், விடுதலையும் ஓவியத்தில் பாறையின் நிரந்தர காலவமைதியும் என உதாரணமாகச் சொல்லலாம்.
ஓவியத்தில் காணப்படும் சில குறியீடுகள் மற்றும் பொருட்கள் மிகமுக்கியமானவை. புழுதியில் குப்புறக்கிடக்கும் மனித உரு, பொக்கற் கடிகாரம், மற்றும் அதன் மேலுள்ள எறும்புகள், மலைத்தொடர், பட்டமரம், ஆகியவை அங்கு முக்கியம் பெறுகின்றன. கண்மூடியுள்ள மனித உரு கனவு நிலையிலிருப்பது புலனாகிறது. கனவுநிலையில் ஒருவன் புரளும் போது காலம் எப்படி கடந்து செல்கிறது என்ற கருத்துநிலை புலனறிவாக வெளிப்பட்டு நிற்கிறது. நெகிழ்ச்சியோடு நகரும் நினைவுகள் கனவிலும், கனவற்ற நிலையிலும் "நீங்காத நினைவு" கொள்கின்றன என்பது இவ்வோவியத்தின் அர்த்தப்பாடு. அதே போல ஒளவையின் கவிதையின் முடிவில் "மனிதத்தின் மீது நம்பிக்கை கொண்டு உயிர்த்தெழுதலே வாழ்வு" என்று முரணியல் சார்ந்தும், ஆனால் உந்துதலை ஏற்படுத்தும் வாக்கியத்தையும் காணலாம். கனவுநிலை நீளும்போது நீங்காத நினைவை இருநிலைகளிலும் பிரசவிக்கும் தன்மை ஓவியத்திலும்; "உயிர்த்தெழுதலே வாழ்வு" என்று கவிதையிலும் தொனிக்கக் காணலாம். நிச்சயமாக தற்போதைய நவீன விமர்சனயுகத்தில் நாம் பற்றிய சுயபார்வையானது 'எதை நினைந்தழுவதும் சாத்தியமல்ல'. ஆனால் உயிர்த்தெழுதல் என்பது நிதர்சனம். அதுவும் கல்வியியல்- இலக்கியநோக்கில்.
நவீன ஓவியரான பிக்காசோ கூறிய கருத்தானது "There Is No Abstract Art. You Must Always Start With Something. Afterward You Can Remove All Traces Of Reality" என வரும். நுண்கலைகள் என யாதொன்றுமில்லை. சந்தேகத்துடன் அவற்றை அணுகும் போதிலே புதிய கூறுகள் பலவற்றை அங்கே காணலாம் என்கின்ற உணர்வு கவிதைக்கும், ஓவியத்துக்கும் செவ்வியல் நோக்கில் பொருந்துகிறது எனில் மிகையல்ல.
Reference:
1. https://www.moma.org/collection/works/79018
2. http://www.authenticsociety.com/about/ThePersistenceOfMemory_Dali
3. எல்லை கடத்தல்- ஒளவை.
====
இ.சுயாந்தன்.
Comments
Post a Comment