16 வயதுப் பெண்ணின் டயரிக் குறிப்புகள்- உலக இலக்கியம்
16 வயதுப் பெண்ணின்
டயரிக் குறிப்புகள்
===========
ஆன் பிராங் என்ற யூதப் பெண்சிறுமி எழுதி ஒளித்து வைத்திருந்த கையெழுத்தாலான டயரிக் குறிப்புக்கள் அண்மையில்
€140,000 (Euro) க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கைப் பெறுமதியில் கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய்கள் ஆகும். வெறும் எட்டுவரிக் கவிதைகளுக்கு இவ்வளவு விலை என்று எண்ண முடியாது. அக்காலத்தில் யூதர்களின் ஆன்மாவைப் பிரதிபலித்த எழுத்து என்றே கூற வேண்டும்.
காரணம் - நாசிகளின் சித்திரவதைக் கூடமான ஹொலாகொஸ்ட் (Holocaust) படுகொலையின் மிக முக்கிய விவரணக் குறிப்புகளை உள்ளடக்கிதாக இந்த டயரியின் வரிகள் உள்ளன.
1929 பிறந்த ஆன் பிராங் 1945 இல் முகாமில் இறந்து விடுகிறார். பின்னர் அவரது தந்தையினால் "The Diary of a Young Girl" என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்படுகிறது. தமிழ் உள்ளடங்கலாக 60 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மூல மொழி டச்சு என்பது குறிப்பிடத்தக்கது.
பயம், சலிப்பு, குழப்பம் முதலான உணர்வு சம்பந்தப்பட்ட விடயங்களை நம்பிக்கையுடன் இரண்டு வருடங்களாக எழுதியிருந்தார். அது இன்று யூதர்களின் மீதான கொடுமைக்கோ யுத்தக் குற்றத்திற்கோ ஆதாரமாக உள்ளது அல்லது விவரணமாக உள்ளது எனில் மிகையல்ல.
இன்று அவரது எட்டுவரிக் கையெழுத்துப் பிரதியின் விலை இரண்டு கோடி ரூபாய். உண்மையாகவே அந்தப் படைப்புக்கான விலையை அளவிட முடியாது. ஆனால் நமது தமிழ் இலக்கியச் சூழலில் நின்று எட்டிப் பார்த்தால் மிகப் பெரிய விடயம் தான் அது. நூற்றுக் கணக்கான சூழ்நிலை சார்ந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்கள் குறைந்தபட்சம் நூறு பிரதிகள் கூட விற்பதே கானல் ஆகிவிட்டது.
இந்தக் கருத்தை இங்கு நான் முன்வைக்கக் காரணமுண்டு,
கவிதை, நாவல், சிறுகதை, மற்றும் இதர புனைவுகளைப் புதிதாக எழுதுவோரை, சில பழைய முகப்புத்தக நபர்கள்
கேலி செய்வதைக் காணக் கூடியதாகவுள்ளது. தமக்கு மட்டுமே எழுதுவதற்குக் கடவுள் Copyright தந்துள்ளார் என்று எண்ணிக்கொண்டு ஒருபுறம் புழுங்குகின்றனர். காலத்தின் கண்ணாடி இலக்கியம். சமூகத்தின் இடுக்குகள் எங்கிலும் நிறைய மூலக் கண்ணாடிகள் உடைந்துள்ளன. ஆதலால் அதிக எண்ணிக்கையில் பிம்பங்கள் தெரியும். நிச்சயமாக அது ஒரு ஆரோக்கியமான சம்பவமாகவே இருக்கும். இதை விடுத்து உங்களது புலமை தான் மேலானது என்றெண்ணும் எளிய கருத்தாளுமைகளை (முடிந்தால்) நீக்கிவிட்டு வாருங்கள். படைப்பை விமர்சிக்க வாசகனுக்கோ விமர்சகனுக்கோ உரிமையுண்டு, ஆனால் படைப்பாளனை மட்டுமே விமர்சிப்பது ஏற்க முடியாத காரியம். இதைத் தான் நாம் அதிகம் செய்கின்றோம். இலக்கியம் பேசுவோரே சக இலக்கியவாதியை இங்கு மதிப்பதில்லை, பிறகெப்படி வாசகர்கள் படைப்புக்களை அணுகுவார்கள்.
Boston Review என்ற ஆங்கில இலக்கிய இதழை அண்மையில் வாசிக்கும் போது பரிசு வழங்குவதற்காக, படைப்புக்கள் மீதான அங்கீகாரங்களைப் பின்வரும் அடிப்படையில் கோரியிருந்தனர்.
1. Inequality/precarity - வேற்றுமை/ சமத்துவமின்மை.
2. Climate change- காலநிலை மாற்றம்.
3. Global democracy- உலக ஜனநாயகம்.
4. Civic media and civic imaginaries- பொது ஊடகங்கள்.
5. Afrofuturism- மாய யதார்த்த விஞ்ஞான அழகியல்.
6. The War on Terror- பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்.
7. The Global South- நாடுகடந்த & பின் காலனித்துவம் பற்றிய கற்கை ஆய்வுகள்.
8. International politics and speculative futures- உலக அரசியல்.
9. Post-humanisms- பின் மனிதநலக் கோட்பாடு.
10. The future of females- பெண்ணியம்.
11. Gendered violence- பால் வன்முறைகள்
12. Radical futurities- எதிர்காலம் பற்றிய மூலக்கூறு
இது போன்ற படைப்பனுபவங்கள் தனித்த ஒரு படைப்பாளனிடம் இருந்து தோன்றாது. ஆயிரம் கவிஞர்களில் ஒருவன் மஹாகவி.
தொள்ளாயிரம் கதாசிரியர்களில் ஒருவன் நாவல் சக்கரவர்த்தி.
நூறு விமர்சகனில் ஒருவன் விமர்சகப் பேராய்வாளன்.
உங்களுக்கு விருப்பமானதை எழுத வேண்டும் என்றால் நீங்கள் தான் எழுத வேண்டும்.
======
Critic By: சுயாந்தன்...
===
Comments
Post a Comment