ஆய்ச்சியர் குரவை

சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டத்தில் ஆய்ச்சியர் குரவை என்றொரு செய்யுள் பகுதி இடம்பெறுகிறது. பழந்தமிழகத்தில் இடையர்குலப் பெண்களில் ஏழு தொடக்கம் பத்து வரையானவர்கள் ஒன்றுகூடி ஆடும் நடனத்தை ஆய்ச்சியர் குரவை என்று கூறுவர்.  இந்தக் குரவை நடனம் பற்றிப் புறநானூறு பாடல் ஒன்றில் இப்படிக் கூறப்பட்டிருக்கும். இதுதான் குரவை நடனம் பற்றிய தமிழின் முதல் இலக்கியக் குறிப்பு.

"பனைப்போழ் செரீஇச்
சினமாந்தர் வெறிக்குரவை
ஓத நீரிற் பெயர்பு பொங்க"

புறநானூற்றில் இருந்த இந்தக் குரவை நடனம் போர்வெறியுடன் தொடர்புடையது. பிற்காலத்தில் இந்த மரபு பல ஊடகங்களுக்கு மாற்றமடையத் தொடங்குகிறது. குறிப்பாகத் துர் அதிஷ்டங்களைச் சித்தரிக்கவும் இந்த நடனம் வெளிப்படு பொருளாகி நிற்கிறது. அப்படி ஒரு சமூகத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட நடனம்தான் சிலப்பதிகாரத்தில் வரும் ஆய்ச்சியர் குரவை.

இந்தச் செய்யுளை மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் பெருமை பூத்த கர்ச்சனையுடன் திரும்பத் திரும்பச் சொல்லிக் காட்டுவார். கண்ணனின் பெயரை உச்சரிக்காத நாக்கு இருந்தும் என்ன பயன் என்பது இந்தப்பாடலின் குறுகிய பொருள். இவ்வளவு எளிய சந்தமும்  பொருள் ரசமும் நாட்டார் பண்பும் மிக்க செய்யுள் வகையைத் பழந்தமிழ் மரபில் பெருமளவில் கொண்டு சென்ற பெருமை சிலப்பதிகாரத்தையே சாரும். பின்வந்த திருக்குற்றாலக் குறவஞ்சிகூட ஆய்ச்சியர் குரவையின் பிரதியோ என்று எண்ணத்தோன்றும்.

"மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப் படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்கு தூது நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவென்ன நாவே"

இதில் இடம்பெறும் மஹாபாரதம் பற்றிய செய்திகள் மிகவும் முக்கியமாக இந்து மத ஒற்றுமைக்கு வலுச்சேர்ப்பனவாகவும் அமைகின்றது. அத்துடன் தமிழன் இந்து இல்லை என்ற பிரிவினையை உதறக்கூடிய வலுவான ஆதாரமாகச் சிலப்பதிகாரத் தகவல்களை முன்னுதாரணமாக வைக்கலாம்.

சிலப்பதிகாரம் தமிழ்ப் பேரிலக்கியங்களில் மிக உன்னதமாக ஒரு ரசனை மிகுந்த வாய்மொழி இலக்கியம். சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையைப் படிக்கும் போது தமிழ்மொழி எவ்வளவு பண்பட்டுப் போன ஒன்றாக அப்போது இருந்துள்ளது என்றும், இப்போது தம்மைத் தமிழ்க்காவலர்கள் என்றும் தமிழ் உணர்வாளர்கள், மொழிப்போராளிகள் என்றும் கூறுபவர்கள் அதன் அருகில் கூட நெருங்க முடியாத அளவு சமூகப் பிரக்ஞை மிக்க ஒரு இலக்கியம் இது எனவும் எண்ணத் தோன்றுகிறது. 

அதனால்தான் மா.பொ.சிவஞானம் அவர்கள் 'சிலப்பதிகார இயக்கம்' என்று ஒன்று தேவை எனவும், இரசிகமணி டி.கே.சி அவர்கள் வள்ளுவரையும் இளங்கோவையும் தமிழின் இரு கண்கள் என்றும் கூறியிருப்பார். கம்பராமாயணத்தையும் திருக்குறளையும் தமிழின் "கதி" என்று விழித்தவரும் இவரேதான்.

கம்பராமாயணமும் திருக்குறளும் இடைக்காலத்திலும் போற்றிக் காக்கப்பட்டவை. ஆனால் சிலப்பதிகாரம் இருபதாம் நூற்றாண்டில்தான் புதுவாழ்வு பெற்றது எனலாம். இந்த மீளெழுச்சிக்குப்  பிரதான காரணம் உ.வே.சாமிநாதையர் என்கிற ஒரு பிராமணர். இவர்தான் 1892 இல் இதனைப் பதிப்பித்தார். இவருக்கு முன்பு சுப்பராய செட்டியாரும் சீனிவாசராகச்சாரியாரும் புகார்க் காண்டத்தை மட்டும் 1876 இல் வெளியிட்டனர். ஆக மொத்தமாக சிலப்பதிகாரத்தின் இன்றைய முழு வடிவத்தையும் வெளியிட்டவர் உவேசா தான். அதாவது திராவிட இயக்கங்கள் பொத்தாம் பொதுவாகப் புறக்கணித்த/ புறக்கணிக்கும் ஒரு பிராமணர். சிலப்பதிகாரத்தை அதிகம் பயன்படுத்தியவர்கள் தமிழிசை இயக்கத்தினர்தான். தனித்தமிழால் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் தனித்தமிழ் இயக்கத்தினருக்குப் பெரிதும் உதவியானது. ஆனால் தமிழ் நாடக ஆய்வாளர்கள் சிலப்பதிகாரத்தை அந்த அளவுக்குப் பாவித்திருக்கவில்லை. நாடகத்தின் அதிக கூறுகளைக் கொண்டிருந்த இந்நூலை இவர்கள் பயன்படுத்தாமையால்தான் தமிழில் நாடக வளர்ச்சி செயற்கைத் தன்மையாக இருந்தது என்றும் கூறமுடியும்.

சிலப்பதிகாரத்தைத் தழுவி அல்லது மீளெழுதி இதுவரையும் பல மகத்தான இலக்கியங்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் 1891 இல் "மனோன்மணீயம்" என்ற பெயரில் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை உண்டாக்கிய நாடகக் காப்பியம் தலையாயது. இதன் பின்பு சமகாலத்தில் ஜெயமோகன் தனது 15 வருட உழைப்பினை ஈடுபடுத்தி எழுதிய "கொற்றவை" என்ற காப்பியம் மிக முக்கியமான மைல்கல். இந்த நூற்றாண்டில் (2005) தமிழுக்கு வந்த சாதனைப் படைப்புக்களில் கொற்றவை மிக மிகப் பிரதானமானது. பேரிலக்கியங்களின் காவிய வரிசையில் சிலப்பதிகாரத்துக்கு உள்ள இடம், நவீன இலக்கியக் காப்பிய வரிசையில் கொற்றவைக்கும் முதன்மை இடம் உண்டு.

மேலே குறிப்பிட்ட ஆய்ச்சியர் குரவைப் பாடலைப் போன்ற ஒரு தொனியில்தான் இலங்கையிலுள்ள அநேகமான கண்ணகி கோயில்களில் திருவிழா நடைபெறுகிறது. பழந்தமிழகத்தில் பெண்கள் இந்த நடனத்தை ஆடினர்.  ஆனால் இன்று ஆண்கள் இதனை மேளம் கொட்டி ஆடும் வாடிக்கை இங்கு நிலவுகிறது.

சிலப்பதிகாரம் பற்றி அறிய முயல்பவர்கள் பின்வருவோரின் சிலப்பதிகாரம் பற்றிய ஆய்வுகளை அதிகமும் கற்கவேண்டிய தேவையுள்ளது.
1. கே.என். சிவராஜபிள்ளை.
2. வெ.சு. சுப்பிரமணியாச்சாரியார்.
3. மா.இராசமாணிக்கம்.
4. எஸ்.வையாபுரிப்பிள்ளை.

Comments