இலக்கியமும் சினிமாவும்

"இறந்து கொண்டு இருந்தேன்..... யாரோ என் தாய் மொழியில் பேச உடனே விழித்துக் கொண்டேன்".
••••

I. இலக்கியமும், சினிமாவும்.
••
இங்கு நிறையப்பேருக்கு ரஷ்ய இலக்கியம் பிடிக்கவில்லை.
ஈரானியப் படங்களும் பிடிக்கவில்லை.
ஹாலிவூட்டின் Film Noir கூடப் பிடிப்பதில்லை.
கவிதைகளின் ஆத்மார்த்தமான ரசனைகளையும் ரசிப்பதுமில்லை.
ஆனால் வாய்க்குவந்தபடி அறிவுரைகள் மட்டும் வானைப் பிளக்கும். கிட்டத்தட்ட கற்றது கடலளவு போன்ற எண்ணப்பாட்டில். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த தமிழ் மொழியில்  சில சமகால எழுத்தாளர், கவிஞர் வகையறாக்கள் இன்னும் கம்பராமாயணத்தையும், சிலப்பதிகாரத்தையும், நளவெண்பாவையும் அதன் உள்ளார்ந்த தன்மைகளுக்குள் இருந்தே நயம் எழுதுவதும், ஆலிங்கனம் செய்வதும் தான் தங்களின் உலக இலக்கிய Scope என்று கூறுகின்றனர்.
அதனை குறைந்தபட்சம் மொழிபெயர்க்கப்பட்ட மாற்றுமொழி இலக்கியங்களுடன் இணைத்து கலப்பாய்வு விமர்சனங்களும் செய்வதில்லை.

மலையாளக் கவிதைகளின்
"அ-கவிதை" தோற்றப்பாட்டையும்,
"Bob Dylan" இன் Counterculture & Social Unrest நிகழ்வுகளையும், (Phenomenon),
"கப்ரியல் கார்சியா மார்க்கஸின்" மாய எதார்த்தவாதங்களையும், (Magic Realism),
"பியோதர் தாஸ்வ்தயெஸ்கியின்" இருத்தலியல் (Existentialist) பற்றிய மூலக்கூறுகள் எவை என்பதும் இங்கு முன்வைக்கப்படுவதில்லை. 

இலக்கியம், கவிதை, நாவல், சிறுகதை என்பதன் வளர்ச்சியானது தமிழின் பிரக்ஞைபூர்வ தொன்மையுடனும்,  இலத்தீன் அமெரிக்க இலக்கிய தோற்றப்பாடுகளுடனும்  Criticism செய்யும் போது நிச்சயமாக இலத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் மெய்யியல், உளவியல், அறிவியல், ஆத்மவியல் தளங்களைத் தாண்டிய ஒரு பருகுநிலையிலேயே உள்ளது எனலாம்.

இதற்கு உதாரணமாக 1997 இல் பிரேஸில் எழுத்தாளர் Paulo Lins அவர்கள் எழுதிய City Of God நாவல் அதே பெயரில் Fernando Meirelles அவர்களால் 2002 இல் படமாக்கப்பட்டது. புறநகர்களில் நிகழும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ( Organized Crime) அவ்வளவு துல்லியமாகக் கூறிச் சென்றது. ("If You Run, The Beast Catches You; If You Stay, The Beast Eats You") போன்ற Quote கள் இலக்கியத்தின் கதவுகளால் சினிமாவின் வீட்டிற்குள் புகுந்தவை தாம்.

அவ்வளவாக சினிமா வளராத பிறேஸிலில் இருந்து எடுக்கப்பட்டு ஒரு "Adapted Screenplay" மூலம் உருவான   இத்திரைப்படம் ஒஸ்கார் முதலிய உயரிய விருதுகளுக்கு  நேரடியாகப் பரிந்துரைக்கப்பட்டது.  அந்தளவுக்கு நாவலின் படைப்பாக்க இயங்குநிலை ஒரு கருவியாக இருந்துள்ளது. இலக்கியங்களில் வேரூன்றிவரும் Neorealism சார்ந்த கருத்தியல்களும் ஒரு முக்கிய காரணமாகலாம்.

ஆனால் தமிழ்மொழிதான் உலக மொழிகளின் தாய் என்று கூறுவோராகட்டும்,
வெறுமனே தமிழ்ப்பற்றை முன்வைத்துப் பாசிஸம் பேசுவோராகட்டும்,
தங்களை தமிழ் இலக்கியத்தின் காவலர்கள் என்று கூறுவோராகட்டும்
அவர்கள் அதே குண்டுச்சட்டியில் குதிரைகளை ஓட்டிய வண்ணமே உள்ளனர். (இவர்களில் சிலர் விதிவிலக்கு- ஜெயகாந்தன், கி.ரா, சாரு நிவேதிதா, க.நா.சு,  எஸ்.ரா, சுகுமாரன், சல்மா, சேரன், வஜச ஜெயபாலன், ஒளவை, சுந்தர ராமசாமி, சா. கந்தசாமி...Etc.) 
மேற்குறித்த சில எழுத்தாளர்களும் இல்லையென்றால் தமிழிலக்கியத்தின் மாற்றுச்சிந்தனைகள் கேள்விக்குறியாவது துலாம்பரம்.

புத்தகங்களின் தழுவல்களாக உருவாக்கப்பட்ட உலகப் பிரசித்தி பெற்ற திரைப்படங்கள். (Movies Based On Books)

1. The Godfather (1972)
2. No Country for Old Men (2007)
3. Schindler's List (1993)
4. A Beautiful Mind (2001)
5. Lincoln (2012)
6. The Shawshank Redemption (1994)
7. Fight Club (1999)
8. The Notebook (2004)
9. The Silence of the Lambs (1991)
10. Argo (2012)

இங்கு இன்னமும் மாருதிக் கார்கள் பறப்பதையே விரும்பும் ரசிகப் பட்டாளங்கள் இருக்கும் வரைக்கும்,
ஐந்தே நிமிடத்தில் சொல்லக்கூடிய காதல்-காம அன்னியோன்யங்களை திரைமறைவுகளில் போட்டு ஒழிக்கும் ரசனையற்றவர்கள் இருக்கும் வரைக்கும்
நவீன இலக்கியச் சிந்தனைகள் கிடப்பிலும், இலக்கியவழி சினிமாவின் மேம்பட்ட ரசனைகள் Dead Theory ஆகவும் போவது உண்மையே......

••••••••••
•••••••••••

II. இலக்கியத்திற்கான நோபல் பரிசும், தமிழ் மொழியும்.
••
இலக்கியத்துறையில் முதன்மையான பங்களிப்புச்செய்தால் வழங்கப்படும் இவ்வுயரிய விருதுகள் பெரும்பான்மை மொழிவாரியாக:
English-27
French -16
German -13
Spanish-11
Swedish-7
இதுவரை தமிழுக்கு எவ்வித நோபல் பரிசும் கிடைக்கவில்லை. அல்லது அதற்கான அங்கீகாரத்தை எந்தத் தமிழ் எழுத்தாளர்களும் நிலைநிறுத்தவில்லை. அல்லது தமிழின் படைப்புகள் சம்பந்தப்பட்டவர்களைச் சென்று சேரவில்லை.

கடந்த இரண்டு தசாப்தங்களில் நோபல் பரிசுகள் பின்வரும் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளது.

1. மோ ஜான்(Mo Yan) என்ற சீன நாவலாசிரியரின் மருட்சியியல் உண்மைத்தன்மை (Hallucinatory Realism) சார்ந்த படைப்புகளைக் கவனத்தில் வைத்து நோபல் பரிசு வழங்கப்பட்டது(2012). நாட்டுப்புறக்கதைகளிலும் வரலாறு மற்றும் சமகாலச் சிறுகதைகளிலும் இந்தக் கோட்பாட்டை அவர் செதுக்கியிருந்தார்.

2. ருஷ்ய வரலாற்றாய்வாளரும், புலனாய்வுப் பத்திரிகையாளருமான சுவட்லானா அலக்ஷேவிச்  (Svetlana Alexievich)  பல்குரல் தொனிக்கும் தனது எழுத்தாளுமையினாலும் (Polyphonic Writings) சிற்பங்களின் இன்ப துன்பங்களை துல்லியமாக விபரித்ததாலும் நோபல் பரிசு பெற்றிருந்தார் (2015)என்பது விசேட அம்சமாகும்.

3. பிரபல பெண்ணியக் கவிஞர் டொரிஸ் லெஸ்ஸிங் (Doris Lessing) 2007 இல் நோபல் பரிசு பெற்றார். நினைவுக்குறிப்புகளால் எழுதப்பட்ட பெண்ணிய அனுபவங்களையும், ஐயுறவு வாதங்களால் (Scepticism) பெறப்பட்ட புதிய தொலைநோக்கினாலான நாகரிக மீளாய்வுகளையும் ஆராய்ந்து பல சிறந்த படைப்புக்களை அளித்திருந்தார்.

4. பிரான்சின் எழுத்தாளர் கிளெஸியோ (J. M. G. Le Clézio) எழுத்தாளர்களின் புதிய வருகையாளர் என்று வர்ணிக்கப்படுபவர்.  சாகசக் கவிதைகளையும், சிற்றின்பத்தின் மெய்மறந்த தன்மைகளையும்  (Sensual Ecstasy)  தனது எழுத்தினால் விபரித்தவர். அத்துடன் மனிதனின் மறுபக்கத்தையும், பண்பாட்டு விளிம்பு நிலைகளையும் ஆய்வுசெய்து பல கட்டுரைகளையும் எழுதியிருந்தார்.

5. துருக்கியின் மிக முக்கியமான எழுத்தாளரும், பின்நவீனத்துவ இலக்கியவாதியுமான ஓகன் பமுக் (Orhan Pamuk) 2006 இல் நோபல் பரிசு பெற்றார். துக்கமுற்ற ஆத்மாக்களின் தேடலையும், கலாசாரங்களின் இடைப்பின்னல்கள் மற்றும் மோதல்களையும் (Interlacing Of Cultures & Melancholic Soul)புதிய குறியீடுகளால் தனது நாவல்களில் பிரதிபலித்தார் என்றால் அது மிகையில்லை.

6. ஜெர்மானிய சமூக விமர்சகரும், இசை-நாடகவாதியுமான எல்பிரைட் ஜெலிநெக் (Elfriede Jelinek) என்பவர் சமூக வழக்கத்திலுள்ள அபத்தங்களையும், அடிமைப்படுத்தும் அதிகாரங்களையும் (Absurdity Of Society's Clichés and Their Subjugating Power) செவ்வியல் முறையில் வெளிக்கொணர்ந்தமைக்காக 2004 இல் நோபல் பரிசு பெற்றிருந்தார்.

7. 2016 ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு பெற்ற பொப் டைலன் (Bob Dylan) அமெரிக்கப் பாடலாசிரியராவார். அமெரிக்காவில் மாபெரும் பாடல் கலாசாரத்தையும், புதிய கவிதை வெளிப்பாடுகளையும் உருவாக்கிய பெருமைக்குரியவர்  ஆவார். அரசியல், சமூக, இலக்கிய, தத்துவ அடைவு மட்டங்களைத் தனது அபரிமிதமான பாடல்கள் மூலம் உலகெங்கும் கொண்டு சென்றார். சிவில் உரிமைகளிலும், போர் எதிர்ப்பு(Anti-War) மனோநிலையிலும் உச்ச பங்கினை இவரது பாடல்கள் வெளிக்கொண்டு வந்தன. அவை பல காலமாக மக்கள் மனதில் தேசிய கீதம் போல ஒலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
••
இந்த நிலையியல் தன்மைகளின் ஒருமித்த அடிப்படையில் தான் நோபல் பரிசுகள் உலக இலக்கிய வாதிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழில் இந்த அளவுக்கு செல்வாக்குச் செலுத்திய எழுத்தாளர்கள் இருந்த போதும், அவர்களில் சிலர்  மக்களின் சமூக அடைவு மட்டங்களை உயர்த்திய போதிலும் இலக்கிய நோபல் பரிசுகள் என்ற வகையில் தமிழுக்கு இதுவரை கிடைக்காதது செம்மொழிக்கு ஒரு துன்பியல் சம்பவம் தான்.

••••
திறனாய்வு: சுயாந்தன்.
•••••

Comments

Popular Posts