திறனாய்வுக் கட்டுரை

இருவரும் சூழலியல் கவிதையும்

தேவதச்சன், நரன் இருவரின் கவிதைகள் உண்டாக்கும் பேருணர்வு (Phenomenalism) அபரிமிதமானது. மனம் சூன்யமாக உள்ள வேளையில் கவிதைகள் சிருஷ்டிக்கான புதிய வழிகளைத் திறந்து விடுகின்றன எனவும் கூறலாம். இவர்கள்தம் வரிகளை மனம் புணரும்போது ‘படிமம், வார்த்தைச் செருகல், அனுபவம், முடிவு’ போன்றன என்னவாகப் போகின்றது என்ற சிலாகிப்புத் தோன்றுவதுண்டு.

தேவதச்சனின் “இரண்டாயிரம் வருடங்களாக” எனும் கவிதையும், நரனின் “தார்ச்சாலைகள் வெண்நிறக்கோடுகள்” என்னும் கவிதையும் பரஸ்பரம் தொடுகையுறுகின்றன. இரண்டு கவிதைகளின் பண்படர்த்திகளைக் காணமுன்பு அவற்றின் வரிகளை இங்கு தருவது மேற்கொண்ட வாசிப்புக்கு வசதியாக இருக்கும்.

இரண்டாயிரம் வருடங்களாக

இரண்டாயிரம் வருடங்களாக

துள்ளிக் குதிக்கும்

குட்டி மான்கள்

சாலையைக் கடக்க எத்தனித்தன.

ஆம்னி பஸ்

லாகவமாய்க் கடந்து சென்றது

அவைகள் பஸ்ஸில் ஏறக் கோரவில்லை

தாண்டிச் சென்ற

ஜீப் அதிகாரிகள்

மீண்டும் ஒருமுறை

திரும்பிப் பார்த்தனர்

அவர்கள்

சாவு மான்களை

வண்டியில்

அடைத்தனர்.

மறைவிலிருந்தபடியே தோன்றிக்

கொண்டிருக்கும்

குட்டிமானின்

வெண் புள்ளிகளை

செம்புலப் பெயல் நீரார்

சேகரித்தார்.

அவற்றை

அவர்

தம் குழந்தைகளுக்காக

கொண்டு சென்றார்.

 

Ο

 

மின்கோபுரங்கள் நனையும்

மழைவழியே அவர்,

நனைகையில்,

பிஞ்சுமான்கள் தவிர

அங்கே வேறு யாரும்

இல்லை.

அவை

அவரைப் பார்த்து

நீந்தி

வரத் தொடங்கின.

வெண் புள்ளிகளிடமிருந்து

குழந்தைகள்

சேகரித்த

மான்கள் அவை.

தேவதச்சன்

 

தார்ச்சாலைகள் வெண்நிறக்கோடுகள்.

வனங்களின் நடுவே

போடப்பட்ட தார்ச்சாலைகள்

அவற்றின் நடுவே

வலப்புறத்தையும்

இடப்புறத்தையும்

பிரித்துச் செல்லும்

வெண்நிறக் கோடுகள்

எப்போதும் அவற்றின் மேலேறி நடந்து செல்கின்றன

சில வரிக்குதிரைகள்

வரிக்குதிரைகளின் மேலேறிச் செல்கின்றன சில

தார்ச்சாலைகள் சில வெண்நிறக் கோடுகள்.

நரன்.

இந்தக் கவிதைகளிலுள்ள பொதுவான தளங்களை இப்படி வகுக்கலாம்.

மான் இனம் – வரிக்குதிரை.வெண்புள்ளி- வெண்நிறக் கோடுகள்.சாலை- தார்ச்சாலைகள்.இரண்டாயிரம் ஆண்டு நீட்சி – மிலேனியம் யுகம் / தற்காலம்.

தவிரவும் வானம், நிலம், மனிதன், பஸ், ஜீப் என்றொரு தொகை பௌதீகங்கள் வருகின்றன. Fantasy திரைப்படங்களில் திடீரென்று கருவுருக் கொள்ளும் கற்பனைகள் போல இக்கவிதையின் ஆழமான வாசிப்புகள் உணரச் செய்கின்றன. தேவதச்சனின் கவிதையில் குறுந்தொகையில் குறிஞ்சித் திணையைப் பாடிய “செம்புலப்பெயல் நீரார்” எனும் கவிஞரின் பெயரும் இடம்பெறுகிறது.  நெஞ்சம் கலந்துவிட்டது இனிப் பிரிவென்பது நிகழாது எனும் தொனியில் சங்கப்புலவரின் வரிகள் அமைந்திருக்கும். அதுபோலவே நவீனகவிஞரின் கவிதையில், குட்டிமானின் வெண்புள்ளிகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்கிறார். பின்னொருநாள் அவர் நனைகையில் வெண்புள்ளிகளிடமிருந்து  குழந்தைகள் சேகரித்த பிஞ்சுமான்கள் அவரைப் பார்க்க நீந்தி வருகின்றன. மழை பெய்கையில் நீந்தி வந்து ஒருவரைக் காணவேண்டும் என்ற அவசியம் மான்களுக்கு இல்லை. ஆனால் கவிஞர் உருவாக்கிய கருப்பொருள் அன்பின் பிணைப்பை முன்னிறுத்தியாகும். அதற்காகவே சங்கப்புலவரின் பெயரால் ஒரு மனிதனை இங்கே கொணர்ந்துள்ளார் எனலாம். அல்லது ஆரம்பத்தில் தனித்து இருந்த குட்டிமானின் வெண்புள்ளிகளை செம்புலத்தார் தனது அன்புடை நெஞ்சத்தால் குழந்தைகளிடம் பரிசளிக்கின்றார். தற்போது அவர் மழையில் நனைகையில் அன்பின் நிமித்தம் இடையறாத தொடர்ச்சியாக பிஞ்சுமான்கள் இவரைப் பின்தொடர்கின்றன எனலாம்.

“செம்புலப்பெயல் நீர் போல

அன்புடைநெஞ்சம் தாம் கலந்தனவே” என்ற பாடல் தேவதச்சனின் கவிதைத் தாற்பர்யத்தை உணர்விக்கின்றது. (இரண்டாயிரம் வருடங்களாக)

குட்டிமான்கள் சாவுமான்களாக மாறியபின் தனித்திருந்த குட்டிமானின் வெண்புள்ளிகள் குழந்தைகளிடம் சென்றுவிட வெண்புள்ளிகளிடம் இருந்து தோன்றிய பிஞ்சு மான்கள் அன்பைத் தேடுகின்றன. அல்லது ஒரு பிணைப்பைத் தேடி நீராரை நாடுகின்றன. அதற்காகத் தான், “மின்கோபுரங்கள் நனையும் மழைவழியே அவர் நனைகையில்” என் சொற்பதம் கவிஞரால் ஆக்கப்பட்டுள்ளது.

நரனின் தளம் இதேபோன்று இருந்தாலும் தேவதச்சன் போல் அல்லாமல் சில சொற்களுக்குள் தனது கருத்துக்களை நிறுவுகிறார். இதனை நவீன கவிஞர்களின் யுக்தி எனவும் கூறலாம். தொடர் இருப்புக்கான நிலை என்ற தன்மையில் தான் கவிதையின் தளம் ஊடுருவுகிறது.

வனங்களுக்குள் தார்ச்சாலை.தார்ச்சாலைகளுக்குள் வெண்நிறக் கோடுகள்.அவற்றின் மேல் வரிக்குதிரைகள்.மீளவும் ஆரம்பநிலைபோல வரிக்குதிரைகள் மீது தார்ச்சாலைகளும், வெண்நிறக் கொடுகளும்.

சிக்கலான (Complex) தளத்திலிருந்து கவிதை நீட்சியுறுகிறது. அதாவது ஆரம்பத்தில் காடுகளைச் சாலைகள் ஆக்கிரமிக்கின்றன. அவற்றைக் கோடுகள் பிரித்தாலும் வரிக்குதிரைகள் சாலைகளில் படையெடுக்கின்றன. என்ன ஆனாலும் மீளவும் சாலைகளும் கோடுகளும் விலங்குகளை ஆக்கிரமித்து வெற்றி காண்கின்றன. இதைவிட இன்னொரு அர்த்தமும் உண்டு. அதாவது சாலைகளின் மீது படரும் தொடர்சாலைகளை குறிப்பதாகக் கருதலாம். சாலைகளின் பெருக்கத்தையும், காடுகளின் படிப்படியான மறைவையும், அதனால் விலங்குகளின் அழிவையும் குறியீட்டு நிலையிலும், நேரடியாகவும் கூறியுள்ளார் நரன்.  தாரைப் (Tar) பெறுவதற்கு நிலக்கரி (Coal), மரம், பெற்றோலியம் என்பன இன்றியமையாதவை. மிலேனியம் யுகத்தில் அமைவுறும் சாலைகள் மேற்கண்ட தாதுக்களின், வளங்களின் அழிவினால் தான் என்பதை நிலைநிறுத்தவே கவிஞர் ‘தார்ச்சாலைகள்’ என்ற சொல்லை பன்மை கலந்த உறுதியில் கூறுகிறார். பழநிபாரதியின் பின்வரும் கவிதையும் இக்கவிதையுடன் இயைந்து செல்வதைக் காணலாம்.

“மரங்கள் பூக்களை

உதிர்த்துக்கொண்டிருக்கின்றன

என்றெழுதினேன்.

பூமியின் உயரும் வெப்பநிலை வரிகளைத் திருத்தியது.

மரங்கள் பூக்களை இழந்துகொண்டிருக்கின்றன”.

இது வெளிப்படையான ஒரு கருத்தைப் பிரஸ்தாபிக்கும் கவிதை. நரனின் கவிதைகள் அசாதாரண நிலையில் இருந்து சிந்திக்கத் தூண்டுபவை.

தேவதச்சனின் கவிதை மனித மற்றும் விலங்குகளுக்கிடையிலான அன்பினையும், பிணைப்பையும் காட்டுகின்ற அதேவேளை, நரனின் கவிதைகள் இந்த நூற்றாண்டின் இயற்கைக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட அந்நியமாதலை விபரிக்கின்றன. ஆனால் இருவரின் கவிதைகளின் காட்சிநிலை(Scope) ஒன்றுதான். அதுவே பிணைப்பு. முன்பின்னான Non Linear முறையில் கவிதை சொல்லும் முறையை இருகவிதைகளும் சலிப்பின்றி அணுகுகின்றன எனில் மிகையல்ல.

சங்ககாலப் Period இலிருந்து நீண்டுவரும் கால அளவைக் காட்டிய தேவதச்சனின் கவிதைகள், மின்கோபுரங்கள், ஆம்னிபஸ், ஜீப்வண்டி போன்ற நவீன சொல்லாடல்களின் மூலம் அதற்கான(காலநீட்சி) ஆதரங்களைக் கொட்டிவிடுகிறார்.

தேவதச்சனின் கவிதையில் எந்தவொரு இடத்திலும் பூரணமாகாத தன்மையை (Defective Foot) அவதானிக்க முடியாது. ஒரு கதையுணர்வு வெளிக்கு கவிதை நகர்கிறது. ஆனால் நிறைவான வாசிப்புணர்வுகளைச் சுமந்தபடியே செல்கிறது. ( உதாரணமாக செம்புலப்பெயல் நீரார் பற்றிய வெளி). நரன் தனது கவிதைகளில் கற்பனைவாதத்தை (Utopianism) முன்னிறுத்தி சமூக அக்கறைக்கான கதவைத் திறந்து விடுகிறார். இருவரது கவிதைகளின் பரஸ்பர ஒற்றுமை எதேச்சையாக இருந்தாலும், அவர்கள்தம் அர்த்தபுஷ்டியான சிந்தனைகள் சற்றே விவாதிக்கத் தக்கவை எனலாம்.

மேற்போன்ற கவிதைகளை வாசித்துணர்கையில் சில உலகத் திரைப்படங்கள் கண்முன் விரிகின்றன. ஜோவா துஜானின் இயக்கத்தில் வெளியான ‘Black Hole’ எனும் படம் கனிமங்களின் தகர்வு பற்றிச் சித்திரிக்கின்றது. பல விருதுகளை வென்ற ‘The Burning Season’ ஜோன்பிராங்கெய்மரால் 1994ல் இயக்கப்பட்டது. இது அமேசான் மழைக்காட்டின் அழிவுகளையும், இயற்கையின் முக்கியத்துவத்தையும் கூறுகிறது.

இயற்கை பற்றி எவ்வளவு கவிதைகள், நாவல்கள், திரைப்படங்கள், விவரணங்கள் வந்த போதிலும் அவற்றைப் புறத்தே வைத்து இயந்திர வாழ்வை நோக்கி நகர்கிறது தனிமனிதனின் வாசிப்பு. சமுகம் சார்ந்த தன்மையில் முன்னிலை, படர்க்கையில் இருந்தெழும் ஒவ்வொரு படைப்பையும் குறைந்தபட்சம் அனுபவிப்பதாவது நம் பணியாக இருக்கட்டும்.

இரட்ணேஸ்வரன் சுயாந்தன்.
ஸ்ரீலங்கா.
===
மலேசிய கலை இலக்கிய இதழான வல்லினம் பிரசுரித்த எனது கட்டுரை.

Comments

Popular Posts