இருத்தலியம் ஒரு அறிமுகம்.

புறமெய்மை மறுப்புக் கோட்பாடு/ இருத்தலியல். (Existentialism)
•••••••••••••••••••
1. தமிழ்க் கவிதைகளில் இருத்தலியல்
(Tamil Poetry & Existentialism)
•••••••••••••
இருத்தலியம் என்பது
அறம் என்றோ தெய்வம் என்றோ ஒன்று இல்லாத உலகில் தனிமனிதன் பொறுப்புணர்வுடன் சுதந்திரமும் மிக்கவன் என்றும் அவற்றைப் பயன்படுத்தி அவன் எடுக்கும் தீர்க்கமான முடிவுகள் அவனது வாழ்க்கையின் அடுத்தடுத்த நிலைகளை நிர்ணயிக்கின்றன என்றும் கூறும்
ஐரோப்பாவில் 19ம் நூற்றாண்டில் தோன்றிய தத்துவம் ஆகும்.
தனிமனிதனின் இருப்பு நிலையையும் அவனுக்குள்ள பிரச்சினைகளையும் முதன்மையாகக் கொண்டது இந்தத் தத்துவம். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய இருப்பே முதன்மையும், அடிப்படையுமானது. தன் இருப்பு நிலையைக் கொண்டே மனிதன் பிறவற்றையெல்லாம் மதிப்பீடு செய்கின்றான். தனக்குள்ள பிரச்சனைகளைத் தானே தீர்த்துக் கொள்ளவேண்டும். மனிதன் தனக்கான வாழ்க்கையைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே இத்தத்துவத்தின் அடிப்படைக் கொள்கையாகும். தனிமனித இருத்தல் அனுபவத்தை மையப்படுத்திய உணர்ச்சிவாதம் என்றும் இதனைக் கூறலாம். (Individual person as a free and responsible agent determining their own development through acts of the will).

இந்தக் கோட்பாட்டை முதன்முதலில் அறிமுகம் செய்த பெருமை  டென்மார்க் அறிஞர் சோரன் கீர்கேகார் (Soren Kierkegaard) அவர்களையே சாரும். பிரெஞ்சு எழுத்தாளரும், தத்துவஞானியுமான ஜேன் பவுல் சார்த் (Jean Paul Sartre). நவீன இலக்கிய கர்த்தாக்களின் சிந்தனையை மிகவும் பாதித்தவர். இவர் இருத்தலியல் என்னும் தத்துவத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார்.

மேற்கில் இருந்து உருவான இந்தக் கருத்தியல் வாதங்கள் உலகில் திசை-வாதங்களைக் கடந்து வியாபித்திருக்கின்றது என்றால் அது மிகையல்ல. இந்த Existentialism பின்வரும் காட்சிநிலைகளுக்கு அல்லது பொருளடக்கங்களுக்கு உட்பட்டது.

1. Absurdism- அபத்தம்/ குழப்பவாதம்.
2. Facticity- யதார்த்தம்.
3. Authenticity- நம்பகத்தன்மை.
4. The Other and the Look- ஏனைய இடையுணர்வுகள்.
5. Angst and Dread- மனக்கவலையும் அச்சமும்.
6. Despair- விரக்தி.
7. Freedom- சுதந்திரம்.

இந்தக் கோட்பாடானது இன்றைய இலக்கியம், இசை, திரைப்படம், மற்றும் படைப்பாக்கங்கள் பலவற்றிலும் தனது பரம்பலை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆட்கொண்டுள்ளது. இந்தக்கோட்பாடு அத்வைதம் போன்றது என்றும் எளிதில் விளங்கக் கூறலாம்.
ஒரு Criticism போல,
Chaos Theory போல,
Postmodernism போல,
Secularism & Skepticism போல அல்லாமல் தனது முதன்மையான பங்கினை படைப்புலகிலே  பிரக்ஞைபூர்வமாக முன்னகர்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.

அந்த வகையிலே தமிழ்க் கவிதையுலகில் இருத்தலியலின் செல்வாக்குப் பற்றிய ஒரு நோக்கு இது எனலாம். குறிப்பாக க.நா.சு,  தேவதச்சன், ஞானக்கூத்தன், கலாப்ரியா, சுந்தர ராமசாமி, போகன் சங்கர், ஆத்மா நாம், நகுலன், சுகுமாரன், பிரமிள், தேவதேவன், மனுஷ்ய புத்திரன், இளங்கோ கிருஷ்ணன், நீல பத்மநாபன், யவனிகா ஸ்ரீராம், எம். யுவன், யூமா வாசுகி,  சல்மா, ரமேஷ்-பிரேம், சி. மணி, கல்யாண்ஜி, சுகிர்தராணி, சேரன், அனார், ஷர்மிளா செய்யத். ஆகியோரின் கவிதைகளில் இந்த Existentialism பெருமளவில் வெளிப்படுவதைக் காணலாம். அதற்கு ஒரேயொரு காரணம் அவர்களது மேற்கின் இலக்கிய கொள்கைகளைத் தழுவிய நவீனத்துவ சிந்தனைகளும், சமூகநிலைகளும் தான் எனலாம்.

தமிழில் தோன்றிய Existentialism சார்ந்த கவிதைகளில் சுந்தரராமசாயின் "சவால்" எனும் கவிதை முக்கியத்துவம் மிக்கது.
""நோவெடுத்துச் சிரம் இறங்கும் வேளை
துடைகள் பிணைத்துக் கட்டக் கயிறுண்டு உன் கையில். வாளுண்டு என் கையில்..""
என உருவாகும் இக்கவிதையின் நிறைவு "எனது கொடி பறக்கிறது அடிவானத்துக்கப்பால்" என்ற அதி சுதந்திர உணர்வின் Symbol பிறக்கக் காணலாம். கையிலிருக்கும் வாள் நம்பிக்கையூட்டிவிடுவது தான் சுதந்திரம் பிறக்கக் காரணம் என்ற ஒரு யதார்த்தமும் அங்கே எழுகிறது. இது ஒருவனின் தொடர்ச்சியான இருத்தலியலை ஏனை இருப்புக்களில் இருந்து புறமெய்மை மறுப்புடன் கட்டமைத்து வெளிப்படுத்தியுள்ளது.

இதே போலத் தான்  சி. மணியின் "அறைவெளி" எனும் கவிதையில்,
""தப்பிவிட்டேன் என்று விழித்தேன்.
சுற்றும்முற்றும் பார்த்தேன்.
மேலே வானம்; நான்கு பக்கமும் பூவிருள் கூரை, சுவர்கள் எதுவும் இல்லை.""
இதிலும் கூட சுதந்திரத்தின் சுய தயாரிப்பு மேலோங்கிய நிலையினைக் காணலாம். நிகழ்கால யதார்த்தத்தில் நான் தப்பியதை உணர்ந்தாலும் எதிர்கால உண்மைநிலையில் நான் அடைபட்டுள்ள ஒரு நம்பகத் தன்மை தான் காணக்கிடைக்கிறது என்ற இருத்தலியலின் சாராம்சம் வெளிப்படுகிறது. வாய்ப்புகள் பொருளற்றவை அல்லது தொடர்பற்றவை என்ற பாசாங்கு நிலையும், தன்னளவில் தீர்மானகரமான முடிவுகளை தானே நிர்ணயித்து ஆகவேண்டும் என்ற கருத்துநிலையும் விரிவதைக் காணலாம்.

இளங்கோவின் இந்தக் கவிதையிலும் கூட அந்தநிலை வியாபித்துள்ள விதத்தை தனிப்பட்ட விதத்தில் ஒவ்வொருவரும் ஊகிக்கலாம்.
"தினம் தினம் கொலை செய்யப்படுகிறது
என் பிணம்."
ஒவ்வொருநாளும் எனது தனிமை என்னைக் கொன்றாலும் நான் இதை எழுதிவிட்டே இறக்காமல் இருக்கிறேன் என்ற உண்மை இங்கு தெளிவாக வெளிப்படுகிறது. ஒருவன் தனது உலகம் சிதைவுறும் தன்மையை உணர்ந்திருந்தாலும் நம்பிக்கையான "ஒவ்வொருநாளும்" என்ற வார்த்தை இருத்தலியம் தொடர்பான நிலைத்திரு தன்மையைக் காட்டி நிற்கின்றது.

""எனக்கு யாருமில்லை,
நான் கூட"".
மேற்குறித்த நகுலனின் கவிதையில் இருக்கும் இக்கோட்பாட்டு ஈர்ப்பானது தமிழ்க் கவிதையுலகின் இன்னொரு படிமம் என்று கூறும் அளவுக்கு அலாதியானது.
""ராமச்சந்திரனா என்று கேட்டேன்.
ராமச்சந்திரன் என்றார்.
எந்த ராமச்சந்திரன் என்று
நான் கேட்கவில்லை.
அவர் சொல்லவுமில்லை.""
இக்கவிதையில் நான் யார் எதன் பொருட்டு இங்குளேன் என்ற வியப்பு பெருமளவில் வெளிப்படுகிறது. எந்த அபத்தங்களுக்கும் ஆட்படாது விட்டாலும், உண்மைநிலை என்ற அதீத தோற்றப்பாடும் தன்னம்பிக்கை சார் வியங்கோள் நிலையும் காணக்கிடைக்கிறது.

இதுபோலத் தான் பின்வரும் கவிதைகளிலும் Existentialism வெளிப்பட்டு இருக்கக் காணலாம்.
தேவதச்சனின்;
""என்னிடம் ரகசியம் என்று
ஏதுமில்லை.
என்னுடைய
குருட்டு நம்பிக்கையைத் தவிர...""

மனுஷ்யபுத்திரனின்;
""அழுகை வராமலில்லை
ஒரு வைராக்கியம்
உங்கள் முன்னால்
அழக்கூடாது....""

சுந்தர ராமசாமியின்;
""செத்துச் செத்துப்
பிழைத்தாய் நீ.
வாழ்ந்து வாழ்ந்து
அழிந்தேன் நான்""

ஞானக்கூத்தனின்;
""திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை.""

இளங்கோ கிருஷ்ணனின்;
""எனை சிலுவையிலிருந்து
இறக்கி விடு
என் குருதியை
ஆணி உறிஞ்ச
எந்த நியாயமும் இல்லை.""

ரமேஷ்-பிரேமின்;
""கடவுளைத் தின்பேன் எனத் திருமூலன் சொன்னான்.
கடவுளைத் தின்று வாழ்பவன் நான்.""

முதலான தமிழ்க் கவிதைகளில் இருத்தலியம் எனும் கோட்பாட்டுக்கான அடுக்கடுக்கான அர்த்த சிருஷ்டிகள் பரவியிருப்பது கண்கூடாகும். இது போன்ற கவிஞர்களின் மொழியியல் ஆலிங்கனம் நவீன தமிழின் கவிதைத் துறை மறுமலர்ச்சிக்கு ஒரு பங்கு எனலாம்.

2. உலக சினிமாவிலும், இலக்கியங்களிலும் இருத்தலியத்தின் பங்கு.
••••••••••••••
உலக சினிமாவில் இருத்தலியம் பற்றிய படங்கள் இன்று வரையும் வந்து கொண்டு தான் உள்ளது.
ஆரம்ப காலத் திரையியல் மேதையான ஸ்ரான்லி குப்றிக் (Stanely Kubrick) அவர்களின் படைப்பான 'Paths Of Glory' என்ற படைப்பு மானிட நிலையியல் தன்மையில் அபத்தங்களின் தேவைப்பாடு பற்றியும், யுத்தக் கொடூரங்கள் பற்றியும் திரையாக்கம் செய்து பெருவெற்றி கண்டார். ஓர்சன் வெல்சின் (Orson Welles) The Trial என்ற திரைச்சித்திரமும் கிட்டத்தட்ட இதே கருத்தியல் தன்மைகளையே காட்டியது. இதிலிருந்து ஒருபடி மேலே சென்று உறவுகளிடையேயான இருத்தலியல் தன்மைகளைக் காட்டிய பெருமை அஹிரா குரொசோவா (Akira Kurosova) அவர்களையே சாரும்.
பிரபல கதை-இயக்குநர்களான கிறிஸ்தோபர் நோலன், ரெறன்ஸ் மலிக், ஜோயல்-கோகன், வூடி அலன், வெஸ் அண்டர்சன், Michelangelo Antonioni உள்ளிட்டோரின் படைப்புக்களில் இந்த இருத்தலியல் பாதிப்பை திரைக்கதை மற்றும் Charecter நெடுகிலும் காணலாம்.

குறிப்பாக 20 மற்றும் 21 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த ஆங்கிலத் திரைப்படங்களில் கட்டாயம் காணவேண்டிய Existentialism Elements உடன் ஆன சில திரைப்படங்கள் உள்ளன. இவற்றை இலக்கிய மற்றும் திரையாக்க ஆர்வம் உள்ளோர் காண்பது அவர்களின் படைப்பாக்கத்தில் புதிய நவீனத்துவ சிந்தனைகளுக்கு வழிகோலும்.

இருத்தலியல் திரைப்படங்கள்:
1. Ikiru-Akira Kurosawa.
2. Fight Club-David Fincher.
3. No Country for Old Men-Joel Coen.
4. Apocalypse Now- Francis Ford Coppola.
5. The Truman Show- Peter Weir.
6. Inception-Christopher Nolan.
7. Life Of Pi- Ang Lee.
8. The Shawshank Redemption- Frank Darabont.
9. Boyhood- Richard Linklater.
10. Cast Away- Robert Zemeckis.

இது போலவே உலக இலக்கியங்களின் மூலமாக காட்சிநிலைக்குள்ளான இக்கோட்பாடானது படைப்பாக்கங்களினுடாக விஸ்வரூபம் எடுத்து பெருவளர்ச்சி கண்டது என்பது துலாம்பரம்.  குறிப்பாக
பவுல் சார்த்தரின் (Jean-Paul Sartre) இருத்தலும் இன்மையும் (Being and Nothingness), இருத்தலியமும் மானுடவியலும் (Existentialism and Humanism), மீளமுடியுமா (No Exit),  ஈக்கள் (The Flies) போன்ற ஆக்கங்களிலும்,
பிரட்ரிக் நீட்சேவின்(Friedrich Nietzsche) ஜாரதுஸ்டிரா பேசுகிறான் (Thus Spake Zarathustra), மகிழ்ச்சி நிரம்பிய ஞானம் (Joyful Wisdom), சக்தி சாதனை (Will to Power), நன்மைக்கும் தீமைக்கும் அப்பால் (Beyond Good and Evil) போன்ற படைப்புகளிலும்,
ஆல்பெர் காம்யுவின் (Albert Camus) அந்நியன் (The Stranger), கொள்ளைநோய் (Plague),
வீழ்ச்சி (The Fall) போன்ற புதினங்களிலும் இந்த இருத்தலியல் கோட்பாடு நன்கு விளக்கப்பட்டுள்ளது.

இவர்களைப் போலவே,பியோதர் தாஸ்தயேவ்ஸ்கியும் ‘இருத்தலியல்’ கோட்பாட்டினைத் தம் படைப்புக்களின் வழி வெளிப்படுத்தியிருந்தார். தாஸ்தயேவ்ஸ்கியின் நடுத்தர காலப் படைப்புகளான கீழ் உலகக் குறிப்புகள் (Notes from Underground),
குற்றமும் தண்டனையும் (Crime and Punishment),
கரம்சேவ் சகோதரர்கள் (The Brothers Karamazov),
மூடன் (The Idiot),
பேய்கள் (Demons),
போன்றவற்றில் இக்கோட்பாட்டின் செல்வாக்கை அதிகளவில் காண முடிகிறது. முடிவெடுத்தல், சுதந்திரம், பொறுப்புணர்வு, மரணம், , துன்பம், கொடுந்துயரம், விரக்தி மனப்பான்மை, இலட்சிய மற்றதன்மை, தற்கொலை, அந்நியமாதல், பாலுணர்வு, குற்றவுணர்வு, வெறுமை, அபத்தம், நம்பிக்கையின்மை, தனிமை, கனவின் உட்புறம், மாறுபாடு போன்ற இருத்தலியலின் உட்கூறுகள் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளில் மிகுந்துள்ளது எனலாம்.
“கீழ் உலகக் குறிப்புகள்” என்னும் நாவல், தஸ்தயேவ்ஸ்கியின் இருத்தலியல் கோட்பாட்டிற்கு ஒரு வலுவான சான்றாகும்.

இக்கோட்பாடானது திரைப்படம், இலக்கியம் என்ற நிலைகளைத் தாண்டி, மனோநிலை மற்றும் உளவியல் சிகிச்சை முறைகளில் (Psychoanalysis & Psychotherapy) நடைமுறைக்குட்பட்டு செல்வாக்குச் செலுத்தி வருவது இதன் ஒரு படிமுறை வளர்ச்சி எனலாம். E = mc2 என்ற ஜன்ஸ்டீனின் நிறையாற்றல் சமானக் கொள்கை இயற்பியலுடன் எங்ஙனம் தொடர்புற்றதோ அது போலவே இந்த Existentialism ஆக்கவியல் தாண்டிய உளவியல் நிலைப்பாடுகளுடனும் தொடர்புகளை மேம்படுத்தி மானிடவியலில் Post-Structuralism ஏற்படுத்துகிறது என்றால் அது மிகையல்ல.
•••••••
By:R.Suyaanthan.

Comments

  1. Good to see they conveyed this in Super deluxe movie, I was waiting to see some movies talk about this ever since bharathi said

    காலமென்றே ஒரு நினைவும்
    காட்சியென்றே பல நினைவும்
    கோலமும் பொய்களோ
    அங்குக் குணங்களும் பொய்களோ
    காண்பதெல்லாம் மறையுமென்றால்
    மறைந்ததெல்லாம் காண்பமன்றோ
    நானும் ஓர் கனவோ
    இந்த ஞாலமும் பொய்தானோ

    ReplyDelete
  2. மிக நல்ல கட்டுரை சுயாந்தன். இருத்தலியக் கோட்பாட்டை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு சரியான உதாரணங்களோடு எழுதப்பட்ட ஒரு நல்ல கட்டுரை. தற்கால தமிழ் நாவல்கள் இருத்தலியம் சார்ந்து ஏதேனும் வந்துள்ளதா?

    ReplyDelete

Post a Comment

Popular Posts