நான் வாசித்த புத்தகங்கள்- பகுதி 01

படி என்று யாரும் கட்டாயப்படுத்தாத காரணத்தால்தான் என்னால் தொடர்ந்து புத்தகங்களை வாசிக்க முடிகிறது. சிறுவயதில் இருந்து இந்தப் பழக்கம் எனக்கு ஏற்பட்டிருந்தது. நூலகங்களிலோ யாரிடம் இரவல் வாங்குவதோ எனக்கு இன்றுவரை பிடிக்காத ஒன்று. அப்படிச் செய்வது கடமைக்குப் புத்தகம் வாசிப்பது போன்ற உணர்வை உண்டாக்குவது என்பதனால் சொந்தமாகவே விலைக்கு வாங்கிய நூல்களையே நான் இன்றுவரை வாசித்து வந்தேன். எனது புத்தக வாசிப்பு பொன்னியின் செல்வன் என்ற  நூலுடன் தொடங்கியது. பின்னர் படிப்படியாக தீவிர இலக்கியத்துக்கு வாசிப்பை வரித்துக் கொண்டேன். இதற்குள் நுழையும் போது சஇல சங்கடங்கள் உள்ளன. ஒன்று இது பற்றி யாருடனும் இங்கு பேசமுடியாது. தீவிர இலக்கியத்துக்குள் வந்தவர்கள் மிக மிக அரிதானவர்களே. மேலும் தீவிர இலக்கிய நூல்களை இங்கு யாரும் வாங்குவதில்லை. ஆதலால் புத்தகங்களை இந்தியா செல்பவர்களிடம் பணம் கொடுத்தே பெறவேண்டிய காத்திருப்புத் துர்ப்பாக்கியம் நிலவுகிறது. 

நான் வாசித்த  ஆயிரத்துக்கு அதிகமான புத்தகங்களைப் பற்றியே இத்தொடர் கட்டுரை மூலம் பகிர்ந்து கொள்ளப்போகிறேன். 
கடந்த காலங்களில் என்னால் வாசிக்கப்பட்ட மறக்க முடியாத புத்தகங்கள் இவை.  மேலும் நான் யாரையும் இதைப் படி என்று கட்டாயப்படுத்துவதில்லை. அறிவுரைகள் கூறுவதில்லை. புத்தகங்களை எனது இன்பத்துக்கும் அறிவின் பொருட்டும்தான் படிக்கிறேன். எனது அறம் இயற்கையின் மீது இல்லாத கடவுள் காட்டும் அனுக்கிரகம். நாம் எத்தருணத்திலாவது கடவுளை நம்புகிறோம் அல்லவா?. என்னிடம் ஒருவர் கேட்டார் இவ்வளவு புத்தகங்கள் வாசிக்கிறீர்களே உங்களால் ஏன் உங்களது குறும்புத்தனங்களையும் இதர குழப்படிகளையும் விட்டுத் திருந்த முடியவில்லை என்று. நிச்சயமாக புத்தகங்கள் என் ஆழ்மனதுக்குள் இயங்குபவை. அவற்றைப் புற உலகுடன் செயலாற்ற நான் அனுமதிப்பது குறைவு. இதனை அவரிடம் சொல்லி அவர் அதற்குப் புரியாமல் திருதிரு என்று முழிப்பார். அதனால் நான் கடந்து சென்றேன். இந்தநூல்கள் கூட இலக்கியங்களைப் புரிந்து கொண்டவர்களுக்காகவே பகிர்கிறேன். 


1. நீண்ட பயணம்

என் நினைவில் இப்போதும் கனன்றாடும் ஒரு நாவல் என்று இதைக் கூறுவேன். மிக நீளமான நாவல். வெள்ளாளருக்கும் பள்ளர் பறையருக்கும் இடையில் நிகழும் சாதியப் பிரச்சனைகளை அழுத்தமாகக் கூறிய நாவல் இது. இதன் நாவல் உத்திகள் என்னளவில் வெற்றி பெற்ற ஒன்றாகவே கருதுகிறேன். 


2. காடு

முதல்காதலை எப்படி எழுதலாம் என்ற குழப்பம் அனைவருக்கும் எழும். சங்க இலக்கியங்களில் கைக்கிளைக் காதல் எப்படிக் கூறப்படுகிறது. ஒருதலைக் காதலின் அங்கலாய்ப்புகள் மேவியிருக்கும். காடு கட்டற்ற புலம்பல்களால் உருவான மிகச்சிறந்த நாவல் என்பேன். 

3. கொற்றவை

முலை பிடுங்கி எறிந்த திருமாவுண்ணி பற்றிய குறிப்புகள் நற்றிணையிலும், கொற்றவை வழிபாடுகள் பற்றி குறுந்தொகையிலும் நாம் சிதறலாகக் காண்கிறோம். பின்னாட்களில் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தின் மூலம் திருமாவுண்ணியின் கதை என்ற கருத்தும் ஆய்வும் உள்ளது. அவற்றைப் புதுக்காப்பியமாக ஜெயமோகன் தந்துள்ளார்..இதற்கு பதினைந்து வருடங்கள் ஆனது என்றும் கூறியுள்ளார். தமிழில் உருவான மிகச் சிறந்த படைப்புக்களில் இதுவும் ஒன்று.

4. விஷ்ணுபுரம்

தமிழ் நாவல் உலகின் எல்லைகளை விஸ்த்தரித்த நூல் என்று இதனைக் கூறமுடியும். வேறான உலகம் ஒன்று நம் கண் முன் வந்து விரியும். எனது வாசிப்பில் இதனை என் வாழ்நாளில் மறக்கமுடியாத மற்றுமொரு படைப்பு என்று கூறுவேன்.

5. க. அயோத்திதாசர் ஆய்வுகள்.

கேரளத்துக்கு அய்யன்காளி, நாராயணகுரு போல தலித்துக்களின் முன்னேற்றத்துக்கு ஓரளவு அறிவுபூர்வமாகத் தமிழில் போராடிய ஒருவர் அயோத்திதாசர். அவர் தொடர்பான ஆய்வுகளை அவரது மொழிநடையிலேயே ரஆஜ் கவுத்தமன் இந்நூலை எழுதியுள்ளார். அயோத்திதாசரைத் தமிழ்ச் சூழலில் முற்றாக ஏற்கமுடியாது. அவர் தன் ஜாதியை ஏற்றிப் பிராமணர்களைக் கண்டமேனிக்குத் திட்டுகிறார். பாரதியாரைக்கூட விடவில்லை. ஆனால் ஈ.வே.ராமசாமியுடன் ஒப்பிடும்போது அயோத்திதாசர் ஓரளவுக்கு அறிவுபூர்வமானவர். தாசரிடம் வேரிலிருந்து தீர்வை முன்வைக்கும் மனம் இருந்துள்ளது. 


6. சாட்சிமொழி அரசியல் குறிப்புகள்.

தமிழகம் மற்றும் கேரளம் சார்ந்த அரசியல் குறிப்புகள் இதில் உள்ளது. இடதுசாரிகள், திராவிடக் கட்சிகள், இஸ்லாமிய அடிப்படைவாதம், மதமாற்றம் என்பன கராராக இந்நூலில் உரையாடப்படுகிறது. ஈ.எம். நம்பூதிரி பற்றிய கட்டுரையும் திராவிட இயக்கங்கள் பற்றிய கட்டுரையும் தமிழ்ச்சூழலில் தவிர்க்கமுடியாத விமர்சனத்தை ஏற்படுத்தியது எனலாம். இந்நூலில்தான் ஈவேரா மீதான மிகையான பிம்பம் கலைத்துப் போடப்படுகிறது.

7. இந்திய ஞானம் தேடல்கள் புரிதல்கள்.

இந்திய ஞானம் மீது தொடரப்பட்டுள்ள  அறியாமைகளையும் அதன் தாற்பர்யங்களையும் விவாதம் மூலம் மனதுக்கான தொடுவிளக்கம் வழங்கிய மிகச் சிறந்த ஒரு நூல். சங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும், இந்தியச் சிந்தனை மரபில் குறள் முதலிய கட்டுரைகள் மிகப் பரந்த நோக்கம் கொண்டவை. இந்திய ஞானத்தின் தேடல்களின் மகத்துவங்களைப் பறை சாற்றுவன என்று கூறலாம். 

8. இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு 1 & 2


ராமச்சந்திர குஹா எழுதிய இந்தப் புத்தகம் மிக நீளமான வரலாற்றை உள்ளடக்கியது. இந்தியாவை விட்டு வெள்ளையர்கள் வெளியேறிய தருணம் சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்த இந்தியாவை ஒன்றாக்கியமையும் தேசவிரோத சக்திகளின் பிரிவினை நோக்கங்களும் என்று 1947 க்கு பின்னரான முழு இந்திய வரலாறும் எழுதப்பட்டுள்ள ஒரு நவீன நூல் இது. இந்திரா காந்தி மீது நாம் அனைவரும் கொண்டுள்ள பிம்பம் இங்கு உடைவுறுகிறது. இந்திய வரலாற்றில் வந்த சர்வாதிகாரி அவர் என்கிறார். அதற்குக் காரணமாக எமர்ஜென்சி மற்றும் பொதுச் சேவைகளில் அரசியலின் செல்வாக்கு என்பவற்றைக் கூறுகிறார்.
இதனைத் தமிழில் ஆர்.பி. சாரதி மிகச் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார். இந்த இரண்டு பகுதிகளையும் வாசித்து முடித்ததும் நான் ஒரு பெரு மூச்சினை விட்டுக்கொண்டேன். 
குஹா அடுக்கும் சித்திரங்கள் அனைத்திலும் ஆதாரங்களை அடுக்கிக் கொண்டே போகிறார். இந்நூலை வாசகனின் விவாதமாக எடுக்குமாறு கோருகிறாரோ என்று எண்ணினேன். 


9. உரையாடும் காந்தி

ஜெயமோகனின் இணையக் கட்டுரைகள் நூலாக்கப்பட்டுள்ளது. பல கேள்விகளுக்கான பதிலாகவும் தனிக்கட்டுரைகளாகவும் உள்ளது. இன்றைய காந்தி நூலுக்கு பின்பு ஜெயமோகனால் காந்தி மீது உள்ள சிறந்த விமர்சனங்களை உள்ளடக்கியநூல் என்பேன். தற்காலத் தமிழ்ச்சமூகம் வாசிக்கவேண்டிய ஒருநூல்.


10. இன்றைய காந்தி

காந்தி மீதான குற்றச்சாட்டுக்களும் காந்தியின் சிந்தனைகளும் நவீன முறையில் அணுகப்படுகிறது. நான் நினைக்கிறேன் எதிர்மறையாக அணுகப்பட்ட காந்தி இந்நூலின் பின்பூ ஒரு ஞானியாக என்னுள் பரிமாணம் பெற்றார் என்பேன். 



11. பண்பாட்டு அசைவுகள்.

தமிழர்களின் வாழ்வியல் முறைகளும் அதன் அன்றாடங்களின் மரபுகளும் மிக எளிமையாக எடுத்தாராயப்பட்டுள்ளது. தமிழுணர்வு மேலோங்கிய இடங்களே இந்நூலில் அதிகம் உள்ளது. வரலாறு தொடர்பான சில இடங்களில் தொ.ப சோடை போகிறார் என்றே கூறுவேன். சில ஆய்வுகள் தனது தளத்தை மீறிய முயற்சியோ என்று படுகிறது. அல்லது ஊகங்களோ என்று நினைத்துக்கொண்டேன். குறிப்பாகச் சங்க காலத்தில் வாழை இல்லை என்று போகிற போக்கில் இவர் எழுதுவது என்று பல. ஆனால் இதனை மட்டும் வைத்து தொ.ப நூல்களை விலக்கமுடியாது. இது தமிழ் ஆய்வின் முக்கிய நூல். இதில் அறியப்படாத தமிழகம் நூலும் இணைக்கப்பட்டுள்ளது.

12. நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்

இதுவரைகாலமும் வெகுஜன இலக்கியத்துக்கும் தீவிர இலக்கியத்துக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு கும்பல் இருந்து வந்தது. இன்றும் இருக்கிறது. வைரமுத்துவை விடச் சிறந்த கவிஞர் இல்லை என்று கூறும் அடித்தள ரசனை கொண்ட ஒரு கும்பல் நல்ல இலக்கியங்களைச் சீரழிக்க என்றே உலாவுகிறது. அது எக்காலமும் தவிர்க்க முடியாத ஒன்று. ஜெயமோகனின் இந்த விமர்சன நூல் ஒரு எல்லையில்லாத விமர்சனங்களை முன்வைத்து பிரிப்பை நிகழ்த்துகிறது. நான் இங்கிருந்துதான் எனது வாசிப்பின் தளங்களை விரித்தும் வளர்த்தும் கொண்டிருக்கிறேன். இது ஒவ்வொரு இலக்கிய விரும்பியும் வாசிக்கவேண்டிய நூல். 

13. ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்

வாஞ்சிநாதன் ஆஷ் துரையைக் கொன்றது பற்றிப் பல வதந்திகள் உலாவுகிறது. குறிப்பாக வாஞ்சியின் சாதியை வைத்து விமர்சிக்கிறார்கள். இந்நூல் ஆஷ் கொலை பற்றிய ஆய்வுகளை விரிவான ஒரு விசாரணையாக நிகழ்த்துகிறது. ஆ.சிவசுப்பிரமணியனின் ஆய்வு பாராட்டுக்குரிய ஒன்று.

14. வயக்காட்டு இசக்கி.

நாட்டாரியல் ஆய்வுகளில் என் பிரியத்துக்கு உரியவர் அ.கா.பெருமாள். இவரது நாஞ்சில் வழக்குகள் தொடர்பான கட்டுரைகள் அதிகம் பிரபலமானவை. அந்த வகையில் வயக்காட்டு இசக்கி நல்லதொரு நாட்டாரியல் ஆய்வு என்று கூறமுடியும். இதில் பழங்குடிகள் பற்றிய ஆய்வுகள் புதிய தரவுகளை இட்டுச்செல்கிறது.

15. கோபல்ல கிராமம்

கரிசலின் மூத்த முன்னோடி எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதிய மிகச்சிறந்த நாவல் இது. இந்நூலை வாசிக்கும்போது அருகில் கரிசல் வட்டார வழக்குத் தொடர்பான அகராதியைக் கைவசம் வைத்தே வாசித்தேன். இவரது கதைகளில் வரும் பெண்களை எனக்குப் பிடிக்கும். அவர்களுக்குள் இருக்கும் பிடிவாதம் ரசனையின் ஆள்கூறுகளால் ஆனதொன்று.   

16. கி.ரா கதைகள்

கி.ரா கதைகளை உள்ளடக்கி காலச்சுவடு மாயமான் என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளது. இதில் அவரது சிறந்த கதைகள் உள்ளன. அழகியல் உணர்வு மிகுந்தவர்கள் இதனை வாசிக்கவேண்டும். கி.ராவின் அழகியல் டிகேசி இடமிருந்து வந்தது என்று சுந்தரராமசாமி சொல்வார். 

17. தஞ்சை ப்ரகாஷ் கதைகள்

பாலியல் கதைகள் இன்று பரவலாக எழுதப்படுகின்றன. ஆனால் ப்ரகாஷின் கதைக்கு ஒரு வலிமை உண்டு என்றே கருதுகிறேன். இத்தொகுப்பிலுள்ள கதைகள் பொன்.வாசுதேவனால் தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 31 கதைகள் உள்ளன. மேபல், சுயம், அங்குசம் போன்ற சிறந்த கதைகள் இடம்பெறுகின்றன. 

19. நீர்ப்பறவைகளின் தியானம்

இந்தத் தொகுப்பை ஒரு நாளில் இருந்து வாசித்துவிட்டேன். கதைகள் பின்னகரும் காலங்களால் ஆனவை என்று எண்ணினேன். கதைகளின் நுட்பங்கள் பாராட்டுக்குரியவை. எனது தெரிவில் கட்டாயம் வாசிக்கவேண்டிய கதைகளின் தொகுப்பு என்று இதைக் கூறுவேன். கதைகளில் இருக்கும் தத்துவங்கள் அழகுபூர்வமானவை. திரும்பவும் இதனை ஒருமுறை வாசிக்கப்போகிறேன். 

20. பூமியை வாசிக்கும் சிறுமி

எது நல்ல கவிதை என்ற சந்தேகம் எழும்போதெல்லாம் நான் சுகுமாரனைப் படிக்கிறேன். இத்தொகுப்பிலுள்ள 109 கவிதைகளில் எது நல்லது என்று என்னால் வகுக்க முடியவில்லை. என்னை மீறிய உணர்வைப் பிரசவிக்கும் பல கவிதைகள் இதிலுள்ளன. நிச்சயமாகச் சொல்லமுடியும், சுகுமாரனை வாசிக்காமல் நவீன கவிதைகளின் மனச்செயற்பாட்டைப் புரியவியலாது. இதில் கோடைகாலக் குறிப்புகள் தொகுப்பின் கவிதைகளும் உள்ளன. 

21. சமயங்களின் அரசியல்

சுந்தர்காளிக்கும் தொ.ப வுக்கும் இடையிலான உரையாடல்களின் தொகுப்பு இது. சங்ககாலம் தொட்டு சமகாலம் வரையான தமிழ்ச்சமூகம் பற்றிய சிந்தனைகள் பகிரப்படுகின்றது. பல இடங்களில் விஜயநகர  ஆட்சியைக் கடுமையாக தொ.ப விமர்சிக்கிறார். என்னால் ஒரு காரணத்தை அறியமுடிந்தது. நாயக்கர்கள்தான் இந்துமதத்தை தமிழகத்தில் நிறுவனமயமாக்கினார்கள் என்று. அதுதான் அந்த எதிர்ப்புக்கு ஒரு காரணம். மற்றையது தமிழ் மொழி மீதான அவர்களின் புறக்கணிப்பு. 

22. குள்ளச் சித்தன் சரித்திரம்

மாற்றுமெய்மை நூல் என்று பலர் எழுதியுள்ளனர். ஆனால் யுவனுக்கே உரிய இயல்பான நடையில் தத்துவம் கலந்து எழுதப்பட்ட ஒரு நாவல். மிக மெதுவாகவே கதை நகர்கிறது. இத்தொகுப்பு அனைவரையும் கவராது. இதனை முக்கியமான இலக்கிய நூல் என்று கூறுவேன்.

23. மகாத்மா அய்யன்காளி

நிர்மால்யாவால் எழுதப்பட்ட இந்நூல் மிகமுக்கியமான ஒன்று. நாராயணகுரு, காந்தி காலத்தில் சமூக நீதி வேண்டி போராடிய மகத்தான ஒருவரின் வரலாறு. மிகச் சிறந்த நூல் என்று கூறுவேன். வாசிக்கும்தோறும் புதிய விடயங்கள் வந்துசெல்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நீதியை வேரில் இருந்தே தேடியவரின் வரலாறு. கட்டாயம் வாசிக்கப்படவேண்டிய நூல். 

24. சிதம்பர நினைவுகள்

சிதம்பர ஸ்மரணய என்ற மலையாளத்தின் தமிழ்வடிவம். பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய 21 கட்டுரைகளின் தொகுப்பு. தன்னைத் திறந்த புத்தகமாகவே இதில் வெளிக்காட்டியுள்ளார். கே.வி.ஷைலஜா சிறந்த ஒரு மொழிபெயர்ப்பைச் செய்துள்ளார். அவரைப் பாராட்டியே ஆகவேண்டும். 


25. என் சரித்திரம்

உ.வே.சா தனது பதிப்புப் பணிகளில் எதிர்கொண்ட சவால்களைத் திறம்பட எழுதிய சுயசரிதை இது. எனது வாசிப்பு நாட்களில் கையில் கிடைத்த மகத்தான நூல்களில் இதுவும் ஒன்று. 


26. சொல்முகம்

மேடைகளில் பேசிய உரைகளை எழுதியுள்ளார். நவீன மற்றும் செவ்வியல் இலக்கிய உரையாடல்கள் அதிகம் உள்ளது. இதிலுள்ள பூவிடைப்படுதல் என்ற கட்டுரை என் விருப்பத்துக்குரிய ஒன்று. 

27. வாழ்விலே ஒருமுறை

அனுபவக் கதைகளைப் புனைவு கலந்து கட்டுரையாக எழுதியுள்ளார். சுவாரசியமான பல விடயங்களைப் பகிர்ந்துள்ளார். 

28. ஜெயமோகன் சிறுகதைகள்

57 கதைகளின் தொகுப்பு இது. ஜெயமோகன் எழுதிய மிகச்சிறந்த கதைகள் இத்தொகுப்பிலுள்ளன. எனது வாசிப்புக்குள் கற்பனையையும் தேடலைத் தீட்டிய தொகுதி என்பேன்.

29. ஊமைச்செந்நாய்

ஆரம்பகால வாசிப்புக்களில் என் மன பிம்பங்களைப் புரட்டிப்போட்ட கதைகளைக் கொண்ட தொகுப்பு நூல். இதிலுள்ள ஊமைச்செந்நாய், மத்தகம் இரண்டும் என்னால் எப்போதும் மறக்க முடியாத எழுத்துக்கள். 

30. மர்மநபர்

தேவதச்சன் எழுதிய அனைத்துக் கவிதைகளும் இடம்பெற்றுள்ள தொகுப்பு. யாராவது உனக்குப் பிடித்த கவிஞர் யார் என்றால் எனது முதல் தெரிவு தேவதச்சன்தான். அவர் எனக்கு ஒரு மஹாகவி. நானூறுக்கும் குறைவான கவிதைகளையே எழுதியுள்ளார். அவற்றுள் பல மிக மிக உச்சமானவை. தமிழின் தவிர்க்கமுடியாத கவிஞர். அவரது கவிதைகள் அனைத்தையும் வாசிக்க விரும்புவோர் வாங்கவேண்டியநூல் இது.

31. பிரான்சிஸ் கிருபா கவிதைகள்

எத்தனை கவிதைகள் என்று தெரியாது. எப்படியும் ஆறு தொகுப்புக்களால் ஆன அறுநூறு கவிதைகள் சரி இருக்கும். காதலை இவ்வளவு கன்னியமாகவும் ஆக்ரோஷமாகவும் உணர்வுகலந்தும் இலக்கிய அழகுடனும் ஒருவனால் சொல்லமுடிந்திருக்கிறது. அதுதான் பிரான்சிஸ் கிருபா. அவரது பெருந்தொகுதிகள் இதிலுள்ளது. 

32. தடித்த கண்ணாடி போட்ட பூனை

போகன் சங்கர் இத்தொகுப்பின் மூலமே என்னிடம் அறிமுகமானார். இத்தொகுப்பு என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. இதற்குள் ஒரு மனம் செயலாற்றுகிறது என்று நினைக்கிறேன். இத்தொகுப்பின் மூலமே நான் ஜெயமோகனிடம் சென்றடைந்தேன். இந்நூலுக்கு எழுதிய தொடர் ரசனைக்கட்டுரைகள் அவரால் பாராட்டப்பட்டு என்னை எழுதத் தூண்டியது. என் மனங்களைப் பிரதிபலிக்கும் இத்தொகுப்பு வாழ்வில் மறக்கமுடியாத ஒன்று. 

33. இடம்பெயர்ந்த கடல்

க.மோகனரங்கன் நம் காலத்தின் மற்றொரு ஆதர்சம். சி. மோகன் போன்ற சிறந்த ஆற்றல் கொண்ட இலக்கியக்காரர். சி.மோகன் படைப்புலகில் இருந்து நின்று விமர்சனங்களை மேற்கொண்டார். ஆனால் மோகனரங்கன் இரண்டையும் கச்சிதமாகச் செய்கிறார். அவரது இந்தத் தொகுப்பு என் பிரியத்துக்கு உரிய ஒன்று. யாருடைய திருமணத்துக்கும் இத்தொகுப்பைப் பரிசளிக்க என்று இருந்தேன். நிச்சயமாக இத்தொகுப்பை என் திருமணத்தில் என் காதலிக்குத்தான் வழங்குவேன். என்றும் இடம்பெயராத கடலாக அதன் வார்த்தைகள் சொரூபமாக இருக்கும். 

34. The Spiritual Significance of Flowers.

நிறங்களுக்கும் மலர்களுக்குமான ஒப்புமைகள் ஆன்மீகரீதியில் ஆராயப்படுகிறது. எனது கரங்களுக்குக் கிடைத்த சிறந்த நூல் என்று இதைக் கூறமுடியும். மே, யூன் மாதங்களில் கொன்றை பூத்துக் குலுங்கும். அதன் மஞ்சள் என்னை உள்ளிளுக்கும். அந்த உள்வாங்கலுக்கு அதன் தெய்வீகத்தன்மையே காரணம் என்று இந்நூல் கூறுகிறது. கட்டாயம் வாசிக்கப்பட வேண்டியது. பல இடங்களில் ஏற்பட்ட ஆங்கில அர்த்தத் தடங்கலுக்கு அர்த்தம் கூறிய காதலிக்கு நன்றிகூறவேண்டும்.

35. உடையும் இந்தியா

அரவிந்தன் நீலகண்டனும் ராஜீவ் மல்கோத்ராவும் இணைந்து எழுதிய நூல் இது. மிக நீளமான ஆய்வுகளால் ஆனது. இந்து மதம் மீது கிறிஸ்த்தவமும், இஸ்லாமும், திராவிடக் கோட்பாடும் கட்டவிழ்த்து விட்டுள்ள புரட்டுத் தகவல்களைத் துல்லியமான தரவுகளுடன் ஆராய்கிறது. இந்த நூலின் ஆய்வுகள் என்னை வியப்புறச் செய்திருந்தன. இந்து ஞான மரபுகள் மீதும் ஒருங்கிணைந்த தேசியம் மீதும் கவனம் செலுத்தும் ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டிய நூல் இது. 


தொடரும்.....

Comments

Popular Posts