காலநிலையும் அரசியலும்

காலநிலையும் அரசியலும்.
===============
"எனக்குண்டு ஓருலகம்
உனக்குண்டு ஓருலகம்
நமக்கில்லை ஓருலகம்"
----குஞ்நுண்ணி கவிதைகள்.

இயற்கையின் பெரும்பகுதி ஒன்று மனிதனின் இடையறாத தூண்டல் விளைவுகளால் நிர்மூலமாகும் போது ஒட்டுமொத்த பூலோகத்தின் இருப்பே கேள்விக்குறியாகிறது.
மிகவிரைவாக அதிகரித்துவரும் துருவப் பகுதிகளின் பனிப்பாறை உருகுதலானது இயக்கப் புள்ளிகளைப் (Tipping Points) பேரழிவுக்கே இட்டுச்செல்வதுடன், இது துருவப் பகுதிகளில் இருந்து தொலைவிலுள்ள இந்து சமுத்திரம் வரை பெருமளவில் பாதிப்பை உண்டாக்கும் என்று ஐரோப்பிய-அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

இதனை Artic Resilience Report என்ற அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் இதுபோன்ற சூழலியல் பிரச்சனைகள் தொடர்கின்ற போது கட்டுப்படுத்த முடியாத பேரழிவுகளை பிரபஞ்சம் எதிர்கொள்ள நேரிடலாம். வழக்கமான எதிர்பார்ப்புக்களைத் தாண்டி ஆர்ட்டிக் பகுதியின் வெப்பநிலை இந்த வருடத்தில் மட்டும் 20C ஆக உயர்ந்துள்ளது. இது உலக அளவில் சூழலியல் நிபுணர்களை மட்டுமின்றி ஆர்வலர்களையும் அதிரவைத்துள்ளது. இந்த வருடத்துக்கான நிலவரம் இப்படி இருக்கும் போது இனிவரும் காலங்களில் இதன் நிலை உயர்ந்து பேரிடர்களுக்கு படிப்படியாக உந்துதலளிக்க வாய்ப்புள்ளது.

"எச்சரிக்கை சமிக்ஞைகள் ஏற்கனவே தாராளமாக உலகத்துக்கு வழங்கியாகிவிட்டது" என்று ஸ்ரொகொஹாம் சூழலியல் நிறுவனத்தின் எழுத்தாளரான மார்க்கஸ் கார்சன் விரக்தியுடன் கூறுகின்றார். காலநிலையின் இயக்கப் புள்ளியில் ஏற்படும் மாற்றங்கள் ஒட்டுமொத்த சுற்றுச் சூழலின் இயற்கை வடிவத்தையே மாற்றியமைத்துவிடும். அது மீளவும் புதுப்பிக்க முடியாத நிரந்தர அழிவிற்கு இயற்கையை அழைத்துச் செல்ல அதிக வாய்ப்புள்ளது.

அண்மைய அறிக்கைகளின் படி ஆர்ட்டிக் பிராந்தியத்தின் பனிப்பகுதிகளில் தாவரங்கள் வளரத் தொடங்கியுள்ளன. அவற்றின் சூழலியல் தன்மைகளால் வெப்பம் அதிகரித்து அருகிலுள்ள பனிப்பாறைகள் மேலும் உருகிய படியுள்ளது. ஆர்டிக் பகுதிகளில் நடைபெறும் மீன்பிடியும் கணிசமான அளவு வீழ்ச்சியுறும். இவற்றின் பிரதான காரணம், மிதமிஞ்சிய அளவு மீத்தேன் வாயுக்களின் வெளியேற்றமும், பச்சைவீட்டு வாயுக்களான குளோரோபுளோரோ கார்பனும், கார்பன் டை ஒக்சைட்டும் தான். துருவங்களில் நிகழும் மாற்றங்கள் சமுத்திரங்களின் இயக்கத்தில் பெரும் மாறுதலை உண்டாக்கிவிடுகின்றன. அவை நீரோட்டங்களின் பயணப் பாதைகளையும் சீரழிக்கின்றன. துருவப் பகுதிகளின் காலநிலை மாற்றம் கண்டங்களைக் கடந்து மாறுதல்களை ஏற்படுத்தும். உதாரணமாக அண்மைக் காலமாக ஆசிய நாடுகளில் பருவமழை பொழிவதில் நிகழ்கின்ற கால இட அளவுகளை பிரஸ்த்தாபிக்கலாம்.

ஆர்ட்டிக் கவுன்சிலும், ஆறு பல்கலைக் கழகங்களும் உள்ளடங்கலாக பதினொரு நிறுவனங்களின் தொகுப்பறிக்கை அண்மையில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் சமகால வெப்பநிலை உயர்வில் அரசாங்கமும், அரசியல்வாதிகளும் தலையீடு செய்கின்றனர் என்பதாகும். நாசாவின் தலைமையில் பூமி விஞ்ஞான பிரிவு (Earth Science Division) மற்றும் அமெரிக்க மத்திய முகவரகம் என்பன இணைந்து துருவப் பகுதிகளின் காலநிலை மாற்றம் பற்றிய பரிசோதனைகளையும், பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக விண்வெளி ஆய்விலும் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு நிதி வழங்குவதையும் அதற்கான திட்டங்களையும் நீக்கவுள்ளதாக டொனால்ட் ரம்ப் கூறியுள்ளார். விஞ்ஞானம் அரசியல் மயமாகியுள்ளதா (Politicized Science) என்ற கேள்வியை முன்வைக்கின்றது. பிரபஞ்ச முக்கியத்துவ நிலையினின்று பார்த்தால் இது ஒரு ஆரோக்கியமற்ற சிந்தனை என்றே எண்ணத் தோன்றுகின்றது.

உலக சூழலில் நடைபெறும் காலநிலை மாற்றங்கள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு ஆய்வுகளை மேற்கொண்டு தீர்க்கப்பட வேண்டியவை. இந்த கருத்து நிலையினையும், முக்கியத்துவத்தையும் சிந்தனையோட்டம் இன்றி விளங்கிக் கொள்வது கவலையளிக்கின்ற விடயமாகும். அரசியல் ரீதியில் பல வாதப் பிரதிவாதங்கள்  அமெரிக்காவுடன் இருந்தாலும், பூலோகப் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்தே செயற்பட்டு வந்தன. இவ்வாறான சூழலில் இப்படி ஒரு கருத்து அணுவாயுதத்தால் உலகம் அழிவது போன்ற பிரமையை கொஞ்சம் கொஞ்சமாகப் பிரசவிக்க வாய்ப்புள்ளது.

இன்னும் இரண்டொரு தசாப்தங்களில் துருவப் பகுதிகளிலுள்ள மக்கள் இயற்கையிலிருந்து தம்மை தற்காத்துக் கொள்வதற்கான  இப்போதே பயிற்சிகளை மேற்கொள்ளுமாறும் கூறப்படுகின்றனர். இது அந்தப் பிராந்தியத்துக்கு மட்டுமே உரித்தான பாதிப்பாக இருக்கப் போவதில்லை. உலகத்தின் சமநிலையை பேரழிவுக்குக் கொண்டு செல்லப் போகும் முன்மாதிரி அறானிக்கைகளே இவை. சுயநல அரசியலையும், ஜாதி மத பேதங்களையும் வரிந்துகட்டி பேசுகின்ற நாம் இயற்கை மீதான அக்கறைகளைக் குறைத்து விடுகிறோம்.

மனித இருப்பைத் தக்க வைக்க இயற்கை மீது தனிமனிதனின் அக்கறை இன்றியமையாத ஒன்றேயாகும். நாம் நமது சூழலில் இருந்து காதல் செய்யவும், கவிதை எழுதவும், நாவல் புனையவும், கற்பனையில் மிதக்கவும், இயற்கையின் இருப்பு இன்றியமையாதது. மேற் சொன்ன குஞ்நுண்ணி கவிதையின் வெளி எவ்வளவு தர்மசங்கடமான நிலைமையை எமக்குத் தரும் என்று சூழலியல் நோக்கில் சிந்தித்து தெளிவடைவது ஒவ்வொருக்குமான அடிப்படைக் கடமை என்று தான் கூறவேண்டும்.
======
By:சுயாந்தன்.
•••
நன்றிகள்: திண்ணை & கீற்று.
•••••
==
http://keetru.com/index.php/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-74/32016-2016-12-12-01-24-47

http://puthu.thinnai.com/?p=33972

Comments

Popular Posts