ரசனைக் கட்டுரை

இரண்டு கேரளப் பாடல்கள். Except K.J.Yesudas.
===========
தமிழ் சினிமாப் பாடல்கள் அண்மைய சில ஆண்டுகளாக ஒரே போக்கில் போவதாக உணரமுடிகிறது. (ஏற்கனவே கேட்ட Tone போல தோன்றுகிறது. சிலர் விலக்கு.) அதனால் தான் ரஹ்மானை சந்தோஷ் நாராயணன் வீழ்த்தி விட்டார் எனவும், அனிருத் யுவனை பிடித்து விட்டார் என்றும் ஒரு நிழல் விமர்சனம் பரவக் காணலாம். பல ஆண்டுகளாக புதிதாக வருகின்ற பாடல்களை 320Kbps இல் Download செய்து ஹோம்தியட்டரில் Soundcheck செய்து கேட்பது வழக்கம். இதுவே ஒரு போதையாகி இசைக்கு அடிமையாக்கிவிட்டது. எனக்குத் தெரிந்த வரைக்கும் நல்ல இசையை ரசிக்க ஆரம்பித்த பிற்பாடு நான் ரசித்த முதல் பாடல் "ராஜராஜ சோழன் நான்" என்கின்ற ராஜாவின் பாடலைக் கூறுவேன். இதிலுள்ள,
"உல்லாச மேடை மேலே
ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும்
என் தாயகம்"
என்ற வரி அடிக்கடி காதில் கிணுகிணுத்துக் கொண்டிருக்கும். சிலவேளைகளில் பாலு மகேந்திரா மீது உள்ள அதீத மதிப்பாகவும் இருக்கக் கூடும். இது வெறும் ஆரம்பம் மட்டுமே. பிற்பாடு தேவா, ரஹ்மான், யுவன், ஹரிஸ், ராஜ்குமார், சிற்பி, வித்யாசாகர், பரத்வாஜ், இமான், ஜீவி, மணிஷர்மா, சந்தோஷ், அனிருத், ஜிப்ரான் வகையறாவாக தமிழில் இருந்த 35 இசையமைப்பாளர்களின் பாடல்களையும் கேட்டாகிவிட்டது. சலிக்கவில்லை, ருசித்துவிட்டது.

இதற்கு மேற்சென்று ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி பாடல்களைக் கேட்டபோதும் மலையாளப் பாடல்களிலுள்ள மெலடி Touch என்பது வேறொரு உலகம் போல எண்ண வைக்கின்றது. அவர்களின் புல்லாங்குழல் இசையும், இந்துஸ்தானி இசைக் கருவிகளின் பாவனையும் ஒரு காரணமாக இருக்கலாம்.  தமிழுக்கு ஈடாகாது, என்ற போதும் ஒரு செந்தமிழ் வாசனையை
கேரளப் பாடல்கள் உருவாக்கிவிடுகின்றன. ஒளசெப்பன், கோபிசுந்தர், மோகன் சிதாரா, ஷரத், தீபக் தேவ், பிஜிபால், எம்.ஜி.ரா, ஷான் ரஹ்மான், ரவீந்திரன், ஜோன்சன் மாஸ்டர் முதலான இசையமைப்பாளர்களின் மெலடிகள் தரம் மிகுந்தவை. அதில் ஒரு சில பாடல்களை பிராந்திய வேற்றுமைகளால் ரசிக்கமுடியவில்லை அல்லது அதற்குள் லயிக்க முடியவில்லை என்ற கருத்தும் உள்ளே உண்டு.

பல மலையாளப் பாடல்களின் ரசிகன் ஆனபோதும், இரண்டு மலையாளப் பாடல்கள் எப்போதும் எனக்குள் முணுமுணுக்க வைப்பவை.
1. விசுதன்(2013) திரைப்படத்திலுள்ள "ஒரு மெழுதிரியுடே நெருகையில்"
2. அனியதிபிரவு(1997) படத்தில் உள்ள "ஒரு ராஜமல்லி விடருன்ன போல"

கோபி சுந்தர், ஒளசெப்பன் ஆகியோர் முறையே பாடலின் இசையமைப்பாளர்களாவர். ஒளசெப்பன் (Ouseppachan) 80களின் மத்தியிலும், கோபிசுந்தர் 2000களின் நடுப்பகுதியிலும் திரையிசைக்கு வந்தவர்களாவர். இளையோரின் காதல் கவிதைகளை  இசைப்படுத்திய பெருமை இவர்களின் தனித்துவம் எனலாம். (கேரளாவின் நாடான் பாட்டுக்களும் இது போன்ற தனித்துவம் கொண்டவைதாம்)

அனியதிபிரவு படத்தின் பாடலிலுள்ள,
"கூடு எவிடே?
முல்லைக் காடு எவிடே?
செல்லக் காட்டினோடே கத பற குயிலே!!!"
என்ற வரியில் ஸ்ரீகுமாரின் குரல் தரிப்பிடம் ஆத்மராகம் போல ஒலிக்கும். முழுப்பாடலின் மையம் அந்த இடத்தில் குடியிருப்பது போல ஒரு தோற்றப்பாடு எழும். அது மாயாமாளவ கௌளாயா அல்லது அமிர்தவர்ஷினியா என்றெல்லாம் தெரியாது. ஆனால் எனக்கான பாடல் இது என்ற பிரமையைத் தோற்றுவிக்கும். "இதழ் எழுதி", "நிறைகுடம்", "கிளி கொஞ்சல்", "வெண்மணி முத்துகள்" முதலிய சொற்களை மலையாள இசையில் கேட்கையில் சங்ககால குறுந்தொகை தான் ஞாபகம் வருகிறது.

"பூவில் வறுந்தலை போலப் புல்லென்
றினைமதி வாழிய நெஞ்சே மனைமரத்
தெல்லுறு மௌவ னாறும்
பல்லிருங்கூந்தல் யாரளோ நமக்கே"
(-குறுந்தொகை பாடல் 19-பரணர்)

கோபிசுந்தரின் (Gopi Sunder) பாடல் சற்று வேறுபட்டது. மெலடி பொது. ஆனால் இதில் ஒரு தாப நிலை உயர்ந்து காதல் ஸ்தம்பிதம் அடையாது இயங்கிய வண்ணம் இருப்பதை பாடலில் அங்கங்கு மூடி மறையும் Instrumentals காட்டுகின்றது.  கூடவே குரலும் அதனை நிறுவுகிறது.
"பிராணம் அலையும் இதுபோல்
பல யுகம் விவசாமாகி.." விவசம் என்பது களைப்பு/கவலை என்று பொருள்.  இந்த முழுப் பாடலின் சங்கமம் மேற்சொன்ன இரண்டு வரிகளால் பூரணமடைகிறது. காதல் காம உத்வேகங்களில் சங்கமிக்கும் இடைநிலை உணர்வுகளின் சொப்பனம் காணாத இந்திரிய மயக்கங்களை  இது போன்ற பாடல்களால் தான் ஆளுகைக்குள் கொண்டுவர முடியும்.

புதிதாகக் கேட்கும் போது இசைக்காகவும், மொழிக்காகவும் திரும்பத் திரும்பக் கேட்கத் தோன்றும். கிட்டத்தட்ட பழந்தமிழ் சொல்லாடல்கள் மலையாளப் பாடல்களில் புணர்ச்சி விதிகளை உதறிவிட்டு இடம் பெறுகின்றன. பிரித்துப் பார்த்தால் 90 வீதம் தமிழ் 10 வீதம் சமஸ்கிரும் மற்றும் ஏனைய கலப்புத் தான் மலையாள மொழி என்றே தோன்றுகிறது.

மொழியாராய்ச்சி என்பதைவிட இந்தப் பாடல்கள் ஆத்மார்த்த உணர்வுகளின் தனிமைகளை ஜீவிதம் கொள்ளவும், இறுக்கமான கட்டமையாத உணர்வுகளை ஜனனிக்கவும் தூண்டுகின்றன. 

மலையாளத்தின்ரே சுவந்தம் தாஸ் ஏட்டன் அல்லாத இரண்டு பாடல்கள் என்னை அவர்தம் நிலத்தில் ஆட்கொண்டுள்ளன என்பது வேறொரு கட்டுரைக்கான தலைப்பாகும்......
======
By:: சுயாந்தன்.
===
திண்ணை இதழில் பிரசுரமாகியது.

http://puthu.thinnai.com/?p=33882

Comments

Popular Posts