சமர்ப்பணம்-சுயாந்தன் கவிதைகள்

சமர்ப்பணம்.
••••••••••••••••

நான் கடக்கவே
முடியாமல் நின்ற வீதிகளில்
ஒரு 'பபிள்கமை'
மென்று கொண்டே
வாகனங்களை மஞ்சள் கோடுகளில் குடைசாய வைத்து
எனை மீட்ட யட்சிக்கு.......

மரங்களில் துளையிட விரும்பாத மரங்கொத்தியாய் இருந்த
என்னை - தன்
பசுமர நினைவுகள் மீது
கொத்தச் செய்த;
ஆறாம் வகுப்பில்
நான் கண்ட ஓரளவு
அழகான பெண்ணிற்கு....

அகத்துள்ளிருந்து ஆதரித்து
புற நினைவுகளிலிருந்து விலகி எங்கெங்கோ போன குறுந்தொகைப் பெண்ணிற்கு.....

என் ஈகோவுக்கு முன்னால்
தன்னை நிரூபிக்க முயன்று
என்னிடம் தோற்று,
தன்னை வென்ற
கிராமத்துக் காரிக்கு.....
அல்லது
வேற்றுக் கிரகத்தில் மாருதிக்கார்
ஓட்டும் அவளுக்கு.......

எனக்கே புரியாமல்
நானெழுதும் கவிதைகளை
எனக்கு மொழிபெயர்க்கும்;
கொஞ்சம் தமிழ் படித்த,
கூடவே கிறுக்கும் பிடித்த
கவிதைக் காரிக்கு......

நான் சொன்ன இவ்வளவு
வரிகளையும்
கவிதையெனச் சொல்லி,
மொழிபெயர்த்து;
இனியும் இனியும்
நான் வெற்றிபெறுவேன் என்றெண்ணும் - அந்த
அந்தகாரக் குழலிக்கு.....

ஆறோ ஏழோ
எண்ணிக்கை தெரியவில்லை..
கவிதைக்காக மட்டும்
கடந்து போன பெண்கள்....

ஆனபோதும் இன்றும் நான்
ஒரு பெண்ணியவாதி தான்.....
••••••

By: சுயாந்தன்.
====
புதுவிதி பத்திரிகை.

Comments

Popular Posts