ஒருமுறையேனும்

ஒருமுறையேனும்....
•••••••••••••
ஒருமுறையேனும்,
வானம்பாடிகளுடன் சேர்ந்து மேகங்களின் உள்ளாடைகளைத் துகிலுந்திடவேண்டும்.
காரணம்- மழை.

ஒருமுறையேனும்,
என்னை முறைக்கும் சைக்கோ கண்களில் சீமெந்துப் பார்வைகளைப் பூசிவிட வேண்டும்.
காரணம்- வெட்கம்.

பறவைகளின் கூடுகளுக்குள் ஒருமுறையேனும் பரிணாமம் பற்றிய தேடல் விதிவிகாரங்களை அறிந்திடவேண்டும்.
காரணம்- பகுத்தறிவு.

ஒருமுறையேனும்,
நட்சத்திரங்களின் தூண்டல் விழி  நிலவுக்கு நினைவிழப்பை தந்திடுமா என்று ஆம்ஸ்ரோங்கின் விண்கலத்திடம்
வினா 'விட' வேண்டும்.
காரணம்- சினிமா.

ஒருமுறையேனும்,
தசாப்தங்களாக என்னுடன் பின்தொடரும் கவிதைகளை விட்டு நீங்கி ஒரு ஜென் நிலையை பெற்றிடவேண்டும்.
காரணம்- மறதியுத்தம்.

எதையாவது அடிக்கடி நிமிண்ட வேண்டும்
என்ற வலக்கைவாதம்
நெருமும் பல்வரிசைகளை எதேச்சையாக நிர்வாணம் ஆக்கிடவேண்டும்.
காரணம்- வக்கிரம்.

இந்த வரிகளை வாசித்த
முடிவில் இதெல்லாம் ஒரு கவிதையா என்று யாரேனும் ஒருமுறையேனும் என்னிடம் கேட்கவேண்டும்.
காரணம்- "உங்களுக்கு இருப்பது ஒருமுறைதான் என்பதால்"
••••••••
By: சுயாந்தன்.

Comments

Popular Posts