Post-Truth. அரசியல் ஆய்வுக் கட்டுரை
Post-Truth - மெய்ம்மை கடந்த அரசியலும், ஒக்ஸ்போர்ட் அகராதியும், தேவதச்சனும்....
இந்த ஆண்டுக்கான சொல்லாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது "Post Truth". அதன் அர்த்தம், உண்மை கடந்தது எனச் சுருங்கக் கூறலாம். அதாவது புழக்கத்தில் நீண்டகால சம்பிரதாயமாக இருந்த ஒரு விடயம் தனது முக்கியத்துவத்தைப் படிப்படியாக இழந்துவிடுதல் எனவும் கூறலாம்.
Post-Truth எனும் சொல்லை விடுத்து இந்த ஆண்டுக்கான சொற்களாக ஒக்ஸ்போர்ட் அகராதி குழுமத்திடம் பின்வரும் மூன்று தெரிவுகள் இருந்துள்ளது.
1. Brexit.
2016ம் ஆண்டு ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரிவதை ஆதரிப்போர் இந்தச் சொல்லாடலை பிரயோகித்தனர். "Britain+Exit" என்பது பிரித்தானியாவின் வெளியேற்றம் என்பதாகும்.
2. Alt-Right.
பழமைவாதத்திற்கு எதிரான வெள்ளையரின் அடிப்படைவாதம் (White Supremacism) ஆகும். Alternative Right என்ற இந்தச் சொல்லின் புழக்கம் டொனால்ட் ட்ரம்பின் கொள்கைப் பிரகடனங்களில் வெளிப்பட்டது. அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் வைரலானது.
3. Adulting.
அமெரிக்கர்களின் பேச்சுவழக்கில் இது அதிகம் பிரயோகிக்கப்பட்டது. பொறுப்புணர்வு என்ற பொருளில் வரும்.
1. Post- Truth இன் வரலாறு:
Post-Truth என்ற சொல்லை முதன்முதலாக ஸ்டீவ் தெசிச் (Steve Tesich) என்ற யுகொஸ்லாவிய-அமெரிக்க திரைக்கதையாசிரியர் கையாண்டிருந்தார். 1979 வெளிவந்த "Breaking Away" எனும் திரைப்படத்தின் திரைக்கதைக்காக இவர் ஒஸ்கார் விருதினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. தி நேசன் என்ற நியூயோர்க் இதழில் உண்மை கடந்த அரசியல் பற்றிய விவாதத்தை எழுதியிருந்தார். றொனால்ட் றீகனின் ஆட்சியில் 1985-1987 காலப்பகுதியில் நடைபெற்ற ஈரான்-கொண்ட்ரா ஊழல் விவகாரங்கள் விவரணமாக இடம் பெற்றிருந்தது. ஹிஸ்புல்லா போராளிகளால் சிறைப்பட்டிருந்த ஏழு அமெரிக்கப் பணயக் கைதிகளை மீட்க ஈரானுக்கு ஆயுதம் வழங்கியதும், நிகாரகுவாவில் கம்யூனிஸ்டுகளை எதிர்த்த கொண்ட்ராஸ் (Contras) போராளிகளுக்கு நிதியுதவி வழங்கிய போது ஏற்பட்ட ஊழலை உண்மை கடந்தது என்ற சொற்பதத்துடன் வெளிப்படுத்தினார். அத்துடன் 90களில் தொடங்கிய வளைகுடா யுத்தம் (Persian Gulf War) பற்றியதாகவுமே அந்த கட்டுரை இடம்பெற்றிருந்தது.
"நாங்கள் சுதந்திரமானவர்கள், சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமை நாம் வாழும் உண்மை கடந்த உலகில் நமக்கான தேவைகளில் ஒன்றாகும்" என்பதே அவரது கூற்று. இதில் தான் முதன்முதல் Post-Truth பயன்படுத்தப்பட்டது.
2004ம் ஆண்டின் தொடக்கத்தில் ராஃப் ஹெய்ஸ் அவர்களால் எழுதப்பட்ட "உண்மை கடத்தலின் சகாப்தம்" பற்றிய புத்தகம் குறிப்பிடத்தக்கது. இதே ஆண்டில் எரிக் அல்டர்மன் என்ற அமெரிக்கப் பத்திரிகையாளரால் 'உண்மை கடந்த அரசியல் சூழ்நிலை' பற்றிய கட்டுரையில் 9/11 க்குப் பின்னரான ஜோர்ஜ் புஷ்சின் தவறான தலைமைத்துவம் பற்றி விமர்சித்திருந்தார். அதே ஆண்டில் கொலின் கிரவுச் அவர்கள் மக்களாட்சி கடந்த நிலையில், தேர்தல்கள் நிச்சயமாக அரசாங்கத்தை மாற்றி தூக்கியெறியக் கூடியவை எனவும் கூறியுள்ளார். Post-Truth Politics என்ற சொற்பதமானது டேவிட் றொபேர்ட் என்ற இணையப் பதிவரால் Grist என்ற உத்தியோகபூர்வ இணைய இதழில் 2010 ல் முதன் முதல் எழுதப்பட்டது.
2016ம் ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் உண்மை கடந்த வாதம் பெருமளவில் பங்கு கொண்டது.
தனிப்பட்டநபரின் நம்பிக்கைகளும், மனக்கிளர்ச்சிகளும் பொதுமக்களின் கருத்துக்களை வடிவமைப்பதில் வெற்றிகொள்கிறது அல்லது அதன் வகிபாகம் அதிதீவிரமாயுள்ளது. அதாவது தனிநபரின் உணர்வுகள் பொய்யாகவோ, நீலிக்கண்ணீராகவோ இருக்கலாம். ஆனால் உண்மை கடந்த நிலையில் அது மக்களின் ஒட்டுமொத்த தெரிவுச் செல்வாக்கில் சென்றமர்கிறது. இந்த Post-Truth என்ற சொற்பதமானது இனிவரும் காலங்களில் மக்களின் நம்பிக்கைகளைச் சீரழித்து, சர்வாதிகார அரசியலையும், ஊழல் அரசையும் தோற்றுவிக்கப் போகின்றது என்பது திண்ணம். தனிமனிதனின் போலியான நம்பிக்கை உணர்வுகள் மொத்த மக்களின் கருத்துரிமை மீது சென்று நிரந்தரமாகக் குடியமர்கையில் பாசிஸ கருத்துக்களும், பழமைவாதங்களும் பிறக்க வாய்ப்புள்ளது. சமகால (Contemporary) உதாரணமாக Donald Trump இன் வெற்றியே அதற்கு ஆதாரம் எனலாம். அவர் தனது வெற்றியைப் பெற அமெரிக்க மக்களிடையே முன்வைத்த தனது தனிபர் சார்ந்த Post-Truth எண்ணப்பாடுகளைப் பின்வருமாறு வகுக்கலாம்.
1. இஸ்லாமியர்கள் நாட்டிற்குள் வருவதை மொத்தமாக நிறுத்துதல்.
2. எதிர்ப் போட்டியாளர் ஹிலாரி ஒரு குற்றவாளி என்ற ட்ரம்பின் சில முன்மொழிவுகள்.
3. அமெரிக்க- மெக்சிக்கோ எல்லையில் மதிற்சுவர் எழுப்புவதாகக் கூறியமை.
4. ஒபாமாவின் மீது முன்வைக்கப்பட்ட ஊழல்களும், பிறப்பின் மீதான சந்தேகங்களும்.
5. முந்தைய ஆட்சியின் மீது வைக்கப்பட்ட பொருளாதாரக் கணிப்பீடுகள்.
6. நாட்டிலுள்ள அத்துமீறிய குடியேறிகளை வெளியேற்றுதல்.
மேற்கூறிய எந்தக் காரணங்களும் பொதுவான அரசியல் கணிப்பீடுகளின் பிரகாரம் உண்மையாகப் போவதில்லை. முதலில் கூறியது போல தனிமனிதனின் அபிலாசைகளை மக்களின் உணர்வுகள் மீது பாய்ச்சுவதேயாகும். இதனையே ட்ரம்ப் தனது வெற்றிக்கான காண்நிலைகளைப் பெற Post-Truth முறையிலான யுக்திகளைக் கையாண்டிருந்தார். பொய்யான தகவல்களைக் கூறி உண்மை கடந்த நிலையில் தனது பொய்ம்மையை மக்களிடையே நிறுவுதலில் Post-Truth வெற்றிகண்டுள்ளது. உ+ம்- பரக் ஒபாமாவின் பிறப்பின் மீது சந்தேகமுள்ளதாகவும், அவரை இஸ்லாமியர் என்றும் உண்மைத் திரிபு ஒன்று கடந்த காலங்களில் கட்டவிழ்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த முறையானது எல்லா காலத்துக்குமான அரசியலில் பொதுவான ஒன்று தான் எனும் சந்தேகம் எழலாம். ஆனால் சமூகவலைத்தளங்களும், இணைய இதழ்களும் அதிகரித்த இந்தச் சூழலில் உண்மை கடந்த தனது யுக்திகளால் அமெரிக்க மக்களின் மனதில் பெருமளவில் மாற்றங்களை ஏற்படுத்தி தனது தனிமனித உணர்வுகளின்பால் வெற்றியடைந்துள்ளார் என்றே கூறலாம். இந்த வெற்றி நாளடைவில் நிரந்தரமற்ற காழ்ப்புணர்வை மக்களிடையே வழங்கும். சில வேளைகளில் அதுவே புரட்சியாகவும், உள்நாட்டு யுத்தமாகவும் வெடிக்கும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் விலகலிலும் இந்த சொல்லாடல் பயன்பட்டுள்ளது எனலாம். Post-Truth என்ற சொல் 2015ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016ல் 2000% அதிகரிப்பைக் காட்டியிருந்தது. இதன் பிரகாரம் சொல்லின் முக்கியத்துவத்தை அறிந்து Word Of the Year ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அரசியல் கலாசாரத்தின் மீதுள்ள அரசியல் என்பது பொதுமக்களின் அபிப்பிராயமும், ஊடகங்களின் விரிவுரைகளும்தான். இவையே பல கொள்கைகளை முற்று முழுதாகப் பிரித்தும் விடுகின்றது.
2. ஆசிய அரசியலில் Post-Truth.
அரசியல் வர்ணனையாளர்களின் கருத்துப் பிரகாரம் போஸ்ட் ருத் என்ற சொல் அரசியலுக்கான ஒரு Term என்றே வெகுவான கருத்துக்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஐக்கிய அமெரிக்கா, துருக்கி, அவுஸ்ரேலியா, இந்தியா, ஜேர்மனி, பிரிட்டிஷ் போன்ற நாடுகளின் அரசியலில் இந்தப் பதத்துக்கான வாதங்கள் அதிகம் நிகழ்கின்றன. (அமெரிக்கா பற்றிய வாதங்களை மேலே கண்டோம்) அத்துடன் இந்தச் சொல்லின் பாவனை ஏறுமுகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
A. India.
===
தீஸ்தா செதல்வாட் என்ற சமூக ஆர்வலருக்கு எதிராக இடம்பெறும் சில நடவடிக்கைகள் இதனுள் அடங்கும். குஜராத்தில் 2002ல் இடம்பெற்ற கலவரம் சம்பந்தப்பட்ட சாட்சியங்களை வழக்குக்கு சமர்ப்பிக்கும் போது மோசடி செய்துள்ளார் என்று இவர் மீது அரசாங்கம் வழக்குத் தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடுத்து 2004ம் ஆண்டு குஜராத்தில் இஷ்ரத் ஜகான் என்ற 19 வயது இஸ்லாமியப் பெண்ணுடன் சேர்த்து மேலும் மூவர் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் லக்ஷர் தைபா தீவிரவாதிகள் என்ற ஒரு கருத்தை அதிகாரிகள் முன்வைத்தனர். ஆனால் இது தனது அரசியல் இருப்பை மேலும் தக்க வைக்கவே உண்மை கடந்த கருத்துக்களை முன்வைத்து படுகொலைகள் நடந்துள்ளது என்றே மனித உரிமையாளர்கள் கருதுகின்றனர்.
B. Sri Lanka.
===
ஆரம்ப காலங்களில் ஆட்சிசெய்த அரசு சிங்கள மக்களிடையே அரசியல் பேச்சுக்களைப் பேசும் போது, தமிழர்களையும் போராளிகளையும் பயங்கரவாதிகளாகவே சித்திரித்திருந்தனர். அவர்களும் அந்த உண்மை கடந்த வாதத்தை நம்பி பரஸ்பர இனத்துவேச செயற்பாடுகளில் ஈடுபட்டனர். தமிழ் மக்களில் அரிதாகக் காணப்பட்ட கல்விமான்கள் தொடக்கம் முற்போக்குச் சிந்தனையாளர்கள் வரைக்கும் ஏதோ ஒரு போலியான காரணங்களைச் சொல்லி அழிக்கப்பட்டனர். இரு தரப்பும் இந்த உண்மை கடத்தலை மக்களிடம் முன்வைப்பதில் வெற்றி கண்டுள்ளனர் எனலாம். ஆனால் பாதிக்கப்பட்டது என்னவோ மக்கள் தான். அண்மைக் காலங்களில் இஸ்லாமியர் மீது கட்டவிழ்க்கப் பட்டுள்ள வன்முறையும் போலியான கருத்துக்களைக் கொண்டு தான் என்றால் அது மிகையன்று.
3. ஏனையவை.
சூழலியல் தாக்கங்களை ஹொப்பன்ஹேகன் அறிக்கை முன்மொழிந்த பிற்பாடு பல நாடுகள் ஆத்மார்த்தமான நடவடிக்கைகளில் ஈடுபட்டன. புவி வெப்பத்தைக் குறைக்கவும், இயற்கையைப் பேணவும் என பல உலக மாநாடுகள் நடைபெற்றன. Post-Truth அரசியல் ஆனது சூழலியல் பற்றிய அரசியல் கட்சிகளின் திட்டவரைவில் பெரும்பங்களிக்கின்றது. பூமியின் வெப்பம் மானிட செயற்பாடுகளால் அதிகரிக்கின்றது என்ற விஞ்ஞானிகளின் கூற்றை அரசியல்வாதிகள் பலர் உதாசீனப்படுத்தக் காணலாம். பொருளாதாரக் கட்டுமானங்களை விஸ்த்தரிக்க விஞ்ஞானிகளின் கருத்தைப் பொய்யானது என விமர்சிக்கக் காணலாம்.
4. ஒரு கவிதை.
=====
துணி துவைத்துக் கொண்டிருந்தேன்.
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்.
தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்.
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்.
அடுத்த துணி எடுத்தேன்.
காதில் விழுந்தது
நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்.
நிசப்தம் போடுகிற குருவிகளின் சப்தத்தில் என்ன இருக்கப் போகிறது. ஏதாவது போலியான உரையாடல்கள் தான் இருக்கும். இக்கவிதையில் Post-Truth என்பது காது தான். ஏனெனில் அரசியல் வாதிகளிடம் கைவசமுள்ள பாசிசம் சப்தமின்றித் தான் வெடிக்கும். அவற்றின் ஆளுகை அனைத்து நிஜங்களையும் தின்னக்கூடியது. இந்தக் கவிதையில் அழகியல் உயரியது. சொற்பதம் உயரியது. கவிதைவெளி உன்னதமானது. Post-Truth என்ற கருத்தியலில் கவிதை மிகவும் அச்சமூட்டுகிறது.
- இரட்ணேஸ்வரன் சுயாந்தன்.
கீற்று & திண்ணையில் பிரசுரமாகியிருந்தது.
===
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31889-post-truth
http://puthu.thinnai.com/?p=33805
Comments
Post a Comment