உழல்தல் ஒரு பேரின்பம் 01
"பலசமயம் பயணத்தைவிடப் பயணத்தின் தொடக்கமே முக்கியம் என்றுகூடத் தோன்றும்" -ஜெயமோகன். இலங்கையைச் சுற்றி வருவதற்கு மிகவும் உகந்த மாதம் என்று நாம் நான்கு பேர் தேர்ந்தெடுத்த மாதம் ஏப்ரல் மாதத்தின் தொடக்கம். இந்தப்பயணம் 2021 ஏப்ரல் நாம் மேற்கொண்ட பயணத்தின் ஞாபகக் குறிப்புகள். பயணம் புறப்பட வேண்டும் என்பதனால் முதல்நாள் மனம் சொற்களால் நிறைந்து கிடந்தது. பயணத்தின் தொடக்க நாளாக ஏப்ரல் முதலாம் திகதியைத் தேர்ந்தெடுத்தோம். நான்கு பேர் நான்கு மோட்டார் பைக்கில் செல்வதற்குப் பூரண ஏற்பாடுகளுடன் தயாரானோம். என்னுடன் பயணத்தில் இணைந்த மூவரும் எனது சிறுவயதில் இருந்தே பழக்கமானவர்கள். எனது பைக் Bajaj Pulsar 150. மற்றைய மூவரின் பைக்குகளும் என்னுடையது போலவே இந்தியாவில் தயாரிக்கப்பட்டவைதான். இந்திய பைக்குகள் தான் இங்கே பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஜப்பானின் பைக்குகளைக் காணமுடியும். ஆரம்பகாலங்களில் ஜப்பான் மோட்டார் சைக்கிள்களைப் பெருமைக்கு வைத்திருந்தனர். பின்னாட்களில் அதை வைத்திருந்தால் பார்ப்பவர்களுக்கு ஒரு பகட்டு உணர்வை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கில் தற்போது பலர் வைத்துள்