பிரமிளின் ஒரு கவிதை- வல்லினம் இதழ் மலேசியா

பிரமிளின் ஒரு கவிதை: சிற்றாய்வு
--இரட்ணேஸ்வரன் சுயாந்தன் •

“இன்றைய தமிழ்க்கவிதையின் முன்னோடி பிரமிள் தான். தத்துவச் சிக்கல்களைத் தீர்த்துக்கொண்டு, மரபையும், நவீனத்துவத்தையும் செரித்து முன்னோக்கிப் பாய்ந்தவர் பிரமிள்” என்று தேவதேவன் ஒரு நேர்காணலில் பிரமிள் பற்றிக் கூறியிருந்தார். அவரது கூற்று நியாயமானது என்று பிரமிளின் படைப்புலகமே பறைசாற்றும்.

பிரமிள் பற்றிய முன்னுரைகள் இல்லாமலே அவரது கவிதை மீதான சிற்றாய்வைப் பரிசோதித்து விடலாம்.

காவியம் என்ற தலைப்பில் பிரமிள் உருவாக்கிய கவிதையின் முடிச்சவிழா யதார்த்தங்களை விமர்சன ரீதியில் கட்டவிழ்க்கலாம். அக்கவிதை பின்வருமாறு;

சிறகிலிருந்து பிரிந்த

இறகு ஒன்று

காற்றின் தீராத பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை

எழுதிச் செல்கிறது.

இந்தக்கவிதையை நான் அடிக்கடி  முணுமுணுக்கும்போது ஒரு சந்தத்தை எனக்குள்ளேயே கவிதையின் வரிகள் உருவாக்கிவிடுகின்றன. அந்த அளவுக்கு வரிகளின் நவிற்சி பெறுமதி மிக்கதாயுள்ளது.

கவிதையின் உள்ளீடுகளில் புதைமமாகப் படிந்திருக்கும் களிம்புகள் ஏராளம். இக்கவிதை பின்வரும் மூன்று பெரும் சொற்பிரிவுகளால் ஆனது.

சிறகிலிருந்து பிரிந்த இறகு.காற்றின் தீராத பக்கங்கள்.ஒரு பறவையின் வாழ்வு.

இவற்றின் நிகழ்பிரதேசம் (Concomitant) அநேகமாக வானமாகவே இருத்தல் வேண்டும். நிலத்துக்கும், வானுக்கும் இடைப்பட்ட பகுதியில், அதேவேளை நிலத்தில் இருந்து சற்று உயர் பகுதியில்தான் காற்றின் தீராத தழுவல்கள்/அழுத்தங்கள் தொடர்ந்து நிகழும் அல்லது சம்பவிக்கும். வானில் பறக்கும் பறவையில் இருந்து பிரிந்த இறகு தரைக்கு இடைப்பட்ட தூரத்தில் பறவைக்கான காவியத்தை எழுதியிருக்கும் என்ற ஐயப்பாட்டுடன் கருத்தை நகர்த்தலாம்.

இறகுகளின் தொகுதியைச் சிறகு என்பர். சிறகுகளின் கூட்டத்தில் இருந்து இறகு எதற்குப் பிரிய வேண்டும்?. அதன் அதிகபட்ச வேண்டுதலே மண்ணில் வீழ்வதுதானா?. இவற்றை மறுதலிக்கத்தான் கவிஞர் காற்றையும் வாழ்வையும் கையாள்கிறார். அதிலும் தீராத பக்கங்கள் (Undying Sides) என்ற சொற்பதமூட்டிக் கவிதையைச் சிந்தனைக்குட்படுத்துகிறார்.

“இறகு ஒன்று × தீராத பக்கங்கள் × ஒரு பறவை” என்ற சான்றுகளில் வரும் ஒருமை பன்மைத்துவம் எத்தகைய நிலைப்பாட்டில் நின்று காவியம் என்ற கவிதைத் தலைப்புக்கு முற்றிலும் ஒத்திசைந்து உண்மைகளைத் துலக்குகிறது என்பது முக்கியம். உதாரணமாக நமது பண்டைக் காவியங்களை எடுத்து நோக்குவோம். அதற்கு ஒரு கதாநாயகன் தேவை. அதேவேளை கதாநாயகியும் அடிப்படை. இல்லையேல் கதை நகராது.  கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற காவியங்கள் நமக்குக் காட்டிய மரபு இது. இக்கவிதையை அந்தக் கோணத்தில் நோக்கலாம்.

தனித்த பறவையைக் கதாநாயகனாகவும், காற்றின் மரிக்காத பக்கங்களைக் கதாநாயகியாகவும் கொள்ளலாம். ஆண்-பெண் கலப்பு கவித்துவமாக மாறிக் காவியம் பிறப்பதுதானே உள்ளூர், உலக இலக்கியங்களின் இயல்பு. ஏனெனில் பெண்ணின் எழுதப்படாத பக்கங்களில் சுவாரஸ்யங்களைப் புனைந்து செல்பவன் ஆண் என்ற கருத்தில் நின்று கூறியுள்ளேன். உதாரணமாக, பின்வரும் விளக்கத்தை முன்வைக்கலாம்;

‘காற்றின் தீராத பக்கங்கள்’ என்ற சொற்பதம் உள்நுழைகையில் கவிதையின் தளம் அகநானூறு வரை விரிவதாக உணரமுடிகிறது. பாலைத்திணையில் வெள்ளி வீதியார் பாடல் ஒன்றுண்டு.

“வானவரம்பன் அடல்முனைக் கலங்கிய உடைமதில் ஓர் அரண்போல

அஞ்சுவரு நோயொடு, துஞ்சாதேனோ?”

இதிலுள்ள பெண்மையின் பிரிவாற்றாமையைத் தீர்க்க ஆணின் நிஜப் பக்கங்கள் வேண்டப்படுகின்றன. அல்லது இன்றியமையாத ஒன்றாகின்றன. காதலனைக் காணாத தன்மை சிறுமையானது  என்று பெண் கூறுகிறாள். அகநானூற்றில் வரும் “வானவரம்பன்” (சேரன்)தான் பிரமிளின் கவிதையில் வரும் தனித்த பறவை என்ற எண்ணப்பாடு இயல்பாக எழுவது நியாயமான ஒன்றே.

(இங்குள்ள பெண்ணிய நிலைப்பாடுகளை முன்வைத்து)

வாழ்வு என்பது ஒரு காவியத்துக்குப் பொதுவான பாடுபொருள். பொதுவான வாசகனுக்குக் காவியம் என்றவுடன் காதல் ஞாபகம் வந்து, ஏன் பிரமிள் அவர்கள் “ஒரு பறவையின் காதலை எழுதிச் செல்கிறது” என எழுதியிருக்கலாமே என்று எண்ணத் தோன்றும். ஆனால் வாழ்வின் Content-இல் ஒரு பகுதிதான் காதல். ஆகவே வாழ்க்கை என்ற புரையோடிப்போன பக்கங்கள் பல உள்ளடக்கங்களால் ஆனது என்ற தோற்றப்பாடு கவிஞரின் மனதில் ஜனித்ததால் அதனையே கவிதையிலும் கூறியுள்ளார்.

பறவையின் வாழ்வை வேறு எதுவும் எழுத முனையவில்லை. பறவையின் ஒரு பாகமாகவுள்ள இறகுதான் இதற்குள் படிமமாக வந்தடைகிறது. இறகு பறவையின் தொல்லுயிர் எச்சம் (Fossil). இதை இப்படியும் கருதலாம்; “தம்முடைய வாழ்வையோ, துயரையோ, மகிழ்வையோ தன் நிலம் சார்ந்த ஒருவன் எழுத முனையும்போது அல்லது எழுதி முடித்த பின்பு அப்படைப்பு ஒரு காவியமாக உருப்பெறும்” என்ற தோற்றப்பாடு கடவுநிலை யதார்த்தத்தின் (Transcendentally Realism)  பிரதிபலிப்பேயாகும்.

சிறகு, இறகு, பறவை, காற்று போன்ற பௌதீக சாரங்களை முன்கொண்டு மீப்பொருண்மையியல் (Metaphysics) கோட்பாடு வெளிப்படக் காணலாம். பிரமிளின் ஏராளமான கவிதைகள் மெட்டாபிசிக்ஸை முன்னிறுத்துபவைதான். (அவரது பொருண்மையாற்றல் சமன்பாட்டுக் (E=MC2) கவிதையே தகுந்த உதாரணம்). இக்கவிதையில் பறவையின் இருப்பைத் தக்க வைக்கவே ‘தீராத’ என்ற சொற்பிரவாகம் வெளிப்பட்டு நிற்கிறது. பறவையின் வாழ்வு இங்கு இருப்பாகும் அதேவேளையில் அதனை எழுதும் பௌதீகத் துண்டம் (இறகு) காலாதீதம் (Expire) ஆகிவிடுகிறது. இதனை முன்னிறுத்தவே “செல்கிறது” என்ற இறந்தகாலப் பொருளில் சொல் நிறைவுறுகிறது. எதுவானாலும் இங்கு பறவையின் வாழ்வு பற்றிய இருப்பு வலியுறுத்தப்படுவதைக் காணலாம்.

“பிரிந்த இறகு + தீராத பக்கம் + எழுதிய வாழ்வு” இதுபோன்ற இடையறாத இருப்பில் வாழ்வு நிரந்தரமாகின்றது. அதுவே காவியமாகின்றது. ஆயிரம் செய்யுள்களில், பல்லாயிரம் உரைநடைகளில் (Prose) பலர் சொல்லிப்போன காவியங்களைப் பிரமிள் எனும் கவிதாவாதி நான்கைந்து வரிகளில் கூறிய விதம்தான், நவீன கவிதைகளுக்கான சுதந்திர உள்ளம் (Free Will)  என்று எண்ணத் தோன்றுகின்றது. தேவதேவனின் முதற்சொன்ன கூற்று எவ்வளவுக்குப் பிரக்ஞை பூர்வமாகவுள்ளது…!

சுயாந்தன்.
2017 ஜனவரி வல்லினத்தில் பிரசுரமானது...

http://vallinam.com.my/version2/?p=3607

Comments

Popular Posts