கொன்றை பூக்கும் காலத்தின் பயணம்
கொன்றையைப் பற்றி எழுத வேண்டுமாக இருந்தால் தன்னுணர்ச்சியாக ஒரு பாடல் பாடுவது போலவும், தன்னுணர்வை மறந்து மழையில் நனைவது போலவும் ஒரு வெகுஜனத் தன்மை எனக்குள் உருவாகியுள்ளது. இதற்குப் பிரதான காரணம் இளவேனிற் காலத்தில் நான் மேற்கொண்டிருந்த பயணங்கள்தான். சித்திரை மாதம் நமக்கு விடுமுறைகளை அள்ளித்தரும் மாதம் என்பதைத்தான்டி, அந்த மாதத்தில் ஒரு கதகதப்பு இருக்கும். சித்திரை மட்டுமல்ல. அதிலிருந்து அடுத்துவரும் ஆவணி வரைக்கும் அப்படித்தான். சித்திரையின் சிறுமாரிக்கும் ஆடியின் பெருங்காற்றுக்கும் இடையில் ஒரு பொன்பூ பூத்து விடுகிறது. அதனை நான் ரசித்துப் பேண கிட்டத்தட்ட இருபத்து இரண்டு வருடங்கள் ஆனதென்றே சொல்வேன். நல்ல வாசம் ஒன்று வருகின்ற பொன்பூ. அதன் இணர்கள் அவ்வளவு அணுக்கமாகவும் அடுக்கமாகவும் இருக்கும். கிட்டத்தட்ட புதுக்காதலில் தூங்காத காம இச்சைகள் போல. கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள் என்ற பாடல் வரிகள் மூலமாகக் கொன்றை பூக்கள் பூக்காத காலத்திலும் மிக எளிமையாகக் கொன்றையை நான் அறிமுகப்படுத்தியிருந்தேன். இது இலக்கியத்தின் ஆரம்ப வாசிப்புப் போல ஒரு தொனி. வெறுமனே வர்ணனைகளையும், திகிலையும் நம்புவது போல, கொன்றையின் வாசனையையும், தோற்றத்தையும் விசுவசித்திருந்தேன்.
காலம் போகப்போக அதன் நிறமும் வாசனையும் என்னை அழுத்தமான பிரமிப்புக்குள் கொண்டு சென்றது. இதனால்தான் என்னவோ கொன்றைகள் பூக்கும் மாதங்களில் என் நீண்ட பயணங்களைக் குறுக்கு வழிகளுக்கு உள்ளாக மேற்கொள்வதுண்டு. உதாரணமாக மடுக்கந்தையில் இருந்து நெடுங்கேணி செல்லும்போது வெலி ஓயா பகுதியில் பூத்து ஓயாத கொன்றைகளை நின்று வேடிக்கை பார்த்தே போகவேண்டியிருக்கும். சங்ககாலக் கபிலர் "தூங்கிணர் கொன்றை" என்று குறிப்பிடுவார். இதன் நீண்ட பூங்கொத்து தொங்கும் இயல்புடையது. அதனால் கபிலர் அப்படிக் கூறுகிறார்.
கொன்றையில் மொத்தமாக 133 இனங்கள் உண்டு. இதில் நமது பிரதேசங்களில் 35 வகையான கொன்றை இனங்கள் உள்ளன.
சரக்கொன்றை
மயிற்கொன்றை
சிவப்புக்கொன்றை
சூரத்துக்கொன்றை
கருங்கொன்றை
குளோப் பூக்கொன்றை
காட்டுக்கொன்றை
வரிக்கொன்றை
மஞ்சட்கொன்றை
பிரம்புக்கொன்றை
மலைக்கொன்றை
சீமைக்கொன்றை
இராகத்துக்கொன்றை
நரிக்கொன்றை
சிறுகொன்றை
செடிக்கொன்றை
பெருமயிற்கொன்றை
செழுமலர்க்கொன்றை
சொறிக்கொன்றை
எருமைக்கொன்றை
புலிநகக் கொன்றை
மந்தாரக்கொன்றை
செம்மயிற்கொன்றை
பெருங்கொன்றை
பொன்மயிற்கொன்றை
முட்கொன்றை
வெண்மயிற்கொன்றை
குண்டு பூக்கொன்றை
சிறுமயிற்கொன்றை
காக்கொன்றை
மல்லங்கொன்றை
நொச்சிக்கொன்றை
புளினைக்காய் கொன்றை
ஈசன் தார்க் கொன்றை
மாம்பழக்கொன்றை.
நமது இடங்களில் அநேகமாக இருப்பது சரக்கொன்றைதான். இதனை Indian Luburnum என்று குறிப்பிடுவார்கள். பல தாவரங்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்டது போல இக்கொன்றையும் அப்படியான ஒரு மாற்றத்தை வெளிப்பகுதிகளில் சந்தித்துள்ளது. ஆனால் மரபான கொன்றைமீது உள்ள ஆர்வமும், பிரமிப்பும் எந்த மரபணுமாற்றக் கொன்றை மீதும் ஏற்படவில்லை. சங்க இலக்கியத்தில் கொன்றையின் இன்னொரு பெயர் கடுக்கை. பிற்காலத்து இலக்கியங்களில் ஆர்க்குவதம், தாமம், மதலை, இதழி என்றும் குறிப்பிடுவர்.
சங்க இலக்கியங்களைப் பொதுவாக திணை, துறை பாராமல் வாசிக்க வேண்டும் என்று இலக்கியவாதிகளில் ஒரு சிலர் குறிப்பிடுவர். அதற்குக் காரணம் யாதெனில், தன்னுணர்வில் பாடப்பட்ட தனிப்பாடல்களை பதிப்புத்துறையில் அச்சுப் பதிப்பித்தவர்கள்தான் அதற்குத் திணை, துறை வகுத்தனர் என்பதாகும். இதனைக்கொண்டு நோக்கும்போது திணை என்பன தேவையற்றவைதான்.
தலைவியைப் பிரியும் தலைவன் கொன்றைமரம் பூக்க முன்பு வந்து விடுவேன் என்று கூறிச்செல்வான். அவ்வாறு வாராத அவனைக்கண்டு கொன்றை பூக்கும் காலத்தே நின்று அவள் வெதும்பி வேதனையுறுவாள். அதுதொடர்பான ஏராளமான பாடல்கள் சங்கக்கவிஞர்களால் பாடப்பட்டுள்ளது.
நற்றிணையில் இந்த வகைப்பாடல் ஒன்று இடம்பெறுகிறது. இதில் கொன்றைப்பூக்கள் பூத்திருப்பது பெருங்காட்டினை நிகர்ப்பதாக இருக்கிறது என்று குறிப்பிடப்படுகிறது.
"நீடு சுரி இணர சுடர் வீக் கொன்றைக்காடு கவின் பூத்த ஆயினும் நன்றும்"
சங்ககாலத்தில் கொன்றை காதலின், காதல் பிரிவு நிமித்தத்தின் குறியீடாகவும் புறச்சூழலை அழகுபடுத்தும் கவிதையின் பொருளாகவும் உள்ளது என்றே கூறவேண்டும். நாம் உணரவேண்டிய மாபெரும் கவிதைகளின் சொற்கள் என்றே கொன்றையைக் கூறவேண்டும்.
"the spiritual significance of flowers" என்று மலர்கள் பற்றி எழுதப்பட்ட நூலில் கொன்றையின் பொன் மஞ்சள் பற்றி இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. "The light of the Truth in the mind". இதனால்தான் "கொன்றை நன் பொன்கால்", "பொன் கொன்றை", "கொன்றைப் பொன்னேர் புதுமலர்", "பொன்னெனக் கொன்றைமலர", "பொன்வீக்கொன்றை" என்று சங்க இலக்கியங்களின் அகநூல்கள் சுட்டுகின்றன. அந்த பொன்மஞ்சளில் இருப்பது ஒருவிதத் தூய்மை. சங்கக் காதலில் இருந்த தூய்மை போலவே.
உள்ளுணர்வின் அடிப்படையான சக்தி கற்பனைதான். அதனை இயக்குவதிலும், மனதின் பலதிறப்பட்ட அகலங்களுக்கு மாற்றீடு அற்ற முறையில் நிகழ்வதுவும் உண்மையே ஆகும். அது இந்த பொன்மஞ்சளில் உண்டு என்பது மேற்படி பூக்கள் பற்றிய ஆய்வு நூலில் சொல்லப்பட்டதாகும். இந்த நூலை மலர்கள் பற்றிக் கற்கவும் உணரவும் விரும்பும் ஒவ்வொருவரும் கற்றாகவேண்டும் என்றே கூறுவேன். இக்கருத்தை நம் சங்க இலக்கியங்கள் அப்போதே கண்டடைந்துள்ளன. இதனை அகநானூற்றுப் பாடல் "கொன்றைப் பொன்னேர் புதுமலர்" என்று வியந்துள்ளது.
கொன்றை மீது குறுந்தொகை கொள்ளும் சித்திரம் அற்புதமானது. தன்னுடைய காதலியின் ஊரைப் பற்றித் தனது பாகனுக்குச் சொல்வது போன்ற பாடலில், கவலைக்கிழங்குகள் தோண்டி எடுத்த குழியில் கொன்றைப்பூக்கள் விழுந்து நிறைவதனால் பொற்பேழையைத் திறந்து வைத்தாற் போலுள்ளது என்று வர்ணிக்கிறார் புலவர் பேயன். என்ன ஒரு கற்பனை. பொன் கொட்டிக்கிடக்கும் தரை. எவ்வளவு அழகான சித்திரம். அது பொன்னல்ல கொன்றை மலரின் வீழ்கை. கேட்கவே மனச்சித்திரம் தரையினை நோக்கி விரைகிறதல்லவா? கொன்றை பற்றிக் குறுந்தொகையிலுள்ள பாடல்களில் பலவும் பொன் என்ற மேலான குணத்தில்தான் வெளிப்படுத்தப்படுகிறது.
"கவலை கெண்டிய கல்வாய்ச் சிறுகுழி கொன்றை ஒள்வீ தாஅய்ச் செல்வர்
பொன்பெய் பேழை மூய்திறந்தன்ன"
பிற்காலத்தில் கொன்றைப்பூ இறைவனுக்குச் சூடும் பூவாகிப் புனிதம் பெறுகிறது. பக்தி இலக்கிய காலங்கள் இதனை அள்ளிக் கொண்டாடுகின்றன. இம்மலரில் ஒரு நிறைவான தோற்றத்தையும் தரிசனத்தையும் காண்கின்றனர். இதனைச் சிவனின் பூ என்பதனால் தெய்வமலர் என்றும் குறிப்பிடுகின்றனர்.
"மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே மன்னே மாமணியே" என்ற புனிதம் பரவுகிறது. இது அனைத்துக்குமான மனதின் வெளிச்சமாகத் தொடர்ந்து வருகிறது. இன்றைய நவீன கவிதைகளிலும் ஒரு புனிதம் கொன்றைக்கும் அதன் பூக்களுக்கும் உருவாக்கப்படுகிறது.
தேவதேவனின் கவிதையொன்று:
தளிர் நுனிதோறும்
கதிர் கதிராய்ச் சிலிர்த்த
மலர் மொக்குகள் குலுங்கும்
கொன்றை மரத்தில்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்ப்
பூத்த மலர்கள்,
பின்வரும் பூவெள்ளத்தை அறிவிக்க என
ஆர்வமாய் முன்னாடி வந்து நிற்கும்
குழந்தைகள்!
ஒரு நண்பகல் ஓய்வு உறக்கத்தின்போது
காற்றின் படிக்கட்டுகளில்
ஓசை அஞ்சி வைக்கும் மெல்லடிகளுடன்
என் நாசியருகே வந்து
என்னைத் தொட்ட
மலரொன்றின் சுகந்தம் துய்த்தவனாய்
நான் விழித்தெழுந்து பார்க்கையில்
ஓராயிரம் சிரிக்கும் மலர்த்தேவதைகளில்
நான் அறியாதே என்னைத் தீண்டிய
ஒற்றை மலர் அவள் எங்குள்ளாள்
எனத் தேடினேன்.
எல்லோரிலும் தன்னைக் காணுக
என்பதுவோ
அவள் தன்னைக் காட்டி, பின்
மறைத்துக்கொண்டதன் இரகசியம்
என வியந்தேன்.
காணக் கிடைக்காமலோ
கண்டுகொள்ள இயலாமலோ போகும்
பிரிவின் வேதனையே
நம் துயர் என்பதறிந்தேன்.
சங்ககாலத்தில் பிரிவினைக் குறிக்கவும், பொன்னை நிகர்க்கவும் குறித்து பின்வந்த காலங்களில் தெய்வமலராகவும் இருக்கும் கொன்றை மறுபடியும் காதலின் நினைவும், பிரிவும் உள்ளிருக்கும் மலர் என்ற சப்தம் ஒலிக்க வைக்கப்படுகிறது. இந்த ஒற்றைக்கவிதையும் அதற்கொரு சான்று.
நாம் கொன்றை பூக்கும் காலத்தின் பயணங்களைக் கொண்டாடுவோமாக!!
தொடர்புடைய பதிவுகள்.
Comments
Post a Comment