ஒரு மௌனம்

ஒரு மௌனம்.
======
கரடுமுரடான வானத்தில்
பறவைகள் மிதந்து போகின்றன.
"ஒரு மௌனம்"
எங்களைப் பறக்கவிட்டு
பறவைகளை வானமாக்கிவிடுகிறது.

சுயநலத்தின் விளிம்புகளில்
நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
"ஒரு மௌனம்"
உள்வட்டங்களில் பொதுநலத்தை எழுதி சுயநலத்தின் சொற்பதத்தை அழித்துவிடுகிறது.

நடக்க முடியாத தெருக்களில்
நாம் நடந்து போகிறோம்.
"ஒரு மௌனம்"
வீதியை நடக்கவிட்டு
நம்மைச் சிறைப்படுத்தி விடுகிறது.

என்னில் உனக்கான தட்டுப்பாடு
அனுதினம் நிகழ்கிறது.
"ஒரு மௌனம்"
எனக்கான உனது அரவணைப்புக்களை
கண்ணீரின் தழும்புகளால் நீக்கிவிட்டுப் போகிறது.

மரணம் போல
ஜனனம் போல
சூரியன் போல
கைரேகை போல
முலைகள் போல
கோபம் போல
தனிமை போல
பென்சில் போல
தாசிகள் போல
கடவுள் போல
மொழிபெயர்ப்புப் போல

எப்போதும் இப்படித்தான்
"ஒரு மௌனம்"
எங்கும்
எப்போதும்
இப்படித்தான்.
கொலைகளால் மலிந்த
வன்மத்தையும் நாங்கள்
"ஒரு மௌனம்" என்று
கூறுவதுண்டு.
======
சுயாந்தன்.

Comments