காமத்தின் தற்கொலைக் காடு.

சங்கப் புலவரான மிளைப்பெருங்கந்தன் காமம் பற்றி எழுதிய பாடலொன்று உள்ளது. அதில் காமம் என்பது சோகமும் நோயும் அல்ல. இயல்பாகவே மனிதரிடம் உண்டாகும் ஒன்று. நினைக்கும் போதெல்லாம் இன்பத்தைத் தருவதுதான் காமம். எதைப்போல என்றால், ஒரு கிழட்டுப் பசுவானது மேட்டு நிலத்திலுள்ள பசும்புற்களைத் தடவி அசை போட்டாற் போன்ற  இன்பம் தரக்கூடியது என்று அதன் பொருள் அமைகிறது. காலந்தோறும் தமிழ் தொடர்ந்துவர அகக்  காரணமாகக் காமமும் உள்ளது. அதைப்பற்றிப் பாடாத சங்கநூல்களே இல்லை. (இந்தப் பாடலை ஜெயமோகன் தனது காடு நாவலின் காப்பாக வைத்துத் தொடங்கியிருப்பார். அந்நாவல்கூட காதல் காமத்தின் மிக நுணுக்கமான பகுதிகளைச் சொல்லிச் செல்கிறது) அடுத்து வந்த அறநெறிக் காலத்தில் காதல் காமம் பற்றிய நோக்கு வீழ்ச்சியுற்றது. இதற்கு அவைதிக மதங்களின் எழுச்சி ஒரு காரணமானது. இருந்த போதிலும் சிலப்பதிகாரத்தின் பல இடங்களில் காமம் காதல் இரண்டின் விக்கிரகங்களைக் காணலாம். மாதவியைக் காமத்தின் குறியீடாகவும் வைத்துப் பார்க்கலாம். பின்வந்த பக்திநெறிக் காலம் இதிலிருந்து ஒருபடி மேலே சென்று கடவுளுடன் காமம் பாராட்டத் தொடங்கியது. பக்திப் பாசுரங்களில் நெக்குருகிய தூய காதல் வாதத்துக்கு எத்தனையோ வரிகள் சான்றாக உள்ளன.

"மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்"

ஆண்டாளின் காதலை சங்ககாலக் காமத்தின் தொடர்ச்சியாகவே இங்கே நாம் காண வேண்டும். சங்ககாலத்தில் காதலைக் காமத்துடன் இணைத்து வித்தியாசம் காணமுடியாத ஒரு நிலையற்ற போக்கு இருந்துள்ளது. ஆனால் பிற்காலங்களில் காமம் என்பதற்கும் காதல் என்பதற்கும் வேறுபாடுகள் வெளிப்படத் தொடங்கின. உதாரணமாக மிளைப் பெருங்கந்தனின் இந்த வரிகளை உதாரணமாக எடுத்து வித்தியாசத்தையும் மரபான தொடர்ச்சியையும் வேறுபாட்டையும் அவதானிக்கலாம்.

"காமம் காமம் என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின்,
முதைச் சுவற் கலித்த முற்றா இளம் புல்
மூதாதை வந்தாங்கு,
விருந்தே காமம்-பெரும்தோளோயே"

"விருந்தே காமம்" என்பதற்கும் "கனா கண்டேன் தோழி" என்பதற்கும் இடையில் காமத்தை இணைக்கும் போது நிறைந்துள்ள இடைவெளியை எளிதில் அறிய முடிகிறது. அதே நேரம் காலந்தோறும் நிகழ்ந்துவரும் காதல் பற்றிய தொடர்ச்சியும் இங்கு விரவியுள்ளது. கனவு என்பதும் அசைபோடுதல் என்பதும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான அக-புற நோக்கு உள்ளவை. நினைத்துக்காணும் கனாவை ஒன்றினை நோக்கிய அகத்தரிசனம் என்று வகுக்கலாம். அசைபோடுதல் என்பதைப் புறவயமாக எங்களை மீட்டிக்கொள்வதற்கான உந்துணர்வு என்று குறிப்பிடலாம்.

இந்தப் அகப்புறத் தன்மைகள் இரண்டும்  இடையறாது உரையாடும் இடமாகத் தமிழின் நவீன கவிதையை நாம் பகுத்துப் பார்க்கலாம். ஜெ. பிரான்சிஸ் கிருபாவின் "காமத்தின் தற்கொலைக் காடு" என்ற கவிதையை வாசித்துக்கொண்டிருக்கும் போது இந்த பழந்தமிழ் இலக்கியத்தின் அகப்புற நோக்கு இயல்பாகவே எனக்குள் மையமிடத் தொடங்கியது. ஜெ.பிரான்சிஸ் கிருபா எழுதிய காதல் கவிதைகள், காதல் ஜோடிகள் தமக்குள் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளக்கூடிய வகையில் அமையக்கூடிய ஒன்றல்ல. அதன் நவீன நிலையை எளிதில் புரிந்து கொள்வதிலுள்ள இடர்பாடுகளால் போலியான வாசகர்கள் அதற்குள் வந்து தமது வீணான நேரத்தைப் பிரயோசனப்படுத்த மாட்டார்கள்.
"காமத்தின் தற்கொலைக் காடு
மர்மங்களின் எளிமையுடன் காணப்படுகிறது
காமத்தின் தற்கொலைக்காட்டின் வரைபடம்
திரைப்படம் போன்று சலனமுடையது
காமத்தின் தற்கொலைக் காட்டின் சுற்றளவு
சாவுக்கு சாவு மாறுபடுகிறது
காமத்தின் தற்கொலைக் காடு
ஒற்றையடிப் பாதைகளால் இறுக்கிக் கட்டப்பட்டிருக்கிறது
காமத்தின் தற்கொலைக்காடு தன் முகத்தை மூன்று சீட்டுகள் போல கவிழ்த்து வைத்திருக்கிறது
காமத்தின் தற்கொலைக்காடு உடல்களை எரித்து காலத்தை உருக்குகிறது
காமத்தின் தற்கொலைக் காட்டின் காவல்தெய்வ வேலை காலியாகவே இருக்கிறது"

இங்கே வரையறுக்கப்படும் காமத்தின் தற்கொலைக்காடு என்பதை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது. மிளைப்பெருங்கந்தன் சொன்ன அணங்கும் பிணியும் கலந்த ஒரு இம்சையாக இதனை எடுக்கமுடியுமா? ஆனால் அங்கு மிளைப்பெருங்கந்தன் விருந்தே காமம் என்றல்லவா சுதந்திரத்தை வகுத்துள்ளார். காமத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதன் அகாலமற்ற நெடுங்குறியீடல்லவா அது. ஆனால் கிருபாவின் கவிதை காமத்தின் தற்கொலைக் காடு என்று காமம் மீதான நம்பிக்கையீனத்தையும் அடக்கத்தையும் தானே தொடர்ந்துவரும் வரிகளில் குறிப்பிடுகிறது என்ற ஒரு சந்தேகம் நம்மிடம் உண்டாகிறது. ஏனென்றால் "மர்மங்களின் எளிமை", "சலனம்", "இறுக்கிக் கட்டப்பட்டிருக்கிறது", "காலத்தை உருக்குகிறது" போன்ற சொல்லாடல்கள் மிக அழுத்தமான முன்முடிபுகளுடன் பிரயோகிக்கப்படுவது போன்ற பிரக்ஞையை வாசக உணர்வுகளிடையே உண்டாக்குகிறது. இவற்றை அழுத்தமாகக் கூறிவிட்டு இறுதியில் "காமத்தின் தற்கொலைக் காட்டின் காவல்தெய்வ வேலை காலியாகவே இருக்கிறது" என்று சொல்லும் போது காமம் அவனுக்குள் சுதந்திரமாக இயங்குகிறது என்ற பிரக்ஞையைத்தான் ஏற்படுத்திவிடுகிறது. இதனை நவீன கவிதையின் முக்கிய அம்சமாக நாம் கருதமுடியும். பழந்தமிழ்க்கவிதைகளில் ஒன்றைப் பற்றிய சட்டகம் வீட்டுக்கிணற்று நீர்நிலை போல ஒழுங்காக வரையறுக்கப்பட்டிருக்கும். ஆனால் இன்றைய நவீன கவிதைகளில், பாய்கின்ற காட்டறுபோல ஒரு வரையறுக்கப்படாத சட்டம் இயங்கி வருகிறது. அது காமத்தை எப்படியும் குறிப்பிடும். காதலை எந்த நிலையிலும் சிதறடித்து ஒழுங்கமைக்கும். வாழ்க்கையை எப்படியும் அணுகும். தன் சுதந்திரத்தையும் தன்னுணர்வையும் தானே வகுத்துக்கொள்ளும். ஆனால் அந்தக் காலந்தோறுமான பின்தொடர்தலுக்குப் பழந்தமிழ்க் கவிதைகளின் பரீட்சயம் நிச்சயமாக இருந்தாகவேண்டும். இல்லாது போனால் வலிந்தெடுத்த ஒரு கவிதைப் பிறப்பித்தலை அப்படைப்பெழுத்துக்கள் நமக்குத் தந்து செல்லும்.

இன்று கவிதை எழுதுபவர்களில் எத்தனை பேர் பழந்தமிழ் இலக்கியம் பற்றி அறிந்துள்ளனர் என்று தெரியவில்லை. ஆனால் அதனைப் பற்றிய அடிப்படைப் புரிதலும் வாசிப்பும் இல்லாதவர்களை நித்திய கவிஞர்களாகக் கருதமுடியாது என்றே நினைக்கிறேன். பழந்தமிழை வாசித்தோ உணர்ந்தோ வந்துள்ள பல கவிஞர்களை இன்று நாம் அடையாளம் காணமுடியும். அதற்குள் பழந்தமிழின் கூறுகளும் நவீனத்துவத்தின் உச்சமான நிலையும் இன்றைய சமூகப் பிரக்சைகளும் விகாசமாகக் காணப்படுகிறது. இது ஆழ்நிலையில் கிளர்ந்து உண்டாகும் ஒன்று. இதனை மொழிகளுக்குள்ளும் கவிதைப் படைப்பிலும் நீர்த்துப்போகச் செய்வது இயலாத ஒன்றென்றே கருதலாம். உதாரணமாக தேவதச்சன், தேவதேவன், கலாப்ரியா, சுகுமாரன், ரமேஷ் பிரேம் (சக்கரவாளக்கோட்டம்), நகுலன், போகன் சங்கர், விகக்கிரமாதித்யன் போன்ற பல கவிஞர்களின் கவிதைகள் நமக்குப் பிரதிபலிப்பது பழந்தமிழை ஒட்டிய நவீனத்துவ முகத்தையே ஆகும்.

பழந்தமிழ் இலக்கியம் என்பதிலுள்ள பழமை என்ற சொல்லாடல் நம்மிடையே சலிப்பைத் தருகிறது. இதனைப் பலர் கூறக் கேட்டுள்ளேன். எழுதியும் வாசித்துள்ளேன். ஆனால் மலையாளத்தின் முக்கியமான கவிஞரான ஆற்றூர் ரவிவர்மா பழந்தமிழின் சிறப்பைப் பலவாறாகக் கூறியுள்ளார். அதுபோலத்தான் கே.சச்சிதானந்தனும் பல இடங்களில் தன் கவிதைமரபே சங்கமரபு என்று தெளிவாகவே எழுதியுள்ளார். நாட்டார் மரபிலிருந்துதான் தமிழின் கவிதைமரபு ஆரம்பமாகிறது. இது படிப்படியாக வளர்ச்சிபெற்று பக்தி மரபு என்றும் பிரபுத்துவ மரபு என்றும் உருவாகி வந்து பின்னர் அனைவருக்குமான ஒன்றாக இன்றைய நவீனத்துவ காலகட்டத்தில் மாற்றம் கண்டுள்ளது. இதன் தொடர்ச்சிகளை எப்படி அணுகுகிறோம் என்பதில்தான் படைப்பூக்கங்கள் நம்மிடையே கிளர்ந்தெழுகிறது. மாற்றாக எங்கிருந்தோ கொண்டுவந்த கோட்பாடுகளையும் கொள்கைகளையும் இதற்குள் போட்டுப் பார்ப்பது என்பது வெறும் அறிவார்ந்த பரிசோதனை முயற்சிதான். கவிதைக்கு உயிரோட்டமான பகுதிகள் அதில் விடுபட்டுப் போகின்றது. ஆனால் நாம் மரபிலிருந்து நவீனத்தைச் சென்றடையும் போதுதான் நமது படைப்பூக்கங்கள் எழுச்சி பெறத்தொடங்குகிறது. ஏனென்றால் தமிழின் இலக்கிய வளம் கொண்டுவரப்பட்ட கோட்பாடுகளையும் கொள்கைகளையும்விட மிக ஆழமானது. அதனைக் கோட்பாடுகளுக்குள் சுருக்குவது என்பது காமத்தின் தற்கொலைக் காட்டில் வேலைக்கு ஆட்களை நியமிப்பது போலாகிவிடுகிறது.

00


Comments

Popular Posts