இந்துத் தேசியமும் இலங்கையின் யதார்த்த அரசியலும்.

வடமாகாணத்தில் யுத்தப் பாதிப்புக்கு உள்ளான பிரதேசங்களைச் சுற்றிப் பயணம் மேற்கொண்டவன் என்ற முறையிலும், அங்குள்ள மக்கள் எதனை விரும்புகிறார்கள் என்ற அபிலாஷையையும் கொண்டு இந்துத் தேசியம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்களின் இலங்கைக்கான தேவை பற்றிய சில பதிவுகளைக் கடந்த  காலங்களில் எழுதியிருந்தேன். அதனைத் தமிழகக் கட்சி அரசியல் மனநிலையிலும் இந்து என்பதே இல்லை என்ற தற்குறி மனநிலையிலும் அணுகிய பலரைக் காணமுடிந்தது. இன்னொருசாரார் இந்து-முஸ்லிம் ஒற்றுமை இலங்கையில் சாத்தியம் என்றும் பகற்கனவு காண்கின்றனர். அப்படிக் கனவு காண்பவர்கள் யாரென்று பார்த்தால் தமது புத்தகங்கள் அதிகளவில் விற்கப்பட வேண்டும் என்றும், முகநூலிலும் இதர இடங்களிலும் தம்மைப் பற்றி நல்ல விதமாகப் பலர் பேசவேண்டும் என்றும் அரசியல் சரிநிலை எண்ணம் கொண்டவர்களேயாகும். இவர்களால்தான் இந்த நாட்டின் தமிழர்கள் இன்னும் இருள் சூழ்ந்த வாழ்க்கைக்குள் செல்கின்றனர்.
நான் இங்கே இந்துத் தேசியம் என்ற கருத்தியலையும் ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பையும் முன்வைக்கக் காரணம் என்னவென்றால், இங்கே வறுமையிலும் யுத்தப் பாதிப்பிலும் தொடர்ந்து அதிகமாக மூழ்கியவர்கள் இந்துக்களாகும். இவர்களுக்கு ஆரம்ப காலங்களில் RSS அமைப்பின் சேவா பாரதி என்ற தொண்டு அமைப்பு வடகிழக்கில் பாரிய உதவிகளை வழங்கியது. ஆனால் கிறிஸ்த்தவ மிசனரிகள் கிறிஸ்த்தவ மக்களின் எழுச்சியையே விரும்பியது. இதனுடன் இல்லாமல் இங்கு புதிதாக அமைக்கப்பட்ட பல கிறிஸ்த்தவ மிஸனரிகள் மதமாற்றத்தைத் தொடர்ந்து மேற்கொள்கின்றன. இன்றுவரை இது தொடர்கிறது. எனக்குத் தெரிந்து நான் பேசியவர்கள் கூறியதும், நேரடியாகப் பார்த்ததுமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கிறிஸ்த்தவத்தைத் தழுவியுள்ளனர். பலர் அற்பப் பணத்துக்கு மாறியுள்ளனர். தமிழகத்தின் திருநெல்வேலியிலுள்ள தென்னிந்தியத் திருச்சபை அமைப்பினர் இந்த மதமாற்றத்தை இங்கே சமீபகாலமாகப் போட்டிபோட்டு நடாத்துகின்றனர். இவ்வாறு மாறுவதற்கு ஆட்சேர்ப்பவர்களுக்குக் கமிசன்கூட வழங்கப்படுகிறது. இங்குள்ள தமிழர்களில் பலர் பொதுவாகவே மதம் என்ற விடயத்தில் சகிப்புத் தன்மை கொண்டவர்கள். அதேநேரம் மதமாற்றம் என்று வந்தால் கடும் எதிர்வினை காட்டக்கூடியவர்கள் தான்.





ஒருமுறை மத்தியதர வசதியுள்ள ஒரு குடும்பத்தின் வளவுக்குள் ஒரு கிறிஸ்த்தவ மிசனரியின் மதமாற்றுகை ஆட்கள் புகுந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தமது சுவிஷேசங்களை ஏற்குமாறு வலியுறுத்தினர். தாங்கள் பாவம் செய்துள்ளீர்கள் அதன் பாவம் நீங்க கிறிஸ்த்தவம் சேருமாறும் பிரச்சாரம் வைத்தனர்.  அங்கிருந்த ஒரு இந்து இளைஞன் அந்த  மதமாற்றத்தில் ஈடுபட வந்த ஆண்களையும் பெண்களையும் சராமாரியாகத் தாக்கி  அனுப்பிவிடுகிறான். அதனை ஒரு எதிர்வினையாகத்தான் எடுக்கமுடியும். இங்குள்ள பல இந்து இளைஞர்களின் நிலைப்பாடு இதுதான். தாம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களோ இல்லாதவர்களோ என்பது வேறுவிடயம். ஆனால் இந்து மரபு என்பது எப்போதும் எம்முடன் இருப்பது. இந்து மதம் இங்கே நிறுவனமயப்பட்டால் இந்த மிசனரிகளும் மதமாற்றுகைப் புரோக்கர்களும் தமது கடையை மூடவேண்டி வந்துவிடும். அதனால்தான் இந்த மிசனரிக்காரர்களும் கம்யூனிச சித்தாந்தக் காரர்களும் கடுமையான எதிர்வினையாற்றுகின்றனர்.

இங்குள்ள தமிழர்கள் தொடர்ந்தும் ஏழைகளாகவும் அரச சலுகைகளைச் சரியான முறையில் பாவிக்க முடியாமலும் இருக்கக் காரணம் இந்தத் தமிழ்த்தேசியம் என்கிற வரட்டு வாதம்தான். அத்துடன் தமிழர்களின் வாழ்க்கையை அடகுவைத்து மேற்கொள்ளப்படும் தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற கேலிக்கூத்தான கருத்தியலுமாகும். இதனை உடைத்து விடுவதற்கு இந்துத் தேசியத்தை இங்கே தொடர்ந்து வலியுறுத்தவேண்டும். அவ்வாறு வலியுறுத்துவதற்கு தமிழ் மாவட்டங்களிலுள்ள இந்து இளைஞர்கள் RSS என்கின்ற இந்துத் தேசியவாத அமைப்புடன் இணைந்து பணியாற்றவேண்டும். இங்கே தமிழ்த் தேசியம் பேசி தமிழகக் கூச்சல் மனநிலையில் தமிழர்களின் அடையாளங்களை அடகுவைக்கும் ஒருசில தமிழ் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்பவேண்டும். அல்லது அவர்களை மாற்றுநிலைப்படுத்த வேண்டும். அதற்கான முயற்சியில் தனியொருவனாக இயங்கிய எனக்கு சிலர் ஆதரவு வழங்கத் தொடங்கியுள்ளனர். நிச்சயமாக நான் எழுத்துமூலம் கொண்டு செல்வதைப் பலர் செயலில் காட்டுகின்றனர். அத்துடன் தொடர்ந்து வரும் காலங்களில் எழுத்தில் இயங்குவதுடன் நின்றுவிடாமல் மக்களுடன் இணைந்து பணியாற்றும் செயலை எனது வாழ்நாளின் மகத்தான காரியமாகக் கருதுகிறேன். எந்தச் சலுகைகளோ, யாருடைய அதிகாரங்களோ, யாருடைய பயமுறுத்தல்களோ இங்கே கவனத்தில் எடுக்கப்படாது.  இலகுவில் உணர்ச்சிவயப்படுவதைத் தவிர்த்து வந்துள்ளேன். அல்லது அந்த மரபு சில காலமாக மரத்துப் போயிருந்தது. ஆனால் சொந்த மக்கள் யுத்தம் முடிந்த பிறகும் எந்த நிலையில் உள்ளனர் என்பதைச் சென்று பார்த்த பிறகு உண்மையில் ஒரு மாற்றத்தை விரும்பாதவன் அந்த  மண்ணுக்கு உரியவனே அல்ல. அவன் அய்ரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இருந்து கொண்டு இங்குள்ள தாம் முன்வைக்கும் யதார்த்த அணுகுமுறையை நிராகரிக்கும் சொகுசு வாழ்க்கைக் காரன்தான்.

நான் சாதிய அரசியலையோ அல்லது வெறுப்பு அரசியலையோ இங்கே முன்மொழியவில்லை. பாதிக்கப்பட்ட சமூகம் மரபார்ந்த  முறையில் ஒரு மதத்தைப் பின்பற்றியுள்ளது. அது ஒரு காலத்தில் தமிழ்த் தேசியம் என்ற விடுதலைக் கருத்தியலை ஏகபூர்வமாக நம்பியது. அதன் சாத்தியமின்மைகளால் அது அழிக்கப்பட்டது. அதன் எச்சங்களாகச் சில பிரதிநிதிகள் சொந்த மக்களை வஞ்சிக்கின்றனர். இதனை மாற்றுநிலைப்படுத்தவேண்டும். இலங்கையில் பிற மத ஆதிக்கத்தைத் தடுக்கவும், மதமாற்றங்களை நிறுத்தவும், தமிழ் மரபுகளைக் காப்பாற்றவும் இந்தியாவிலுள்ள RSS பிரமுகர்கள் பலருடன் உரையாடலைச் செய்துள்ளேன். இங்குள்ள நிலைமைகளை விரிவாக எடுத்துக் கூறியுள்ளேன். அவர்கள் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட இந்துச் சமூக எழுச்சிக்கு இளைஞர்களை ஒன்றிணைய அறைகூவல் விடுக்கின்றனர். இதனை வன்முறை அரசியல் என்று சில டயஸ்போராக்களும் தமிழக் கட்சி அரசியல் மனநிலையிலுள்ளவர்களும் காட்டுக்கூச்சல் மூலம் நிராகரிக்கின்றனர். ஆனால் இங்குள்ள மக்கள் இந்துத் தேசிய அரசியலையும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் ஆதரிக்கின்றனர்.
தொடர்ந்து இதனை இங்கே எம்மால் வெளிப்படுத்தியபடி இருக்க முடியாது. ஆதலால் இலங்கைத் தமிழர்கள் மீது கரிசனை கொண்ட இந்திய இந்துத்துவர்களுக்கும் தேசியவாதிகளுக்கும் நாம் பகிரங்கமான அழைப்பை விடுகிறோம். இலங்கையின் இந்து இளைஞர்களை தேசிய அரசியலுக்குள் மாற்றுநிலைப்படுத்தவும், தொடர்ந்தும் இந்துத் தமிழ் மரபுகளைக் காப்பாற்றவும் உங்களுடைய உதவிகளை நாடி நிற்கிறோம். நாம்  எமது இனத்தின் கடந்தகாலப் பேரழிவுக்குப் பிறகு எந்தவொரு குறுந்தேசியத்தையும் விரும்பவில்லை. குறிப்பாகத் தமிழகக் கூச்சல் மனநிலைகளை. அத்துடன் இந்தியப் பெருந்தேசியத்தை ஆழமாக நம்புகிறோம். அது இந்துத்தேசிய அரசியலாக இங்கே எழுச்சி கொள்ளும்போது தொடர்ந்த இந்திய ஆதரவு எமக்கு இருக்கும் என்பதையும் புரிந்து கொண்டுள்ளோம். அதைத்தான் இலங்கைத் தேசியவாதிகளும் விரும்புகின்றனர். இங்குள்ள தமிழர்களும் விரும்புகின்றனர். 



வெளிநாட்டுக் கூச்சல்களை நாம் கணக்கில் கொள்ளவில்லை.
குறிப்பு: இது இங்குள்ள மக்களின் அடிப்படைத் தேவை பற்றிய குறிப்புகள். இனிவரும் நாட்களில் இந்த அரசியல் பதிவுகளைத் தவிர்க்க முயல்கிறேன். இதனை இந்திய - இந்துத் தேசியவாதிகளுக்கான பகிரங்க அழைப்பாக எடுத்துக்கொள்ளவும். தங்களது களப்பணிகளை இங்கே மேற்கொள்வதற்கு இங்குள்ள இந்து இளைஞர்கள் முழுமையான ஆதரவை வழங்குவர். 

இது தொடர்பான மேலதிக புரிதல்களுக்கு:









00

Comments

Popular Posts