நினைவூட்டலின் ஒற்றைத்தன்மை.
"இந்தியப் பொதுவாழ்வின் அழுத்தமான குறியீடாக நகர்ந்து கொண்டிருந்தது ரயில்" இப்படியொரு வரியை எம்.யுவன் தொடக்கநாட்களில் தனது எழுத்துக்களில் குறிப்பிட்டுள்ளார். அதற்கான பொதுவான அர்த்தங்களை ஏற்றி நினைவூட்டல் என்ற தலைப்பில் ஒரு கவிதையை மே மாதம் (2018) காலச்சுவட்டுக்காகவும் எழுதியுள்ளார். யுவனின் அநேகமான கதைகளும் கவிதைகளும் நினைவுடன் உரையாடக்கூடியவை. நீர்ப்பறவைகளின் தியானம் என்ற கதைத்தொகுப்பை இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம். எங்கோ ஒரு நினைவில் நின்றபடி இன்னொரு நினைவைக்கூட்டி அழுத்தமாக ஒன்றிணைத்துச் சித்தரித்த தொகுப்பு என்று நீர்ப்பறவைகளின் தியானத்தைக் குறிப்பிடலாம்.
நினைவூட்டல் என்ற கவிதை முற்றிலுமாக ஒரு தன்மையில் நின்றுகொண்டு பழைய சம்பவங்களை/நினைவுகளை ஒன்றுதிரட்டி வரவழைப்பதாகும். "புழுதிமண் ஒரு பிராயத்தை, போகும் ரயில் ஒரு ஏக்கத்தை" என்பதில் சிறுவயதில் எம்மை அறியாமல் மண்ணில் புரண்டு விளையாடிய ஞாபகங்களை மீட்டுவதாக அறிந்த பிராயத்தை புழுதிமண் கொண்டுவருகின்றது. அதே போலத்தான் "போகும் ரயில்" என்பதும், வெறுமனே ரயில் என்று குறிப்பிட்டிருந்தால் அடுத்துவரும் ஏக்கத்துக்கு வலு அற்றுப் போய்விடும். போகும் ரயில் என்பது நம்முடன் ஆழமாக உரையாடிய யாரோ ஒருவரைக் காவிச் செல்வதாகவும் அதன் நினைவுதான் ஏக்கத்தைக் குறிப்பதாகவும் அமைந்துவிடுகின்றது. இப்படியே தொடர்ந்து ஒரு அழுத்தமான நினைவினைக் குறித்துக்கொண்டு பல உணர்வுகளை நினைவின்படி கூறிக்கொண்டு செல்கிறது. அவமானம், மரணம், துக்கம், மன்னிப்பு முத்தம் ரகசியம் ஆரூடம், என்று நினைவூட்டக்கூடிய நிகழ்வுகளைக் கூறிக்கொண்டே போகும் கவிஞர் தனிமையின் பிரமையுடன் நினைவை பெரும் அம்சங்களாக மாற்றியமைக்கின்றார். அதாவது பிரியத்தைப் பேரன்பாகவும், முத்தம், ஆரூடம், ரகசியம் போன்ற ஆரம்பத்தில் குறிப்பிட்டவற்றை சகாப்தம், யுகம், தொகுப்பு, காவியம் என்றும் மாற்றமுறுகிறது. ஆரம்பத்தில் சம்பவமாகத் திரட்டப்பட்டவை பின்பு நினைவுகளின் நினைவுகளாக மாறுகிறது.
1. உருட்டுப் பிரம்பின் பூண் ஒரு தண்டனையை
உருளும் கண்ணீர்த்துளி ஒரு மன்னிப்பை.
2. ஒரு நாள் ஒரு சகாப்தத்தை,
ஒரு விநாடி ஒரு யுகத்தை.
நினைவுகளின் நினைவுகளாக மாற்றும்போது கவிதைக்கான அழுத்தம் மேலும் அதிகமாகிறது. ஆரம்பத்தில் குறிப்பிட்ட சம்பவ நினைவுகளிலிருந்து நினைவுகளின் நினைவுகளுக்குக் கவிதை மாறும்போது கவிதை பருநிலையை அடைகிறது. அதாவது ஒற்றைத் தன்மை. நினைவூட்டல் என்பதை அப்படித்தான் நாம் பார்க்கமுடியும். ஆனால் அந்த ஒற்றைத்தன்மை நவீன கவிதைக்கான களம் அல்ல. அது ஒரு வரையறைக்குள் சுருங்கிவிடக்கூடியது. அல்லது வேறுவகையான சர்வ விமர்சனத்துக்கு ஆட்படக்கூடியது. ஒற்றைத்தன்மை கவிதைக்குள் எதையும் நிகழ்த்தாத தன்மை கொண்டது. இந்த ஒற்றைத் தன்மையை மேற்கூறிய விடயங்களைக் கலைத்துப்போடுவதன் மூலம் மட்டுமே சரிப்படுத்தலாம். அதைத்தான் எம்.யுவன் இக்கவிதையில் செய்துள்ளார். சம்பவ நினைவிலிருந்தும், நினைவுகளின் நினைவிலிருந்தும் எழும் இக்கவிதையை "பின் அதுவே ஒரு வாழ்வின் அபத்தத்தை" என்கிற வரிக்குள் அடக்கி கவிதையின் ஒருமைத் தன்மையைப் பன்மைப்படுத்துகிறார். இந்த அவதானிப்பை இப்படிக்கூறலாம். குளத்து நீருக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையான கற்கள் கொண்டு எறிகிறோம். அதுவே ஒரு தருணத்துக்குமேல் கற்கள் தீர்ந்தவுடன் குளத்து நீர் சமநிலைக்கு வந்தடைகிறது. ஆனால் அதன் சிறிய அலைகள் இயங்கிக் கொண்டுதான் இருக்கும். அந்த நீரில் நாம் எறிவதை விட்டு நீங்கிய பின்னும் அதன் இயக்கம் தொடரும். கற்கள் ஆழத்தில் அமிழ்ந்துவிடும். கற்களால் உண்டான அலைகளும் மறைந்துவிடும். அதுதான் இக்கவிதையிலும் உள்ளது. சம்பவ நினைவுகளிலிருந்து நினைவுகளின் நினைவை அடைந்த கவிதை குளத்து நீரின் அலைபோல ஒற்றைத் தன்மை தீர்ந்த பிறகும் பன்முகத்தால் பேசப்பட்டுக்கொண்டு இருக்கும். அதற்கு "அபத்தம்" என்ற சொல் அத்தியாவசியமாகும். இதனை ரசனை அடிப்படையில் புரிந்துகொண்டு இன்றைய வாழ்வுடன் பொருத்திப் பார்ப்பதே எளிய புரிதலை வழங்கும்.
எம்.யுவனின் கவிதை:
"புழுதிமண் ஒரு பிராயத்தை
போகும் ரயில் ஒரு ஏக்கத்தை
உடைந்த பொம்மைத் தலை
ஒரு துக்கத்தை
தேஷ் ராகம் ஒரு பிரியத்தை
ஒற்றைச் சிறு துளியின்
செந்நிறப் பிசுபிசுப்பு ஒரு மரணத்தை
மினுங்கும் ஒற்றைக் கல் மூக்குத்தி
ஓர் அவமானத்தை
உருட்டுப் பிரம்பின் பூண் ஒரு தண்டனையை
உருளும் கண்ணீர்த்துளி ஒரு மன்னிப்பை
எண்ணெய்ப் பிசுக்கு மணக்கும் தலையணை ஒரு சோரத்தை மஞ்சள் கிழங்கின் பச்சை மணம் ஒரு முத்தத்தை
ஆஸ்பத்திரியின் இரும்புக்கிராதி ஓர் ஆரூடத்தை
சாவு ஊர்வலம் பேரண்டத்தின் ரகசியமொன்றை
மற்றும் ஒரு செடி பெருவனத்தின் மர்மத்தை
எல்லையற்றுத் திறந்த அந்தி வானத்தின் அத்துவானத்தில் பஞ்சுப் பிசிறாய்த் தீற்றிக்கிடக்கும் மேகத் துண்டு ஒரு தனிமையை
தனிமையின் ஒரு பிரமை மறக்கவியலா நாளொன்றின் கரிப்புச் சுவையை
ஒரு மணம் ஒரு நிறத்தை
ஒரு நிறம் ஒரு உணர்வை
ஒரு உணர்வு ஒரு வெக்கையை
ஒரு சீதளம் ஒரு பேரன்பை
ஒரு நாள் ஒரு சகாப்தத்தை
ஒரு விநாடி ஒரு யுகத்தை
ஒரு துளி ஒரு தொகுப்பை
ஒரு சொல் ஒரு காவியத்தை
ஒரு பனித்துளி ஒரு வாழ்வை
பின் அதுவே ஒரு வாழ்வின் அபத்தத்தை....."
தொடர்புடைய பதிவுகள்
யுவன் சந்திரசேகரின் நீர்ப்பறவைகளின் தியானம்: நினைவுகளை மீளக்கொண்டு வருதல்.
00

Comments
Post a Comment