ஈவேராவின் அக்கப்போர்.

ஆரம்ப நாட்களில் கண்மூடித்தனமாக இந்து மதத்தை எதிர்த்து எழுதிக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் இந்து மதம் என்பதே பிராமணர்களுக்கு மட்டுமானது என்று நம்பியிருந்தேன். இங்கே திராவிடச் செல்வாக்கு அதிகம் என்பதால் எல்லா மூடர்களும் ஓடும் திசையில் நானும் சேர்ந்து ஓடவேண்டி இருந்தது. திராவிட எழுத்தாளர்கள் எழுதிய நூல்களை வாசித்ததும் ஒரு காரணமாக இருந்தது. அத்துடன் இவற்றை உறுதிப்படுத்த முகநூலிலும் வேறுசில இணையத் தளங்களிலும் எழுதப்படும் அரசியல் சரிநிலை கட்டுரைகளும் காரணமாக இருந்தது.
அன்று மதங்களையும் அரசியல் நிலைப்பாடுகளையும் அணுகுவதில் சரியான நிலையில் இருக்கவில்லை என்பதை இத்தருணத்தில் ஏற்றுக் கொண்டாக வேண்டும். இந்த நிலையில் இருப்பதை இடதுசாரிகள் தங்கள் பாராட்டுக்கள் மூலம் ஊக்குவித்தார்கள். அப்பொழுது மதத்தை நிராகரிப்பது பற்றிய ஆழ்நிலைச் சிக்கற்பாடுகளை நான் அறிந்திருக்கவில்லை. மதத்தைத் துறந்தால் அதன் பிரச்சனைகள் சமூக அளவில் எம்மைத் தனிமைப்படுத்தி வைக்கக் கூடியவை என்பதுடன் சமூக மட்டத்தில் சமநிலைப் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும் என்பதே உண்மை. அதே நேரம் மத அடிப்படைவாதம்கூட அவ்வகையானதுதான்.  அதற்காக எனது மதத்திலுள்ள எல்லா மூடக் கருத்துக்களையும் நான் ஏற்கிறேன் என்று இதன் பொருளல்ல. தீண்டாமை முதலியவற்றுக்கு இந்துமதத்தில் இருந்துகொண்டே பலர் தீர்வுகண்டுள்ளனர். தீண்டாமை என்று இப்பொழுது இங்கே  இல்லை. எந்த ஒரு இடத்திலும் கடந்தகாலங்களில் இவை பதிவாகவில்லை.
இதற்காக மதம் மாறுவதுதான் சரியென்று சொல்வது பிற்போக்குத்தனம் என்றுதான் கூறவேண்டும்.  சாதிய அடக்குமுறைப் பிரச்சனைகளை அமைப்புக்கு வெளியில் சென்றுதான் தீர்வுகாணலாம் என்று ஈவேரா கூறியது அவரது தனிப்பட்ட சுயலாபத்துக்காக அன்றி வேறில்லை. அப்பொழுது அவருக்குக் காங்கிரஸ் எதிர்ப்புத் தேவையாக இருந்தது. காந்தி உட்பட காங்கிரசைச் சேர்ந்த பலரும் இந்துமதத்தை நவீனமுறையில் நோக்கினர். ஆனால் ஈவேரா தான் எடுத்த எதிர்ப்பிலிருந்து பின்வாங்காத முரட்டுத்தனத்தையே சீர்திருத்தம் என்ற பெயரில் வெளிப்படுத்தினார். ஜின்னா, அம்பேத்கர், காந்தி என்ற பெரும் புள்ளிகள் தமது நிலைப்பாடுகளில் இருந்து பின்வாங்காமல் இருக்கும்போது ஈவேராவும் தன்னை அவர்களில் ஒருவராகக் கட்டமைத்துக் கொண்டு இந்துமத எதிர்ப்பை உக்கிரமாக வெளிப்படுத்தினார். அம்பேத்கர் இந்துமத சாதியப் பிரச்சனைகளை கருத்தியல் தளத்தில் ஆராய்ந்து பௌத்தம் சேர்ந்தார். அவர் எக்காரணம் கொண்டும் மதத்தைத் துறக்கவில்லை. அம்பேத்கர் பௌத்தத்தைப் பின்பற்றியது என்னைப் பொறுத்தவரை ஆரோக்கியமான ஒரு செயலாகவே கருதுகிறேன். பௌத்தம் இந்து ஞான மரபுகளுடன் விவாதம் செய்தே வளர்ந்துள்ளது. பௌத்தத்தின் பூர்வீக மரபு எவ்வகையிலும் சமூகச் சமநிலைச் சிக்கற்பாடுகளைத் தராது. அம்பேத்கருக்கு இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் ஆகிய மதங்களின் அமைப்பாக்கம் மீது நம்பிக்கை இருக்கவில்லை. தென்கிழக்காசியாவில் கவர்ச்சிகரமாகப் பரப்பப்பட்ட இந்த இரண்டு மதங்களையும் அம்பேத்கர் பின்பற்றாமல் இந்து ஞான மரபின்வழி வந்த பௌத்தத்தையே சென்று சேர்ந்துள்ளார் என்பது இங்கே மிக முக்கிய விடயமாகும். அதற்குக் காரணம் அவர் சமூக மட்டத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள். அவருடைய கட்டுரைகள் அவரை மாபெரும் தத்துவ ஞானியாகவே கட்டமைக்கிறது.
ஆனால் கலகம் மட்டுமே செய்வதைக் குறியாகக் கொண்ட ஈவேரா என்ன செய்தார். இதுதொடர்பாக உருப்படியான ஒரு ஆய்வுக்கட்டுரையை எழுதினாரா?. இந்து ஞான மரபு வழி யோசித்து பொதுவான பிரச்சனையை முன்வைத்தாரா?. இல்லை. வெறுமனே கண்டமேனிக்கு இந்து மதத்தை எதிர்த்துத் தள்ளினார். அதற்காகப் பிராமணர்களைச் சாதிய ரீதியில் இழிவு செய்தார். பிராமணப் பெண்களை நா கூசத்தக்க வகையில் வர்ணித்தார். இவர் பெண்ணுரிமையைப் பற்றிப் பெருமையாகப் பேசியதாக இன்று திரிக்கின்றனர். அடுத்தவரின் தனிப்பட்ட வாழ்க்கையை தாறுமாறாக விமர்சிப்பவர்கள் ஈவேராவின் தனிப்பட்ட வாழ்க்கையை எடுக்க வேண்டாம் என்கிறார்கள்.
ஈவேரா இந்துமதத்தை எதிர்க்க அரசியல் மற்றும் தனிப்பட்ட காரணங்களே முதன்மையானது. காந்தி என்ற மனிதரின் இந்துமத ஆதரவு ஈவேராவை வெறியேற்றியது. இது ஈவேராவின் காந்திய எதிர்ப்பாக வெளிப்பட்டது. காந்தியைத் திருடன் என்றுகூடச் சொல்லியுள்ளார் ஈவேரா.
ஈவேரா கோஷம் போடும் பலர் ஈவேராவை இன்று இந்திய தத்துவ ஞானியாகக் கட்டமைக்கின்றனர். உண்மையில் அவரை ஞானி என்று சொல்லும் அளவுக்கு தீர்வுதரக்கூடிய, சமூகப் பிரக்ஞைமிக்க ஆய்வுபூர்வமான எந்த முன்னெடுப்பையும் அவர் செய்யவில்லை. அம்பேத்கர், காந்தி போன்றவர்களை இந்திய தேசத்தின் முக்கியமானவர்களாகக் கருதலாம்.  ஈவேரா என்பது கலகத்துக்காக வளர்ந்த குரல். தமிழகத்தில் ஈவேரா உண்டாக்கிய மோசமான வெளிப்பாடு இந்து எதிர்ப்பு மனோநிலை. இது தேசியங்களை உள்ளிருந்து உடைத்து தேசத்தைத் துண்டாடி ரத்த ஆறாகக் காட்சிப்படுத்துவது.
ஈவேராவின் நிலைப்பாடுகளை ஆரம்பத்தில் இருந்தே புறக்கணிப்பவர்கள் காந்தியும் காங்கிரசும்தான்.
இதனை இங்குள்ள சில வாய்வீரர்கள் அறிவதில்லை. ஒரு கட்டத்தில் முஹமது அலி ஜின்னா கூட ஈவேராவை ஒதுக்கினார். பாகிஸ்தானைப் பிரித்துச் சென்ற ஜின்னா திராவிடநாடு அமைய ஏன் ஆதரவு தரவில்லை என்றால் ஈவேரா தனது கொள்கையில் தீர்க்கமான பிரக்ஞை அற்றவர் என்பதால்தான். மரபிலிருந்து நவீனத்தை வந்தடையாத ஈவேரா திடீரென்று மரபிலிருந்து தீர்க்கவேண்டிய சமூகக் கூறுகளை நவீனத்துக்குள் போட்டு அக்கப்போர் செய்தார். இந்த அக்கப்போர்தான் இன்றும் தமிழகத்தில் நடந்து வருகிறது.
இதனை இலங்கைக்கும் கொண்டுவரச் சிலர் முனைகின்றனர். இதன் ஆபத்துக்கள் தேசியத்தை உள்ளிருந்து பிளந்து மக்களைத் தொடர்ந்து எதிர்ப்பு அரசியல் நோக்கி வழிநடாத்தி பெரும்பான்மை சமூகங்களைக் கிலிகொள்ள வைப்பதாகும். இந்தக் கிலிகொள்ளும் பிரச்சனை நீண்டகாலமாகத் தமிழரிடையே ஆண்டபரம்பரை என்று பிற சமூகங்கள் மீது நடாத்தப்பட்டு வரும் ஒன்றாகும். இதனைப் பெண்ணுரிமை, சாதிய ஒழிப்பு, மதச்சார்பின்மை என்ற போலியான நம்பிக்கை கொண்டு உள்ளிருத்துவதாகும். கவர்ச்சிகரமான மேடைப் பேச்சுக்களால் இதனைச் செயற்படுத்தி நாட்டையே குட்டிச்சுவராக்குவார்கள்.
இப்போது இங்குள்ளவர்கள் இந்துத்துவத்தை எதிர்க்கிறேன் என்ற பெயரில் இந்து மதத்தையும் ஞான மரபுகளையும் எதிர்த்துக் களமாடிக்கொண்டு இருக்கிறார்கள். இலங்கையில் இடதுசாரிய- திராவிட செல்வாக்கு புலிகள் காலத்தில் வளர்ந்து மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதம் கூறுபோடப்பட்டது. ஆறுமுகநாவலரை வெறுமனே சாதிவெறியர் என்றுதான் இன்றும் பலர் கட்டமைக்கின்றனர்.
தேராவாத பௌத்தத்தை இங்குள்ள சிங்களவர்கள் பின்பற்றுகின்றனர். ஆனால் தங்களைப் பௌத்தர்கள் என்று பொதுவாக அழைக்கின்றனர். அதேநேரம் அவர்களது பண்பாடு இந்துப் பண்பாட்டாலானது. இங்கே இந்துப் பண்பாடு என்பது ஆரம்பகாலத் தமிழ் மரபுகளையும் உள்வாங்கியது. இந்துத் தெய்வங்களை அவர்கள் ஆச்சாரமாக மதிக்கின்றனர். இன்றுகூட திருப்பதி வெங்கடேச்சர கோயிலுக்கு இங்குள்ள ஆட்சியாளர்கள் தங்களது நேர்த்தியை நிறைவேற்ற வந்து செல்கின்றனர். இதனை இங்குள்ள சிலர் சாதியத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர்.
மேலும் திராவிடம் என்பது மூன்று பக்கம் கடல்களால் ஆனது என்பதே பொருள். ஆரியம் என்பது நாகரிகமடைந்தவன் என்று பொருள். இங்கு இந்த ஒற்றைப் பொருளை வைத்துக்கொண்டுதான் இத்தனைகாலமும் இந்து எதிர்ப்பு என்ற பெயரில் அக்கப்போர் செய்கிறார்கள்.
மரபுகளை விட்டுச் செல்லும்போது மிகமோசமான அழிவுக்குத்தான் தன்னை அந்தச் சமூகம் தயார்படுத்திக் கொள்கின்றது. கடந்த காலத்தில் புலிகள் செய்த ஆயுதப்போராட்டம் வலுப்பெற்றதிலும் மக்கள் பெருமளவில் அழிவடைந்ததிலும் திராவிடம் என்ற பிரிவினைவாத நிலைப்பாடே காரணம். இவற்றை நவீனப்படுத்தி அதிலிருந்து தேசியவாதச் சிந்தனைகள் வரும்போது பிரிவினைவாதம் தலைதெறித்து ஓடிவிடும். இது தொடர்பாக எனது புளக்கரில் தொடர்ந்து எழுதுகிறேன். இலங்கையில் அரசியலை மாற்றுநிலைப்படுத்த நினைப்பவர்கள் இந்துத்தேசியம் என்ற மரபார்ந்த கருத்தைத்தான் எடுக்கவேண்டும். அதை நவீனம் முளைகொள்ளும் வகையில் கட்டமைக்கவேண்டும்.
எதனைப் பதிவினை எழுதினாலும் அதனை நிராகரிக்க ஒரு கூட்டம் உடனே ஓடிவந்துவிடும். அதுதான் அக்கப்போர் என்பது.

Comments

Popular Posts