ஒரு புறாவுக்கு இத்தனை அக்கப்போரா?

தேவதச்சனையும் சங்ககாலக் கபிலரையும் ஒப்பிட்டு கவிதைக்கான மனத்தொடர்புகள் என்ற ரீதியில் ஒரு பதிவினை எழுதியிருந்தேன். அதற்கு ஆரம்பத் தொடக்கமாக சில அரசியல் குறிப்புகளையும் இணைத்திருந்தேன். அது எனது தரிசனத்தில் இருந்து கிடைத்த சிந்தனைகள் என்று கருதுகிறேன். ஆரம்பத்தில் சில கட்டுரைகளை இலங்கையின் நிலைப்பாடுகளுடன் பொருத்தி இந்துத் தேசியம் என்ற ஒன்றை வரையறுத்திருந்தேன். அதனால் அடுத்துவரும் என்னுடைய அனைத்துக் கட்டுரைகளையும் தீவிரமான அரசியல் கண்கொண்டு பார்க்கத் தொடங்கியுள்ளனர். வழக்கமாக முகநூலில் தினமும் விவாதம் நடப்பது இயல்புதான். எதற்கென்று இல்லை. அனைத்துக்குமே விவாதம் செய்வார்கள். நடிகைகளுக்கும் நடிகர்களுக்கும் அடிபடும் ஆட்களுக்கு மத்தியில் இதுபோன்ற இலக்கிய வசை விவாதங்களை மேற்கொள்கிறார்கள் என்பது மகிழ்ச்சிதான். ஆனால் அதிலும் சில புறக்கணிப்புக்களை எப்படிச் செய்கிறார்கள் என்பதை சில குறிப்புகளுடன் தந்துவிடுகிறேன். ஏனென்றால் பின்வருங்கால்களில் இலக்கியப் பிரியர்கள் இதுபோன்ற அரசியலைக் கையாளும்போது கிடைக்கும் அவஸ்த்தைகளைத் தவிர்த்துக்கொள்வார்கள் அல்லவா?. குறிப்பாகத் திராவிட அரசியலையும் தமிழ்த்தேசிய அரசியலையும் தலித்திய அரசியலையும் விமர்சித்துவிட்டு இலக்கியத்துக்குள் இருப்பது என்பது மிகக் கடினமான ஒரு விடயம். வசைகளும் புறக்கணிப்புக்களும் தொடர்ந்து வந்தபடியே இருக்கும். எனக்குத் தெரிந்த பேருதாரணம் ஜெயமோகன். அவர் நிகழ்த்திய அநேகமான விமர்சனங்கள் நியாயமானவை. ஆனாலும் அவரை இந்துத்துவர் என்றே முத்திரை குத்தியுள்ளனர். ஆரம்பத்தில் ஜெயமோகனுக்குக் கடிதம் அனுப்பத் தொடங்கியதும் ஜெயமோகனின் எழுத்துக்களைச் சிலாகிக்கத் தொடங்கியதும் பலர் திட்டியுள்ளனர். அல்லது இயல்பாகவிருந்த நட்பைத் துண்டித்துள்ளனர். மேலும் சிலர் ஜெயமோகனின் வாசகன் என்று வெளிப்படையாகக் கூறாதீர்கள் என்று அறிவுரையும் சொன்னார்கள். ஜெயமோகனை ஆரம்பநாட்களில் வாசிக்காமல் எதிர்த்தவர்களில் நானும் ஒருவன். அதற்கு முழுமையான காரணம் பின்தொடரும் நிழலின் குரல் என்ற ஜெமோவின் நூலை வைத்து இன்றும் இடதுசாரிகள் மேற்கொள்ளும் விசமப் பிரச்சாரங்கள்தான். கோவை ஞானி போன்ற இடதுசாரிகள் அதனை அணுகியதற்கும் இங்கு இப்போதுள்ள பலர் அணுகுவதற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளது. அவருடைய சொல்லில் வசைகளும் நிராகரிப்புகளும் இல்லை. இவர்கள் அதற்கு நேர்எதிரானவர்கள். அடுத்த காரணம் ஜெயமோகன் ஒரு தேசியவாதி என்பது. தேசியவாதிகள் புரட்சிகளை விரும்பமாட்டார்கள். ஆரம்ப வயதில் எல்லா இளைஞர்களும் புரட்சிகரமாகத்தானே வாசித்து எழுதித் திரிவார்கள். அதற்கு நானும் விதிவிலக்கல்ல. கறுப்புச்சட்டை போட்டாலே கம்பீரம் என்று பொதுப்புத்தியில் யோசித்து வீடு முழுக்கக் கறுப்புச் சட்டைகளால் நிறைத்து வைத்துவிட்டு கண்டமேனிக்கு ஜெயமோகன் மீதான அவதூறுகளைக் காண்பதுண்டு. செய்வதுண்டு. அடுத்த முக்கியமான காரணம் இலக்கியப் படைப்புக்களை தயவுதாட்சண்யம் இன்றி விமர்சிப்பவர்களில் முக்கியமானவர் ஜெமோ. அவரது நுணுக்கமான விமர்சனத்துக்கு அதிகளவில் உளவியல் சிக்கலுக்கு உள்ளானவர்கள் என்றால் திராவிட மற்றும் இடதுசாரிய தமிழ்த்தேசிய எண்ணங்கொண்ட படைப்பாளிகள். அத்துடன் இந்த எண்ணங்கொண்ட ஏராளமான படைப்பாளிகளை ஜெமோ அறிமுகமும் செய்துள்ளார் என்பதைக் கவனிக்க வேண்டும்.

ஜெயமோகனின் வாசகர்களும் அவருடைய படைப்புக்களின் தனித்தன்மைகளை அறிந்தவர்களும் எதிர்கொள்ளும் சவால்கள் சொல்ல முடியாதவை. பலர் வெளிப்படையாக ஜெயமோகனின் வாசகன் என்றோ அவருடைய படைப்புக்களின் தனித்தன்மை பற்றியோ கூறிவிட முடியாது. அவ்வளவு இக்கட்டான சூழல்தான் தற்போது இணையத்திலும் பிற சிற்றிதழ் விவாதங்களிலும் பொதுவான வசைகளிலும் நிலவுகிறது. ஜெமோ வாசகன் எந்தப் பதிவினைப் போட்டாலும் நாம் வைத்துள்ள பழைய அரசியல் நிலைப்பாடுகளை இதற்குள் கொணர்ந்து பொருத்திப் பார்த்துவிடுவார்கள். அநேகமாநவர்கள் எதிர்கொள்ளும் சாவால்களில் ஒன்று இதுதான்.

இவற்றை அறிந்து அதற்கான எதிர்வினைகளை நிகழ்த்துவேன் என்ற நம்பிக்கை கிடைத்த பிறகுதான் ஒருவன் ஜெயமோகனைத் தனது ஆசானாகவும் அவரது ஏற்கக் கூடிய அரசியலை ஏற்பவனாகவும் வெளிப்படையாகவே அறிவிப்பான். அந்த அறிவிப்பு பல கட்சியரசியல் செய்யும் ஆட்களுக்குத் தீராத தலைவலியைக் கொடுத்துவிடும்.
அல்லது ஜெயமோகனின் வாசகனாக இருப்பவனை எங்கு போனாலும் சீண்டுவதாகவே இருக்கும்.

தேவதச்சனும் கபிலனும் என்ற ஒப்பீட்டுப் பதிவை மேற்கொண்டிருந்தேன். இதுபோல பல ஒப்பீடுகளை முதலும் திண்ணை போன்ற இதழ்களில் எழுதியுள்ளேன். ஆனால் இப்போது சர்ச்சைகள் வலுவாக வரத் தொடங்குகின்றன. அல்லது வசைகள் அதிகமாகின்றன. நிராகரிப்புக்கள் தொடர்ந்து வருகின்றன. சிறுபான்மை அந்தஸ்த்தே போதுமென்று நினைப்பவன் என்பதால் இவற்றை மிக இலகுவாக நகைச்சுவையுடன் கடந்துவிடமுடிகிறது.
உதாரணமாக எனது பதிவுக்கு சமயவேல் அய்யா அவர்கள் ஒர் எதிர்வினையை முகநூலில் பதிந்திருந்தார். அதில் ஏற்கக் கூடியதை ஏற்றுவிட்டு இல்லாததற்கு நானும் ஒரு எதிர்வினையை இணைத்திருந்தேன். ஆனால் இதற்கு இடையில் கட்சியரசியலையும் கும்பல் மனநிலையையும் பிரதிபலிக்கும் & பிரதிபலிக்காத பலரின் எதிர்வினைகள் வழக்கமான வசைகள் போலவே உள்ளன. 

1. கவிஞர் சமயவேல்  எதிர்வினை:

"அன்பு நண்பர் ஜெகதீசனுக்கு,
வணக்கம்.
சுயாந்தன், குறுந்தொகைக் கவிதையையும் தேவதச்சனின் கவிதையையும் ஒப்பிட்டு மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார்
ஆனால் கட்டுரையின் முன்னெடுப்பில் சில கோணல்களைக் கண்டு புரியாமல்
இருந்தேன். ஆற்றுப்படை என்பது சங்கத்துக்கும் பிற்காலத்தியது. மேலும் அதில் வரும் பறவைச் சாதிக்கும்,  இப்போது இந்தியாவின்
பெரும் பிரச்னைக்குரிய சாதிக்கும் தொடர்பே இல்லை. சாதி தானே ஒழியும் என்று எவரும் சும்மா இருந்துவிட முடியாது. "தானே ஒழியும்" என்ற
பார்வையே பலவகைப் போராட்டங்களையும் கொச்சைப்படுத்தும். சிறிய செடி கொடிகள், புழுப்பூச்சிகள் கூட சூழலியற்கையுடன் அன்றாடம்
போராடியே உயிர்த்தும் தங்கள் இனங்களைப் பெருக்கியும் வாழ்கின்றன. 
பிறகு தான் அவரது "சுயாந்தன்" என்னும் வலைத்தளத்தை வாசித்தேன். அவ்வளவும் விஷம்.
அவர் இந்தியாவைப் பற்றியும், தமிழகம் பற்றியும் கொண்டிருக்கும் கருத்துக்கள் எல்லாமே தவறானவை.
மேலும் இலங்கை நிகழ்வுகளையும் அவர் சரிவரப் புரிந்திருப்பாரா என்பது ஐயத்துக்குரியதே. இலங்கைத் தமிழ் இஸ்லாமியர்கள் குறித்தும் அவர், விஷக்கருத்தே வைத்துள்ளார்.
ஒரே வரியில் "இடதுசாரி-திராவிட மூடர்கள்" என்று எழுதும் இவரது தைரியம் "போற்றுதலுக்குரியது".
இந்தியாவின் அரசியல் சூழல் மாறிக்கொண்டே இருப்பது.
தமிழர்களுக்கு இந்திய தேசியத்தில் செல்வாக்கில்லை என்று செய்திகளைப் பார்த்து மேம்போக்காக புரிந்து கொள்கிறார்.
இந்தியாவில் மாநிலங்களுக்கும் மைய அரசுக்கும் இடையிலுள்ள பிணைப்பும் பூசலும் மோதலும் பிற நாட்டவர்களால் புரிந்துகொள்ள முடியாதவை. எல்லா மாநிலத்தவர்களும், பிற எல்லா மாநிலங்களிலும் குடிபெயர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பது அயலவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
தமிழர்கள் அஸ்ஸாமில் ஜவுளி வியாபாரம் செய்வதும், வட இந்தியர்கள் மதுரையில் வளையல் கடை வைத்துருப்பதும், பெங்களூரில் இந்தியர்கள் அனைவரும் ஐ.டி. துறையில் பணிபுரிவதும் அயலவர்களுக்கு எப்படித் தெரியும்?
நாடு, இறையாண்மை போன்ற கருத்தாக்கங்களால் மட்டுமல்ல, மக்களாட்சி என்னும் ஆத்மாவாலும் கட்டப்பட்டது இந்திய அரசியலமைப்பு. இந்திய, இலங்கை உறவில், 1970க்குப் பிறகான நிகழ்வுகள் முழுவதையும் கூர்ந்து கவனித்தால், வலைப்பின்னலில் கோர்க்கப்பட்ட எல்லாத் தரப்பினரும், கீழான  சில மனித உணர்வுகளின் உந்துதலால் நிகழ்த்திய சில எதிர்பாராத தவறுகளால் வரலாற்றைச் சிதைத்திருப்பதை  ஒரு கலை உபாசகராக இருக்கும் சுயந்தனால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
கவிதைக்கும் அரசியலுக்கும் இடையில்,
இருக்கும் தொடர்பை விட இல்லாத தொடர்பே அதிகம்.
அன்புடன்,
சமயவேல்."

2. எனது எதிர்வினை:

"மரியாதைக்குரிய அய்யா. தங்களுடைய இந்தப் பதிவில் மூன்று தவறுகள் உள்ளன என்று நினைக்கிறேன்.
1. ஆற்றுப்படை சங்ககாலத்தையது என்றுதான் அந்தக் கட்டுரையில் என்னால் எழுதப்பட்டுள்ளது. அதனை முன் மற்றும் பின் என்று காலப்படி நான் பிரிக்கவில்லை. எப்படி இருந்தாலும் சங்ககால நூல்களில் ஒன்றுதான் பெரும்பாணாற்றுப்படை. இதனைப் பொதுவான ஆய்வாளர்களன்றி, மார்க்சிய ஆய்வாளர்கள் பலரும் ஆய்வுபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளனர். உதாரணம் க.கைலாசபதி மற்றும் கா. சிவத்தம்பி.
2. "பறவைச்சாதியன்ன" என்கிற வரி பெரும்பாணாற்றுப்படையில் குறித்திருப்பது ஒரு இன வகைமையைத்தான். பின்வந்த திரிபு ஆய்வாளர்களால் ஆற்றுப்படை நூலைக் காலவரிசைப்படி பின்தள்ளி பறவைச்சாதியன்ன போன்ற சொற்களை வேறு அர்த்தத்தில் பயன்படுத்தியுள்ளனர். இது முற்றிலும் அரசியலுக்கு நடந்தது என்றும் கருதலாம். குறிப்பாக மரியாதைக்குரிய அய்யா தொ.பரமசிவன் போன்றவர்கள் இதனைச் செவ்வனே செய்துள்ளனர்.
3. /இலங்கைத் தமிழ் இஸ்லாமியர்கள்/ என்பது தவறான கருத்து. இங்குள்ள இஸ்லாமியர்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழி பேசக்கூடியவர்கள். தமிழகம் போல தமிழினமாக வாழ்பவர்களல்ல. வெறுமனே தமிழ்பேசும் இஸ்லாமியர்கள் என்றுதான் வகுக்கமுடியும். அவர்கள் இங்குள்ள தனித்த ஒரு இனம். அவர்களுக்கென்று தனித்துவங்கள் ஏராளம் உண்டு. அவர்களைத் தமிழர்களாக அழைப்பது தமிழகத்தவர்களின் அறியாமை. இந்த அறியாமைகள்தான் தொடர்ந்த பிரச்சனைகளை இலங்கையில் ஆரம்பம் தொட்டே ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் அந்தப் பதிவுகளில் நான் விஷத்தைக் கொட்டியிருக்கவில்லை. இங்குள்ள நிலவரத்தை வெளிப்படுத்தியிருந்தேன். அதில் சில வெறுப்புணர்வுகள் வந்தது தவிர்க்க முடியாத சேதாரம்.
தங்களுடைய நியாயமான எதிர்வினையை ஒன்றுக்கு நான்கு தடவைகள் வாசித்திருந்தேன். நன்றிகள்.

மேலும்,
ஈ.வே.ரா மற்றும் திராவிடக் கருத்தியல்களை இலங்கையில் முன்வைப்பதன் பிரதிகூலங்களை ஆரம்பத்தில் சிறிது சிறிதாக எளிமையாக முன்வைத்திருந்தேன். அதனை இலங்கையிலுள்ள சிலர் மதமாற்ற மற்றும் சாதியப் பிரிப்புக்குப் பயன்படுத்தி லாபம் காணத் தீவிரமாக முயன்றுவருகின்றனர். அது மதவாதம் என்பதைவிட ஆபத்தான ஒன்று. கடந்த காலங்களில் லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் இங்கே கொல்லப்பட்டிருந்தனர். அதற்கு இங்கிருந்தவர்கள் தமிழகத்தை முழுமையாக நம்பியதும் ஒரு காரணம். அந்த நம்பிக்கை வெறுமனே கூச்சல்களால் ஆனது என்பதைக் கடந்தகாலப் படிப்பினைகள் எமக்குத் தந்துள்ளது. அதனால் தேசியவாதக் கருத்தியலை முன்வைத்திருந்தேன். அதற்கு இன்னொரு தேசியவாத எண்ணக்கருவைக் கொண்டு மாற்றுநிலைப்படுத்தலாம் என்ற எளிய எண்ணம் இதுவாக இருந்தது. நீங்கள் எழுதியுள்ளீர்கள் இஸ்லாமிய மக்களை முழுமையாக நிராகரிக்கிறேன் என்று, இங்கு சிங்கள அரச அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு தமிழர்கள் மீது காணி அபகரிப்பு மற்றும் இதர வன்முறைகளை மேற்கொள்ளும் முஸ்லிம் அதிகார மையங்களைக் கட்டுப்படுத்தவே இந்திய தேசியவாத அணுகுமுறையை இங்கே சில திருத்தங்களுடன் முன்வைத்திருந்தேன். ஆனால் நான் தொடர்ந்து வன்முறையற்ற முறைமை என்றுதானே வலியுறுத்தியுள்ளேன். அதில் நிதானம் தவறிய இடம் எதுவுமில்லை. இங்குள்ள இஸ்லாமிய மிதவாதிகளையும் சுட்டிக்காட்டியுள்ளேன்.

கடைசியாக ஒன்று: தமிழீழம் என்பது முள்ளிவாய்க்காலுடன் மரித்துவிட்டது. தமிழீழம் எப்போதும் அமையப் போவதில்லை.   அதனைப் பற்றிப் பிடித்திருக்கும் பாதிப்பேர் இலக்கிய அரசியல் வியாபாரிகள்தான். ஏனையோர் அறியாமையால் அவர்களைப் பின்பற்றும் உணர்வாளர்கள். எனக்கு இலங்கையைப் பிரித்து மீண்டும் ரத்ததேசம் ஆக்குவதில் உடன்பாடுகள் இல்லை. இங்கு ஒருசில பிரச்சனைகள் இருக்கின்றன. அவற்றைத் தமிழக மனநிலையில் அணுகுவது தவறானது. தமிழகத்தவர்கள்தான் அதனைப் பெரிதாக்குகிறார்கள். அதற்கு "தமிழ்" என்ற உணர்வைப் பிரயோகித்துத் தேசியவாதிகளைப் பேரினவாதிகளாக்குகின்றனர். தமிழ்த்தேசியம் என்ற தேசியப் பிரிவினைவாதத்தை மாற்றுநிலைப்படுத்த இந்துத்தேசியம் என்ற இணக்கவாதத்தை முன்வைத்தது உங்கள் பார்வையில் தவறாக இருக்கலாம். நான் அப்படிக் கருதவில்லை. எனக்கு அரசியல் சரிநிலைகள் தெரியாது."

3. கட்சியரசியலையும் அதன் மூலமான அனுகூலங்களையும் அந்த அரசியலைப் பேசுவதன் மூலமாக அனுபவிப்பவர்களின் வசைகள் இப்படி அமைந்துள்ளன.

தமிழ்நதி என்கிற இலங்கை எழுத்தாளரின் கதைகளை ஆரம்ப காலங்களில் வாசித்துள்ளேன். பின்பு அந்த வழக்கமான குரலில் அவர் இருப்பதால் அதிலிருந்து  வெளியே வருபவர்களைத் தங்கள் எதிரியாக உடனே கட்டமைத்துவிடுவார். இன்னமும் தனிநாடு என்பது சாத்தியம் என்று நம்பிக்கொண்டு இலங்கைத் தமிழரின் அரசியல் நாளங்களைச் சூடாக்கி வைத்திருக்க முயற்சிப்பவர். அதற்காகத் தனது எழுத்து உதவும் என்று நினைக்கிறார்.

புலியூர் முருகேசன் ஆரம்பத்தில் ஜெயமோகனின் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானவர் என்பதால் ஜெயமோகனை வாசித்துப் புகழ்பவர்களை மட்டையடி அடித்துத் தன்னைப் பெரியாரிய அறிவுஜீவி என்று சொல்லிக்கொள்பவர். அத்துடன் சாதியொழிப்பு என்பதில் ஈவேரா மேற்கொண்ட கடப்பாரை அணுகுமுறையால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர். அதனையே இப்போதும் கைக்கொள்பவர்.

துவாரகா சாமிநாதன் என்கிற இதழாளர் பெரியாரை ஈவேரா என்று விழிப்பதை ஆரம்பநாட்களில் கண்டித்திருந்தவர். கடந்த இரண்டு மாதமாக இவரைப் புறக்கணியுங்கள் என்று சொல்லி மிக அழகாக முகநூலில் வசைபாடுபவர். தொடர்ந்து முகநூலில் பிரச்சாரம் செய்பவர்களில் இவரும் ஒருவர்.அடுத்தது எழுத்தாளர் ஜமாலன். இவருடைய சில கட்டுரைகளை வாசித்துள்ளேன். எனக்கு அதில் உடன்பாடுகள் இல்லை. தீவிரமான இடதுசாரிய மனோநிலை கொண்டவராகத் தன்னை அறிவித்துக்கொண்டவர். அரசியல் சரிநிலைகளில் இந்திய அரசியலையும் மதப் போக்குகளையும் அணுகுபவர்.  ஜெயமோகன் மீதான சில எதிர்வினைகளைத் தர்க்க ஆதாரமின்றியும் புள்ளிவிபரப் பிழையுடனும் மேற்கொள்ளும் அ.மார்க்ஸ் அவர்களின் வழிவந்தவர் என்று நினைக்கிறேன். இவர் கடந்த ஒரு மாதமாகச் செல்லும் இடமெல்லாம் இப்படித்தான் பேசுகிறார். நிச்சயமாக நான் பெரும்பான்மை அந்தஸ்த்தை விரும்பும் ஒருவனல்ல என்பதை எத்தனையோ தடவைகள் பதிவிட்டுள்ளேன். நிராகரிப்பவர்களை மிகப் பரிவோடு ஏற்றுக் கொள்பவனாகவே இருக்கிறேன்.அமிர்தம் சூர்யா என்பரை எனக்கு நேற்றுத்தான் தெரியும். அவர் ஒரு கவிஞர் என்றும் இதழாளர் என்றும் சொன்னார்கள். அவருடைய ஒரு கவிதைகூட நான் வாசித்ததில்லை. இனிவரும் நாட்களில் வாசிக்க முயற்சி செய்யவேண்டும். அத்துடன் இவ்வளவுக்கு வசைபாடுகிறாரே என்று அவரது முகநூல் பக்கம் போய்ப்பார்த்திருந்தேன் அதில் திராவிடக் கட்சி அரசியலுக்காக அயராது உழைப்பவர் என்றும் அறியமுடிகிறது. மு.கருணாநிதியை முத்தமிழறிஞர் என்று நம்பும் தமிழ் அறிவுஜீவிகளில் சூர்யாவும் ஒருவர் என்று நினைக்கிறேன்.  
இறுதியாக தேவதச்சனையும் கபிலரையும் ஒப்பிட்டதே தவறு என்று பதிவை வாசிக்காமல் ஒருவர் பின்னூட்டம் இட்டுள்ளார். இதைவிட வேறு சிலரும் சொல்லித்திரிகின்றனர். உண்மைதான் தேவதச்சனையும் கபிலனையும் ஒப்பிடுவது தவறு. ஆனால் அவர்களது படைப்புக்களை மனத்தொடர்பு அடிப்படையில் பகுத்துக் கூறுவதில் என்ன மயக்கம் இருக்கப் போகின்றது. இந்தப் பதிவுகள் அனைத்தையும் பார்த்தால் தெரிவது முற்றிலுமான எதிர்ப்பு மனநிலைதான்.   இது இலக்கிய அரசியல் தாண்டி இலக்கிய இலக்கியத்திலும் வேர்கொண்டுள்ளது. இதனை ஒருவகையான நோய் என்றுதான் கூறவேண்டும். எனக்குப் பெரும்பான்மை அந்தஸ்த்து வேண்டும் என்று நான் இதுவரையும் கோரியதில்லை. எழுதிய அனைத்தையும் பிரபலம் இல்லாத இதழ்களில்தான் பிரசுரிக்கச் செய்துள்ளேன். பிரசுரிக்கிறேன். அத்துடன் தற்போது எனது வலைப்பூவில் மட்டும்தான் தொடர்ந்து எழுதுகிறேன். அவ்வாறு சுயகருத்தைத் தொடர்ந்து முன்வைப்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. இவருக்கு வெளிச்சம் வேண்டாம், புறக்கணியுங்கள் என்று சொல்பவர்களைத் தாராளமாக வரவேற்கிறேன். குறிப்பாக என்னை இவர்கள் வாசிக்காமல் விட்டால் எனக்கு இழப்பென்று எதுவுமில்லை. எனது பதிவினை வாசியுங்கள் என்று யாரிடமும் கெஞ்சியதில்லை. நீண்டகாலமாகச் சிறுபான்மை அங்கீகாரத்துக்குள்தான் இருக்கின்றேன். இதனைப் பெரும்பான்மையாக எடுத்துச் சென்று வெட்டிக் கூச்சலிடுபவர்களைப் பற்றி ஒரு கவலையுமில்லை. பெரும்பான்மை ஆட்களின் அங்கீகாரம் என்பது யாரையும் சுதந்திரமாகச் சிந்திக்க விடாது. அந்த பெரும்பான்மை மனதுக்கு ஏற்பவே மாறச் சொல்லும். நான் சிறுபான்மை அந்தஸ்த்துக்குள் இருப்பவன். இதற்குள் வந்து வசை பொழிபவர்களை ஏளனமாகவும் நகைச்சுவையுடனும் எதிர்கொள்கிறேன் என்பதைத் தய்ரியமாகச் சொல்கிறேன்.

இறுதியாக ஒரு குறளை இந்த இடத்தில் ஞாபகப்படுத்த வேண்டும். இது பொதுவான வசைக் கருத்துக்களைப் பிரக்ஞையின்றி நம்மீது பொழிபவர்களைக் கண்டால் இக்குறள் ஞாபகத்தில் அமரும்.

''செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா 
அஞ்சும் பகைவர்ப் பெறின்''
00

Comments

Popular Posts