கவிஞர் சுகுமாரனின் இசைதரும் படிமங்கள்

கவிஞர் சுகுமாரன் 1978 ஆம் ஆண்டு "இசை தரும் படிமங்கள்" என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியுள்ளார். அதில் ஹரி, ஸ்ரீநிவாசன், ஹரிபிரசாத் சௌராஷ்யா, கே.யே. யேசுதாஸ் மற்றும் ஸாப்ரிகான் ஆகியோருக்குத் தனித்தனியே அக்கவிதைகளைச் சமர்ப்பணம் செய்திருப்பார். இவர்களில் ஸ்ரீநிவாசன் என்ற பெயர் எந்த இசைக் கலைஞனைக் குறிக்கிறது என்று என்னால் ஊகிக்க முடியவில்லை.



ஹரி பிரசாத் சௌராஸ்யா என்ற புல்லாங்குழல் வித்துவானுக்காக எழுதப்பட்ட கவிதை உத்வேகமான மனவோட்டத்தில் அமைந்த ஒன்று. எப்போதும் தனிமையில் மோதும் நினைவுகளை மீளச் சுமந்து ஞாபகப்படுத்தும் ஒரு இசை வாத்தியம் புல்லாங்குழல். கிட்டத்தட்ட நான்கைந்து வருடங்களுக்கு முன்பு சீனாவின் புல்லாங்குழல் Instrumental இசைகளை அதிகம் விரும்பிக் கேட்டதுண்டு. சீனப் புல்லாங்குழல் இசையில் எப்போதும் ஒரு இயந்திரத்தனம் இருக்கும். அல்லது இந்தியப் புல்லாங்குழலின் ஆன்மீக அழகியலுணர்வுகளை அவற்றுள் என்னால் அடையமுடிந்ததில்லை.  சூஃபி இசையின் கலவையும் இந்திய மரபார்ந்த இசையின் நாட்டாரியல் தன்மையும் கொண்டதுதான் ஹரிபிரசாத் சௌராஸ்யாவின் புல்லாங்குழல் இசைத்துணுக்குகள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஏ.ஆர். ரஹ்மான் தன்னுடைய  புல்லாங்குழல் வாத்தியக்காரரான நவீன் குமாரிடம் சொன்னாராம் தண்ணீர் சொட்டுவது போன்ற சப்தத்தில் ஒரு இசை வேண்டுமென்று. அதற்கு இணையாகத் தரப்பட்டதுதான் மணிரத்னம் இயக்கிய பொம்பே படத்தில் அமைந்த Bombay Theme இசை. இதனை இன்றைய காலகட்டத்தில் பலர் அமர நிகழ்வுகளின் வெளிப்பாட்டுக்குப் பாவிக்கின்றனர். நமது பண்பாடு சார்ந்த இடத்தில் புல்லாங்குழலின் பாவனை இன்றியமையாதது. அதன் நுணுக்கங்கள் அந்த நீட்சிக்குப் பலமானவை. எனக்கு ஒரு அனுபவமுண்டு, ஒரு நண்பனின் தந்தையார் இறந்தபோது அதற்கான சுவரொட்டி தயார் செய்யப்பட்டது. அத்துடன் வாகனங்களில் ஊரறிய அறிவிக்கும் அமர இசைக்கு எதனைப் பாவிக்கலாம் என்று கேட்டார்கள். அதில் ஒருவர் சொன்னார் சீர்காழி கோவிந்தராஜனின் இறை பற்றிய பாடல்களைப் போடலாம் என்றார். இன்னொருவர் தளபதி படத்திலுள்ள சின்னத்தாயவள் கரு இசையை இணைக்கலாம் என்றார். நான் எதேச்சையாகக் கூறினேன் இல்லை Bombay Theme என்று புல்லாங்குழலை மையப்படுத்திய இசையுள்ளது அதனை அதற்குள் இணையுங்கள் என்று. அவர்களுக்கு எனது கைவசமிருந்த அந்தப் புல்லாங்குழலிசையைப் போட்டும் காட்டினேன். அவர்கள் இசைந்தார்கள். பின்னர் அந்த அமரரின் இறப்பை அறிவிக்கும் பின்னணி இசையாக Bombay Theme உபயோகிக்கப்பட்டது. இந்த இசையை வெறுமனே அமர நிகழ்வுகளுக்கு அல்ல, சமநிலையை வளர்க்கும் தியான நிலைகளுக்கும் பிரயோகிக்கலாம். நான் அடிக்கடி கேட்கும் புல்லாங்குழலை மையப்படுத்திய இசை என்றால் அது Bombay Theme தான். ஹரிபிரசாத் சௌராஸ்யாவின் இசை இதிலிருந்து மாறுபட்டது. அல்லது தனிப்பட்ட விருப்புக்கு உட்பட்டு வெறுப்புக்களை  ஏற்காதது என்றும் வரையறுக்கலாம். 

இந்த இசை பற்றிச் சுகுமாரன் எழுதிய கவிதை:

"புல்லாங்குழல்
சகல மனிதர்களின் சோகங்களையும்
துளைகளில் மோதிற்று.

கூரை முகட்டிலிருந்து இறங்கிய நாளங்கள்
ரத்தமாய்ப் பெய்தன
அறையெங்கும் இரும்பின் வாசனை.

மறுநிமிசம்
என் உப்புக் கரைந்து எழுந்தது
மல்லிகை மணம்"

இக்கவிதையில் என்னை ஈர்த்த அனுபவக் குறிப்புகள் சில உள்ளன.

1. சகல மனிதர்களின் சோகங்கள்.
2. நாளங்கள் ரத்தமாய்ப் பெய்தன.
3. என் உப்புக் கரைந்து எழுந்தது.

ஆரம்பத்தில் நான் கூறிய மனிதரின் இறப்பை அறிவிக்கும் Bombay Theme இசையும் இக்கவிதையில் ஹரிபிரசாத்துக்கு எழுதப்பட்ட கவிதையும் எவ்வளவுக்கு அணுக்கமாகின்றன பாருங்கள். சகல மனிதர்களின் சோகங்களையும் துளைகளில் மோதக்கூடிய பிரம்மாண்ட சக்தி வாய்ந்ததுதான் புல்லாங்குழல் இசை. அதன் பெறுமதியை நாம் உணரவேண்டும் என்றால் அதற்குள் திளைக்கவேண்டும். ஹரிபிரசாத் சௌராஸ்யா புல்லாங்குழல் எப்போதும் எனக்கானது என்று நினைப்பதுண்டு. ஆனால் இப்படியான கவிதைகளை வாசித்த பிறகுதான் தெரிகிறது அது எனக்கானது மட்டுமல்ல உலக மனிதனுக்கானது. அழகியல் வாதிகளுக்கானது. வரண்ட மனம் படைத்தவர்களுக்கு மல்லிகை மணக்கச் செய்வது. முழுமையடையாத சார்வாக மரபினை யோகமாக்குவது. அல்லது ஆன்மீகமாக்குவது.



சுகுமாரனின் இக்கவிதைபற்றிப் பேச வேண்டும் என்றால் ஹரிபிரசாத்தின் புல்லாங்குழல் இசையையும் ஒட்டுமொத்தமான புல்லாங்குழல் இசைகளையும் கொஞ்சம் ருசித்திருக்கவேண்டும். இப்போது நானிருக்கும் இந்த நிமிடம் நள்ளிரவுக்கு அழைத்துச் சென்று தனியே விட்டுவிட்டால் என்ன செய்வேன் என்று இறங்கிய நாளங்களைக் கேட்பேன், அதற்கான பதில் புல்லாங்குழலை மையப்படுத்திய இசையைக் கேட்டு அடுத்தநாளைத் தயார்படுத்துவது என்று மனம் சொல்லும். அதைத்தான் கடந்தகாலத் தனிமைகளை வசீகரப்படுத்தவும் அர்த்தப்படுத்தவும் செய்துவருகிறேன். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

00

ஹரிபிரசாத் சௌராஸ்யாவின் இசைக் குறிப்புகள்:




00

Comments

Popular Posts