தேவதேவனின் கவிதை மரபு.


தேவதேவன் கவிதைகளின் கவிதைமரபு மிகப் பழையது. அதில் புதுக்கவிதைக்கான பேசுமொழியை அவதானிக்க முடியும். ந.பிச்சமூர்த்தியின் கவிதைகள் போல இருப்பவை. ஆனால் அதிலிருந்து கவிதையின் நுட்பம்சார்ந்து விலகி நவீனத்தைத் தொட்டவை. ந.பிச்சமூர்த்தியின் கவிதைகள் வாழ்வின் இக்கட்டுகளை உணர்வுநிலையில் கூறியதுபோலல்ல தேவதேவன் கவிதைகள். தேவதேவனின் கவிதைகளில் இருக்கும் உத்வேகம் என்பது, உண்டாக்கிய புதிய விளைநிலத்தில் கிளைபரப்பிய பெருமரங்கள் போன்றது. நீண்டகாலம் காத்திருந்துதான் அதன் பலனை அனுபவிக்கமுடியும். இரண்டாயிரங்களில் எழுதப்பட்ட தேவதேவன் கவிதைகள் அந்த உத்வேகத்தாலானவை. அதன் பலனை ரசனை அடிப்படையில்தான் அணுகமுடியும்.



"அசையும்போது தோணி
அசையாதபோதே தீவு
தோணிக்கும் தீவுக்குமிடையே
மின்னற்பொழுதே தூரம்"

இந்தக் கவிதைதரும் தரிசனங்கள் மிகப் பழையது. ஒவ்வொரு கவிதையும் தரிசனங்களால் ஆனவைதான். அவற்றை மாற்றுநிலைப்படுத்த முயல்பவர்கள்தான் புதிதாகவரும் கோட்பாட்டாளர்கள். காட்சியை மாற்றி வேறொரு வரண்ட கோணத்தில் கவிதையை அணுகுவதன் மூலம் அவர்கள் முழுக்கவிதையின் அழகியலையும் சிதைக்க முனைவார்கள். அல்லது கவிதைக்குள் இருக்கும் கவிஞனின் படைப்பூக்க விகாசங்களையும் மறைத்துவிடுகின்றனர் என்றே கூறலாம். மொத்தமாக மேலைக்கோட்பாடுகளை உள்வாங்குபவர்கள் மேற்கொள்ளும் நடைமுறை இது. இங்குள்ள மரபுகளுடன் அதனை இணைத்துப் பார்ப்பவர்கள் குறைவு என்றும் கருதலாம். முழுமையாக மேலை மரபை உள்வாங்குவதால் பிறர் அவர்களை உச்சாணிக் கொம்பில் வைத்துப் பாராட்டுவார்கள் என்ற பெரும்பான்மை மனத்தெரிவாக இவர்களை வகைப்படுத்தமுடியும்.



"மின்னற் பொழுதே தூரம்" இந்த வரியை ஜென் நிலை என்று வகைப்படுத்தலாம். தோணிக்கும் தீவுக்கும் இடையில் உள்ள பாலம்தான் தூரம். இந்தத் தூரத்தை நிவர்த்தி செய்யப் பயன்படுவதே மின்னற் பொழுது. இங்கு மின்னற் பொழுதைக் கழித்துவிட்டால் அல்லது வேறொரு வரியை இட்டால் அது சாதாரண கவிதையாகிப்போகும்.  உதாரணமாக பின்வரும் ஜென் கவிதையை இதனுள் இட்டுப்பார்க்கலாம்.

"அவன்
வனத்தில் நுழையும்போது
புற்கள் நசுங்குவதில்லை.
நீரில் இறங்குகையில்
சிற்றலையும் எழுவதில்லை."

வனத்திலும் சிற்றலையிலும் ஏற்படும் நேரெதிர் நிலைகளை நீக்கம் செய்தால் அது சாதாரண கவிதையாகிப்போகிறது.  இது மொழிபெயர்க்கப்பட்ட அசலான ஜென்கவிதை. ஆனால் தேவதேவனுடையது அப்படியல்ல. இதனைப் புரிந்துகொள்ள நாம் ஜென்மரபு எப்படி உருவானது என்பதற்கான சிறிய விளக்கத்தைப் பெறவேண்டும். ஜென்மரபின் பூர்வீகம் இந்து ஞான மரபிலுள்ள யோகம் என்ற தரிசனமாகும். இதனையும் தாவோயிடுகளின் அருவத்தையும் கலந்து ஜென் மரபு உருவாக்கப்பட்டுள்ளது. இது தற்போது உலகம் முழுமையும் பரந்து விரிந்துள்ளது. இந்த ஞான  மரபின் வழி வந்த தேவதேவனுடைய கவிதைகளை அவருடைய படைப்புக்களில் நாம் அடையாளம் காணலாம். ஆர்ப்பாட்டமும் அலங்காரமும் இல்லாத கவிதை மரபுக்கு சிறந்த உதாரணமாக இருப்பவர் தேவதேவன். அவரது அநேகமான கவிதைகளில் உள்ள இந்தத் தன்மை பலரை ஈர்ப்பதில்லை. அல்லது அந்த மரபின் தொலைவினை நாம் அறிந்துகொள்வதில்லை. வெறுமனே வரட்டுப் பார்வைகளால் கவிதையைக் கண்ணோட்டம் விடுவதால் பாதிக்கப்படுவது கவிதை மட்டுமல்ல அதற்கான தொடர் மரபும் எதிர்மரபுமாகும்.

இதே போன்ற மரபான தொனியில் தேவதேவனின் தூரிகை என்றொரு கவிதை உள்ளது.

"வரைந்து முடித்தாயிற்றா?
சரி
இனி தூரிகையை
நன்றாகக் கழுவிவிடு.

அதன் மிருதுவான
தூவிகளுக்கு
சேதம் விளையாதபடி.

வெகு மென்மையாய்
வருடிக் கழுவி விடு.

கவனம்,
கழுவப்படாத வர்ணங்கள்
தூரிகையைக் கெடுத்துவிடும்.

சுத்தமாய்க் கழுவிய
உந்தூரிகையை
அதன் தீட்சண்யமான முனை
பூமியில் புரண்டு
பழுதுபட்டு விடாதபடி
எப்போதும் மேல் நோக்கிய
வெளியில் இருக்க
இப்படிப் போட்டு வை
ஒரு குவளையில்."



ஒரு சிருஷ்ட்டியின் பரிணாம வளர்ச்சியை வெளிப்படுத்தும் மரபு இதில் தென்படுதிறது.
ஓவியத்தை வரைந்து முடிப்பதும் அந்த ஓவியச் சிருஷ்டிக்கு ஆதாரமாயுள்ள தூரிகையைக் கழுவுவதும் அந்த ஆதாரத்தின் மூலத்தன்மையைச் சிதைக்கக் கூடாது என்று வலியுறுத்தப்படுவதும் பின்பு ஆரம்பத்தில் அது இருந்த கட்டத்துக்கு "இப்படிப் போட்டு வை" என்று வரையறுப்பதும் ஒரு சிருஷ்டியின் பரிணாமத்தையே காட்டுகின்றது. இந்த மரபு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. எளிய உதாரணமாக நமது பக்தி மரபுப் பாக்களையே உதாரணமாக்கலாம். மாணிக்கவாசகரின் பாடல்களில் இந்தத் தன்மையை அவதானிக்கலாம். அத்துடன் "கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்" என்ற பக்தி மரபுக்கு முற்பட்ட இந்த வரிகள்  குறிப்பதும் தேவதேவன் தொடர்ந்து பின்பற்றி வந்த மரபினையே ஆகும்.

1. கழுவப்படாத வர்ணங்கள்.
2. தீட்சண்யமான முனை.
3. மேல்நோக்கிய வெளி.

இதில் "குறுகத் தரித்த குறள்" என்பதை ஒரு தீட்சண்யமான முனையாகப் பார்க்கலாம் அல்லவா. அந்த மரபின் தொடர்ச்சிதான் தேவதேவன்.  அது அவரது படைப்பூக்கத்தில் வெளிப்படாமல் இருந்ததே இல்லை. இவரது அநேக கவிதைகள் ஞான மரபின் தொடர்ச்சிதான். மேலைக் கோட்பாடுகளை இங்குள்ள கவிதைகளுடனும் படைப்புகளுடனும் பலர் தொடர்பின்றி இணைத்துப் பேசுகின்றனர். ஆனால் நாம் எமது நிலத்தின் படைப்பாளிகளின் மரபான மனத் தொடர்புகளை விளக்கும்போது புரியாத கிறுக்கல் என்று வகைப்படுத்துகின்றனர். இவர்களுக்கு இலக்கியம் மீதான பற்றுதலோ பிரக்ஞையோ பழந்தமிழிலக்கியம் எப்படி இன்றைய தமிழை வழிநடத்துகிறது என்ற அறிவோ இல்லை. தனியே அரசியலைக் கடைந்தெடுத்துப் பேசவேண்டும். அதைத்தான் பலர் கைக்கொள்கின்றனர். இது இலக்கிய அழகியலுக்கும் மரபார்ந்த தன்மைக்கும் எதிரானது என்று கூறமுடியாது. இலக்கியம் பற்றிய அறியாமையின் ஒற்றைப்போக்கு என்றுதான் கூறவேண்டும். 

Comments

Popular Posts