மு.தளையசிங்கம் என்னும் முதற் சிந்தனையாளன்

மு. தளையசிங்கம் பற்றி அவருடைய காலத்தில் பெரிதாகப் பேசப்படவில்லை என்ற குறையை இன்றைய எழுத்தாளர்கள் பலர் முன்வைத்துள்ளனர். எனக்குத் தெரிந்து அவருடைய காலத்து எழுத்தாளர்களில் இரண்டு பேர் தளையசிங்கத்தின் சிந்தனைகளைப் பற்றி எழுதியுள்ளனர். "தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம் (1982)" என்ற பெயரில் சுந்தரராமசாமி ஒரு நீளமான கட்டுரையை எழுதியுள்ளார். அதுபோல க.கைலாசபதி "இலக்கியத்தில் மார்க்சீய எதிர்ப்பு- ஒரு புத்திசீவியின் இரண்டக நிலை (1973)" என்று ஒரு கட்டுரையையும் எழுதியிருந்தார். சுந்தரராமசாமியின் கட்டுரையில் இந்திய ஞான மரபின் துணைகொண்டு ஒரு சுதந்திரமான விமர்சனத்தை தளையசிங்கம் மீது நிகழ்த்தியிருப்பார். ஆனால் கைலாசபதி புறவயப் பொருள்முதல்வாத நோக்கிலும் தான் சார்ந்த சித்தாந்தத்தை முன்னிலைப்படுத்தியும் மிகக் காட்டமான தொனியில் தளையசிங்கத்தை அணுகியிருந்தார். இந்த இரண்டு கட்டுரைகளின் குழப்பத்தை மொத்தமாகத் தீர்க்கும் முகமாக ஜெயமோகன் எழுதிய கட்டுரை எனக்குப் பெரிதும் உதவியிருந்தது. "மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும்: தளையசிங்கத்தைப் புரிந்து கொள்வதற்கான அடிப்படைகள்" என்ற தலைப்பில் அமைந்த அந்த நீளக் கட்டுரை முன்னிருவரின் கருத்துக்களுக்கு மாற்றான ஒரு பார்வையை மூலச் சிந்தனைகளில் இருந்து விளக்கியிருந்தது. தளையசிங்கத்தின் முற்போக்கு இலக்கியம், போர்ப்பறை, மெய்யுள் போன்ற நூல்களில் அவரது மூலச்சிந்தனைகள் வெளிப்பட்டிருந்தன என்பதை அவரை வாசிக்கும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள முடியும்.  அதனையே சுந்தரராமசாமியும் ஜெயமோகனும் மரபார்ந்த நோக்கில் அணுகி அவரின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கியிருந்தனர். அந்த முக்கியத்துவம் இன்றைய காலத்தில் பெரிதும் உதவக்கூடிய ஒன்றாகவே உள்ளது. ஆனால் மார்க்சியரான கைலாசாபதி தளையசிங்கத்தைக் கட்சிசார்பான ஒரு விமர்சகன் இலக்கியத் தத்துவத்தை அணுகியது போலவே அணுகியிருந்தார். இதனால் மிக எளிதாக கைலாசபதியின் விமர்சனங்களைப் பின்வந்தவர்களால் கலைத்துப் போடக்கூடியதாக இருந்துள்ளது.
கைலாசபதி தனது கட்டுரையின் அநேக இடங்களில் வெறுமனே மார்க்ஸியத்தை நியாயப்படுத்தி ஜோடிக்கப்பட்ட பல இயந்திரத்தனமான மறுப்புக்களை எழுதியிருந்தார். இந்த இயந்திரவாத நோக்கினை முன்சொன்ன இருவரும் முன்வைத்தவர்களல்ல. அவர்கள் முன்முடிபுகள் இல்லாமல் தளையசிங்கத்தை அணுகினார்கள். அதனால் கைலாசபதி தளையசிங்கம் பற்றி எழுதிய இயந்திரத்தனமான விமர்சனங்களைத் தவிர்ப்பதுதான் தளையசிங்கத்தை மேலும் புரிந்துகொள்ள உதவும்.  அத்துடன் ஜெயமோகன் மற்றும் சுந்தரராமசாமி எழுதிய கட்டுரைகள் மிகத் தெளிவான வாதங்களை எடுத்து வழங்கியது. தளையசிங்கத்தின் சிந்தனைகள் இந்திய ஞான மரபிலிருந்து தோன்றியவை என்பதைத் தெளிவாகவே எடுத்துரைத்தனர்.
தளையசிங்கத்தின் மூன்று நூல்களே அவரது காலத்தில் அச்சேறியுள்ளன. ஏனையவை எண்பதுகளின் பிற்பகுதியில்தான் கவனக்குவிப்புச் செய்யப்பட்டுள்து. புதுயுகம் பிறக்கிறது (பதினொரு சிறுகதைகள் 1965), போர்ப்பறை (கதைகள், கட்டுரைகள், கவிதைகள் தொகுப்பு 1970), மெய்யுள் (கவிதைகள், நாவல்,  உரையாடல்கள், கட்டுரைகள் தளையசிங்கம் இறந்தபிறகு 1974 வெளியானது) இவற்றுடன் முற்போக்கு இலக்கியம், ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி என்று பல நூல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் தற்போது அவருடைய மு.தளையசிங்கம் படைப்புக்கள் என்ற முழுமையான எழுத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

1935ஆம் ஆண்டு பிறந்த தளையசிங்கம் தன்னுடைய ஒரு தனி வீடு என்ற முதல்நாவலை  1960இல் எழுதினார். விமர்சன விக்கிரகங்கள் என்ற தொடரைத் தினகரனில் எழுதிப் பெரும் சர்ச்சைகளைத் தோற்றுவித்தார். அறுபதுகளில் எழுதப்பட்ட ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி சில அவசரக்குறிப்புகள் என்ற நூல் இலங்கையின் விமர்சனத்துறையில் ஆரம்பகால ஆட்களுக்கு முக்கிய உதவிக் கையேடாக இருந்ததாக அறியப்படுகிறது. இரத்தினபுரி மாவட்டத்தில் ஆசிரியப் பணியில் இருந்தபோது யோகி ஸ்ரீ நந்தகோபாலகிரியைச் சந்தித்து தனது ஆன்மீக  குருவாக அவரை ஏற்றுக்கொண்டார். யாழ்ப்பாணத்துக்கு மாற்றம்பெற்று வந்து ஆன்மீகப் பயிற்சிகளையும் மேற்கொண்டு மக்களுக்கான போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளார். அக்காலப்பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களால் நோய்வாய்ப்பட்ட தளையசிங்கம் 1973 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

குறுகிய காலமே உயிர் வாழ்ந்த தளையசிங்கத்தை மூலச் சிந்தனைகளின் எழுத்தாளராகவே நாம் இன்று அடையாளம் காணமுடியும். மேலைக்கல்வியும் கோட்பாடுகளும் இங்கே அறிமுகமாகி பலர் அங்குள்ள சிந்தனைகளை அப்படியே பிரதிசெய்து இங்கே இயந்திரத்தனமாகத் திணித்தனர். இதில் முக்கியமானவர்கள் மார்க்சிய எழுத்தாளர்கள். அந்தச் சிந்தனைக்கு மாற்று வடிவமாக நம்முடைய மரபிலிருந்தும் மேலை மரபைக் கற்றதனால் அந்த மரபுகளின் போதாமைகளையும் வெளிப்படையாகவே விமர்சித்தும் எழுதிவந்தவராக தளையசிங்கத்தை நாம் அடையாளம் காணமுடிகிறது. உதாரணமாக போர்ப்பறை என்ற நூலில் மார்க்ஸ் பற்றி பின்வருமாறு எழுதுகிறார்.

"மார்க்ஸைப் பொறுத்தவரையில் மனித இயக்கத்துக்கும் நாகரிக வளர்ச்சிக்கும் பொருளாதார காரணங்களே முக்கிய தூண்டுகோல்களாக உள்ளன. அதனால் அது மேல்படையானது. மார்க்ஸின் சிந்தனைகள் இன்று பல நாடுகளில் செயற்படத் தொடங்கிய பின்னர்தான் அதனைகுறைகளும் நடைமுறையில் நம்பக்கூடிய முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளன"
அன்றைய காலம் மார்க்ஸிய எழுத்தாளர்களால் சூழப்பட்ட எழுத்துநிலை தமிழ்ச் சிந்தனை உலகில் காணப்பட்டது. உதாரணமாக இன்றைய போலி முற்போக்காளர்கள் போல. அக்காலத்தில் மூலச்சிந்தனைகளை வெளிப்படுத்துபவர்களைப் பிற்போக்குவாதிகள் என்றும் அமெரிக்க முதலாளித்துவ ஆதரவாளர்கள் என்று கூறும் வழக்கம் ஒன்று இருந்தது. குறிப்பாக அழகியல் விமர்சனத்தை முன்வைத்த வெங்கட் சாமிநாதனையும் சி.சு.செல்லப்பா மற்றும் கா.நா.சு முதலியவர்களையும் இந்த வகைக்குள் வைத்து வசைபாடினர். இதற்கு ஒருபடி மேலே சென்று Congress For Cultural Freedom என்ற கம்யூனிச எதிர்ப்பு நிறுவனத்திடம் பணம் பெற்று எழுதுகிறார்கள் என்று போகிற போக்கில் எழுதி வசைபாடப்பட்டது. வெ.சாவின் நிழலில் வாழும் கவிஞர்தான் பிரமிள் என்று கைலாசபதி கட்டுரை எழுதினார். பின்வந்த கோட்பாட்டாளர்கள் இவர்களின் விமர்சன முறைமையைக் களங்கப்படுத்த சாதியைக் கையிலெடுத்தனர். அழகியல் என்பதைப் பிராமணியத்துக்குள் அடக்கினர். இந்த வேடிக்கையை தமிழ் எழுத்துலக எழுத்தாளர்கள் அன்றி வேறு யாருமே செய்திருக்க மாட்டார்கள் என்றே கருதலாம்.

இப்படியான காலத்தில் இலங்கையிலிருந்து எழுதிய தளையசிங்கத்துக்கு எதிர்ப்புகள் வந்தது ஒன்றும் வியப்பில்லை. ஏனென்றால் மார்க்சிய சிந்தனைகள் இலங்கையில் அக்காலத்தில் தீவிரமாகப் பரவியிருந்தது. கோட்பாட்டாளர்கள் பலரும் தோன்றியிருந்தனர். மார்க்சியத்தை நாம் கைக்கொள்ளாவிட்டால் எங்கே எம்மைப் பிற்போக்காளன் என்று முத்திரை குத்தி விடுவார்களோ எனும் குற்றவுணர்வில் பலர் மார்க்சியம் பயின்றனர். ஆனால் தளையசிங்கம் இந்திய ஞானமரபின் வழிவந்த கருத்துமுதல்வாதச் சிந்தனைகளை மனதில்கொண்டு தனது சிந்தனைகளைத் தொகுத்தார். அவரது சிந்தனைகள்  இந்து ஞான மரபின் அகவயத் தரிசனங்களை ஒட்டியே இருந்துள்ளது. எளிய உதாரணமாக முற்போக்கு இலக்கியம் என்ற நூலைக் கூறலாம். அதில் மிகத் தீவிரமாகவே போலி மார்க்சிய அணுகுமுறைகளை ஆதாரங்களுடன் மறுத்துரைத்துள்ளார். இலக்கியம் அரசியல் இந்த இரண்டையுமே கலந்து பேசியுள்ளார். கீழ்வரும் பகுதி அவருடைய மொத்தமான சிந்தனைக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு;

""இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பதால் ஏற்படும் ஒரு தவிர்க்க முடியாத நிலை அது. உலகத்தை மறந்து இலங்கையை நினைக்க முடிவதில்லை. இலங்கையை மறந்து உலகத்தை நினைக்க முடிவதில்லை. அளவை மீறாத தேசியத்தை அடிப்படையாக வைத்து வளர்ந்துகொண்டிருக்கும் ஒர் சர்வ தேசியப் போக்கு இக்கால அரசியல் நிலை. அது சரிவந்துவிட்டால் பழைய குறுகிய மனப்போக்கு, கொள்கைகள், சட்டதிட்டங்கள் என்பவை உடைபட்டுப் போகும். தளர்ச்சியும் , அதனால் ஏற்படும் பரந்த முற்போக்கும் சுதந்திரமும் கிடைக்கும். அது பிழைத்துவிட்டால் பழைய தேசிய எல்லைகளுக்குள் உட்பட்ட அடிமைத்தனத்துக்குப் பதிலாக சர்வதேசிய அளவில் விரியும் அடிமைத்தனமோ அல்லது அழிவோ நம்மை மூழ்கடித்துவிடும். இந்தியாவின் வடக்கு எல்லையில் இப்போது நான் இதை எழுதும் நேரத்தில் (ஒக்டோபர் மாதம் முப்பத்தியொன்று) முன்னதின் (அடிமைத் தனத்தின்) ஆபத்து பயமுறுத்திக் கொண்டு முன்னேறுகிறது. இங்கே உள்ள கொம்யூனிஸ்ட் கட்சி அதைப் பற்றி அவ்வளவு ஒன்றும் சொல்லாமல் இருப்பது ஐந்தாம் படைப் பயத்தை அதிகரிக்கச் செய்கிறது. (பின்பு ஒர் அறிக்கை விடப்பட்டிருக்கிறது. இந்திய-சீன எல்லைப் போர் ஒர் சிறிய விசயம் என்றும், அதை விட்டுவிட்டுக் கியூபாப் பிரச்சினையைப்பற்றிக் கவலைப்பட வேண்டும் என்றும் உபதேசம் செய்யும் பாணியில். சீனப் பொதுவுடமை அரசாங்கம் இந்தியா மீதும் நேரு மீதும் வசை மாரி பொழிந்தும், ஏகாதிபத்தியவாதிகள் என்று பிரசாரம் செய்தும் கியூபா சார்பில் பெரும் பிரம்மாண்டமான ஊர்வலங்கள் நடத்தியும் உள்நாட்டு மக்களை ஏமாற்றுவது இங்கே கவனிக்கத்தக்கது. இந்தப் பொதுவுடமை வாதிகளிடம் ஒரு தவறாத consistency இருக்கிறது. ரஷ்யாவில் குலாக்குகளை மறைத்துக்கொண்டு ஜெர்மன் யூதர்களைப்பற்றிப் பேசினர் ஒரு காலத்தில். பின்னர் ஹங்கேரியை மறைத்துக்கொண்டு ஜெர்மன் யூதர்களைப்பற்றிய பேசினர் ஒரு காலத்தில். பின்னர் ஹங்கேரியை மறைத்துக் கொண்டு சுயஸைப்பற்றிக் கத்தினார்கள். இப்போது சீனாவை மறைத்துக்கொண்டு கியூபாவைக் காட்ட முயல்கின்றனர். இப்படித் திரித்துக் கூறும் ஒரு கட்சியின் கீழிருந்து இலக்கியம் எழுதும் நிலையை ஒருக்கால் நினைத்துப் பாருங்கள். சீனாவில் ஒரு எழுத்தாளன் இப்போ எப்படித் தன்னை ஒரு சரியான உலகநிலையில் நிறுத்திச் சிந்திக்க முடியும்? சோஷலிஸ யதார்த்தம் என்பதும், ஒரு பக்கத்தை மறைத்துக்கொண்டு ஒரு பக்கத்தைக் காட்டும் வித்தைதான். அத்துடன் இந்தோ-சீன யுத்தம் வேறு ஒரு உண்மையையும் காட்டுகிறது. இந்தியா, பொருளாதார வளர்ச்சியோடு ஆன்மீக வளர்ச்சிக்கும் ஓர் உதாரணமாக நிற்கிறது. சீனா, வெறும் லோகாயத வளர்ச்சியை மட்டும்தான் குறிக்கிறது. லோகாய வளர்ச்சி மனிதனை எந்த வகையிலும் வளர்க்காமல் பழைய கொலோனியவாதியாக விட்டிருக்கிறது. அது ஒரு புதிய ideologyன் தேவையைக் குறிக்கிறது. Spanish Civil Warல் பொதுவுடமைவாதிகளுக்காக நின்ற உலக அறிவாளி வர்க்கம் இந்த இந்தோசீன யுத்தத்தில் அவர்களுக்கெதிராக நிற்கிறதென்றால் அது ஒரு புதிய சகாப்தத்தில் பிறப்பைத்தான் குறிக்கிறது. அமெரிக்காவின் முற்றிய முதலாளித்துவ வளர்ச்சி கியூபா சம்பந்தமாகக் கடைப்பிடிக்கும் பாஸிஸக் கொள்கை, பின்னதின் (அழிவின்) ஆபத்துக்குக் கருக் கூட்டுகிறது. சரிவருமா, பிழைக்குமா என்ற பயங்கரப் பிரச்சினை கலந்த ஒரு தேசீய-சர்வதேசியப் போக்கு இன்றைய போக்கு இன்றைய போக்கு. அப்படி ஒரு போக்கைக் கொண்ட சரித்திரக் காலகட்டத்தில் காலை ஊன்றிக்கொண்டு எழுதும் எழுத்தாளன் அந்தப் போக்கைப் புறக்கணித்து நினைக்க முடியாது""

மேற்குறிப்பிட்ட பகுதியில் கூறப்பட்டுள்ள விடயம்தான் இன்றைய அரசியல் சரிநிலைகளுக்குள் அடங்கிப் போகிறது. ஒரு விடயத்தைப் பற்றி நேரடியாகப் பேசி முடிவெடுக்க முடியாத அரசியல் சரிநிலையைத் தமிழ்ச் சிந்தனையுலகில் அறிமுகம் செய்தவர்கள் இந்த மார்க்சியர்கள்தான். அதில் எந்த மாற்றுக்கருத்துக்களும் இல்லை. உதாரணமாக இலங்கையின் இனப்பிரச்சனையை எடுத்துக் கொள்வோம் என்றால் அதற்கு முழுமையான காரணம் இடதுசாரிகள்தான். இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் இடம்பெற்ற இன வன்முறைகளுக்கு முழுமையான ஆதரவையும் கொஞ்சமாக எதிர்ப்பையுமே அவர்கள் பதிவு செய்தனர். இதனைச் சர்வதேசியப் பார்வையில் வைத்து அன்றே தளையசிங்கம் கூறியுள்ளார். இதற்கான மறுப்பை மார்க்சிய நூல்களில் அப்படியல்லவா எழுதப்பட்டுள்ளது என்ற கோணத்தில் அரைகுறையாக வரலாற்றைத் திரிக்கவே மார்க்சியர்கள் முன்வருகின்றனர். இவற்றையெல்லாம் விட்டு நீங்கி நம் ஆழ்மனதில் உள்ள மரபிலிருந்து தீர்வுகளைத் தேடியவர் தளையசிங்கம்.
அதனால்தான் அவர் அதற்காக அகவயமான கருத்துமுதல் சிந்தனைகளை முன்வைத்தார். இவற்றை வெறும் கற்பனை என்று ஒதுக்குவதால்தான் சமூகம் பின்னடைவுகளால் மேலும் பின்னகர்கிறது. அறுபதுகளில் அவர்கூறிய கருத்துக்கள் அன்றைய காலகட்டத்தில் மறுக்கப்பட்டு இன்று தூசுதட்டப்படுகின்றன என்றால் அதன் முக்கியத்துவம் எவ்வளவு என்பதைப் புரிந்து கொள்ளவேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.

தளையசிங்கம் கட்சி அரசியலுக்குள் இலக்கியம் செல்வதைக் கடுமையாக மறுத்த ஒருவராகவே உள்ளார். அதனால் படைப்பாளியின் பரிபூரண சுதந்திரம் இல்லாமல் போகின்றது என்பதை வரலாற்றின் துணையுடன் தொடர்ந்து எழுதியுமுள்ளார். நம்மை நாம் இழப்பதைத் தவிர்ப்பதற்கான முனைப்புத்தான் இந்தச் சுதந்திரம் என்று தொடர்ந்து வலியுறுத்தினார். தன்னுடைய நம்பிக்கையை ஒரு படைப்பாளி வேறொரு  இடத்திலிருந்து கடன் வாங்குபவனாக இருக்கக்கூடாது தன்னுடைய மரபார்ந்த விடயங்களில் இருந்து தேடும்போது அதற்கான தீர்வுகள் கிடைக்கும். அப்பொழுதுதான் தனித்தன்மை என்ற பற்று நம்மிடையே விகாசமடையும். இல்லாதுபோனால் இயந்திரத்தன்மையும் வரட்டு வாதங்களுமே பின்தொடரும் நிழலாக அமையும் என்பதை வலுவாக நம்பியவர் தளையசிங்கம்.

""திராவிட அமைப்புக்குள் இயங்க வேண்டிய நிலை கம்பனுக்கு ஏற்பட்டிருந்தால் அப்படியொரு காப்பியத்தை அவனால் பாடியிருக்க முடியாது. கொம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட திட்டங்களுக்குள் ஜெயகாந்தனும் நம் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பிற்போக்கு நோக்கங்களுக்குள் எஸ்.பொன்னுத்துரையும் எழ முடியாமல் வீழ்ந்திருந்தால் இன்று அவர்கள் எழுதும் தரமான கதைகளை அவர்களால் எழுத முடிந்திருக்காது. இப்படி இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சட்டம் வகுப்பவர்கள் கட்சியோடும் அரசாங்கத்தோடும் செத்துப்போகட்டும். இலக்கியத்துக்குள் வரவேண்டாம்."

இதனை அவரது காத்திரமான   எதிர்வினையாகவே கருதமுடியும். குறிப்பாகக் கட்சி அரசியலுக்குள் எழுத்தாளர்கள் செல்வதனால் ஏற்படும் தனித்தன்மை இழப்பினைத் தொடர்ந்து கூறியுள்ளார் மு.த. ஜெயகாந்தன் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டதிட்டங்களுக்குள் செல்லாமையால்தான் கைலாசபதி போன்ற மார்க்சியர்கள் ஜெயகாந்தனை மார்க்சியத்துக்குள் இருந்து மதத்துக்குள் பாய்ந்தவர் என்று வன்மையாக எழுதினார்கள். சுதந்திர மார்க்சியர்கள் என்று தம்மை வரையறுப்பவர்கள் பிற மார்க்சிய எழுத்தாளர்கள் கட்சிசார் அரசியலைக் கைக்கொள்ள வேண்டும் என்றே நம்புகின்றனர். இது மிகத் துரதிஷ்டமான ஒன்று. இந்த வகைகள் எவற்றுக்குள்ளும் அகப்படாமல் சுதந்திரமாக இயங்கிய முதல் சிந்தனையாளராகவே தளையசிங்கத்தை நாம் அடையாளம் காணமுடியும்.

நம்முடைய தமிழ்ச்சமூகத்தில் நான்கு வகையான படைப்பாளிகள் உள்ளனர் என்று சுந்தரராமசாமி கூறுவார். அதில் 1. மார்க்சியத்தை ஏற்போர். 2. அதனை மறுத்து உள்ளுணர்வால் இயங்குபவர்கள். 3. கட்டுப் பெட்டிகளும் போலி முற்போக்காளர்களும். 4. வியாபாரிகள்.

இதில் மார்க்சியத்தை ஏற்போர் ஒரு கூட்டுக்குள் அடங்கி விடுபவர்களாகவே உள்ளனர். அதனை மறுப்பவர்கள் இந்திய ஞானமரபின் அழுத்தமான பாதிப்பைத் தம்மிடம் கொண்டிருப்பார்கள் என்றால் ஆகச்சிறந்த படைப்பாளிகளாக உருமாறுவார்கள். உதாரணமாக ஜெயமோகனைக் கூறலாம். ஜெயமோகன் இந்து ஞான மரபின் வழித்தோன்றலாக வந்தவர். அவரது மூலச்சிந்தனைகள் பல வரலாற்று வழியிலும் உள்ளுணர்வாலும் இயங்குபவை. இந்தியப் பண்பாட்டின் ஆழம் மார்க்சியத்தைவிடவும் அதிகமானது. அதனால் திறமையான படைப்பாளிகள் மார்க்சியத்தைவிட்டு இந்திய ஞான மரபையே கைக்கொள்வர். அந்த மரபின் வழி வந்தவர்களில் ஒருவர்தான் தளையசிங்கம்.

இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வுகளைப் பாலியலுடன் தொடர்புபடுத்தியவர்களில் எஸ்.பொவுக்கு பிறகு முக்கிய இடம் வகிப்பவர் தளையசிங்கம் ஆவார். அதாவது தமிழ் சிங்கள கலவர காலங்களில் கலவரத்தில் ஈடுபட்ட தமிழ் ஆண்கள் சிங்களப் பெண்களையும் சிங்கள ஆண்கள் தமிழ்ப் பெண்களையும் திருமணம் செய்துள்ளனர். அப்படியென்றால் பிரச்சனை எங்கிருந்து வருகிறது என்ற ஆழமான அகவயப் பார்வையை முன்வைத்தவர் தளையசிங்கம். இந்தப் பார்வையை அக்காலத்தில் பல எழுத்தாளர்கள் கூறியதாக பதிவுகளும் உள்ளன.

இலங்கை எழுத்தாளர்களில் மூலமான சிந்தனை மரபுடன் எழுத்துலகுக்கு வந்தவர்களில் தவிர்க்கமுடியாதவர் தளையசிங்கம். அவருடைய யதார்த்தமான கருத்துக்கள் பல அகவயமாக  இருந்தமையால் பொருள்முதல்வாதிகளால் இகழப்பட்டது. ஆனால் இன்றைய பிரபஞ்ச யதார்தத்துக்கு தளையசிங்கம் ஒரு முன்னோடி என்றே கூறவேண்டும்.

குறிப்பு: இந்தக் கட்டுரை தளையசிங்கத்தின் தத்துவ அரசியல் சமய மெய்யியலை அணுகுவதற்கான ஒரு சிறிய முன்னுரைதானே ஒழிய அவரது  மொத்தமான படைப்பின் சாரமல்ல. மு. தளையசிங்கத்தின் படைப்பு எழுத்துக்களை வாசித்ததைக் கொண்டு எழுதியுள்ளேன். இந்த இடத்தில் கூறவேண்டிய முக்கியமான கருத்து தளையசிங்கம் மீது காத்திரமான விமர்சனத்தை முன்வைத்து அவரை அயோத்திதாசப் பண்டிதர் மற்றும் நாராயணகுரு ஆகியோரின் சிந்தனை மரபுகளுடன் ஒப்பிட்டவர் ஜெயமோகன். தளையசிங்கம் பற்றி இதுவரை தமிழில் எழுதப்பட்ட கட்டுரைகளில் மிக முக்கியமானது ஜெயமோகனுடையது. அதனை வாசிக்காமல் மு. தளையசிங்கத்தின் எழுத்து ஆற்றல்களைப் புரிந்துகொள்வதில் இடர்பாடுகள் ஏற்படக்கூடும். ஜெயமோகனின் கட்டுரைகளிலுள்ள கருத்துக்களையும் தளையசிங்கத்தின் சிந்தனைகளையும் ஒருமித்து வாசித்து எமது ஆழ்மனத் தர்க்கங்களையும் இட்டுப் பார்க்கும்போது தனித்துவமான யோசனைகளை இவை ஏற்படுத்தும்.

(ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை என்று ஜெயமோகனால் எழுதப்பட்ட விமர்சன நூலில் எஸ்.பொ, கா.சிவத்தம்பி, தளையசிங்கம், அ.முத்துலிங்கம், சு.வில்வரத்தினம், உ.சேரன் முதலிய ஆறு எழுத்தாளர்களின் படைப்புலகம் பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அதில் தளையசிங்கம் பற்றிய கட்டுரை மிக முக்கியமான ஒன்று)

தளையசிங்கம் பற்றிய ஜெயமோகனின் கட்டுரைகள்.

மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் 01

மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் 02

மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் 03

https://www.jeyamohan.in/109517

Comments

Popular Posts