ஜெயமோகனின் கடைசி முகமும் வரலாற்றுத் தெளிவுகளும்


ஜெயமோகனின் கடைசிமுகம் என்ற கதை 2002 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. இது கேரளத்தின் தாந்த்ரீக - வைதீக வாழ்வியலைச் சித்தரிக்கும் ஒரு தத்துவார்த்தச் சித்திரம் என்று அதன் ஆழமான பகுதிகளைக் கொண்டு வரையறுக்கலாம். இக்கதையின் ஆழத்தைப் புரிந்துகொள்வதற்கு கதையில் இடம்பெறும் நம்பூதிரிகள் பற்றிய சில வரலாற்று விடயங்களையும் வைதிக மரபுகளையும் அறிந்து கொள்ளவேண்டும். இது கதையை அதன் அமைப்பு சார்ந்து அணுகும் முறையாக நான் கருதவில்லை. வரலாற்றின் சில தரவுகள்மூலம் இக்கதையில் உள்ளடக்கத்தை பகுத்துக்கொள்ள உதவும்.

கதையின் சுருக்கத்தைப் பின்வருமாறு வகுத்துவிட்டு அதனை வரலாற்றின்வழி அணுகுவது மேலும் தெளிவை உண்டாக்கும்.

தளவாய் கேசவதாசன் என்ற திவானுக்கு நாயர்களின் துணையுடன் நம்பூதிரி ஒருவர் ஏவல்வினை செய்கின்றார். அதிலிருந்து தப்பித்த திவான் நம்பூதிரிகளுக்கு வழங்கியிருந்த மனை மற்றும் ஆலய அதிகாரங்களைப் பிடுங்குகிறார். அக்குடும்பத்தின் செல்வாக்கு சமூகத்தில் இல்லாமலும் போகிறது. வம்சத்தில் எஞ்சிய சங்கரநாராயண நம்பூதிரி தமது பரம்பரை வீடான துளசிமங்கலத்தை வழக்கிலிருந்து விடுவித்துப் பெற்றுக்கொள்கிறார். அங்கு ஒரு சுவடிப்பெட்டி கிடைக்கின்றது. அதனை அனந்தனுக்குக் கொடுக்கின்றார். அவன் அதுபற்றி அறிதல் இல்லாதவன் ஆகையால் இக்கதை சொல்லிக்கு வழங்கிவிடுகிறான். அந்தக் கதைசொல்லி அதற்குள் இருந்த சுவடிகளை ஆராய்ந்து அதற்குள் குறிப்பிடக்கூடிய படி இருந்த நீலி என்கிற யக்ஷியின் கதையை சுருக்கி எழுதுகிறார். இதுவரை கடிதமாகச் சொல்லப்பட்ட விடயங்கள்  நீலியின் கதையைக் கூறப்புகுந்ததும் உபகதையாக மாறிவிடுகின்றது. இதனை இக்கதையின் நுட்பமான பகுதியாகக்கூடக் கருதலாம். இந்தக்கதை பழைய வரலாற்றை நோக்கி நகர்கிறது. இந்தச் சுவடிக்குச் சொந்தக்காரரான சங்கரநாராயண நம்பூதிரியின் முன்னோர்களைப் பற்றியதாக உள்ளது. குறிப்பாக இந்த நம்பூதிரிகள் மாந்திரீகத்தைக் கைக்கொண்டது நான்கு நூற்றாண்டுகளாக என்று தொடக்கத்தில் கூறப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்கவேண்டும். இக்காலத்தில்தான் வைதீக மரபு மாந்திரீகத்தை பன்மைத்துவ நோக்கில் ஏற்றிருக்கவேண்டும். (அத்வைதியான சங்கரரும் நம்பூதிரி மரபில் வந்த ஒருவர் என்று நினைக்கிறேன்.)
பிரம்மதத்தன் என்ற மூத்த நம்பூதிரி ஆபிசாரம் செய்வதற்காக முகத்துவாரம் என்ற ஊருக்குச் செல்கிறார். கூவே அவரது மகன் விஷ்ணுசர்மனும் செல்கிறான். அவர்கள் போதிபத்ரம் என்ற அதர்வ மந்திர போதிபத்ரத்தை எடுக்க மறந்துவிடுகின்றனர். அந்த போதிபத்ரத்தை நம்பூதிரியையும் சீடனான மகனையும் தவிர பிறர் எடுக்கக்கூடாது என்பதால் அதனை எடுத்துவர மகனே செல்கிறான். அவ்வாறு வழியால் போகும்போது யக்ஷியிடமிருந்து தற்காத்துக்கொள்ள ஓதப்பட்ட மூன்று கூழாங்கற்களையும் வழங்குகிறார். யக்ஷி பின்னால் இருந்துதான் வருவாள். அப்படி எதிர்ப்படும்போது அதனால் தாக்குமாறு கூறி அனுப்புகிறார். அவ்வாறு சென்ற அவனைப் பின்னாலிருந்து எதிர்கொண்ட யக்ஷி மூன்று முறையும் அவனை மயக்க முற்படுகிறாள். முதல்முறை அவனது புலனடக்கம்மீது தனது ஆளுகையைச் செலுத்தும் பெண்ணாக மாறி மயக்குகிறாள். அதற்குள் சிக்கி ஒரு கல்லை வீணாக்கி உயிர்தப்புகிறான். அடுத்தமுறை தாயின் அன்பைக்காட்டி மயக்க முற்படும்போது அதிலிருந்தும் தப்பிவிடுகிறான். அப்பொழுது இரண்டு கற்கள் வீணாகி மீதமாக ஒன்று எஞ்சுகிறது. மூன்றாவது முறையாக காமத்தால் வசீகரப்படுத்த முயற்சி செய்கிறாள். அதற்கு மானிட உலகம் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறாள். அநேகமான ஆண்களுக்கு இயல்பாகவே உள்ள சபல புத்தி இங்கே வெளிப்படுகின்றது. அவன் திரும்புகிறான். அதன் விளைவுதான் "கடைசிமுகம்" என்றாகிறது. இக்கதையை தத்துவ வரலாற்று நோக்கில் பார்ப்பது மிக முக்கியமானது.

எனது பொதுவான வாசிப்பில் இந்தக் கதையை தமிழின் புனைகதையின் முக்கியமான ஒரு கதையாகவே கருதுகின்றேன். இந்தக் கதையின் தத்துவ நோக்கு  அனைவருக்கும் ஒன்றானதாக அமைகின்றது. இது அநேகமானவர்களின் வாசிப்பில் வெளிப்படையான ஒன்றாக இருக்கின்றது. ஆனால் இக்கதை மீதான வரலாற்றுப் பார்வை புதிதாகவே அமைகின்றது.
                                நம்பூதிரிகளின் வீடு (20ம் நூற்றாண்டு)
இந்திய வரலாற்றைத் துணைகெடுத்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகப் புரியும். வேதத்தை ஏற்றுக்கொண்ட வைதிகம் தாந்த்ரீக மரபுக்கு எதிராகக் கடும் போராட்டத்தையும் எதிர்ப்பையும் நிகழ்த்தியுள்ளது. ஆனால் தாந்த்ரீகம் முற்றாக அழிக்கப்படவில்லை. வேதமரபு பௌராணிக மரபாக மாற்றமடைந்தபோது அதர்வவேதம் விமர்சிக்கப்பட்டுக் கிடப்பில் போடப்பட்டது. அல்லது நிராகரிக்கப்பட்டது. அதற்குக் காரணம் அதர்வவேதம் பிரதிபலிப்பது தாந்த்ரீக மரபை என்பதேயாகும். ஒடிசா, கேரளம், வங்காளம் முதலிய இடங்களில் இந்த தாந்த்ரிக மரபு நிலைகொண்டிருந்தது.  இங்கிருந்த மதங்கள் அந்த அதர்வ வேதத்தைத் தமது ஆதாரமாகக் கொண்டியங்கின. இதனால்தான் ஆகம நியமங்களைப் போற்றிய ராஜராஜசோழனும், ராஜேந்திரசோழனும் கேரளம்மீது படையெடுத்து தாந்த்ரீகமரபுகளை நீக்க முயன்றனர். ஆகம நியமங்களை அங்கே நிலைநாட்டியுமுள்ளனர். இது அக்கால சமூக அமைப்புக்குத் தேவையான ஒன்றாகவே இருந்திருக்கலாம். நாடோடி பழங்குடி மரபுகளைக் கட்டமைக்க இந்த ஆகம நியமம் சமூக ரீதியில் கட்டமைக்கப்பட்ட  ஒன்றாக இருந்துள்ளது. இதற்காக ராஜராஜர்கள் மீது பிராமணிய முத்திரை குத்துவது ஏற்புடைய ஒன்றல்ல. ஏனென்றால் இந்தியச் சமூகம் ஆரம்பத்தில் நாடோடி மற்றும் பழங்குடிச் சமூகமாகவே இருந்துள்ளது. இவற்றை ஒன்றிணைத்துக் கட்டமைத்துக்கொள்ள ஆகம நியம முறைமை தேவைப்பட்டுள்ளது.  அதனைத்தான் சோழர்கள் மேற்கொண்டிருந்தனர்.

விஷ்ணு என்ற நம்பூதிரியின் மகனை யக்ஷி என்னும் பூத சக்தி கொன்றுவிடுகிறது. அந்தக் கொலை வரையான சம்பாஷணைகளும் கேரளத்தின் வைதீக- தாந்திரீக மரபுகளும் குறியீடாகவும் விவாதமாகவும் பன்மைத்தன்மையை உள்வாங்கியதாகவும்  எழுதப்பட்டுள்ளது. இதற்குள் இருக்கும் அந்தரங்கத்தை வாசகர்களிடமே கதாசிரியர் முன்வைக்கின்றார். அதனையே கதையின் இறுதியில் "இந்தக் கதையை அந்தரங்கமாக உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லையா?" என்று கேட்கிறார்.
கேரளத்தில் நாயர்களுக்கும் நம்பூதிரிப் பிராமணர்களுக்கும் இடையில் பெரும் இடைவெளி நிலவியல் ரீதியில் இருந்துள்ளது. இது வெறுமனே இந்த இரண்டு பிரிவுகள் என்றல்ல, நாயருக்கும் ஈழவருக்கும், புலையருக்கும் பறையருக்கும் என்று இடைவெளி அதிகரித்தே சென்றுள்ளது. இதில் ஈழவர் மீதான ஒடுக்குமுறைகளை நீக்கவே நாராயணகுரு என்ற கேரள சீர்திருத்தவாதி தோற்றம்பெற்றார். அத்துடன் நாயருக்கும் நம்பூதிரிகளுக்கும் வசிப்பிடம் வழி இடைவெளி இருந்தாலும் நாயர்கள் நம்பூதிரிகளின் சேவகர்களாகவே இருந்துள்ளனர். அந்த வரலாறு ஒரு புறம் இருந்தாலும் இங்கே ஜெயமோகனின் கதைக்கும் மேலே கூறப்பட்ட விடயங்களுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழக்கூடும். இந்தக் கதையில் தாந்த்ரீக மற்றும் வைதீக மரபுக்கு இடையில் நடைபெற்ற மோதலை பிற்கால வரலாறு மாற்றுநிலைப்படுத்தி வந்ததையே ஜெயமோகன் எழுதியுள்ளார். நம்பூதிரிப் பிராமணர்கள் பூர்வமீமாம்சையைக் கடைப்பிடிக்கும் வைதீகர்கள். அவர்கள் அதர்வ வேதத்தில் குறிக்கப்படும் ஆபிசாரம் என்ற சூனியம் வைத்துக் கெடுதல் விளைவிக்கும் தாந்த்ரீக மரபையும் ஏற்றுக்கொண்டு வந்திருப்பது இக்கதையில் வியப்பைத் தருகிறது. அத்துடன் நம்பூதிரிகள் தூய மாந்திரீக விடயங்களைக் கற்றவர்களல்ல என்ற விடயமும் இக்கதையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மானிட வரலாறு இனக்கலப்பாலும் நாடோடித்தனத்தாலும் ஆன ஒன்று. அதேபோல பன்னெடுங்கால மரபுகளும் பன்மைத்துவம் பெற்று சமூக மட்டத்தில் வெளிப்படையாக உரையாடலுக்குத் தயாராகவே வந்துள்ளன. அதுத்தான் இக்கதையில் தீவிரமாக வெளிப்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பிறபகுதிகளில் இல்லாத ஒரு விசித்திரம் கேரளத்தில் இருந்துள்ளது. இங்கே மட்டும்தான் பிராமணர்கள் முழு நிலத்தையும் வைத்திருந்தனர். வேறெந்த பகுதிகளிலும் அப்படி இருக்கவில்லை. குறிப்பாக தமிழகத்தில்கூட சோழர்காலத்தில் பிரத்தியேகமான இடங்களே பிராமணர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. உதாரணமாக சதுர்வேதி மங்கலம்.

இந்த முறை (நம்பூதிரிகளின் அதிகாரமுறை) எவ்வாறு வந்தது என்பதைக் கேரள ஆய்வாளர் பி.கே.பாலகிருஷ்ணன் இப்படிக் கூறுகிறார்.

"வழிப்போக்கனான ஒரு நம்பூதிரி தற்செயலாக ஒரு கல்லை உடைக்கவோ வேரை வெட்டவோ செய்ய அதிலிருந்து உதிரம் பெருகும். உடனே அங்கிருந்த மக்களிடம் அங்கு இறைவன் உருவாகியிருப்பதாகச் சொல்வான். அவர்கள் உதவியுடன் அங்கு ஓர் ஆலயம் எழும்பும். அப்பகுதி நிலங்கள் அவ்வாலயத்துக்குச் சொந்தமாகும். இந்த அய்தீகத்தைக கொண்டு நம்பூதிரிகள் பழங்குடிக் கேரள மக்களை ஒன்று திரட்டினர்"

இந்தக் கதையிலும் அதேபோன்ற ஒரு தன்மையை அவதானிக்கலாம். மக்களுடைய ரத்தத்தை உறிஞ்சிக் கொல்லும் யக்ஷி மீது மக்கள் பெரும் கோபம் கொண்டவர்களாக இருக்கக் கூடும். அந்த யக்ஷியை அடக்கும் முறைமை நம்பூதிரிகளுக்கு மட்டுமே உண்டு என்று அவர்கள் நம்புவர். ஆனால் நம்பூதிரி அந்தப் பூதத்தை அடக்க மாட்டார். ஏனென்றால் "நாட்டில் தெய்வ பக்தியும் ஒழுக்கமும் நிலவ யக்ஷி பூதமும் அவசியம்" என்ற கருத்தை நம்பூதிரி தன்னளவில் நினைத்து வைத்திருப்பார். அதாவது தம்முடைய பணியும் செல்வாக்கும் சமூகத்தில் தொடர வேண்டுமாக இருந்தால் பூதங்களும் இருக்கவேண்டும் என்பது நம்பூதிரிகளின் கருத்து. அப்படியான ஒரு தருணத்தில் நம்பூதிரியின் மகன் ஒருவனையே அந்த யக்ஷி கொன்றுவிடுகிறது. இதற்கான எதிர்வினையை எப்படி அந்த நம்பூதிரி மேற்கொள்வார். அதை ஜெயமோகன் கதையின் இறுதியில் இப்படிக் கூறுகிறார்.

"விஷ்ணு நம்பூதிரியின் உடல் சுனைக்காவுப் பாறைக்கு அடியில் சிதறிக் கிடந்தது. அதன் பிறகுதான் பிரம்மதத்தன் நம்பூதிரிப்பாடு மந்திரங்களைக் கற்று யக்ஷிகளையும் பூதங்களையும் வாதைகளையும் அடக்க ஆரம்பித்தாராம். யாராலும் அடக்க முடியாத சுனைக்காவில் யக்ஷியை அடக்கியது அவர்தான்"

இந்தக் கதை கேரள பிராமணர்கள் மீது சமூக வரலாற்று ரீதியாகக் கடும் விமர்சனத்தை முன்வைத்த ஒன்றாகவே கருதமுடியும். இதனை இன்றைய சூழலுக்கு வரலாற்று வாசிப்பின்படிதான் நாம் பொருத்திப் பார்க்கமுடியும். அத்துடன் கேரளத்துக்குப் பிராமணரின் வருகை கி.பி எட்டாம் நூற்றாண்டில் நிகழ்கின்றது. (இங்கே கேரளம் என்பது தென்திருவிதாங்கூர் மற்றும் மலபாரின் மேற்குப்பகுதி தவிர்ந்தவை. இவை அக்காலம் தமிழகப் பகுதிகளாகவே இருந்துள்ளது.) அதே நேரம் தமிழகத்துக்கு பிராமணர்களின் வருகை மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் நடந்துள்ளது. இதிலுள்ள முக்கியமான விடயம் என்னவென்றால் கேரளத்திலுள்ள நம்பூதிரிப் பிராமணர்கள் தம்மைத் தூய ஆரியர்களாகக் காட்டிக் கொண்டுள்ளனர். அதே நேரம் தமிழகத்துப் பிராமணர்களை இனக்கலப்புடைய நீசச்சாதியினர் என்றே நம்பூதிரிகள் வகைப்படுத்தியுள்ளனர். தமிழகப் பிராமணர்களில் சிலரே தம்மை ஆரியராகக் காட்டியுள்ளனர். அப்படி இருக்கும்போது தர்க்கப்படி பாரத்தால் கேரளத்தில்தான் ஆரிய - திராவிட வாதங்கள் மேலோங்கியிருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் பிராமணர்கள் மீது இந்த வாதங்கள் முன்னெடுக்கப்பட்டமை நிலவுடைமைக் கிளர்ச்சி என்றே கருதமுடிகிறது. அத்துடன் தமிழகத்தில் பிராமணர்களிடம் நிலம் இருக்கவில்லை என்பது இங்கே இன்னொரு விடயம். பின்வந்த ஜீன் ஆராய்ச்சிகளில் தூய இனம் என்பது போலியான வாதம் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அநேகமானவை இனக்கலப்புச் செய்யப்பட்டவை என்றே குறிப்பிடப்படுகிறது. உதாரணமாக நம்பூதிரிகளும் நாயர்களும் இனக்கலப்புச் செய்ததால் உருவானதே சமபந்த என்ற ஜாதி. இவர்கள் மூலம் நம்பூதிரிகள் கேரளத்தை ஆண்டனர். இந்திய வரலாற்றின் ஒரே ஒரு பிராமண அரச வம்சம் இவர்கள் என்று வரலாறு கூறுகின்றது.

மேலும் இக்கதையில் திவான் என்ற பெயர் இஸ்லாமிய அரச பதவிப் பெயர்களில் ஒன்று. இது மொகாலயர் காலத்தில் இந்தியச் சமஸ்தான அரசர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் கேரளத் திவான் ஒருவர் சாலை அமைத்தது பற்றியும் கூறப்பட்டுள்ளது . சாலை அமைப்பைக் கேரளாவில் முதன்முதலில் கொண்டுவந்தது திப்பு சுல்த்தான் ஆவார். இவரது 1766-1792 காலப்பகுதியில் கேரளத்தில் முதன் முதலாகச் சாலைகள் அமைக்கப்பட்டன. இதன் பின்புதான் திருவிதாங்கூரில் 1900 ஆம் ஆண்டு ஆரல்வாய்மொழி சாலையும் அமைக்கப்பட்டது. இவற்றைக் கொண்டு இந்தக் கதையின் ஆரம்பக் கடிதம் கூறும் களம் பதினெட்டாம் நூற்றாண்டுக் காலப்பகுதியாகவே இருக்கவேண்டும் என்று ஊகிக்க முடிகிறது. அத்துடன் பிரம்மதத்தனின் கதை அதிலிருந்து நானூறு ஆண்டுகளுக்கு உட்பட்டிருக்கவேண்டும்.
ஜெயமோகனின் இந்தக் கதையில் வரும் நம்பூதிரிகளின் புராதன மடமான துளசிமங்கலம் என்பது ராஜராஜ சோழன் பிராமணர்களுக்கு வழங்கிய பிரம்மதேயத்தைப் போன்ற சதுர்வேதிமங்கலம் என்ற ஊரையே ஞாபகமூட்டுகின்றது. அத்துடன் இக்கதையில் நாயர்கள் நம்பூதிரிகளின் துணையுடன் திவானுக்கு ஏவல் வினை செய்யும்போது அதிலிருந்து தப்பித்த அந்தத் திவான் நம்பூதிரிகளின் சொத்துக்களைப் பிடுங்கிக் கோயில் அதிகாரங்களையும் இல்லாமல் ஆக்கிவிடுகிறார். அப்படியென்றால் அந்த நாயர்களுக்கு எந்தத் தண்டனையையும் திவான் வழங்கவில்லையா என்னும் கேள்விகூட இங்கே எழுகிறது. இதை வைத்துப்பார்க்கும் போது வரலாற்றை  வரலாற்றுவாசிப்பின்வழி ஜெயமோகன் மாற்றுநிலைப்படுத்த முனைவதாகவே கருதமுடிகிறது. பலகாலமாக பிராமணர்கள் ஆதிக்கவாதிகள் என்ற கூற்றை மாற்றி அவர்களும் சத்திரியர்களால் பாதிக்கப்பட்டவர்கள் தான், அதேநேரம் சுயநலம் கொண்டவர்கள் என்பதை அந்த யக்ஷியைத் தன் மகன் மரணத்துக்காக மட்டும் அடக்கியதை வைத்தும் எழுதுகின்றார். இது ஒரு புனைகதைக்குள் இருக்கும் மிக நுட்பமாக பகுதிகள்.

கதையின் முடிவில் இந்தக்கதையை அந்தரங்கமாகப் புரிந்துகொள்ள முடிகிறதா என்ற கேள்வியை ஜெமோ முன்வைத்திருப்பார்.  நிச்சயமாக இதனை இரண்டு விதங்களில் நான் புரிந்துகொள்கிறேன்.

1. தத்துவ நோக்கினால் அமைந்த அந்தரங்கத் தெளிவு.
2. வரலாற்று வாசிப்பின்வழி கண்டடைந்த தெளிவு.

இந்த இரண்டையும் நோக்கி வந்து சேர்வதற்கு நியாயமான தெளிவுகளே தேவை என்பதை வலியுறுத்திக்கூற வேண்டும். தத்துவ நோக்கினை தரிசன அனுபவத்தின் வழியாகவும், வரலாற்றுத்தெளிவினை வரலாற்று வாசிப்பின்வழியும் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும் என்பது எனது நிலைப்பாடு. இதற்குள் மேலோட்டமான பகுப்புக்களை ஒற்றை வரியில் உதிர்த்துவிட்டுச் செல்வது ஆரோக்கியமான விடயமாக இருக்காது. அத்துடன் ஜெயமோகன் போன்றோரின் ஆழமான கதைகளின் மீதான பார்வையை ஒற்றைவரியில் சொல்வது மேற்கூறிய இரண்டு அடிப்படைத் தெளிவுகளைப் பெற்றிராதவர்களின் மேலோட்டமான முன்வைப்பு மனநிலையாகும்.

தொடர்புடைய பதிவுகள்.

இந்துஞான மரபில் ஆறு தரிசனங்கள்: ஒரு பார்வை

00


Comments

Popular Posts