இலங்கையின் மதமாற்றங்களும் அரவிந்தன் நீலகண்டனின் உடையும் இந்தியாவும்

அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரைகளை அவருடைய வலைத்தளத்தில் படித்துள்ளேன். அத்துடன் அவரது இந்திய அறிதல் முறைகள், பஞ்சம் படுகொலை கம்யூனிசம் மற்றும் ஆழி பெரிது போன்ற நூல்கள் மீள்வாசிப்புக்கு உட்படுத்தவேண்டிய நிலையிலுள்ளது. பலர் சொன்னார்கள் இந்து மதத்துக்கும் இந்துத்துவத்துக்கும் வித்தியாசம் உங்களுக்குத் தெரியவில்லை என்று. இந்து மதம் என்பதை மதச்சார்பின்மை என்று பலர் மடைமாற்றி வைத்துள்ளனர் என்பது ஒரு பக்கம் உண்மையாக உள்ளது.  அத்துடன் இந்துத்துவம் என்பது இந்துவாக வாழ்தல் (Hinduness) என்று பொருள். இந்த மடைமாற்றத்துக்கும் பன்னெடுங்கால இந்துமதத்தை அழிக்க முனையும் அந்நிய சக்திகளை எதிர்கொள்ள உருவானதே இந்துத்துவம் என்ற கோட்பாடு என்பது அநேகமான இந்துத்துவர்களின் நிலைப்பாடு. இதற்குள்ளிருந்து புடைத்தெழும் இந்துத்துவ வெறியைத்தான் பலர் இந்துத்துவம் என்று இங்கே தவறாக வகுக்கின்றனர். அதனால் தம்மைப் பலர் இந்துத்துவர் என்று சொல்லவே பின்வாங்குகின்றனர். ஆனால் அரவிந்தன் நீலகண்டன் தன்னை வெளிப்படையாகவே இந்துத்துவர் என்று அறிவித்துக் கொண்டவர்.  அவருடைய கோணத்திலும் வாசிப்பனுபத்திலும் வைத்து நோக்கினால் அதில் தவறுகள் இல்லையென்றே படுகிறது. இந்துவாக வாழ்பவர் ஆன்மீகத் தத்துவத் தரிசனங்களின் படி அந்த மதம் பற்றி உணர்ந்து அவ்வாறு வகுப்பதில் எந்தத் தவறும் இல்லை. இதற்கு மேலாக உள்ள இந்துத்துவ வெறிதான் தவறான கருத்தியல் என்பது எனது எண்ணம்.
அரவிந்தன் நீலகண்டனின் உடையும் இந்தியா என்ற நூல் வரலாற்று உண்மைகளை ஆதாரங்களுடன் போட்டு உடைக்கும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நூலாகும். இதனை அமெரிக்க வாழ் இந்தியரான ராஜீவ் மல்கோத்ரா அவர்களுடன் இணைந்து மிக நீண்ட ஆய்வு நூலாக எழுதியுள்ளார். இந்நூல் வெளிவந்த நேரத்தில் பெரும் சர்ச்சைகளையும் திராவிட ஆரிய மாயைகளையும் கிறிஸ்த்தவ மதமாற்ற மிசனரிகள் பற்றிய உண்மைகளையும் இஸ்லாமிய அடிப்படைவாதம் இந்தியாவுக்கு நுழையும் வழிகள் எப்படியானவை என்பதையும் வெளிப்படுத்தியிருந்தது. இதற்காகவே இதன்மீது கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்தது. ஆனால் இந்த நூலில் தரப்பட்டுள்ள தரவுகளையும் ஆதாரங்களையும் கொண்டு இதுவரை யாரும் காத்திரமான மறுப்புரை எழுவில்லை என்றே நினைக்கிறேன். வெறுமனே அது ஒரு இந்துத்துவ நூல் என்ற ஒற்றைவரிச் சப்பைக்கட்டுக்களால் கடந்து சென்றனர்.

திராவிடம் என்ற கருத்தியல் மதமாற்றங்களுக்காக எப்படி உருவானது. கிறிஸ்த்தவ மிசனரிகள் சைவத்துக்குள் எப்படிக் கிறிஸ்த்தவத் தமிழை உட்புகுத்தினர். இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மதமாற்றங்களை எப்படி மேற்கொண்டனர். போன்ற இன்னோரன்ன விடயங்கள் மிக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கைப் பிரிவினைவாதக் கோரிக்கையில் மேலைநாட்டு கிறிஸ்த்தவ சபைகளின் பங்கு என்ன என்ற கருத்தும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

அரவிந்தனின் நூலில் இலங்கை பற்றிய கருத்துக்கள் பின்வரும் பார்வையில் கூறப்பட்டுள்ளது.

""இலங்கையில் பிரம்ம ஞான சபை, பௌத்தப் புத்தெழுச்சியைத் தூண்டிப் பரப்பியது. அத்துடன் கூடவே ஆரிய இனக் கோட்பாட்டையும் பரப்பியது. பிஷப் ராபர்ட் கால்டுவெல்லும் மாக்ஸ் முல்லரும் இலங்கை வாழ் தமிழர்களைத் திராவிடர் எனவும் சிங்களவர்களை ஆரியர் எனவும் வகைப்படுத்தினர். இந்தப் பாகுபாடு, காலனிய ஆட்சியாளர்களால் ஊக்குவிக்கப்பட்டது. பல தென்னிந்தியர்களும் மெதுவாகத் தங்களது திராவிட இன அடையாளத்தை ஏற்றுக்கொண்டதுடன் அதன் ஒரு முக்கிய அம்சமாக ஆரியர்கள் என அடையாளப்படுத்தப்பட்டவர்களுடனான ஒரு விரோதத்தையும் உள்வாங்கினர். இதன் விளைவுகள்ப் பல பத்தாண்டுகளாக இலங்கையில் ஓர் உள்நாட்டுப் போர் நடைபெற்று, பல்லாயிரம் உயிர்களை இரு பக்கங்களிலும் பலி வாங்கியது.""

இலங்கையில் ஆரிய திராவிட என்ற மொழிப் பகுப்பு இனப்பகுப்பாய்வாக ஆங்கிலேயரால் மாற்றம்கண்டது. இதனைப் பின்வந்த ஆட்சியாளர்களும் ஊக்குவித்தனர். இலங்கையிலுள்ள சிங்களவர்களின் மொழி ஆரியம் என்ற வகைக்குள் அடக்கினாலும் அவர்கள் திராவிடப் பண்பாட்டைப் பின்பற்றுபவர்களாகத்தான் இருக்கின்றனர். இதில் பெரும் குழறுபடியை உண்டாக்கியது ஆரிய திராவிட வாதங்களே ஒழிய வேறில்லை. அம்பலாங்கொடை போன்ற இடங்களில் சிங்களவர்களில் பள்ளர் வகுப்பைச் சார்ந்தவர்கள் பனைமரம் ஏறுவதற்கு கேரளத்தில் பனைமரம் ஏறுபவர்கள் பனைக்குப் பனை எப்படிக் கயிறு கட்டி தாவிச் செல்வார்களோ அதுபோல ஒரு முறைமையைச் சிங்களவர்களின் அன்றாட விடயங்களில் அவதானிக்க முடியும். தமிழ்ப் பகுதிகளில் ஒவ்வொரு பனையாகத்தான் ஏறிக் கள் எடுப்பார்கள். ஆனால் சிங்கள இடங்களில் கேரளத்தின் முறைமையே பலவாறாகப் பின்பற்றப்படுகிறது. சிங்கள மொழியை இந்தோ ஆரிய வகுப்புக்குள் வைத்தாலும் அவர்களுடைய பண்பாடு என்பது இவர்கள் கூறும் திராவிடம் சார்ந்தே உள்ளது.

அரவிந்தனின் இந்த நூல் இந்தியப் பிரிவினை சக்திகளைப் புடம்போட்டுக் காட்டுகின்றது. அத்துடன் இலங்கையின் இனமுரண்பாடுகள் பற்றிப் பல இடங்களில் பேசுகிறது. குறிப்பாக இலங்கையைப் பிராந்திய நலனுக்காக வல்லரசு நாடுகள் எப்படியெல்லாம் பயன்படுத்தியுள்ளன என்ற மேற்கோள் பல இடங்களில் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது. ராமச்சந்திர குஹா எழுதிய "இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு" என்ற நூல் வரலாற்று அடிப்படையில் எவ்வாறு முழு இந்திய வரலாற்றையும் நியாயமாக அலசியதோ அதுபோல அரவிந்தன் நீலகண்டனின் உடையும் இந்தியா என்ற நூல் இந்தியப் பிரிவினைச் சக்திகளையும் இலங்கை இனமுரண்பாடுகளையும் மிகத் தெளிவாக ஆராய்ந்துள்ளது. வாசிப்பில் ஆர்வமுள்ள என்னுடைய மிக நெருங்கிய நண்பர்களுக்கு இந்த இரண்டு நூல்களையும் பரிந்துரைத்திருந்தேன். அதில் ஒருவர் இதனை வாசித்துச் சில சந்தேகங்களையும் கேட்டிருந்தார். அந்தச் சந்தேகங்களுக்கான பதில்களை வரலாற்று வாசிப்பின்படி அவருக்குத் தெளிவுபடுத்தியுள்ளேன். ஆரம்பத்தில் மிகத் தீவிரமாகத் தமிழ்ப் பிரிவினை பேசியவர் பின் மெதுவாகத் தனது முகத்தை மாற்றிக்கொண்டார். அதன் யதார்த்தங்களை அவர் உணரத்தலைப்பட்டார். இந்த நோக்கம் எமது இளைஞர்கள் மத்தியில் ஊட்டப்பட வேண்டும். அப்பொழுது பிரிவினைக்கான கோஷங்களை விட்டு தேசிய நீரோட்டங்களில் கலந்து கொள்வர். அதற்கு மூலாதாரமாக இந்த நூலை முன்வைக்கலாம்.
இலங்கையின் பூர்வக் குடிகளாக உள்ள வேடர்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழி பேசக்கூடியவர்கள். இலங்கையின் மத்திய பகுதியில் பரந்து உள்ளனர். இவர்கள் இந்து பௌத்த மரபார்ந்த வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். அங்குள்ள வேடர்களைக் கிறிஸ்த்தவத்துக்கு மதம் மாற்றுவதற்கான நடவடிக்கைகளைச் சில மிசனரிகள் மேற்கொண்டிருந்தன. அதனைத் தடுக்கவே அவர்களுக்குக் கடந்த ஆட்சியில் அரசாங்கம் பல  முக்கியத்துவங்களை வழங்கியிருந்தது. உதாரணமாக மஹியங்கனை என்ற இடத்தை அண்டிய பிரதேசங்களில் வேடர் இனத்தவர்கள் அதிகமாக உள்ளனர். அங்கு பௌத்த இந்து வழிபாட்டு முறைகள் ஆரம்பத்தில் பின்பற்றப்பட்டிருந்தது. பின்னர் அதற்குள் கிறிஸ்த்தவ மிசனரிகளின் வருகையும் அதிகரித்துள்ளதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அங்கு பௌத்த தேசியவாதிகளின் நெருக்குதல் அதிகமாகவே அவர்களுடைய பார்வை யுத்தத்தால் பாதிப்புற்ற தமிழ் இந்துக்கள் பக்கம் திரும்பியுள்ளது. இலங்கையில் திருநெல்வேலியைச் சேர்ந்த மதமாற்ற மிசனரிகள் பல இயங்கி வருகின்றன. இவற்றினால் இந்து மதத்திலிருந்த மக்கள் கிழமைக்கு ஒரு குடும்பம் வீதம் கிறிஸ்த்தவத்துக்கு மதமாற்றப் படுகின்றனர். இந்த மதமாற்றத்துக்கு அவர்கள் இரண்டு வழிகளை முன்வைக்கின்றனர்.

1. யுத்தத்தால் வறுமைப்பட்ட குடும்பங்களுக்கு உதவி என்ற பெயரில் மதப்பிரச்சாரம் செய்தல்.
2. பழங்குடி மரபார்ந்த இந்து வழிபாட்டு முறைகளைக் கேலி செய்து உயிர்த்தெழுதல் என்ற மூடக்கருத்தைக்கூறி மதமாற்றம் செய்தல்.

இதனைப் மிகப் படித்த பாதிரியார்கள் நேரடியாகவே சென்று எவ்விதத் தயக்கங்களும் இன்றி மேற்கொள்கின்றனர். உதாரணமாக எனது மாவட்டத்தில் யுத்தம் நிறைவுபெற்ற கையோடு பல கிறிஸ்த்தவ சபைகள் உதயம் பெற்றுள்ளன. அவர்களுக்கான பணம் இந்தியாவிலுள்ள தென்னிந்தியத் திருச்சபைகளின் மூலம் அளிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்தை மதம் மாற்றியதற்கான ஆதாரத்தை அவர்களுக்கு அளிக்கும்போது மதமாற்றலுக்கு மூளைச்சலைவை செய்தவர்களுக்குப் பாரியதொகை பணம் கைமாற்றப்படுகிறது. இது தொடர்பான நடவடிக்கைகளை மிக ரகசியமாகவே இங்குள்ள மிசனரிகள் மேற்கொண்டு வருகின்றன. அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இவ்விடயங்களை யாரும் தெரிவிப்பதுமில்லை. இங்குள்ள இளைஞர்களால் சில கெடுபிடிகள் அதிகமானதும்  மாவட்டங்களுக்கு மலிவு விற்பனை என்ற பெயரில் பொருட்களுடன் உள்நுழையும் கிறிஸ்த்தவப் பிரச்சாரகர்கள் பொருளையும் விற்று தமது கரங்களில் ஏந்தியுள்ள பிரச்சாரச் சீட்டுக்களையும் அங்குள்ள இந்துப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி இலகுவாகவே மூளைச்சலவையைச் செய்கின்றனர். இது தொடர்பான விழிப்புணர்வுகளை இந்து இளைஞர்கள் அண்மையில் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். சில இளைஞர்களிடம் இந்த மிஸனரிக்காரர்களின் அத்துமீறிய நடவடிக்கைகளைச் சட்டப்படி அணுகுமாறும் தெளிவுபடுத்தியுள்ளோம். இந்த நாட்டின் பௌத்தமத மேலாதிக்கத்தை இல்லாமல் செய்யவேண்டும் என்று துடிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் மேலைக் கிறிஸ்த்தவர்கள்தான். பௌத்த நிறுவனமயம் துண்டாக்கப்படும்போது இலங்கையில் கிறிஸ்த்தவ- இஸ்லாமிய மதங்களின் பிரச்சாரங்களும் மதமாற்றுகையும் அதிகமாகிவிடும் என்று பல சிங்களப் பேராசிரியர்கள் கருதுகின்றனர். தமிழ் பேசக்கூடிய ஒரு சிங்கள விரிவுரையாளரிடம் இது தொடர்பாகப் பேசும்போது அவர் தங்களுடைய நியாயங்களைக் கூறினார். இலங்கையின் வடகிழக்கில் இந்துமதம் எவ்விதப் பிரக்ஞையும் அற்ற நிலையில் இருப்பதால் மதமாற்றங்கள் எளிதில் நடக்கின்றது. ஆனால் நமது பௌத்த மஹா சபைகளை இல்லாது ஆக்கினால் இன்னொரு உள்நாட்டுப்போரை நாம் எதிர்கொள்ள நேரிடும் என்று ஆபிரிக்க மக்களை உதாரணம் காட்டி மிக விரிவாகவே விளக்கம் கூறினார். அது அவருடைய பெரும்பான்மை மனப்பாங்கு என்பதைத் தாண்டி தன்னுடைய மதம், நாடு, தேசியம் பற்றிய பேணுகையில் கவனம் செலுத்தும் ஒருவராகவே நாம் காணமுடியும்.
ஆபிரிக்க நாடுகளின் பழங்குடிகளின் மரபுகளைச் சிதைத்து கிறிஸ்த்தவத்தைப் பரப்பிய அய்ரோப்பியர்கள் அந்த மக்களைத் தமது பகடைக் காய்களாகவே பாவிக்கின்றனர். அதுபோலத்தான் இலங்கையின் தமிழர்களையும் பழங்குடிகளையும் சுரண்டி மதமாற்ற தற்போது களத்தில் இறங்கியுள்ளனர். இது மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை. இலங்கையின் இனப்பிரச்சனையிலும் இந்தியாவின் பிரிவினையிலும் மதம் எப்படித் தொடர்புபட்டுள்ளது என்பதை உடையும் இந்தியா என்ன நூல் மூலம் அறிந்து கொள்ளலாம்.

சைவத்துக்குள் கிறிஸ்த்தவத்தை அடக்கி இந்து மரபுகளை இல்லாமல் செய்வதில் விவிலிய மதம் சற்றும் சளைத்த ஒன்றல்ல.
உதாரணமாக, நீலகண்டன் இலங்கையிலன் மட்டக்களப்பில் மிசனரிகள் பற்றி வரலாற்றிலிருந்து தொகுத்து இப்படிக் கூறுகிறார்.

"சைவத்துடனான முதல் சந்திப்பில் புராட்டஸ்டன்ட் மிஷனரி அறிஞர்கள் சைவத்தை மிகக் கடுமையான வார்த்தைகளால் தாக்கிக் கண்டித்தனர். உதாரணமாக, இலங்கையில் மட்டக்கிளப்பில் அமைந்துள்ள அமெரிக்கன் மிஷனரி செமினரியை எடுத்துக்கொள்ளலாம். இந்த அடிப்படைவாதக் கிறிஸ்தவ அமைப்பு, தமிழர்களிடையே மதமாற்றப் பிரசாரம் செய்துவந்தது. இதன் பத்திரிகையான மார்னிங் ஸ்டார் என்பது தமிழ்-ஆங்கில இருமொழிப் பத்திரிகை. இப்பத்திரிகை, 1841-ல், மிகக் கடுமையாக, தமிழர்களை, குறிப்பாக சைவர்களை, இருளில் வாழ்வதாகக் கூறியது: சைவத்தின் தனித்துவக் கோட்பாடுகளிலோ தரிசனங்களிலோ ஒரு மனிதனை ஒழுக்கத்துடன் வாழ வைக்கவோ, சக மனிதனுக்கு உதவி செய்பவனாக ஆக்கவோ எதுவுமே இல்லை... இந்த உலகமே சைவ சமயத்துக்கு மாறுகிறது என ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டால், அதனால் ஒழுக்கமோ அல்லது மானுட மகிழ்ச்சியோ உயராது. மாறாக ஒவ்வொருவரும் மிகப் பெரிய ஏமாற்றுக்காரனாகவும், பொய்யனாகவும், ஏழைகளைக் கொடுமைப்படுத்துபவனாகவும், பெருமை பிடித்தவனாகவும் ஆகிவிடுவான். இவை எதுவுமே அவர்களின் மதநெறிகளுக்குப் புறம்பானதாக இருக்காது. சைவம் என்பதே பிராமணர்களால் உருவாக்கப்பட்டது என்றும், அதில் மதிப்புடைய விஷயம் எதுவுமே இல்லை என்றும், கிறிஸ்தவத்துக்கு இணையாக அதில் எதுவுமே இல்லை என்றும் மிஷனரிகள் கூறினார்கள். சைவத்தின்மீதான இத்தகைய தாக்குதல்கள், மிஷனரிகள் எதிர்பார்த்ததற்கு நேர்மாறான விளைவுகளையே உருவாக்கியது. இந்தத் தாக்குதல்களை வெகு லாகவமாக எதிர்த்து இலங்கையின் தமிழ்ச் சைவ அறிஞர்கள் பதிலடி கொடுத்தார்கள். குறிப்பாக, விவிலியத்தை ஆழ்ந்து கற்றிருந்த ஆறுமுக நாவலர், சைவத்தின் பெருமையையும் அத்துடன் ஒப்பிடுகையில் அவருடைய பார்வையில் விவிலியத்தின் போதாமையையும் எடுத்துக்காட்டினர்"

அண்மைக்காலமாகச் சிலர் வெளிப்படையாகவே பரப்பிவரும் கருத்துக்களில் ஒன்று ராஜராஜசோழன் பிராமணர் அடிமை என்று. இதைக் கூறுபவர்கள் சாதியை வைத்து அரசியல் பேசும் அறிவிலிகள் மற்றும் முற்போக்கு வேஷம் போடும் அரசியல் சரிநிலை ஆட்கள் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. பேரரசும் பெருந்தத்துவமும் என்ற க.கைலாசபதியின் கட்டுரையில் சோழர்காலத்தில் தோன்றிய பெருந்தத்துவமான சைவசித்தாந்தத்தின் தோற்றம் பற்றி மிக விரிவாகவே எழுதியிருப்பார். பேரரசு ஒன்று தோற்றம்பெற்றால் பெருந்தத்துவமும் தோற்றம்பெறுவது இயல்பான ஒன்றேயாகும். அவற்றை வரலாற்றின்படியும் அன்றைய சமூக வழக்கத்தின்படியும்தான் அணுகமுடியுமே தவிர, அன்றைய முறைமைகளை இப்படிச் செய்திருக்கலாம் என்று வரலாற்றுப் புருஷர்களைக் குறைகூறுவது வரலாற்றுத் தெளிவின்மையில் ஒரு படிமுறையாகும். பழங்குடி மரபுகளையும் காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ்ந்தவர்களையும் ஒரு சமூகமாக ஒன்றிணைக்க சாதியும் மதமும் தேவைப்பட்டது. அதனை இன்றைய காலகட்டத்தில் வெறியாக மாற்றுவது மிகப்பெரிய தவறு. அத்துடன் சாதியை ஒழிக்கமுடியாது என்பதுதான் உண்மை. சாதி ஒழிவதற்குப் பொருளாதார முக்கியத்துவங்களும் நகர வாழ்வும் பெருகும்போது அதுவாகவே தொலைந்துபோகும். சாதி என்பது ஆழ்மனதில் உள்ள ஒரு விடயம். அது சமூகப் படிமுறைகளைக் கட்டமைத்த ஒன்று. அவற்றை விடுத்து வெறும் அரசியலுக்காகச் சாதியை ஒழிக்கிறேன் என்று கூச்சலிடுவது சாத்தியமற்ற ஒன்றாகவே கருதமுடியும். சாதியம் பற்றிய பிரச்சனைகளைப் பெரிதாக மாற்றியதில் ஆங்கிலேயரின் பங்கு அளவுக்கு அதிகமானது. இலங்கையின் கல்வியியலாளர் மனோன்மணி சண்முகதாஸ் எழுதிய சாதியும் துடக்கும் என்ற நூலில் இதுபற்றி மிகத் தெளிவாகவே குறிப்பிட்டிருப்பார். கிறிஸ்த்தவம் என்பது பரப்புவதற்காக உண்டாக்கப்பட்ட மதம். அவர்களது நோக்கம் உலகின் திசைகளெங்கும் இஸ்லாத்துடன் போட்டிபோட்டு மதங்களைப் பரப்புவதாகும். இதில் பழங்குடி மரபுகளும் மதங்களும் பாதிப்பைச் சந்திக்கின்றன என்பதே உண்மை. அதனால் மரபார்ந்த மதத் தேசியவாதிகள் யுத்தத்தை நோக்கி நகர்கின்றனர். இதுதான் இலங்கையிலும் நடந்தது. இன்று உலகம் பூராகவும் நடந்து வருகிறது.

இலங்கையின் இன முரண்பாடுகள் பற்றி உடையும் இந்தியா நூலில் தரப்பட்டுள்ள ஒரு நீளமான விளக்கம் இது:

"பிரம்மஞான சபை பௌத்தம், ஆரியர்களை கிறிஸ்தவ மதப் பிரசாரத்துக்கு எதிராகப் பயன்படுத்துகிறது தென்னிந்தியாவில் திராவிட இன அடையாளத்தை உருவாக்கியதற்கு இணையாக இலங்கையிலும் ஒரு தகிடுதத்த வேலை நடந்துகொண்டிருந்தது. அங்கு ஒரு புதிய இன அடையாளம் உருவாக்கப்பட்டு வந்துகொண்டிருந்தது. இந்த அடையாளம் பௌத்த மதத்தையும், சிங்கள மொழியையும், ஆரிய இனத்தையும் இணைத்து உருவாக்கப்பட்டு வந்தது.

ஏற்கெனவே 1856-ல் ராபர்ட் கால்டுவெல் தனது ஒப்பிலக்கணத்தில் சிங்கள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் நேரடியான தொடர்பு கிடையாது என வாதிட்டிருந்தார். 1866-ல் ஜேம்ஸ் டி’ஆல்விஸ் (James D'Alwiss) என்கிற மற்றொரு அறிஞர், சிங்கள மொழி ‘ஆரிய அல்லது வட இந்திய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது; திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பங்களிலிருந்து மாறுபட்டது’ எனக் கூறினார். அதே நேரத்தில் இலங்கையின் முதல் சிங்கள மொழித் தேசியவாதி எனக் கருதப்படத் தக்க டி’ஆல்விஸ், சிங்களம் சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்ட மொழி என்பதை மறுத்தார். மாறாக சிங்களமும் சமஸ்கிருதமும் ஒரு பொது மூதாதை இனத்திலிருந்து வந்திருக்கவேண்டும் என்றார்.

 அதைப் போலவே அவர் இந்திய நிலப்பரப்பின் மக்களுக்கும் இலங்கைத் தீவில் வாழும் மக்களுக்கும் எவ்விதத் தொடர்பையும் மறுத்தார். பிரிட்டிஷார், அவர்கள் பங்குக்கு, இலங்கை மக்கள் கணக்கெடுப்பின்போது, அடையாளத்துக்கு இனப்பாகுபாடுகளைப் பயன்படுத்துமாறு மக்களைக் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால் மேற்கத்திய அறிஞர்களிடையேகூட இப்படி சிங்கள மொழியையும் தமிழையும் இரு இனத்துடன் அடையாளப்படுத்துவதற்கு எதிர்ப்பு இருந்தது. கிறிஸ்டியன் லாஸென், ஜேம்ஸ் எமர்ஸன் டென்னண்ட் (Christian Lassen and James Emerson Tennent) போன்றவர்கள் தமிழையும் சிங்களத்தையும் ஒரே மொழிக் குடும்பமாக வகைப்படுத்தினார்கள். சிங்கள மொழி வல்லுனரான டபிள்யூ.எஃப். குணவர்த்தன, 1918-லேயே தமிழ் மொழிக்கும் சிங்கள மொழிக்கும் இருக்கும் உறவுகளை எடுத்துக் கூறினார்.

ஆனால் மாக்ஸ் முல்லர், கால்டுவெல் பாசறைதான் சிங்கள-தமிழ் அடையாள வேறுபாடுகளை இரு வேறு மொழிக் குடும்பங்களையும் இருவேறு இனங்களையும் சார்ந்ததாக வளர்த்தெடுப்பதில் வெற்றி பெற்றது. பின்னர் இலங்கையில் இரு மக்கள் குழுக்களிடையேயும் மிக மோசமான பிரிவினை ஏற்படுவதற்கு இதுவே முக்கிய காரணியாக இருந்தது. பிரம்மஞான சபைக் கோட்பாடுகளால் மிகவும் தாக்கமடைந்த ஒரு சிங்கள பௌத்தத் துறவி, அனகாரிக தர்மபாலா. இலங்கையின் பொதுப்புத்தியில் சிங்கள-பௌத்த-ஆரிய அடையாளத்தை உருவாக்கி வேரூன்ற வைத்ததில் இவருடைய பங்கு முக்கியமானது. 1886-ல் பிரம்மஞான சபைத் தலைவர்களான சி.டபிள்யூ. லெட்பீட்டரும் ஹெ.எஸ். ஆல்காட்டும் (C.W. Leadbeater and H.S. Olcott) இலங்கைக்குச் சென்றபோது, தர்மபாலா அவர்களுக்குத் துணையாக இருந்தார்.

டச்சு நாட்டைச் சேர்ந்த ஆல்ப்ரெட் எர்னஸ்ட் புல்ட்ஜென்ஸ் (Alfred Ernst Buultjens) என்பவர் பௌத்த மதத்துக்கு மாறி இலங்கையில் பயணம் செய்தார். படித்த வெள்ளைக்காரரே பௌத்தராக மதம் மாறி நம் மதத்துக்காகப் பிரசாரம் செய்கிறாரே என்பதால், இலங்கை பௌத்தர்கள் அவரைப் பெரிதும் மதித்தனர். 1897-ல் புல்ட்ஜென்ஸ் ஒரு பௌத்த மதப் பத்திரிகையைத் தொடங்கினார். அதன் பெயர் ‘ஆரிய சிங்களன்’ (The Aryan Singhales) என்பதாகும்.

இது படித்த சிங்கள வர்க்கத்தினர் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மற்றொரு பிரம்மஞான சபை ஐரோப்பியரான டாலி, சிங்களவர்களை, புல்ட்ஜென்ஸைப் பின்பற்றி பௌத்தப் புத்தெழுச்சியை ஏற்படுத்தச் சொன்னார். பௌத்தம் கிறிஸ்தவத்தைக் காட்டிலும் பகுத்தறிவுக்கு உகந்தது என்றார். புல்ட்ஜென்ஸ், பாலி சூத்திரங்களின் மொழிபெயர்ப்பின்மூலம் புத்தரை மேற்குக்குச் சரியான லட்சியம் என முன்வைத்தார். காலனியம் உருவாக்கிய இன அடையாளங்களின் மோதல்: ஆரிய - பௌத்த - சிங்களவர் - எதிர் - திராவிட - சைவ - தமிழர் கிறிஸ்தவ மிஷனரிகளின் மதமாற்ற வேலைகளுக்கு எதிரான முயற்சியில் இலங்கையின் பௌத்தம் தன்னை ஒரு மதிப்புவாய்ந்த தேசிய மதமாக வடிவமைத்துக்கொண்டது. கணநாத் ஒபயசேகர (Gananth Obeysekere) விளக்குகிறார்: இலங்கையின் (பௌத்த) துறவிகளும் மற்ற படித்த சாதாரண மக்களும், மேற்கத்தியர்கள் பௌத்தத்துக்கு அளித்த விளக்கங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டனர்.

 புராட்டஸ்டண்ட், கத்தோலிக்க மதமாற்றிகளால் குறிவைக்கப்பட்டிருந்ததால், சிங்களவர்களுக்கு மேற்கத்தியர்களின் பௌத்த ஆதரவு பெரும் உதவியாக இருந்தது. விரைவில், இலங்கை அறிஞர்கள் மேற்கத்திய வழிமுறைகளால் பெரிதும் தாக்கமடைந்து இன்று நிலவும் பௌத்தம் குறித்த தேசியப் பார்வையை வடிவமைத்தனர். வட்டாரப் பண்பாடு, சடங்கு முறைகள், பக்திப் பண்பாடு, தொன்மங்கள் ஆகியவை எல்லாம் இடைச்செருகல்கள் என நீக்கப்பட்டு, ஒரு தூய பௌத்தம் உருவானது. நாட்டார் நம்பிக்கைகள் எல்லாம், சாதாரண, படிப்பறிவற்ற எளிய மக்களின் ஆவி வழிபாட்டு முறைகள் என நீக்கப்பட்டன.

 இவ்வாறு, மேற்கின் பார்வையில் மதிக்கப்படவேண்டும் என்பதற்காக ஒரு ‘தூய’ பௌத்தம் உருவாக்கப்பட்டது. அதே நேரத்தில் அதற்கு ஒரு சுய அடையாளத்தை உருவாக்க ‘மாற்றான்’ எனக் கருதத்தக்க எதிரிகளும் தேவைப்பட்டார்கள். அத்தகைய எதிரிகளே தமிழர்கள். ஆரியர்களைவிடத் தாழ்ந்தவர்கள். ஆரியர் அல்லாதவர்கள். இந்தப் பார்வையைப் பெரிதும் பரப்பியவர்களில் முதன்மையானவர் தர்மபாலாதான். அவர் தமிழர்களை ‘ஹாதி திமாலு’ (சேற்றுத் தமிழர்கள்) என அழைக்க ஆரம்பித்தார்.

1880-ல் ப்ளாவட்ஸ்கி இலங்கைத் தமிழர்களை ஆப்பிரிக்கர்களுடன் இணைத்து வகைப்படுத்தியிருந்தார். அவரது பார்வையிலும் தமிழர்கள் ஆரியர்களைவிடக் கீழானவர்கள். ப்ளாவட்ஸ்கியின் வார்த்தைகளில்: இத்தகைய மானுட வகையறாக்களுக்கு, எத்தனை தலைமுறைகள் ஆனாலும், எத்தனை பயிற்சி அளித்தாலும், அவர்களை ஆரியர்கள், செமிட்டிக்குகள், துரானியர்கள் ஆகியோரின் நிலைக்கு உயர்த்தவே முடியாது. இத்தகைய கருத்தியல் தொடக்கங்களிலிருந்துதான், மெதுவாக மக்களிடையே வளர்ந்த கசப்புணர்ச்சி இலங்கையை முப்பதாண்டுகள் மிக மோசமான இனவாதப் போரின் களமாக மாற்றியது. 80,000 உயிர்களைப் பலி கொண்டது. 9,00,000 மக்களைப் புலம் பெயரச் செய்தது. உலக ஆயுதச் சந்தைகளில் ஏதோ ஆயுத உற்பத்தி முதலாளிகளுக்குப் பெரும் லாபம் ஈட்டிக்கொடுத்தது. 2008-ல் சர்வதேச அமைதிக்கான கார்னெகி அமைப்பு (Carnegie Endowment for International Peace) எந்த நாடுகள் எல்லாம் தோற்றுவிட்ட அரசுகளாக, நிர்வாகம் முழுமையாகச் சீர்குலைந்துவிடும் அபாயம் இருக்கும் நாடுகளாகக் கருதப்பட வேண்டும் என ஆராய்ச்சி செய்தபோது அத்தகைய அபாயத்தில் இருக்கும் முதல் இருபது நாடுகளில் ஒன்றாக இலங்கையும் இருந்தது. 2009-ல் இன மோதல் மீண்டும் உக்கிரமாக வெடித்து, போர் தொடங்கியது. 20,000 குடிமக்கள் கொல்லப்பட்டனர்.

இன்று தனித் தமிழ் ஈழ அரசை உருவாக்க நினைத்த தலைவர், இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டுவிட்டார். ஆனால் மொழியியல் ஆராய்ச்சிகளும், திரிக்கப்பட்ட வரலாறுகளும், உருவாக்கப்பட்ட அடையாளங்களும் வளர்த்த ஐயங்கள், கோபங்கள், ஆழமான காயங்கள் மக்களிடையே கனன்றுகொண்டிருக்கின்றன. மேற்கத்திய இந்தியவியல் விட்டுச் சென்றிருக்கும் ஒரு பரிசு இது. ஆனால் இப்படிப்பட்ட கதிக்கு ஆளானதில் இலங்கை மட்டும் தனி நாடல்ல. பிற்சேர்க்கை-இ, இதே போன்றதொரு சம்பவக் கோர்வை ருவாண்டாவில் இனப்படுகொலைக்கு இட்டுச்சென்றதை விளக்கும். காலனியாதிக்கம் உருவாக்கிய பாகுபாடுகள், கேள்விகள் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அவை உள்நாட்டுப் போர்களாகப் பரிணமிக்கலாம்.

இலங்கையிலும் ருவாண்டாவிலும் இவைதான் நடந்தேறின. பிளவுபடுத்தப்பட்ட மக்கள் சமூகங்களை, இனப்படுகொலைவரை கொண்டுபோகச் செய்ய முடியும். இப்போர்களும் இனப்படுகொலைகளுமே, மேற்கத்திய நாடுகள் மீண்டும் இந்த மூன்றாம் உலக அல்லது வளரும் நாடுகளின் விஷயங்களில் தலையிட வழி வகுக்க முடியும். மனிதாபிமானத்தின் பெயராலேயே இந்தத் தலையீடுகளை மேற்கத்திய வல்லரசுகள் செய்ய முடியும். இந்தியாவிலும், சுயநல நோக்கத்துடன், இத்தகைய உள்நாட்டு மக்கள் பிளவுகள் உருவாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்படுகின்றன. அவை சர்வதேசச் சக்திகளுடன் பின்னிப் பிணைந்து செயல்படுகின்றன. இவற்றை இந்நூலின் இறுதிப்பகுதியில் காணப் போகிறோம்"
இந்த நூல் முக்காற்பங்கு இந்தியப் பிரிவினை பற்றியே பேசியுள்ளது. இந்நூலை இலங்கையிலுள்ளவர்களும் வாசிக்க வேண்டிய தேவை இருப்பதனால் இலங்கையை முன்வைத்து சிறு குறிப்பாக எழுதியுள்ளேன். அத்துடன் அண்மைய தூத்துக்குடி மக்கள் போராட்டத்தை வன்முறையாக மாற்றியதில் கிறிஸ்த்தவ மிசனரிகளின் செல்வாக்கு அதிகம் இருப்பதாகக் கருத்துக்கள் வந்தவண்ணமுள்ளன. இதுபற்றியும் விரிவாக ஆராயப்படவேண்டும்.

(தொடரும்)

00


Comments

Popular Posts