போகன் சங்கரின் கண்ணாடி போட்ட பூனைக்குட்டிகள் 02


பெண் ஒரு சமூகத்தின் இனப்பெருக்கத்துக்குப் பெரிதும் பங்காற்றுபவள். இது வெறுமனே இனப்பெருக்கத்துக்கு என்ற கருத்தை இங்கே முன்வைக்கவில்லை. இங்கு கவிதை பற்றி உரையாடுகையில் சில ஆதாயங்கள் விடுபட்டே பேசப்படும். போகனின் கவிதையைப் பற்றிப் பேசும் போது பல இடங்களில் பெண்கள் பற்றி மலினமாக எழுதுகிறார் என்ற வாதத்தைச் சிலர் முன்வைத்துள்ளனர். அது அவர்களது வாசிப்பில் உள்ள குறைபாடு என்றே கூறவேண்டும். அல்லது கவிதையை மேலோட்டமாகப் புரிந்து கொண்டதால் உருவான அதிருப்தி என்றும் கூறலாம்.

"கால்களுக்கு நடுவே
ஒரு சிறிய முரசுபோல
துடித்த சிசுவை
ஒரு கிழங்கைக் கெல்லி எறிவது போல
ஒரு பெரிய இடுக்கியைக் கொண்டு
பிடுங்கி எறிகிறாள்
டாக்டர் மாலதி
ஆண்குழந்தை என்று
வெளியே நிற்பவர்களிடம் சொல்கிறாள்
அவளுக்கு ஒரு புன்னகையும்
இனிப்பும் தரப்படுகிறது.

வெளியே வந்ததும்
வீட்டிலிருந்து வந்த ஒரு அழைப்புக்கு
ஆத்திரமாய் எதுவோ போனில் பேசுகிறாள்
இறுகிய  தாடையுடன் அவள்
காரை எடுத்த வேகம் கண்டு
புறாக்கள் சிதறி ஓடுகின்றன.
தூமைக்கால யோனி போல
சிவந்த அந்த அதிகாலையில்
அவள் மிக வேகமாகச் சென்று
அந்த பெரிய வாகனத்தின்
பின்னால் மோதுகிறாள்.

அதீத களைப்பில்
அவள் உறங்கிவிட்டாள் என்றும்
அது ஒரு தற்கொலை என்றும்
சிலர் சொல்கிறார்கள்
புறப்பட்ட இடத்துக்கே
வேறொரு வண்டியில்
வேறொரு அறைக்கு
அவள் பொதியப்பட்டு வந்து சேர்கிறாள்.
அவள் பயன்படுத்திய இடுக்கியை விட
பெரிய இடுக்கி ஒன்று
அவளை நோக்கி வருகிறது.

வெளியே புன்னகைகளும் இனிப்புகளும்
இன்னமும் விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன"



போகனின் எழுத்துக்களில் என்னை மிகவும் பாதித்த கவிதைகளில் இதுவும் ஒன்று. இடுக்கி என்பது என்ன நன்றாக நம் எல்லோருக்கும் புரிய குறடு என்று கூறலாம். அதனை மருத்துவ உலகில் பொருத்திப் பார்க்கவேண்டும். தொப்புள் கொடியை அறுப்பதற்கும் பிரேதப் பரிசோதனையைச் செய்வதற்கும் அதனைப் பாவிக்கின்றனர். இங்கே மாலதி என்கிற வைத்தியர் பெண்ணொருவருக்குப் பிரசவம் மேற்கொள்கிறார். அங்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. புன்னகையும் இனிப்பும் வழங்கிக் கொண்டாடுகின்றனர். பின்பு அவசரமாக ஒரு தொலைபேசி வந்ததும் கோபத்துடன் வீட்டிலிருந்து வெளியேறுகிறார்.ஏதேச்சயாக விபத்தில் சிக்கி மரணமடைகிறாள்.

இந்தக் கவிதையில் இரண்டு முக்கியமான விடயங்கள் வெளிப்படுகின்றன.

அவள் வீட்டைவிட்டு வெளியேறும்போது "தூமைக்கால யோனி போல சிவந்த அந்த அதிகாலையில்" என்றுதான் பொழுதை வர்ணிக்கிறார் கவிஞர். உண்மையில் காலையை வர்ணிக்க எத்தனையோ வழிகள் இருந்தும் ஒரு பெண்ணின் கோபத்துடன் இணைந்துள்ள நேரத்தைத் தூமைக்கால யோனி என்று பெண்ணுறுப்புடன் கூறியது கவிதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே கருதமுடியும். அவள் வேகமாகச் செல்வதிலும் ஒரு தெளிவு இருந்துள்ளது என்றும் இதனைக் கருதமுடியும்.

இரண்டாவது இடுக்கி என்ற குறியீடு. பிறப்பின்போது தொப்புள்க்கொடியை அறுப்பதற்க்கும் இறந்த பிறகு போஸ்ட் மோர்டம் செய்வதற்கும் அதனை ஒரு புறக்கருவியாக உபயோகிக்கிறோம். இங்கு கவிஞர் அந்தப் புறக்குறியீட்டை அகவயப்படுத்துகிறார். புன்னகைகளும் இனிப்பும்தான் அந்த அகவயத் தன்மையைத் தீர்மானிக்கின்றது. ஆண்குழந்தை பிறந்த போதும் இனிப்பு வழங்கப்படுகிறது. மருத்துவர் இறந்த பிறகும் பரிமாறப்படுகிறது . புன்னகை நீடிக்கிறது. பிறப்புக்குப் பயன்பட்ட இடுக்கியும் இறப்புக்குப் பிறகு உபயோகிக்கப்படும் இடுக்கியும் புறவயத்தை நமக்கு அளிக்கின்றன. ஆனால் புன்னகையும் இனிப்புகளும் அதனை அகவயப்படுத்துகிறது. ஆழ்மனதில் பெரும் கிலேசத்தை ஏற்படுத்துகிறது. மேலும் உயிர்கள் பிறப்பதையே கவிஞர் விரும்புகிறார். அதனால்தான் இறப்பின் தருணத்திலும் அவரால் புன்னகைகளையும் இனிப்புகளையும் பரிமாறமுடிகிறது. சிருஷ்டி கீதம் என்று ரிக் வேத பாடலொன்று உள்ளது.
"அதை யார் சிருஷ்டித்தார்கள். அல்லது சிருஷ்டிக்கவில்லை. வானில் உறையும் அதுவே அறியும் அல்லது அதுவுமறியாது" இது வேதகாலத்தில் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்று. இந்த சிருஷ்டியைச் சமகாலத்தில் அக-புற நோக்கில் வலியுறுத்தும் கவிதைகளைச் சென்றடைவது கடினம். போகனின் இதுபோன்ற கவிதைகளை அதற்குள் வரையறுக்க முடியும். இதிலுள்ள மிக ஆரோக்கியமான விடயம் என்னவென்றால் அனைத்தும் நவீன கவிதைக்கான திறப்பினை அளிப்பவையாக உள்ளன.

00



இதுவரை நடந்திராத, நடக்காத காட்சியைக் கவிதையாக்கி வாசகரைப் பரவசப்படுத்துவது அல்லது உண்மையென்று நம்பவைத்து அத்திசை நோக்கிச் சிந்திக்க வைப்பது சமகால நவீன கவிதைகளின் போக்குகளில் ஒன்றாகும். அதில் பெண்ணைப் பெரும் குறியீடாக்குவதும் அவள் உறுப்புகளைத் தீவிரமான பாவனைக்கு உட்படுத்துவதும்  இல்லாத ஒரு விடயத்தை முன்னிறுத்தி அக்கவிதையுடன் கற்பனையுலகிற்குள் (Fantasy World) வாசகனைப் பிரவேசிக்க வைப்பதுவும் மிகச்சிறந்த கவிதை கூறுமுறை என்றுதான் கூறவேண்டும். போகன் சங்கரின் கவிதைகளில் இந்தப் போக்கினை அவதானிக்க முடியும். பௌராணிக மரபுகளையும் நவீன ஆங்கில சினிமா யுக்திகளையும் கவிதைக்குள் ஈடுபடுத்தும்போது இலக்கியத்தன்மையற்ற வறட்சியான பெறுபேறுகளே கிடைக்கும். ஆனால் போகனின் கவிதைகள் அதற்கு விதிவிலக்கானவை. இலக்கியத்துக்கான அழகுணர்வுடன் கற்பனையுலகில் பிரவேசிக்க வைக்கும் போகனின் கவிதைகள் தமிழின் நவீன போக்குகளுக்கு உத்வேகத்தைத் தரக்கூடியவை.

"ஒற்றைக் கொம்பு
அபூர்வ மிருகத்தின்
மேலேறி வரும் அழகிய பெண்ணின்
உதட்டைக் கொத்த வரும் தூரதேசப்
பறவைகளைக் கணக்கிடும்
கருவி ஒன்றை
அவர் நீண்ட நாட்களாக
செய்துகொண்டிருக்கிறார்
அதை அவள் உதட்டில்
பொருத்தும்போதெல்லாம்
கருவியும் பித்தேறி
அவள் உதட்டை உண்ண முயல்வதுதான்
அதில் முக்கியமான பிரச்சனை"

தமிழ் நாட்டில் வேடந்தாங்கல் என்றொரு பறவைகள் சரணாலயம் இருப்பதாகக் கேள்விப்பட்டுள்ளேன். கண்டம் தாண்டிப் பல ஆயிரம் மைல்களிலிருந்து பறந்து வரும் பறவைகள் அங்கு தங்கிச் செல்லும் என்று சொல்வார்கள். அதே போல புதுப் புதுப் பறவைகளை கோடைகாலங்களிலும் மாரிமழை ஓய்ந்த வருடத் தொடக்கத்திலும் எனது பகுதிகளில் கண்டுள்ளேன். அவை இலங்கைக்கு உரித்தானவையல்ல என்பது அதன் உருவமைப்பிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. இங்கே ஒன்றும் இரண்டுமாக இதுவரை கண்டிராத பறவைகள் வந்து செல்லும். ஆனால் வேடந்தாங்கலில் ஆயிரக்கணக்கில் பறவைகள் வந்தமரும் என்பார்கள். அதுபோலத்தான் போகன் கூறும் இக்கவிதையும். ஒரு பெண்ணின் உதடு வேடந்தாங்கலாகவும் அதில் பொருத்தப்பட்ட கருவி சரணாலயமாகவும் இருக்கிறது. அதன் வாசகர்கள் சரணாலயத்தையும் பறவையையும் ஒருசேர ரசிப்பவர்களாக இருந்தால் இக்கவிதையின் Fantasy இலக்கியத்துடன் பொருத்திப்பார்க்க முடியும்.

00

மிருகத்தைச் சாடைமாடையாக விமர்சிப்பது போல் மனிதர்களின் சமகால மாய்மாலங்களை நையாண்டி செய்வதில் போகனின் கவிதைகள் கைதேர்ந்தவை. தியானத்திலிருக்கும் வேங்கையிடமிருந்து பிரிந்து சென்று மேய்கின்ற வேங்கையின் துண்டுச் சதையைக் கண்டவர்கள் வேங்கையின் கருணையைப் பாராட்டுகிறார்கள். ஆனால் அந்த வேங்கைக்குள் இருக்கும் குரூரம் எப்போதும் மறையாத ஒன்று.

"தன் துண்டுச் சதை
தன்னைத்தாண்டி
மேயப் போவதை
அரைக் கண்ணால் கவனித்தபடி
தியானத்தில் ஆழ்ந்திருக்கிறது
வேங்கை.

கருணை என்றார் சிலர்
கைகுலுக்கிப் பதாகை அளித்தார்
தன் கொடுவாய்ப் பற்கள் தெரியாமல்
பரிசளிக்கையில் புன்னகைப்பது
எப்படி என்று பரிசோதித்துப்
பார்த்துக்கொண்டிருக்கிறது இப்போது"

எவ்வளவுதான் வெளிவேசங்களால் தன்னையொருவர் உத்தமர் என்றும் பக்திமான் என்றும் சொல்லிக்கொண்டாலும் அவருக்குள் இருக்கின்ற அந்த அடிப்படையான வாதங்கள் மாற்றம் பெறாதவை. எனக்குத் தெரிந்து எங்கள் பிரதேசங்களில் சாதியொழிப்பு சாதி மறுப்பு என்று சொல்லிக்கொண்டு பலர் அரசியல் கட்சிகளில் கட்சி அரசியலுக்காகக் கொள்கைகளைப் பரப்புவர். இடதுசாரிகள் என்று தம்மை அடையாளம்காட்டி முற்போக்கு வேடம் போடுவார்கள். ஆனால் தன்னுடைய ஆழமான நிலையில் சாதியத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அல்லது அந்த வெறியை விட்டு வரமாட்டார்கள். சாதியொழிப்புப் பேசும் பலர்தான் இங்கே சாதிய வெறியர்களாகவும் உள்ளனர். கூடியபட்சம் சாதியமறுப்புத் திருமணம் கூடச் செய்யமாட்டார்கள். "பரிசோதித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறது" என்பது இவர்களைக் குறிப்பதாகவே எனது பார்வையில் கருதுகிறேன். இப்படியான விடயங்களிலும் பரிசோதனைகளைச் செய்பவர்களை நம்பி அவர்களைக் கருணையுள்ளவர்கள் என்று கற்பிதம் செய்துகொள்ளும் பாமரர்கள் நம்மிடையே வாழ்கிறார்கள். அவர்கள்தான் இன்றும் பதாகை தூக்குபவர்கள். மேயப் போன அந்தத் தசைத்துண்டை நம்பும் இவர்கள் எப்போதும் தம்மை மேய்ந்துகொண்டிருக்கும்  குரூரப் புலியை அடையாளம் காணமாட்டார்கள். இந்தக் கவிதையின் அரசியலுக்கு வெவ்வேறு முகங்கள் இருக்கலாம். ஆனால் எனது பார்வையில் இதுதான் அதற்கான சமூகமுகம் என்று கருதுகிறேன்.

00

மரணம் பயமூட்டுவதாகவும், எங்களின் அடுத்த சம்பவங்கள் மீது பாதிப்பைச் செலுத்துவதாகவும் நம்மைக் கனவிலும் இருளிலும் தொந்தரவு செய்வதாகவுமே இருக்கும். பல சமயங்களில் நெருக்கமானவரின் மரணம் பிரக்ஞையற்ற ஒருவனாகவும் மாற்றக்கூடியது. ஆனால் அந்த மரணத்தைக் கவிதைகளில் அழகியலுடன் அணுகுவது எப்படி?. அந்த மரணத்துக்கு இதுவரையும் சொல்லப்பட்ட கொடூரமான பக்கங்களை விடுத்து இந்த யுகத்துக்கான புதிய பார்வையை முன்வைப்பது எப்படி?. எல்லா மரணத்தையும் கண்ணீருடன் அணுகும் சாதாரணர்களுக்கு மத்தியில் அதற்குள் அழகுணர்வுடனான கற்பனையை வரையறுப்பது எப்படி? இதுபோன்ற கேள்விகள் எப்போதோ எழுந்துவிட்டன. அவையனைத்தும் தத்துவார்த்தமாகவும் வரட்டு நம்பிக்கைகளைத் திணிப்பதாகவுமே எம்மிடையே இருந்தது. ஆனால் கவித்துவமாக இவற்றை முன்வைத்தால் அதற்கான எதிர்வினையை ரசனை அடிப்படையில் அணுகலாம். தத்துவார்த்த ரீதியில் எப்படி நோக்குவது?.

"இருபுறமும் நதிக் கிளைகள் போல்
கூந்தல் பரப்பி இடைமணல் போல
நடுவகிடு கிழித்து மிக அழகான சிரிப்புடன்
ஒரு குமருப் பெண்ணின் தலை
இன்று காலை முற்றத்தில் கிடந்தது.

இவ்வளவு நேரான வகிடெடுத்த
தலையை நான் இதுவரை கண்டதேயில்லை"

இதில் மரணம் ஒரு செய்தியாக மறைந்து கொள்கிறது. ஆனால் அதற்குள் ஒளிந்துள்ள அழகியல் உயிராக வெளிப்படுகிறது. முற்றத்தில் கிடக்கும் பெண்ணின் தலையைப் பற்றியும் அதன் அழகுணர்வு பற்றியும் பேசுவது என்பது நிதானமான படைப்பூக்கத்தில் மட்டுமே சாத்தியமான ஒன்று. மாறாக அந்த மரணத்தைப் போட்டுத் தேய்ப்பது பழமைவாத நம்பிக்கை.   நிச்சயமாக இது ஒரு நவீன கவிதையின் எச்சங்களில் ஒன்றாகவே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

தமிழ்க் கவிதைகளை மேலைத் தத்துவங்களுடன் முற்றாக இணைத்து வாசிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் அது வலிந்து மேற்கொள்ளப்படும் இலக்கியச் செயற்பாடுகளில் ஒன்றாகவே இருக்கும். அதற்குப் பின்னால் உடனடியாகவே பிரபலமடைவதற்கான விடயங்கள் பதுங்கியிருக்கும்  என்பதை தமிழில் வரும் ஏராளமான கவிதை விமர்சனங்களை வாசித்துப் பார்த்தது அறிந்து கொள்ளலாம். இது சமகாலத்தில் சலிப்பை ஏற்படுத்தும் ஒன்றாகவே உணர்கிறேன். இந்தக் கவிதையின் தத்துவார்த்த நோக்கினை அதன் அழகியலில் இருந்துதான் தேடவேண்டும். அதற்கு முன்பாக மரணத்தின் இருபக்கங்களை நாம் நமது மரபிலிருந்து அறிந்து கொள்ளவேண்டும். மாறாகத் திணிக்கப்பட்ட ஒரு வறட்டுக் கருத்திலிருந்து அல்ல.

00

                                                                     Pablo Neruda

பெரும் சிக்கல்களுக்கும் கஷ்ரங்களுக்கும் மத்தியில் நன்றாகக் கவிதையெழுதி பெரும் எழுத்தாளனாக உருமாறிய ஒருவனை அவ்வளவு சீக்கிரமாகவே சமூகம் புறக்கணிக்கும்போது  அல்லது கேலி செய்யும்போது அந்த எழுத்தாளன் என்ன செய்வான். உடனடியாகவே தன் எழுத்துப் பயணத்தை விட்டுப் போய்விடுவானா?. தனது எழுத்துக்களை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்லும் விகாசங்களை மறுத்துரைப்பானா?. இலக்கியத்தின் ஆகிருதியைத் தன் துயரங்களுக்குள் சுருக்கிக் கொள்வானா?. அப்படிச் செல்பவன் எழுத்தாளனாகவோ யுக படைப்பாளியாகவோ இருக்க முடியாது. பப்லோ நெருடா என்ற கொலம்பியக் கவிஞர் நம்முன்னே  உள்ள உதாரணம். அரச படைகள் அவரைத் துரத்திய போதும் அவரது படைப்பூக்கத்துக்கு நெருக்கடிகளை வழங்கி மரணத்தை வழங்க அவர்கள் வந்தபோதும் ஓடிக்கொண்டே இருந்தார். ஓடிக்கொண்டே ஏராளம் கவிதைகளை எழுதினார். அந்தக் கவிதைகள்தான் அவருடையை படைப்புலகில் மிக உத்வேகமாக எழுதப்பட்ட படைப்புக்கள் என்று வாசிக்கும்போது நாம் அறிந்து கொள்ளலாம்.

"ஏழு குளிர்காலங்கள்
ஒரு இருட்டறையில்
இருந்தபிறகே
அவன் ஒரு கவியானான்

ஏழு இரவுகளில்
அவனை அறிந்ததாக
சொல்லிக்கொள்ளும் மனிதர்களை
அவன் புறத்தே வைக்கிறான்
ஒரு கவிதையில்லாத சொல்லென"

ஒரு அறையில் பல காலங்கள் இருந்து கவிஞன் ஆனவனை, பலகாலங்களில்தான் வெறும் இரவுகளைக் கழித்தவன் என்ற சாதாரண கருத்து வரும்போது அவன் அட்டைக்கத்திபோல அவர்களைப் பார்க்கிறான். அவர்களைக் "கவிதையில்லாத சொல்லென" கணிக்கிறான். இந்தக் கணிப்பைவிடவா அவர்களை ஒரு கவிஞன் இகழ முடியும். தனக்கான நம்பிக்கைகளைத் தான் வகுத்துக்கொள்ள முடியும். பப்லோ நெருடா உயிருக்காகப் பயந்தோடிய தெருக்களை  இல்லையென்று சொல்ல அவரது கவிதைகள் அனுமதிக்குமா?. அதைத்தான் இந்தக்கவிதையிலும் நாம் காணமுடியும்.

00



எப்போதும் ஒரே வேலையில் மூழ்கியவர்கள் எதையாவது தேடிச்சென்று பௌத்தம் அடைவார்கள். இங்கு பௌத்தம் என்பது தியானத்தின், அமைதியின், வேட்கையின் குறியீடு. அந்தத் தியானமும் அமைதியும் வேட்கையும் எவ்வகையில் கிடைக்கும் என்பதுதான் இன்றைய காலகட்டத்தின் முரண்பாடு. சிலர் ஆன்மீகத்தையும் பலர் பாலுறவையும் மேலும் சிலர் வன்முறையையும் விரும்புகின்றனர். பௌத்தம் என்பது அமைதிதானே பிறகெப்படி இதற்குள் வன்முறை வந்தது என்ற சந்தேகம் பலருக்கு எழக்கூடும். பேரரசர் அசோகர் லட்சக்கணக்கான உயிர்களைக் கொன்ற பிறகுதான் பௌத்தம் சேர்கிறார். அதுபோல தென்னாசிய நாடுகளில் உள்ள பௌத்த நாடுகள் தமது மக்கள் மீது வன்முறையைப் பிரயோகித்த பிறகே அமைதியை நிலைநாட்டுகின்றனர். இந்த வன்முறைகளுக்காக பௌத்தம் உயரிய வழியைக் களங்கப்படுத்த முடியாது. அது தனிநபர் சார்ந்த முக்தியை வழங்குவது. இங்கு நமது இடங்களில் இருப்பது குழுநிலைப்பாடு. ஆகவே பௌத்தம் போதிக்கும் தனிநபர் முக்தியை கும்பல்நிலை வன்முறை இல்லாமல் செய்துவிடுகிறது. இதனைத் தனிநபருக்கானதாக மாற்றுநிலைப்படுத்துவதில் மதம் தோற்றுப்போனது என்பதே உண்மை.

"ஒரு மழைக்குப் பிறகு
ஒரு கூடலுக்குப் பிறகு
ஒரு கவிதைக்குப் பிறகு
சூழும் அமைதியின் பரிசுத்தத்தைத்
தாங்க முடியாமல்தான் வெளியேவந்து
இந்த சேற்றைப் பூசிக் கொள்கிறேன்"

இங்கு வெளிப்படும் "சூழும் பரிசுத்தம்" என்பதைச் "சேறு" என்ற கருத்துடன் பொருத்திப் பார்க்கவேண்டும். அதீத பரிசுத்தம் எப்போதும் வன்முறைகளை நோக்கிக் கொண்டு சென்று இறுதியில் அமைதிப்படுத்துகிறது. இது மீள்சுழற்சிபோல நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

00

இத்தொகுப்புப் பற்றிய எனது முதல் கட்டுரை.

போகன் சங்கரின் கண்ணாடி போட்ட பூனைக்குட்டிகள் 01

https://www.jeyamohan.in/108748#.Wva6R7WgfIU

(போகன் சங்கரின் "தடித்த கண்ணாடி போட்ட பூனை" என்ற கவிதைத் தொகுப்பை முன்வைத்து எழுதப்படும் இந்தக் கட்டுரை மேலும் சில பாகங்கள் தொடரும்).

00



Comments

Popular Posts