மதங்களின் பன்மைத்துவம்.
அண்மையில் ஒரு கல்வியியலாளரின் மதங்கள் பற்றிய பேச்சைக் கேட்கும்போது சில விடயங்கள் தெளிவாகியது. பக்கச்சார்பான பேச்சுக்களைக் கேட்டாலும் வரலாற்று வழியான வாசிப்பு நம்மைத் தெளிவான சிந்தனையில் கொண்டுவந்து சேர்க்கும் என்பது எனது நம்பிக்கை. அதைத்தான் அவரது பேச்சு எனக்கு ஞாபகமூட்டியது. இஸ்லாம் மற்றும் கிறிஸ்த்தவம் இந்த இரண்டு மதங்களும் உலகம் முழுமைக்கும் தமது மதங்களை யார் முதலில் பரப்புவது என்று தொடர்ந்து இயங்கி வருகின்றன. அவற்றின் பரவல் இங்கு உருவான பின் அவற்றுடன் கிளைத்து வந்த மத அடிப்படைவாத எண்ணக்கருக்கள் இங்குள்ள மரபுகளுடன் எவ்வாறு ஒத்திசைந்து நடக்கவேண்டும் என்ற பிரக்ஞை அவர்களிடம் இல்லாமலே போய்விடுகிறது. உதாரணமாக சூஃபியிச மரபு தற்போது இல்லாமலே போய்க்கொண்டிருக்கிறது.
இந்த மதப் பரவலாக்கத்துக்குத் தடையாக உள்ள பழங்குடி மற்றும் பூர்வீக மரபுகளைக் கொச்சைப்படுத்தி ஆராய்ச்சி என்ற பெயரில் ஏதேனும் திரிபுகளின் துணையுடன் விரிவாக கட்டுரைகளை எழுதி தமது கொள்கைகளைப் பரப்புபவர்களாகவே இந்த இரண்டு மதநிறுவனங்களும் உள்ளன. பின்னர் அதனை உண்மை என்றும் பிரச்சாரம் மூலம் நம்ப வைப்பர். இந்தியாவில் நடப்பது இதுதான். இலங்கையில் பௌத்த மத நிறுவனமயம் மேலோங்கி இருப்பதால் இதனை பௌத்தர்களிடம் மேற்கொள்வதில் பிரச்சனைகள் உள்ளன. அப்படி இருந்தும் பல இடங்களில் இது நடந்தேறுகிறது. ஆனால் இலங்கையிலுள்ள இந்துக்களை இலகுவாக மதமாற்றிவிடும் போதனைகள் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்படுகின்றன. இதற்குக் காரணம் கடந்த கால யுத்தம். அதன் பின்னர் இலங்கைக்குள் ஊடுருவிய தன்னார்வ மத அமைப்புக்கள். குறிப்பாக கிறிஸ்த்தவ அமைப்புக்கள். உதாரணமாக எகிப்து முதற்கொண்டு வங்கதேசம் வரையான நாடுகளின் பழைய வரலாற்றை எடுத்துப் பார்த்தால் மதமாற்றத்தின் கொடூரம் புரியும். அங்கிருந்த பழங்குடி மரபுகளை அழித்து இஸ்லாமிய மதம் வெறும் மூன்று தசாப்தங்களுக்கு உள்ளாகவே அங்கே இஸ்லாத்தை முழுமையாகப் பரப்பியது. அதுபோலத்தின் கிறிஸ்த்தவமும். ஆபிரிக்க நாடுகளில் பழங்குடி மரபுகளுக்கு இடையில் குழப்பத்தை விளைவித்து அங்கு தங்களை மீட்பராகக் காட்டி மதமாற்றங்களைத் தோற்றுவித்தது. அந்த மதமாற்றத்தால் ஆபிரிக்கநாடுகளின் பழங்குடி மரபு இன்றும் பேரழிவுக்கு உள்ளாகிக் கொண்டு வருகிறது. உதாரணமாக மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளைச் சொல்லலாம்.
இந்த இரண்டு மதங்களின் மதமாற்ற எண்ணம் பல காலமாக இந்திய மற்றும் இலங்கை போன்ற பூர்வீக பழங்குடி மரபுகளைப் பின்பற்றும் நாடுகள் மீது வீழ்ந்துள்ளது. இந்து மற்றும் பௌத்தம் ஆகிய மதங்கள் இந்தியாவில் தோன்றிய இருபெரும் மதங்கள். இவை தம்மை எதிர்நிலையில் விவாதித்தே வளர்ச்சி பெற்றவை. வேதாந்தமும் பௌத்த மெய்யியலும் சமானமாகவே தம்மை எதிர்நிலையில் வைத்து விவாதித்துக் கொண்டன. இவற்றின் பரவல் எவ்வித பேரழிவையோ கட்டாயத்தை மையப்படுத்தியோ நிகழ்ந்த ஒன்றல்ல. எந்த பழங்குடிகளையும் வேரறுத்து உண்டான ஒன்றல்ல. இந்த வளர்ச்சிக்கு அந்த நாடுகளில் விரவியிருந்த பழங்குடி மரபும் ஒரு துணையாக இருந்தது என்பதே உண்மை. சைவம், வைணவம், சாக்தம், காணபத்யம், கௌமாரம், சௌரம் போன்ற மதப்பிரிவுகள் இந்துப் பெரு மதத்துக்குள் உள்ளடங்குகின்றன. இவற்றில் பழங்குடி மரபின் தாக்கம் உண்டென்பதை மறுக்க முடியாது. உதாரணமாக கதலி என்பதைச் சங்ககாலத்தில் வாழையைக் குறிக்கப் பழந்தமிழர்கள் பயன்படுத்தினார்கள். இன்று வரையும் நாம் நமது சிறுதெய்வ பெருந்தெய்வச் சடங்குகளில் கதலி வாழைப்பழத்தைத்தான் படைப்பதற்குப் பாவிக்கின்றோம். வாழையில் வேறு பழங்களைப் பாவிப்பதில்லை. இந்த இரண்டாயிரம் ஆண்டு தொடர்ச்சியில் எதுவுமே ஆழ்மனதில் மாறியிருக்கவில்லை. இப்படி இருக்கும்போது பலர் கூறும் வேடிக்கையான கருத்து தமிழர்கள் இந்துக்களல்ல என்பதாகும். இது கிறிஸ்த்தவ மதச் சார்புடைய, திராவிட கொள்கைச் சார்புடைய எழுத்தாளர்களால் உண்டாக்கப்பட்ட போலியான கருத்துக்களாகும். தமிழின் பன்மைத்துவம் என்ன என்று சொன்னால் அனைத்து மதங்களையும் தமிழுக்குள் உள்வாங்குவதாகும். பிற மொழிகளுக்கு இல்லாத ஒரு தன்மை தமிழுக்கு உண்டு. உதாரணமாக சமணம், பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்த்தவம், இந்து என்று அனைத்து மதங்களுக்குமான படைப்புக்கள் தமிழிலுள்ளன. ஆனால் மதமாற்றத்தைப் போதிக்கும் இஸ்லாம், கிறிஸ்த்தவம் இந்த இரண்டும் தங்களுடைய மேலாண்மையை தமிழுக்குள் அதீதப்படுத்துவதற்கு இந்து மதம் என்பது இல்லவே இல்லை. தமிழர்கள் இந்துக்களல்ல. என்ற மூடத்தனமான கருத்துக்கள் தொடர்ந்து போதிக்கப்படுகின்றது. இதற்குள் ஒளிந்திருப்பது மதமாற்றத்துக்கான ஒரு தூண்டுகோலாகும். அண்மைய இணைய விவாதங்களை எடுத்துப் பார்த்தால் இந்த உண்மை தெளிவாகும்.
இந்த இடத்தில் கம்பனின் ராமாயணப் பாடல் ஒன்றை ஞாபகப்படுத்த வேண்டும்.
"ஒன்றே என்னின் ஒன்றே ஆம்
பல என்று உரைக்கின் பலவே ஆம்
பல என்று உரைக்கின் பலவே ஆம்
அன்றே என்னின், அன்றே ஆம்
ஆமே என்னின் ஆமே ஆம்
இன்றே என்னின் இன்றே ஆம்
உளது என்று உரைக்கின் உளதே ஆம்
நன்றே நம்பிகுடி வாழ்க்கை நமக்கு
இங்கு என்னோ பிழைப்பு அம்மா!"
'ஒன்று என்றால் ஒன்று. ஆம் என்றால் ஆம். இல்லை என்றால் இல்லை. பல என்றால் பல. அல்ல என்றால் அல்ல. உண்டு எனில் உண்டு. இவற்றில் எது நல்லது தருமோ அதை நம்பித்தான் இந்த வாழ்க்கை போகிறது. வேறு வழியுண்டா மனிதனுக்கு' எவ்வளவு அழுத்தமான பன்மைத்துவக் கருத்து இது. யாரும் எப்படியும் கடவுளையோ ஞானத்தையோ அடையலாம். அதில் கட்டுப்பாடுகள் திணிப்புக்கள் ஏதும் இல்லை. அதுதான் மானிட மோட்சம். இதனைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரான காலத்தில் கம்பன் கூறியுள்ளான். இந்து தமிழ் ஞான மரபில் உதித்த கம்பனின் இந்த பன்மைத்துவத்தைத்தான் இந்துச் சமூகம் இன்றும் பின்பற்ற முனைகிறது. ஆனால் மதமாற்றம் என்ற பெயரில் பேரழிவுச் சித்தாந்தங்கள் முன்வைக்கப்படும் போது இந்தப் பன்மைத்துவம் அழிந்து போகிறது. அண்மைய காலங்களில் அதிகரித்துள்ள இஸ்லாமிய, கிறிஸ்த்தவ மதப் பிரச்சார மதமாற்ற நோக்குகள் இல்லாது போகும் பட்சத்தில்தான் இந்தப் பன்மைத்துவம் மேலும் வலுப்பெறும். அன்றேல் இங்கிருந்தும் பேரழிவுச் சித்தாந்தங்கள் முன்வைக்கப்படும். அதைத்தான் வரலாறு நமக்கு விட்டுச் சென்றுள்ளது. இந்தியா, இலங்கை போன்ற பழங்குடி மரபிலிருந்து உருவான பன்மைத்துவச் சமூகத்துக்குள் வேறு மதக் கலாசாரங்கள் திணிக்கப்படும் போது அதன் விளைவுகள் எப்போதும் கொடூரமாகவே இருந்துள்ளது. இதற்கு உதாரணமாக மியன்மாரைக் கூறலாம். அங்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைதூக்கியதும் பௌத்த பழங்குடி மரபார்ந்த அரசு செயற்படும் விதம் நல்லதொரு உதாரணம்.
இந்து மதம் என்ற ஒன்று இல்லை. இந்து ஞான மரபு என்பது வெறும் கற்பிதம் என்று குறிப்பிடும் மதமாற்றச் சக்திகளை அடையாளம் காணவேண்டிய கட்டாயம் தற்போதைய காலத்தில் ஏற்பட்டுள்ளது. இவற்றை விடுத்து இந்துமதம் என்பது அடக்குமுறையின் மதம் என்றும், இந்து மதம் மட்டும்தான் அதனைப் போதிக்கிறது என்று யாராவது சொல்வார்கள் என்றால் பிறமதங்கள் மீதுள்ள விமர்சனங்களையும் கொடூரமான வரலாறுகளையும் பன்மைத்துவ அழிப்பையும் கூர்ந்து வாசித்துவிட்டு வருவதுதான் நல்லதொரு விவாதமாக இருக்கும். அத்துடன் மதமாற்ற மதப்பிரச்சார நோக்கங்கள் தவிர்க்கப்படுவதும் நல்லதொரு வழியாகவே இருக்கும். இல்லாது போனால் பௌத்த அடிப்படைவாதமும் இந்துமத அடிப்படைவாதமும் அதிகரித்தபடிதான் போகும். இதனை அண்மைய சம்பவங்கள் தொடர்ந்து வெளிப்படுத்துகின்றன
தொடர்புடைய பதிவுகள்.
00
Comments
Post a Comment