தேவதச்சனும் குறுந்தொகைக் கபிலரும்


சங்க இலக்கிய நூல்களில் எனக்கு மிக நெருக்கமான நூல் என்றால் குறுந்தொகையைத் தான் கூறுவேன். இது பதினெண்மேற்கணக்கு நூல்களில் காலத்தால் முந்தியதாகக் கருதப்படுகிறது. பண்டைக்காலத் தமிழ் மரபில் காதலை இயற்கையுடன் கூட்டிய வர்ணனைகளை செய்யுள்தோறும் அவதானிக்கலாம். (இதனைத் தத்துவ ஞான மரபில் சாங்கியம் என்று கூறுவர்).  இதற்குள் வாய்மொழி நாட்டாரிலக்கியச் செல்வாக்கு இருப்பதை வெளிப்படையாகவே அறிந்து கொள்ளலாம். சில ஆராய்ச்சியாளர்கள் இதனை விரிவான கட்டுரைகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். மொழியில் இயற்கையுடன் சேர்ந்த கற்பனை பிறக்கும்போது காதலுக்கு ஒரு நயத்தைத் தருகிறது. (இது பின்நகர்ந்த பார்வை- மொழிக்கு நயத்தைத் தருவதாகக் கூறுவது கோட்பாட்டாளர்களின் நியதி) அந்த பண்டை மரபினை தற்போதைய இயந்திர வாழ்விலே வைத்துப் பார்த்தால் அழகியலுணர்வு இயல்பாகவே பிறக்கும். அழகியல் என்பது சமஸ்கிருத - பார்ப்பன  அணுகுமுறை என்று மார்க்சியர்கள் கதையளப்பதை நாம் அவதானிக்கலாம். 

உண்மையில் அழகியலுணர்வு என்பது தத்துவ நிலைப்பாடுகளையும் கோட்பாடுகளையும் கடந்த ஒன்று. அது இயல்பாகவே ஆழ்மனத்திலிருந்து வருவது. இதனை உணராதவர்கள்தான் தமிழ் மனத்திலிருந்து படைப்பாளிகள் வெளிவரவேண்டும் என்கிற மேம்போக்கான வரட்டுக் கோஷங்களை எழுப்புகின்றனர். இந்த வரட்டுக் கோஷங்களை முன்வைப்போரில் அநேகமானோர் தமிழ் நிலத்துடனும் பண்பாட்டுடனும் காலூன்றாதவர்கள். அல்லது அய்ரோப்பிய கலாசாரங்களுக்கு ஆட்பட்டவர்கள். இவர்கள்தான் வெறுமனே மதம் மட்டுமே ஜாதியை முன்னிலைப் படுத்துகிறது என்றும் அது மொழிக்குள் பரவி சமூகச் சீரழிவை ஏற்படுத்துகிறது என்றும் பிரச்சாரம் செய்கின்றனர். இந்தக் கோஷங்களில் இருக்கும் அடிப்படையான நோக்கம் மதமாற்றம் என்பதேயாகும்.

சாதியை ஒழிக்கப் போகிறேன் என்ற கோசம் ஒரு நாளும் ஜாதியை ஒழித்துவிடாது. பொருளாதார ரீதியிலும் கல்விரீதியிலும் மேலே வருவதுதான் இதற்குத் தீர்வு. மற்றபடி சாதி ஒழிப்பு என்பது வெற்றுக் கோசம்தான். கண்ணெதிரே உள்ள உதாரணமாக திராவிடக் கட்சிகளை நாம் எடுக்கலாம்.  சாதி என்ற சொல் தமிழில் இல்லை என்றார்கள். அல்லது பழந்தமிழ் இலக்கியங்களிலேயே குறிப்பிடப்படவில்லை என்று வாதிட்டார்கள். ஆனால் சங்க இலக்கிய நூலான பெரும்பாணாற்றுப்படை என்ற நூலில் சாதி பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன.

"நீங்கா யாணர் வாங்குகதிர்க்கழனி 
கடுப்புடைப் பறவைச் சாதியன்ன."

ஆங்கிலம் என்ற மொழி உருவான வரலாற்றை பலர் அறிந்திருக்கவில்லை. அந்த மொழி லத்தீனையும் கிரேக்கத்தையும் எப்படி தழுவிப் புது வடிவம் எடுத்து அந்த மொழியைப் பேசுபவர்கள் சிந்தனையாளர்கள் ஆனார்கள் என்பதையும் சற்று விரிவாக அறிந்துகொள்ள வேண்டும். இந்த எழுச்சிக்கு அவர்களிடையே அடிப்படையான மரபார்ந்த மனம்தான் துணையிருந்துள்ளது. இது பற்றிய மேலதிக விளக்கத்தை ஏ.ஜே கனகரத்னா எழுதிய மத்து என்ற நூலைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

குறுந்தொகையில் கபிலர் எழுதிய ஒர் பாடலுண்டு. அந்தப் பாடலைப் போல இருபது நூற்றாண்டுக்குப் பிறகு எழுதப்பட்ட தேவதச்சனின் கவிதையொன்றையும் இங்கே ஒப்பிடவேண்டும். இதில் இருப்பது தமிழ் சார்ந்த மனத் தொடர்புகள்தான். இவற்றைப் பூசி மெழுகி நிராகரிக்க முடியாது."செவ்வரைச் சேர்க்கை வருநடை மான்மறி
சுரைபொழி தீம்பால் ஆர மாந்திப் 
பெருவரை நீழல் உகழும் நாடன் 
கல்லினும் வலியன் - தோழி
வலியன் என்னாது மெலியுமென் நெஞ்சே!"

மலைசார்ந்த குறிஞ்சி நிலத்தை வைத்து எழுதப்பட்ட இச்செய்யுள் அந்நிலத்தின் அழகினையும் மிருகங்களின் சுதந்திரத்தையும் அன்பையும் விபரித்துவிட்டு அதுபோன்ற நிலத்துக்குத் தலைவனான காதலன் கல்நெஞ்சக் காரனாக இருப்பதாகக் காதலி புலம்புகின்றாள். அப்படி அவன் வன்நெஞ்சனாக இருந்தபோதும் காதலியால் அவனை மறக்கமுடியவில்லை. தன்னை இளைத்துக் கொள்கிறாள். என்று மிக அற்புதமான செந்தமிழ் கூட்டிச் செய்யுளை வடித்துள்ளார் கபிலர். குறுந்தொகையைப் படிக்கும்தோறும் சங்ககாலத்தின் மரவுரிமனிதக் காதலனாகிப் போகின்ற ஆக்ருதியை அக்கவிதைகள் அடிக்கடி வழங்குகின்றன. அது எப்படி இவ்வளவு இளகிய அன்பான மிருகங்கள் தமது குட்டிகளுக்குப் பரிவுடன் பால் குடுத்து அரவணைக்கின்றன. ஆனால் அந்நிலத்துத் தலைவன் காதலியை நினைக்காமல் வேற்றிடத்தில் இருக்கிறான். அந்த நிலத்தின் மிருகங்களுக்குக் கூண இயல்பாக உள்ள உணர்வு ஒரு மனிதனுக்கு இல்லாமல் போனதா என்று ஆற்றாமையால் காதலி விம்முகிறாள். அதனைத் தனது தோழிக்குக் கூறுகிறாள்.

1. வருடை மான்
2. சுரைபொழி தீம்பால்
3. கல்லினும் வலியன்

இதில் முன்னைய இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்த அன்பின் பிணைப்பைக் காட்டுவனவாகவும் பின்வந்த தலைவனைக் கடிந்து கூறும் "கல்லினும் வலியன்" என்ற சொல் அவற்றை உடைத்து நீக்குவதாகவும் நாம் அடையாளம் காணலாம். முன்னைய இரண்டும் அன்பைச் சுரப்பதற்கு மிகுதியாக இருந்தாலும் உண்மை என்னவோ இதுதான் என்று அத்தலைவனையும் அவன் குடிகொள்ளும் நிலத்தையும் குறைகூறுவதாக அமைந்திருக்கும். அசலான ஒரு பண்டைத் தமிழ்ச் சூழலின் பிரதிபதலிப்புக் கவிதை என்று இதனைக் கூறலாம். இவ்வளவு நுட்பமான கவிதைகளும் இயற்கையை ஏதோ ஒன்றுக்குப் பொறுப்புக்கூறவைக்கும் தன்மையும் சங்கக் கவிதைகளின் அடிப்படை நோக்கமாகவே இருந்துள்ளது.
தேவதச்சனின் கவிதையுலகம் பெரும்பாலும் தத்துவ அழகியலுடன் சம்பந்தப்பட்டது. அதன் பேருணர்வினை தமிழ்க் கவிதைகளில் வெளிப்படுத்துபவர்கள் மிகச் சிலரே. அப்படி வெளிப்படுத்தும் நபர்கள் அவரைப் பின் தொடர்பவர்களாகவே இருப்பர். அல்லது அதற்குத் தேவதச்சன் முன்னோடியாக இருக்கின்றார். "உலகிலேயே 
குட்டியான அணில் ஒன்றை 
உனக்கெனக் கொண்டு வந்தேன்.
பல கிளைகளிலிருந்து வாழ்வைப் பார்க்க
உனக்குச் சொல்லிக் கொடுக்குமென்று,
துவாரங்களின் ரகசியத்தை 
உன்னிடம் பேசுமென்று,

கிளைக்குக் கிளை தாவும் இடைவெளி 
பற்றி உன்னிடம் கூறுமென்று,
உன் பாராமுகம் கண்டு 
திடுக்கிட்டு கீழே விழுந்தது.
பூமியைத் துளைத்துக் 
கொண்டு சென்று விட்டது
அந்தப் பக்கம்.

நீ என்றுமே செல்லமுடியாத 
அந்தப் பக்கம்"

இதனை ஒர் காதல் கவிதையாக நாம் இங்கே அடையாளம் காணவேண்டும். தேவதச்சனை வாசிப்பவர்கள் அடையும் பிரதான சாவால்களில் ஒன்று அவருடைய கவிதைகள் எந்த வகையைச் சார்ந்தவை என்கிற இடர்பாடுதான். 

"எங்கே என்று தேடுகிறாயா 
உன் காலிடைப் பேரோடையில் 
மிதக்கிறேன் பிடித்துக்கொள்" 

என்கின்ற இவருடைய கவிதைகூட மிகச்சிறந்த காதல் காட்சியை முன்னிறுத்துவதுதான். ஆனால் அவரது கவிதைகளில் மறைந்திருக்கும் தத்துவார்த்த முகம் அதனை வெளியே எடுத்துவரத் தடுக்கின்றது. ஆரம்பத்தில் குறிப்பிட்ட "உலகிலேயே குட்டியான...." என்கிற கவிதை சிறந்த காதல் கவிதை என்பதைத் தாண்டி அதற்குள் இருக்கும் தத்துவ முகம் காதல் கவிதை என்று வெளிப்படையாக பிரஸ்த்தாபிக்கத் தடையாக அமைகின்றது.

1. பல கிளைகளிலிருந்து வாழ்வைப் பார்த்தல்..
2. துவாரங்களின் ரகசியம்.
3. பூமியைத் துளைத்துக் கொள்ளுதல்.
4. நீ என்றுமே செல்லமுடியாத அந்தப்பக்கம்.

முதல் மூன்று பகுதிகளும் படிப்படியாகத் தத்துவமுகம் கொண்டு நான்காவது வரியில் உச்சம் கொள்கிறது. "நீ என்றுமே செல்லமுடியாத அந்தப் பக்கம்" என்பது அமானுஷ்யமானது. தத்துவார்த்தமானது. ஆனால் இங்கே தேவதச்சன் அதனைக் காதலுடன் இணைத்து அழகுணர்வைக் கூட்டியதில்தான் அவரது படைப்பின் கனதி வெளிப்படுகின்றது. 

குறுந்தொகையில் காணப்பட்ட கல்லினும் வலியன் என்பதை இக்கவிதையின் காதலியுடன் பிணைத்துப்பார்க்கலாம்.  அவனுடைய பிரிதலில் காதலியை நினையாது இருக்கும் பாரமுகம் இங்குள்ள காதலியின் பாராமுகத்துடன் வைத்து ஒப்பு நோக்கலாம். அங்கே காதலியின் பரிவு இங்கே காதலனின் தத்துவார்த்தப் பரிவாக மாறியுள்ளது. இருபது நூற்றாண்டுத் தொடர்ச்சியாக இந்த மனம் கவிதைகளில் பரஸ்பரம் மையம் கொண்டுள்ளது.சங்கக் கவிதையை எழுதியவர்களில் கபிலர் மிக முக்கியமான ஒருவர். கபிலர் என்பது ஒருவரல்ல என்கிற விவாதம் ஒருபுறம் இருந்தாலும் குறுந்தொகையில் கபிலர் எழுதிய பாடல்கள் அனைத்தும் ஒரே தொனியினால் அமைந்தவை என்பது விசேட அம்சமாகும். இக்கவிதைகள் நேர்த்திமிக்க அழகுணர்வு கொண்டவை. அதே போல இன்றைய நவீன கவிதைகளில் தலையாயவர் தேவதச்சன். இவரை பன்னெடுங்காலத் தமிழ்க் கவிதைப் பண்பாட்டின் நவீன முகமாகவே பார்க்கின்றேன். அந்த நவீனத்துக்கள் இருக்கும் தத்துவ அழகியல் என்பது தமிழ்க் கவிதைக்கான ஒரு முன்னோடி முகம் என்றுதான் கூறமுடியும்.

Comments

Popular Posts