யுவன் சந்திரசேகரின் நீர்ப்பறவைகளின் தியானம்: நினைவுகளை மீளக்கொண்டு வருதல்.


நீர்ப்பறவைகளின் தியானம் என்ற யுவன் சந்திரசேகரின் கதை இதே பெயரில் வெளியான அவருடைய தொகுப்பில் அமைந்த ஒரு கதையாகும். எம்.யுவன் என்ற பெயரில் கவிதைகளையும் எழுதியுள்ளார். யுவன் சந்திரசேகர் எனது வாசிப்பில் கவிதை மூலமே அறிமுகமானார். ஆரம்பத்தில் கவிதைகள் மீதான ஈர்ப்பினை அதீதப்படுத்தியவர்களில் எம்.யுவனும் ஒருவர். அவருடைய ஒரு கவிதை இப்போதும் என் ஞாபகத்திலுள்ளது.

"கிளியென்று சொன்னால்
பறவையைக் குறிக்கலாம்.
பச்சையைக் குறிக்கலாம்.
மூக்கைக் குறிக்கலாம்.
பெண்ணைக் குறிக்கலாம். 
கூண்டுச் சிறையைக் குறிக்கலாம்.
சமயத்தில் அது
கிளியையும் குறிக்கலாம்"




மிக எளிமையாகவும் அதிர்ச்சி தரும் அமைப்பற்ற கவிதைகூறு முறைகளையும் கொண்டு மிக நெருக்கமான ஒரு படைப்பாளியாகவே யுவனை அணுகுகிறேன். யுவனின் கவிதைகள் போலல்ல அவரது கதையுலகமும் நாவலுலகமும். மிகத் தாமதமான புரிதலையும் ஆழமான ஆன்மீகக் கூறுகளையும் கொண்ட ஒன்றாகவே யுவனின் புனைவுலகினை நாம் அடையாளம் காணமுடியும். 

குள்ளச் சித்தன் சரிதம் என்ற நாவலாகட்டும் இப்போது இங்கே குறித்துச் சொல்லும் நீர்ப்பறவைகளின் தியானம் என்ற கதைகளின் தொகுப்பாகட்டும் அநேகமானவை மேற்படிக் கருவுக்குள் அடங்கி வருகின்றன. நண்பர் ஒருவரின் கடையில் அய்ரோப்பிய இதழ் ஒன்றை வாங்குகிறார். அதில் எழுதப்பட்ட ஒரு கட்டுரைக்கு மூன்று எதிர்வினைக் கடிதங்கள் வந்துள்ளன. அந்த மூன்று கடிதங்களையும் மொழிபெயர்த்துத் தமிழில் வழங்கியுள்ளார். அந்தக் கடிதங்கள் மூன்றும் உட்கதைகளால் ஆனவை. இந்த மூன்று கடிதங்களையும் அறிவியல் உலகில் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ள மனித இனங்களாகப் பிரிக்கின்றார். அந்த மூன்று இனத்தவர்களும் எழுதிய மூன்று எதிர்வினைக் கடிதங்களைக் கொண்டு கதையின் போக்கு நகர்கிறது.

1. Caucasian - காகஸாய்ட்
2. Negroid - நீக்ரோய்ட்
3. Mongoloid - மங்கொலாய்ட்

காகஸாய்ட் என்பது அய்ரோப்பிய இனத்தவர்களைக் குறிக்கும் மானுடவியல் சார்ந்த இனப்பாகுபாட்டுப் பெயராகும். க்ளாட் லூமியர் என்ற பிரஞ்சுப் பேராசிரியர் தனது நினைவின் ஞாபகங்களைப் பற்றி எழுதுவதாகக் கடிதம் தொடர்கிறது. தனக்குள் காமம் உருவாக்க வைக்கும் பெண்ணின் உடற் பாகங்களைப் பளிங்கு என்று மறைமுகமாகக் குறிப்பிடுவது என்பதை இக்கடிதத்தின் மிக முக்கியமாக விடயம் என்பது கடிதத்தின் அநேக இடங்களில் வெளிப்படுகிறது. லூசி என்ற மத ஆச்சாரங்களைப் பின்பற்றும் ரோமன் கத்தோலிக்க Orthodox  பெண்ணைப் பேராசிரியர் திருமணம் செய்து கொள்கிறார். //வருடம்தோறும் பத்து இருபது புதிய குழந்தைகள் பெற்றெடுத்து இரண்டு மூன்று வருடங்கள் அவற்றைப் பேணி வளர்த்து வெளியில் அனுப்பும் நேரத்தில் புதிய குழந்தைகள் உருவாகியிருப்பார்கள்//  என்ற வகையில் அவர்களது சுக வாழ்வு ஓடுகிறது. சில வருடங்கள் கழித்து லூசியின் பளிங்கு போன்ற மார்பில் மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது அறியப்படுகிறது. மனம் செல்லும் திசையில் உடல் செல்லாது ஆகையால் க்ளாட்டை வேறொரு திருமணம் செய்துகொள்ளுமாறு லூசி வற்புறுத்துகிறாள். ஏற்க மறுத்தவனாய் ஒரு செவிலியை நியமித்துவிட்டு வெளியில் போகிறான். அந்தச் செவிலியின் முன்னங்கால்கள் பளிங்கு போன்றவையாக உள்ளன என்பதும் இதில் கடிதமாக எழுதப்படுகிறது.
அவனுடைய நண்பன் மைக்கல் கரையான் பற்றியும் புற்றுக்கள் பற்றியும் ஆராயும் ஒரு மானுடவியல் ஆய்வாளர். அவர் தனது மனைவியை விடவும் கரையான்களை அதிகம் நேசிக்கிறேன் என்று கூறியதால் ஜீரர்கள் மணவிலக்குப் பெறுமாறு ஆலோசனை வழங்கியுள்ளனர்.



வீடுதிரும்பச் சலிப்புற்று புல்வெளியில் தலைசாய்த்துத் தூங்குகிறார் க்ளாட். அப்பொழுது கறையான் புற்றுக்களும் பளிங்குகளும் பெண்ணின் உருவமும் இவரது மூடிய கண்களுக்குள் வந்து செல்கின்றன. (ஆரம்பத்தில் கூறியுள்ளேன் பளிங்கு என்பது காமத்தைக் குறிக்கிறது என்று.) வெண்பளிங்காய்த் தென்பட்ட பிம்பம் மெழுகுபோல உருகத்தொடங்குகிறது. அதேபோல பளிங்குப்புற்று உளுத்துப் போகிறது. ஆனால்  லூசியின் பாடம் செய்யப்பட்ட முகம் மட்டும் தெரிகிறது.

இந்தக் கனவினைப் பற்றி "காமத்தின் கடைசி இழை படீரென்று அறுபட்ட தினம் அது" என்று கடிதத்தில் கூறப்படுகிறது. இந்தக் கனவு பேராசியருக்கு வந்த நாளிலிருந்து கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் நொருங்கிய வெண்பளிங்கின் நினைவுடன்தான் லூசியுடன் பேசுகிறார். அதாவது லூசி உயிருடன் இருந்ததே அந்த ஆறு மாதங்கள் தான். இங்கே நொருங்கிய வெண்பளிங்கு என்பதை உடைந்து அறுந்த காமம் என்றும் வரையறுக்கலாம்.
அய்ரோப்பியர்களின் வாழ்க்கைமுறை எத்தகையது. காமத்தை முக்கியத்துவப்படுத்துவது. இங்கே Caucasian என்பது அய்ரோப்பிய இனக்குழுமத்தவர்களைத்தான் குறிக்கிறது. தனது மனைவிக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அந்த மார்பகம் ஒவ்வொரு ஆணுக்கும் காமத்துக்கான குறியீடு. அதன் மீதான பாதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாதவனாக தனது நாட்களைக் கடத்துகிறான் அந்த அய்ரோப்பியன். அவனது நண்பன் கரையான் புற்றுக்கள் பற்றிய ஆராய்ச்சியில் இருக்கிறான். தனது மனைவிக்குப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டையும் தனிமையில் உள்ள கணவன் பொருத்திப் பார்க்கிறார். காமம் என்பதை அறுத்துக் கொள்கிறார். அதாவது காமம் கடந்த முறையில் தனது மனைவியுடன் அவளது மரணம் வரையும் உரையாடுகிறார். இது அய்ரோப்பிய ஆண்களின் பொதுக்குணமாகக் கூட இருக்கலாம். இந்த நிலையை பேராசிரியர் தூக்கம் மூலமான தியானத்தின் மூலமாகவே அடைகிறார் என்பதை நாம் இங்கே புரிந்து கொள்ளவேண்டும். 

இரண்டாவது கடிதம் ஒரு நீக்ரோய்ட்டு இனத்தைச் சேர்ந்தவர் எழுதுவது. தன்சானியாவைச் சேர்ந்த பெயர் குறிப்பிடாத ஒரு பொறியியலாளர் தனது தாய் பற்றிய குறிப்புகளை எழுதியுள்ளார். நீக்ரோய்ட்டு என்பது ஆபிரிக்கப் பகுதிகளைக் குறிக்கும் மானுடவியல் இனப்பெயர். பொறியியலாளரின் தந்தை இறந்த துயரத்தில் அவரது தாய் மிகுந்த துயரமடைந்து தூக்கமின்றித் தவிர்க்கிறார். ஆபிரிக்க பழங்குடி மரபுகளின்படி பூசாரிகளிடம் காட்டினால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால் நகர வாழ்வுக்கு வந்து நாகரிகப்பட்ட பொறியியலாளருக்கு இதனைச் சுகப்படுத்த குடும்ப வைத்தியர் ஒருவர் வேறொரு வழியைக் கூறுகிறார். ஏரியை அண்டிய தனித்த ஒரு பகுதியில் தாயைக் கொண்டு வைத்திருக்குமாறு வலியுறுத்துகிறார். ஆனால் பொறியியலாளரின் மனைவிக்குப் பிரசவ காலம் நெருங்கியுள்ளதால் செல்லத் தயங்குகிறார். பின்பு வைத்தியரின் வற்புறுத்தலையடுத்து மன்யாரா ஏரிக்கரை விடுதியில் தாயைக் கொண்டு விடுகிறார். அங்கு தாயார் எவ்வித மனத்தடைகளுமின்றித் தூங்குகிறார்.
பொறியியலாளர் விழித்திருந்து அறைகளில் பல்லிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதில் ஒரு பல்லியின் மேவுதடு பிளவுபட்டிருந்தது. தனது இறந்துபோன தந்தையாரின் மேலுதடும் பிளவுபட்ட ஒன்று என்பதை அங்கே குறிப்பிடுகிறார். இயல்பாகவே பழங்குடி நம்பிக்கைகள் அதிகளவு நிரம்பிய ஒரு இடம் ஆபிரிக்கா. அதனை இக்கடிதத்தின் பல இடங்களில் வெளிக்காட்டப்பட்டுள்ளது. தான் தங்கும் அறையில் அமானுஷ்யமாக ஏதோ இருப்பதாகவும் கருதுகிறார். அந்த அமானுஷ்யத்தைத் தனது கடந்த காலத்துடனும் பொருத்திப் பார்க்கின்றார் பொறியியலாளர். விடிந்ததும் பல காததூரம் நடந்து விட்டு விடுதி திரும்புகிறார். அங்கு அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகின்றது. அதில் பொறியியலாளருக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்தல் வருகிறது. கூடவே  "குழந்தைக்கும் மேலுதடு பிளவுபட்டுள்ளது நம் தந்தையர் போலவே" என்பதுடன் கடிதம் முற்றுப்பெறுகிறது.

இதிலுள்ள அமானுஷ்யத் தன்மை வெருட்சியூட்டக்கூடியது. கடிதத்தை வாசிப்பவர்களுக்கும் அந்தப் பொறியியலாளருக்கும் இடையிலான வாசகத் தொடர்பினை மூன்றாம் நபர்களுக்கிடையில் மேலும் அதீதப் படுத்தக்கூடியதாகவே உள்ளது. எவ்வளவுதான் சமூக வாழ்க்கை உயர்ந்த போதிலும் ஆழ்மனதிலுள்ள பழங்குடி மற்றும் மதம் சார்ந்த நம்பிக்கைகள் தீய்ந்து போவதில்லை. 

மூன்றாவது கடிதம் மங்கலொய்ட் இனத்தவர் ஒருவர் எழுதிய கடிதம். மிக வசதியான ஒரு குடும்பத்தில் பிறந்து அடிப்படையான கேள்விகள் அவனை வருத்த வீட்டைவிட்டு மலைப்பகுதியிலுள்ள முனிவர்களைத் தேடிப் போகிறான். கிட்டத்தட்ட புத்தரின் கதைபோல அமைகிறது. முதலில் ஒரு பிக்குவின் இருப்பிடம் சேரும் அவ்விளைஞன் பின்பு அங்கிருந்து விலகி வேறோரிடம் சேர்கிறான். அங்கிருந்த ஏரியில் நீர்ப்பறவைகள் கொத்துக்கொத்தாகத் தியானம் செய்தபடி இருந்தன. அவை உணவை நோக்கி அல்ல. வேறெதையோ நோக்கித் தமது தியானத்தைச் செய்கின்றன என்பதை ஊகித்துக் கொள்கிறான் அவ்விளைஞன்.
"நீர்ப்பறவைகள் நீருக்குரியவை அல்ல. ஒருபோதும் கால்களை ஊன்ற முடியாத ஆகாயத்தைச் சேர்ந்தவை" என்று நினைத்துக்கொண்டு நகர்கிறான். அங்கே அருகிலிருந்த குடிலில் ஒரு கிழவரைச் சந்திக்கிறான். அங்கே தங்கிவிடுகிறான். தன்னை மாணவனாக ஏற்கும்படி வேண்டுகிறான். கற்றுத்தர ஏதுமில்லை என்று மறுக்கிறார் அந்தக் கிழவர். மீண்டும் கெஞ்சுகிறான். ஆனால் அந்தக் கிழவயோ மிக உறுதியாக அவரவர் வாழ்க்கைதான் சிறந்த குரு என்று மொழிகிறார். உறுதியாகவே மறுத்தும் விடுகிறார். பின்பு அன்றைய இரவை அங்கேயே கழித்துவிட்டுப் போவதற்காகத் தங்குகிறான். அந்த இரவில் குடிலில் தங்கிய கிழவர் ஏரி நீரில் நடந்து அப்புறமுள்ள மலைக்குச் செல்வதைக்கண்டு ஆச்சரியமடைகிறான் இளைஞன். அதே நேரம் அடுத்தநாள் காலையில் அந்த ஏரி பனிக்கட்டி ஆகிவிடுகிறது. அங்கே ஆரம்பத்தில் தியானம் செய்துகொண்டிருந்த நீர்ப்பறவைகள் விழிகளால் மட்டும் இயங்கியபடி இருந்தன. இந்த இளைஞன் அங்கிருந்து மறுகரை சேர்ந்து முந்தையநாள் மழுமழுவென்றிருந்த முகவாய்க்கட்டையைத் தடவிப் பார்க்கிறார். இப்போது மாதக்கணக்காகத் தாடி அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. அத்துடன் கடிதமும் முற்றுப்பெறுகிறது.

இங்கு தியானம் என்பதற்கான காலமும் இடமும் வலியுறுத்தப்படுகிறது. அதில் தொடர்ந்து ஜனித்திருப்பதன் அவசியம் ஊட்டப்படுகிறது. வெறுமனே ஒரு கருத்தில் நாம் அதற்குள் உள்நுழைய முடியாது. அதற்கான தரிசனங்கள் அவசியமாகின்றன. அந்தத் தரிசனங்கள்தான் ஏரியும் நீர்ப்பறவைகளும். நீர்ப்பறவைகளின் தியானம் என்பது மங்கலொய்ட்டு இனத்துப் புத்தனின் குறியீடு மட்டுமல்ல. இமயமலையைச் சூழ்ந்துள்ள நாடுகளுக்கான ஆன்மீக நம்பிக்கைகளின் வெளிப்பாடு. அதுதான் இந்தக் கடிதம் சுட்டுவதாகும்.



முதல் கடிதம் காகஸ்ய்டு என்கிற அய்ரோப்பியரையும் இரண்டாவது கடிதம் நீக்ராய்டு என்கிற ஆபிரிக்கரையும் மூன்றாவது கடிதம் மங்கலாய்டு என்கிற ஆசியரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதில் இந்தக் கடிதங்களை உள்ளிணைப்பாக வைத்துக் கதையினை ஆரம்பித்து வைப்பவர் ஒரு இந்தியராவார். அவர் ஆரம்பத்தில் குறிப்பிட்ட மூன்று இனக்குழுக்களுக்குள்ளும் அடங்கமாட்டார். தன்னை உலகப் பொதுமனிதனாகக் காட்டுபவராகவே நாம் அவரை அடையாளம்காணமுடியும்.

இந்தக் கதையை வாசிப்பதிலுள்ள சிக்கல்பாடுகள் கதாசிரியரின் நினைவாகவே அனைத்துச் சம்பவங்களும் வந்து செல்வதால், அவை அனைத்தையும் தொகுத்து ஒரு சேர அமைத்துக்கொள்வதில் சில இடர்பாடுகளை ஆரம்ப வாசகர்களுக்கு ஏற்படுத்தக்கூடும். ஆனால் கதைக்குள் ஊடுருவியுள்ள அழகியல் வர்ணனைகள் இக்கதையினை ஸ்தம்பிக்கச் செய்யாமல் கொண்டு செல்லும். இத்தொகுப்பில் பத்துக் கதைகள் அடங்கியுள்ளன. அதில் முக்கியத்துவமிக்க ஒரு கதையை இங்கு எடுத்தாண்டுள்ளேன்.

நவீன தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் யுவன் சந்திரசேகரின் கதைகளும் நாவல்களும் நீண்ட நாட்களாகவே என் ஆதர்சமாக இருப்பவை. அவற்றைப் பற்றி இன்னும் விரிவாக எழுதப்படவேண்டும். இதனை அதற்கான முன்னுரையாகவே கருதுகிறேன்.

Comments

Popular Posts