நகுலனின் கவிதைகள்

நவீனத்துவ எழுத்தாளர்களில் முக்கியமான ஒருவர் நகுலன்.
நகுலனின் கோர்ட்ஸ்டான்ட் கவிதைகளிலிருந்து தொடங்கிய வாசிப்பு அவரது வாக்குமூலம் வரையும் தொடர்ந்தது. அண்மையில் அவரது முழுக்கவிதைகளும் உள்ளடங்கியதாக காவ்யா சண்முகசுந்தரம் தொகுத்த நகுலன் கவிதைகளை முழுமையாகப் படிக்க முடிந்தது. நகுலனின் வாக்குமூலம் அவருடைய சுயபுலம்பல் வகையான எழுத்துக்குச் சான்றாகும். யூமா வாசுகியின் மஞ்சள் வெயில் தொகுப்பை எப்படி ஒரு நாவலாகவோ அல்லது இதர படைப்பு வகைகளுக்குள் அடக்கமுடியாது இருக்குமோ அதுபோலத்தான் நகுலனின் வாக்குமூலமும். அதனை கேள்வி பதில்களால் ஆன எழுத்து முறைமை என்றே சொல்லலாம். இதனை முதன்முதலில் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பாரதியார். பாரதியாரின் ஞானரதம் என்ற உரைநடைத் தொகுப்பிலுள்ள அதே மாதிரியான ஒரு வடிவத்தை நகுலனின் வாக்கு மூலத்தில் காணலாம். அத்துடன் பாரதியாரின் உரைநடைச் செல்வாக்கினை நகுலனின் அநேகமான கவிதைகள் எடுத்தாண்டுள்ளன.

"எனக்கு இந்த மனம் என்ற மோகினியிடத்தில் காதல் அதிகமுண்டு. ஆதியில் எவ்வாறு இந்த மோகம் உண்டாயிற்று என்பதை இங்கே விஸ்த்தரிக்க முடியாது. அது ரகஸ்யம். ஆனால், நாளேற நாளேற நான் வேறு இந்த மனம் வேறு என்ற த்வைத சிந்தனையே பெரும்பாலும் மறந்து போகும் வண்ணமாக எனக்கு இம் மோகினியிடத்தில் பிரேமை மிகுந்து போய்விட்டது. இந்த மனம் படும் பாடுகளைக் கண்டு பொறுக்காமலேதான் நான் சாந்திலோக தரிசனத்திலே விருப்பம் கொண்டேன். இப்போது மனம் அந்த யோசனையில் நிஷ்காரணமாக வெறுப்புக் கொள்வதைக் கண்டு எனக்குத் திகைப்பும், இரக்கமும், கோபமும் கலந்து பிறந்தன. எவ்வளவோ விதங்களில் மனத்தைச் சமாதானம் செய்ய முயன்றேன். மனம் பின்னும் கண் மூடிக்கொண்டு ஒரேயடியாக மூடச் சாதனை சாதிக்கத் தொடங்கிற்று. எனக்கு இன்ன செய்வதென்று தெரியவில்லை. பிறகு, ஒரே நிச்சயத்துடன், "மனமே, நான் இந்த விஷயத்தில் உன் பேச்சைக்கேட்கவே மாட்டேன். உன்னுடைய நன்மையைக் கருதியே நான் செய்கிறேன். - ஞானரதமே, - உடனே புறப்படு" என்றேன்"
(ஞானரதம்: பாரதியார்)

1. "எனக்கு யாருமில்லை நான்கூட"
2. "நினைவு ஊர்ந்து செல்கிறது. பார்க்கப் பயமாக இருக்கிறது. பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை"
3. "யாருமில்லாத பிரதேசத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது எல்லாம்"
4. "இந்த மனதை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது"
5. "ஆகாய வடிவமான உன்னை நான் ஊழிதோறும் தேடி நின்றேன்"
(நகுலன் கவிதைகள்)

சொற்களைக் கூட்டி மனதில் வைத்திருக்கும் நகுலன் போகிற போக்கில் அவற்றை உதிர்த்துவிடுகிறார். சில சமயத்தில் அவை மிகச் சாதாரணமான எழுத்துக்களாகவும் அமைந்துவிடுகின்றது. அதே நேரம் தத்துவார்த்த தரிசனம் கொண்ட படைப்பாகவும் மேலெழுகின்றது. இதனை உச்ச நேர்த்தியுடன் செய்த முதல் நவீனத்துவப் படைப்பாளி  பாரதியார்தான். அவருடைய பல கவிதைகளின் சாயல் தரிசனங்களின் உள்ளீடு கொண்டது. "போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ?" இதே போன்றதொரு வேதாந்தத் தரிசனக் கேள்விகள் தொடர்ந்து நகுலனிடம் எதிரொலித்துக் ஒலித்துக்கொண்டே இருந்ததை நாம் அவதானிக்கலாம்.
"திரும்பிப் பார்க்கையில் காலம் ஓர் இடமாகக் காட்சியளிக்கிறது" இது போல ஏராளமான கேள்விகள் பிரபஞ்சம் பற்றியும் ஆத்மஞானம் பற்றியும் நகுலனால் முன்வைக்கப்பட்டது. இந்த மரபுக்கு அஸ்திவாரமிட்டவர் பாரதியார் என்றால் அது மிகையல்ல.

பாரதியார் தனது கவிதைகளில் கண்ணம்மா என்ற பெண் பெயரை எந்தளவுக்கு அதிகமாகப் பாவித்தாரோ அதுபோல நகுலனின் கவிதைகளில் சுசீலா என்ற பெண் பெயரை அதிகமாகக் காணலாம். தனிமையின் உன்மத்தம் கொப்பளித்துப் படிப்படியாக மேலெழுந்து வரும் தன்மையை நகுலன் இந்தப் பெயருக்குள் கவிதையாகப் பாவித்திருப்பார். சில சமயங்களில் தன்னுடைய அனைத்து விதமான இயக்கங்களுக்கும் காரணமாக உள்ளது சுசீலாதான் என்ற பிரமையைத் தனக்குள் ஊன்றிவைத்திருந்துள்ளார் நகுலன். நகுலனின் பெண்பெயரில் அநித்தியமான ஒரு தன்மையை அவதானிக்கலாம். அதாவது நம்பிக்கையின்மை. மனச்சோர்வு. இப்படியான ஒரு போக்கு நகுலனின் சுசீலாவுக்குள் இருக்கும். ஆனால் பாரதியின் கண்ணம்மா மிக உத்வேகமான தொனியில் எம்மிடம் வந்தடைகின்றாள். "வாலைக் குமரியடி கண்ணம்மா மருவக் காதல் கொண்டேன்", "என்னைக் கலிதீர்த்தே, உலகில் ஏற்றம்புரிய வந்தாய். உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி" இந்த நித்தியத்துவத்தை நாடகத்தன்மையுடனும் இசையுணர்வுடனும் பாரதி எழுதியதுதான் அவரது படைப்பின் மிகப்பெரிய பலம். அதற்குள் மீதுயர்ந்த பரிவினைச் சில இடங்களில் வெளிக்கொணர்ந்திருப்பார். அதிலிருந்துதான் தனது விளிம்பு மனக் கவிதைகளைச் சுசீலாவின் பெயரில் நகுலன் உண்டாக்கியிருப்பார்.
"ஒருவர் சாவதும் ஒருவர் இருப்பதும் வெறும் சாவு என்பதைவிட இது மிகவும் குரூரம். இதைச் சொன்னதும் சுசீலாதான்"

பாரதி தன்னை எப்போதும் ஒரு வைதிகராகக் காட்டியவரல்ல. அவர் அதன்மீதும் விமர்சனங்களை முன்வைத்தவர்தான். ஆனால் இந்து ஞான மரபின்வழி வந்த மிக முக்கியமான நவீனத்துவப் படைப்பாளி என்றால் அது பாரதி என்பதை யாரும் மறுக்கமுடியாது.  பாரதி கண்ணம்மாவைப் பாவித்த விதத்துக்கும் நகுலன் சுசீலாவைக் கையாண்ட விதத்துக்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது. ஆனால் கண்ணம்மாவின் தொடர்ச்சிதான் சுசீலா என்பதை மறுக்கமுடியாது. பெண்கள் பற்றிய பிம்பங்கள்  ஆணின் ஆழ்மனதினை வலுவாகப் பாதிக்கக்கூடியது. அதுவே பிடித்த பெண் என்றால் அவளை எப்படி ஆண்கள் அணுகுவர் என்பதையும் அதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்பதையும் சங்ககாலம் முதலே கண்டு வருகிறோம். ஒரு மரபின் தொடர்ச்சிதான் இன்னொரு புதுமையும். சங்ககாலத்தின் தொடர்ச்சியைப் பக்தி மரபுகளிலும் பக்திக்காலத்தின் பிரதிபலிப்பை சோழர்காலத்திலும் சோழர்காலச் சைவசித்தாந்தங்களினதும் இந்து ஞானமரபினுடைய ஆழமான அறிவியக்கத்தைப் பாரதியின் கவிதைகளிலும் காணலாம். அதுபோல பாரதியாரின் மிக அண்மைய தொடர்ச்சிதான் நகுலன். அதற்காகப் பாரதியின் நவீனத்துவச் சாதனைகளை நகுலன் செய்தார் என்று பொருளாகாது. நகுலன் பாரதியின் ஞான மரபினைப் பிரதிபலித்தவர். நகுலனின் இலக்கியத்தில் மேலைச் சாயல் இருந்தபோதிலும் அதில் சில எளிய முறைகளைக் கையாண்டிருந்தார். அதற்குப் பாரதியின் கவிதை மரபுத் தொடர்ச்சி உதவியது எனலாம்.  இதனை தன்னுடைய வாக்குமூலம் என்ற நூலின் சில இடங்களில் மேலோட்டமாகவே நகுலன் கூறிச்செல்வார். நகுலனின் மிகப்பெரிய பலவீனம் கட்டற்ற முறையில் வார்த்தைகளை உதிர்ப்பதுதான். அத்துடன் அதுதான் அவருடைய பலம் என்றும் கூறவேண்டும். பல கவிதைகளைப் படிக்கும்போது ஒருவித நாராசத்தன்மையை அளிக்கிறது. வேறுசில கவிதைகள் அவருடைய மிகவுயர்ந்த தத்துவார்த்த மரபினைப் பிரதிபலிக்கிறதோ என்ற அய்யப்பாட்டையும் ஏற்படுத்தி விடுகின்றது.

"பெண்ணின் ரூப சௌந்தர்யம் கலை எழுப்பும் ஏகாந்த நிலை சுவரில் ஒரு சிலந்தி"

"முக்கோணம் முடிவில் ஒரு ஊசி முனை ஞானம்"

இப்படி ஏராளமான குறுங்கவிதைகளை எழுதியுள்ளார். சலிப்பூட்டக்கூடிய வகையில் உதிர்த்துவிட்ட கவிதைகள் என்றாலும் அவை மிக ஆழமான தத்துவப் பார்வை கொண்டவை. நகுலன் தனது வாழ்நாளைத் தனிமையில் போக்கியவர் என்பதால் அநேகமானவை அவரது இடத்தைச் சூழ்ந்திருந்த விடயங்களையே படிமமாக்கப்பட்டுள்ளது.


நகுலனின் கவிதைக்குள் வேதங்களிலும் உபநிஷதங்களிலும் பின்வந்த தரிசனங்களிலும் கூறப்படும் பிரபஞ்சம் பற்றிய பொதுவான பார்வைகள் இருந்துள்ளது. இது அநேகமான இந்தியக் கவிஞர்களுக்கு உள்ள ஒன்றுதான். அதனைக் காதல் விடயங்களுக்காகக் கையாண்டதில் நகுலனின் கெட்டியான வார்த்தைகளுக்கே அழுத்தமான பங்குண்டு. உதாரணமாக நகுலனின் கவிதையொன்று பின்வருமாறு அமைகின்றது.

"ஆகாய வடிவமாக உன்னை நான் ஊழிதோறும் தேடி நின்றேன்"

இது பிரபஞ்சம் பற்றிய ஆரம்பகாலத் தரிசனங்களிலிருந்த பொருள்முதல்வாத நோக்கு தன்னெழுச்சியாகக் கவிதைகளில் தோன்றிய ஒன்றாகவே  கருதமுடியும். இப்படிப் பல கவிதைகளை அவர் தனது படைப்பூக்கங்களில் ஈடுபடுத்தியுள்ளார். நகுலன் பற்றிய கவிதைப் பார்வையை அவர் வரித்துக்கொண்ட தரிசனத்தில் இருந்தும் கவிதையை எப்படிப் பிறப்பித்துக் கொள்கிறார் என்பதிலுமிருந்தே அவரை நாம் அணுகமுடியும்.  மனம் நினைவுகூரும் முள்பிசகாத அந்த நிமிசத்தில் கவிதை பிறக்கும் என்று நகுலன் ஆரம்பத்தில் எழுதிய வரிகளையும் இங்கே ஞாபகமூட்ட கூறவேண்டும். அப்பொழுது நகுலன் கவிதைகளிலுள்ள நித்தியத்துவத்தின் முகங்களையும் அநித்தியத்தையும் ஒருசேர அறிந்து கொள்ளலாம்.

Comments

Popular Posts