எம்.ஏ.நுஃமான் என்னும் தமிழறிஞர்: சில குறிப்புகள்.


எம்.ஏ.நுஃமானை ஒரு தடவை பேராதனைப் பல்கலைக் கழகத்தில் 2011 ஆம் ஆண்டளவில் கண்டிருக்கிறேன். அப்பொழுது அவர் ஓய்வுநிலைப் பேராசிரியராக இருந்தார் என்று நினைக்கிறேன். பல்கலைக் கழகத்துக்குப் புதிதாக வந்தடைந்த மாணவர்களுக்கு ஆரம்ப உரையாடலையும் புத்தெழுச்சிப் பேச்சினையும் வழங்க வந்திருந்தார். அவருடைய ஒரேயொரு விரிவுரையை மட்டுமே என் வாழ்நாளில் கேட்டிருக்கிறேன். பின்னர் பல்கலைக் கழகத்திலிருந்து நான் இடையில் விலகிவிட்டதால் எப்பொழுதும் அவருடன் பேசும் சந்தர்ப்பங்கள் கிடைத்ததில்லை. அந்த ஒரு விரிவுரை இப்போதும் என் மனதில் அழியாத ஞாபகமாக இருக்கின்றது. எனது வாசிப்புப் பயணத்தில் நுஃமான் முக்கியமான ஒருவர். வவுனியாவில் உயர்தரம் கற்றுக்கொண்டிருந்தபோது உயர்தரப் பரீட்சைக்கான பாடத்திட்டத்தில் தெளிவான இலக்கண நூல் ஒன்று தமிழ் மாணவர்களுக்கு அவசியமாக இருந்தது. அப்பொழுது தெளிவான நூல்களை யாரும் எழுதியிருக்கவில்லை. ஆனால் "அடிப்படைத் தமிழ் இலக்கணம்" என்கிற நுஃமானின் நூலை ஒருவர் எனக்குச் சிபாரிசு செய்தார். அப்பொழுது அவர் கூறியது மட்டக்களப்பு மாவட்டத்தில் உயர்தரப் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் முதல் நிலை (Rank) எடுத்த ஒருவர் எழுதியதுதான் இந்நூல் என்றார். அப்பொழுதுதான் அந்த முதல் நிலை என்பது எனது கனவாக இருந்தது. அந்த இலக்கண நூலையும் மேலதிகமாகவுள்ள பாடத்திட்டங்களுக்கான நூல்களையும் இடைவிடாது கற்று மாவட்ட மட்டத்தில் முதல் நிலையை அடைந்திருந்தேன்.  இந்த உள்ளெழுச்சிக்கு நுஃமான் பற்றி எனக்குள் உண்டான பிம்பமும் ஒரு காரணம் என்றால் அது மிகையல்ல.  





இக்காலத்தில்தான் கா.சிவத்தம்பியின் இலக்கிய வரலாறு என்ற நூலும் க.கைலாசபதியின் ஒப்பியல் இலக்கியம் நூலும் அறிமுகமானது. கைலாசபதியின் ஒப்பியல் இலக்கியம் கற்ற பின்னர் அகில இலங்கைத் தமிழ்த்தினத் திறனாய்வில் முதலிடமும் பெறமுடிந்தது. அப்பொழுது அதற்கான பரிசிலை ஜனாதிபதியின் பாரியார் வழங்கினார். ஆனால் நான் அதனைப் பெற்றுக்கொள்ளச் செல்லவில்லை. அந்தநாட்களில் யுத்தம் தமிழர்களை அழித்துக்கொண்டு இருந்தது. அந்த விரக்தி அப்பொழுது வெகுவாக என்னைப் பாதித்திருந்தது. அதனால் இதனைத் தவிர்த்துக்கொண்டேன். இந்த கல்வியியலாளர்கள் மூவரும் என் சிறுவயதின் வாசிப்பை வளப்படுத்தியவர்கள் என்றால் அது மிகையல்ல. அதன் பின்வந்த எந்தவொரு கல்வியியலாளராலும் நிரப்ப முடியாத இடத்தை இவர்கள் வழங்கினர்.

இன்று எனது வாசிப்பு நிலைகள் மாறிவிட்டன என்றபோதும் இம்மூவரது எழுத்துக்களையும் வெவ்வேறு வாசிப்பில் வைத்துப் புரிந்துகொண்டுள்ளேன். இம்மூவரில் நுஃமான் மட்டுமே கவிதைகளை எழுதி பல கவிதைகளை தமிழில் மொழிபெயர்ப்பும் செய்தார். இவரது பலஸ்தீன மொழிபெயர்ப்புக் கவிதைகள் முக்கியமான தாக்கத்தை இங்கே ஏற்படுத்தின. குறிப்பாக இலங்கையில் போர் உக்கிரம்

பெற்றிருந்த காலப்பகுதியான 2000 ஆம் ஆண்டில் அத்தொகுப்பு வெளியானது. பல தமிழர்கள் இந்தக் கவிதைகளைத் தமது போராட்ட வடிவமாகவும் வாசித்துப் பெற்றுக் கொண்டனர். அத்துடன் செழியன் எழுதிய "ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து" என்ற நூலில் கூட நுஃமானின் ஒரு கவிதையை உட்புகுத்தியிருப்பார் செழியன். ஆனால் பலஸ்தீனக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு இன்றைய வாசிப்பில் ஒரு தட்டையான போக்குக் கொண்டது என்பதை மறுக்கமுடியாது. அதன் மொழியும் சொற்களின் கையாளுகையும் மிக வரண்டவை. அவற்றை வாசிப்பதால் சோர்வினையே அடையமுடியும். 

தமிழ்ப் பாடநூல்களில் பழந்தமிழ் இலக்கியத்தை உள்ளிணைப்பதில் நுஃமான் முக்கியமான ஒரு இடத்தை வகித்தார். இவருடைய காலத்தில்தான் செறிவான சங்கக் கவிதைகள் பல தமிழ் பாட நூல்களில் வந்துசேர்ந்தன.  அத்துடன் இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தமிழ் மொழியைச் சிறப்பான முறையில் கற்பித்து பல சிறந்த மாணவர்களை உருவாக்கிய ஒருவராகவும் இருக்கின்றார். இங்கு நான் கூறியவற்றை ஒற்றைப்படையாக எடுப்பதால்தான் இதன் மீது மறுப்புக்கள் கிளம்பக்கூடும். இலங்கையில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பங்களித்த பலரில் துஃமானும் ஒருவர் என்றே நாம் புரிந்துகொள்ள வேண்டும். நான் அவருடைய நேரடிக் கல்வியைப் பெறவில்லை. ஆனால் ஏகலைவனாக பல விடயங்களை அவரிடமிருந்து கற்றுள்ளேன்.

எம்.ஏ.நுஃமானை மறந்துவிட்டனர் என்று ஒருசிலர்  அண்மையில் இனரீதியான குற்றச்சாட்டை முன்வைத்தனர். இலக்கியத்துக்குள் இனவாதங்களை இணைத்துப் போடுவது என்பது அருவருக்கக் கூடிய ஒருவிடயம். அது யாராக இருந்தாலும் சரி. நாம் எடுத்துக்கொண்ட அரசியல் நிலைப்பாட்டை இலக்கியவாதிகளின் சேவைகளுடன் ஒப்பிட்டுத் தரம் பிரிப்பது மிக மோசமான முன்னுதாரணமாகிப் போகும்.  நுஃமானின் தமிழ்ப் புலமையையும் அவருடைய தமிழ் நூல்களையும் வாசிக்காதவர்கள் அவரை யாரெனத் தெரியாது என்று  முன்வைக்கும் வாதங்களைப் பற்றிப் பெரிதாக அக்கறைப்படப் போவதில்லை. ஆனால் அறிந்தவர்கள் அவரை மறந்து கடக்க நினைப்பதை ஏற்கமுடியாது. நான் அவரது நூல்களையும் கவிதைகளையும் கற்று வளர்ந்தவர்களில் ஒருவன். அந்த வகையில் அவரது தமிழ்ப் பணியை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட முடியாது.  அப்படி மதிப்பிடுபவர்களைப் பற்றி எந்தவொரு கவலையும் இல்லை. அத்துடன் நுஃமான் எழுதிய கவிதைகள் தட்டையானவை என்பதுடன் மொழியைக் கையாளுவதில் வரட்சி கொண்ட சாதாரணமானவை என்பதையும் இங்கே திரும்பவும் கூறியாகவேண்டும். எண்பதுகளிலும் இரண்டாயிரங்களிலும் அவர் எழுதியிருந்த பல கவிதைகள் வெறும் உரைநடை போலவும் எவ்வித உள்ளக்கிளர்ச்சியையும் நிகழ்த்தாதவை. அவற்றைத்தாண்டி சில நல்ல  கவிதைகளையும் அவர் தந்துள்ளார். நுஃமானின் கவிதைகளைவிடவும் அவரது திறனாய்வு நூல்களே முக்கியமானவை. அவற்றை அடுத்துவரும் இலக்கியச் சந்ததிகளும் கற்றாகவேண்டும்.  அது இலக்கியத்தை நேசிப்பவர்களுக்கு மட்டுமானது. கா.சிவத்தம்பி மற்றும் க.கைலாசபதி முதலிய இரட்டையர்களுடன் மூன்றாமவராக நுஃமானைச் சேர்க்கும் அளவுக்கு அவரது தனித்தன்மைகளுள்ளன.



"உலகப் பரப்பின் ஒவ்வொரு கணமும்" என்ற தலைப்பில் நுஃமான் ஒரு நெடுங்கவிதை எழுதியுள்ளார். அந்தக் கவிதை தன்னை உலகப் பொது மனிதனாகப் பாவித்து எழுதப்பட்ட ஒன்று. தன்னுடைய இயலாமைகளை வெளிப்படுத்திய கவிதையாக அதனை நாம் கண்டு கொள்ளலாம்.

"இந்நேரத்தில் எதை எதைப் பற்றியோ 
இங்கிருந்து நான் எண்ணுதல் போல
எங்கெங்கேயோ எத்தனை பேரோ 
எதை எதைப் பற்றியோ எண்ணுதல்கூடும்.

இதோ
நான் கிழக்கில் என்முகம் திருப்பிக் 
கிழக்கில் இருண்டு கிடப்பதைக் காண்கிறேன்.
கிழக்குத் திசையின் கிழக்கில் 
இந்நேரம் நள்ளிரவாகி நாடுகள் உறங்குமே
இதோ இந்நேரம் எத்தனை 
பேரோ மரணாவஸ்த்தையில் வருந்துதல் கூடும்.
எத்தனை எத்தனை இடத்தில் 
இந்நேரம் மரண ஊர்வலங்கள் வருதல் கூடுமோ?

இதோ என் கிழக்கென
எட்டிப் பிடித்தேன்.
இதோ என் மேற்கென
எண்ணிக் கொண்டேன்.
இந்த மாதிரி எண்ணும்போது
இந்த உலகுதான் எத்தனை சிறியது"

நுஃமானின் இலக்கியத்தையும் எழுத்துப் பணிகளையும் நான் இப்படித்தான் அடையாளம் கண்டுள்ளேன். "இந்த உலகுதான் எத்தனை சிறியது" இதற்குள் நுஃமானின் பெருந்தன்மை வெளிப்படுவதை யாராவது அடையாளம் காணக்கூடும். அங்கிருந்துதான் மனிதம் பற்றிய பரஸ்பர உரையாடல்களை நாம் தொடர முடியும். இல்லாவிட்டால் அவற்றைக் கிடப்பில் போட்டுவிட்டு அவரவர் வழியில்தான் போகவேண்டும். என்னைப் பொறுத்தவரை நாம் எவ்வழியில் விலகிச் சென்றாலும் இயங்கிக் கொண்டிருக்கும் இம்மொழியில் நீண்டகாலம் தனது சுவடுகளைப் பதித்தவர் நுஃமான். நம்மிடையே   எத்தனை முரண்பாடுகள் வந்தாலும் இதுபோன்ற பேராசான்களையும் அவர்களது பணிகளையும் மறுத்துக்கூறமுடியாது. அப்படி மறுப்பவர்கள் மீது ஆக்கபூர்வமான விமர்சனங்களை வைப்பது நம் கடமை என்று நினைக்கிறேன்.

00

Comments

Popular Posts