அவரவர் கைமணல்

இந்தப்பதிவு சம்பந்தப்பட்ட பலரை நோகடிக்கலாம். அதற்கு நான் பொறுப்பல்ல. "அவரவர் கைமணல்".
========●
கிளிநொச்சியைச் சேர்ந்த மகேந்திரன் தார்த்திக்கரன் என்ற மாணவன் எள்ளுக்காடு  பிரதேசத்தைச் சேர்ந்தவன் எனவும். அவன் உயிரியல் தொழிநுட்பப் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளான் எனவும் இணையச் செய்திகள் வாயிலாக அறியக் கிடைத்தது. இதைத் தாண்டி அவனுள் இருந்த உள்ளுணர்வின் வெளிப்பாடு ஒன்று பல கிரந்தக் காரர்களின் நடிப்பு முகத்தை வெளிக்கொணர்ந்துள்ளது. அதிபர் தன்னை "உருப்படமாட்டாய்" என்று சொன்ன வாசகம் தன்னை உயிர்த்தெழ வைத்தது என்ற கோணத்தில் ஒரு குறுஞ்செவ்வியும் வழங்கியிருந்தான். அதைச் சிலர் கடிந்திருந்தனர். ஒரு மாணவன் எப்படி ஆசிரியரைக் குறைகூறலாம் என்பது போல. இது ஒன்றும் "குறைகூறல்" அல்ல.
நமது சமூகத்தின்
அவலம்,
அபத்தம்,
அவநம்பிக்கை,
கேவலமான கேடு,
தரித்திரம்.

நியாயப்படி பார்த்தால் இப்படிப்பட்ட ஆயிரம் தார்த்திக்கரன்கள் எங்கள் சமூகத்தில் உள்ளனர். பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், சிற்றூழியர்கள் முதற்கொண்டு அனைவருமே ஒரு மாணவனின்,
1. வதிவிடப் பின்புலம்.
2. ஜாதி அமைப்புக்கள்.
3. அரசியல் ஆதரவுகள்.
4. பொருளாதார அடிப்படைகள்.
5. குடும்பப் பின்னணி.
6. கிராம அரசியல்.

முதலான இன்னோரன்ன காரணங்களை மனதில் வைத்தே தங்களது கல்வியறிவை மாணவர்களுக்குப் போதிக்கின்றனர். (சிலர் விதிவிலக்காகலாம்) இது ஒரு கல்வி கற்பித்தல் பிரயத்தனமா என்பது எனக்குத் தெரியவில்லை. எனக்கு மட்டுமல்ல நிறையப்பேருக்கு ஐயம்தான். கேட்டால் சின்னப் பொடியன்களுக்கு ஏன் இந்த வேலை என்று கூறி நழுவி விடுவது ஒரு வாடிக்கை. இதைப் பார்க்கும் போது எனக்கொரு சம்பவம் ஞாபகமுண்டு. நான் ஏழாம் தரத்தில் புதுக்குளம் பாடசாலையில் கற்று வந்தேன். (இந்தப்பாடசாலையில்தான்  பத்து ஆண்டுகள் எனது கல்வியைக் கற்றிருந்தேன்.) பாடசாலையில் இருந்து எனது ஊர் நான்கு மைல் இருக்கும். அப்பொழுது மழைக்காலம் வந்தால் செருப்புக் காலுடன் பாடசாலைக்கு நடந்து வருவதுண்டு. அதனால் நீலக்காற்சட்டை மற்றும் வெண்ணிறச் சேட்டுக்களில் செம்மண் சேறு பின்பக்கத்தில் புள்ளி புள்ளியாய் வீசியெறிந்து இருக்கும். இதனால் ஆசிரியர்கள் அதற்கான பின் காரணம் தெரியாமல் துவரம் தடியால் அடித்து விடுவதுண்டு. (துவரம் தடி என்பது நமது வன்னிப் பிரதேசங்களின் அடர்காடுகளில் வளர்கின்ற தடித்த கருந்தடி. எவ்வளவு அடித்தாலும் முறியாது. ஏர்பூட்டி உழும்போது மாடுகளுக்கு அடிக்க இதனைப் பயன்படுத்துவார்கள்.) சில காலம் இப்படி நடந்து வந்தது. பின்னொருநாள் எனது விபரத்தையும், தந்தையின் பெயரையும் எதேச்சையாகக் கேட்டறிந்துவிட்டு ஆசிரியர் ஏதும் பறையாமல் விட்டுவிடுவார். ஆனால் என்போலவே சேறுபூசி வரும் ஏனைய மாணவர்களுக்கு கடும் தாக்குதல் நடக்கும். எனக்கேன் அடிவிழவில்லை என்பதற்கான காரணம் பின்புதான் தெரிந்தது. எனது அப்பாவுடன் கலாசாலையில் கூடப் படித்த நண்பர் தான்  துவரம் தடியால் தாக்கும் ஆசிரியர். இது ஆசிரியர்-மாணவர் உறவு பற்றிய அவலக்குறிப்பு.

இது எவ்வளவு கேவலமான பாரபட்சம். நல்லவேளை நான் இது போன்ற இடங்களில் கம்யூனிசம், மார்க்சிசம், சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ, சுந்தரராமசாமி, ஜெயக்காந்தன், உலக சினிமா, கோட்பாடுகள், நவீனத்துவ இலக்கிய உலகம் பற்றிய அறிதல்களை/ கற்றலைப் பெற்றிருக்கவில்லை.  பெற்றிருந்தால் எவ்வளவு கேவலமான சிந்தை கொண்டு ஏனையோரையும் கவனித்திருப்பேன்/அணுகியிருப்பேன் என்றெண்ணி இன்று சிலாகிக்கிறேன்.

பின்னொருகாலத்தில்
இதே பாடசாலையின் அதிபர் கிட்டத்தட்ட எனது உயர்தரத் தேர்வுக்கான அனுமதி அட்டையினை வழங்குவதில் பெரும் இழுபறி செய்தார். நீ பரீட்சை எழுதமுடியாது என்ற அறிவித்தலையும் கூறியிருந்தார். இதனால் பரீட்சை மீதான எனது குவிதல் குறைந்தது. எனினும் பரீட்சை எழுதுவேனா மாட்டேனா என்ற விரக்தியில் புஸ்த்தகத்தை வெறிகொண்டு படித்திருந்தேன். மாடு மேய்க்கக் கூடத் தகுதியில்லாதவன் நீ என்று ஒரு ஆசிரியரும், நீயெல்லாம் கவிதை எழுதுறியோ என்று ஒரு ஆங்கில ஆசிரியையும் கேட்டது இப்போதும் எனது செவிகளில் ஒலித்துக்கொண்டுதானுள்ளது. (அதிலும் அந்த ஆங்கில ஆசிரியை கேட்ட கவிதை சம்பந்தமான விடயம் எனக்குப் பெரும் வலியை அந்த நேரத்தில் தந்தது.) இவை எல்லாவற்றுக்கும் முதன்மைக் காரணம்  மேற்சொன்ன ஒன்றான "கிராம அரசியல்" என்பது தான் என்று எனக்குப் படிப்படியாகப் போனவருடம் தான் புரிந்தது.

{கிராம அரசியல் என்பது இங்குள்ள சுமந்திரன்களும், சம்பந்தன்களும் செய்யும் ஒருவித சுயதம்பட்ட அரசியல். அதாவது தமது கிராமம் சார்ந்த ஒருவன் உயர் சித்தி எய்தி விட்டால் மட்டும், அவனுக்கு மாலை, தோரணம், பெனர் வைத்து அவனைக் கௌரவிப்பது. இதுவே அயலூர்க் காரர்கள் பெற்றுவிட்டால் வயிறால் பொருமி அப்படியே அந்தச் சமாசாரத்தைக் கிடப்பில் போடுவது. இது இலங்கைத்தமிழ்ச் சமூகக் கிராமங்களின் வாடிக்கையாகும்.}

ஒருவாறு உயர்தரப்பரீட்சை எழுதி மாவட்ட மட்டத்தில் முதல் நிலை பெற்றேன். பாடசாலை வளாகத்தில் அதிபரிடம் ஆசிபெறச் சென்றிருந்தேன். முதல்நிலை பெற்ற போது கூட வாய்திறந்து வாழ்த்துச் சொல்ல முடியாத Ego கொண்ட அதிபர் ஒரு வங்கி அதிகாரி முன்பு செய்யாத தப்புக்கு "இவன் ஒரு திருடன்" என்று கூறிய அதீத உண்மைகடந்த வாசகம் என் மனதெங்கும் இன்றுவரை வியாபித்து ஒலித்துக் கொண்டே உள்ளது எனலாம்.

பாடசாலைக்குப் பெருமை சேர்த்தது அவருக்கு முக்கியமாகப் படவில்லை. அவர்தம் அகங்காரத்துக்கு அடிபணியாத என் பணிவுக்கு அவரளித்த இவ்வாறான யாசகங்கள்  ஏராளமுண்டு.

நமது தமிழ்க் கல்விச்சூழலில் இது போன்ற பெரும் சீரழிவாளர்கள் (Mass Detrimental) நிறையப் பேர் கற்பிக்கின்றவர்களின் வகையில் நின்று சிறுபிராய மாணவர்களின் மனதில் வன்முறைகளையும், எதிர்மறை உணர்வுகளையும் ஊட்டிவிடுகின்றனர்.

{இதற்கு அவர்கள் வைக்கும் பெயர், உங்களின் எதிர்கால நன்மைக்கே அவ்வாறு சொல்கிறோம் என்பதாகும். எமது நன்மைக்குச் சொல்ல ஆயிரம் நல்ல விடயங்கள், பலகோடி Inspirational Personalities இன் வரலாறுகள் உண்டல்லவா?. அதைத் தாங்களேன் கூறுவதில்லை. அதைப்பற்றிய அறிதல் இல்லையா? அல்லது கூறி என்னவாகப் போகிறது என்ற அசட்டையா?.}

இதனால் கற்பவன்/ கற்றல் கேட்பவன் பாசிச எண்ணத்துடன் மற்றவரை அணுகுபவனாகவும், வேறொரு புறப்பாடுடன் தனது கல்விச் சிந்தனைகளைப் புறந்தள்ளிவிடுபவனாகவும் இருக்கின்றான். ஓர்மம் ஏதுமில்லாத ஒருவனிடம் கற்றவராக/அதிபராக நின்று தனது சொந்த விருப்பு வெறுப்புக்களை அம் மாணவன் மீது பொழிவது எவ்வளவு அபத்தம் என்பது தெரியாமல் ஒவ்வொருவரும் தம்மைக் கல்வியியலாளராகக் காட்டிக் கொள்கின்றனர்.

தார்த்திக்கரன் க்கு நடந்தது இப்படியொரு சம்பவமாகவும் இருக்கலாம். இதனை அவர் வருங்காலத்தில் மறுதலிக்கலாம். அல்லது  தார்த்திக்கரன்கள் போன்ற பலர் எவ்வாறு பால்யப் பிராயங்களில் கீழ்மைப்படுத்தப்படுகின்றனர் என்பது தெரியாமலும் போகலாம்.

இவை அனைத்துக்கும் காரணம் எமது அரசியல், கலாசார, மரபு முறைமைகள் தான். அதன் முறை வழியே திருத்தங்களின்றி கல்வி முறைகள் போதிக்கப்படும் போது தமக்கான தனித்துவத்தையோ, பொதுவுடமை ரீதியிலான பரந்த ஒழுக்கத்தையோ மனதில் நிறுவத் தவறிவிடுகின்றனர். அதனால் அவர்களுக்கு Psychology போதனை அவசியம் என்று மேலைச்சார்பான நமது அறிவார்ந்த சமூகத்தினர் சிலர் அறிக்கை விடுகின்றனர். இது ஒருவகையில் நியாயம் தான். ஆனால் மரபார்ந்த கலாசாரக் கல்விமுறையுடன் எத்தனை நாட்களுக்குத்தான் ஆசிரியர்களுடன் மேலைநாட்டு உளவியல் போதனைகள் போராடும்.

நாட்டின் ஒட்டுமொத்த கல்வி முறைமையினைக் கையிலெடுத்து அரசாங்கத்தைத் திட்டித் தீர்ப்பதை விட்டு, அதன் உப பாகமாகவுள்ள நமது கல்வி மரபின் அடிநாதத்தை சற்று மறுபுனைவு செய்ய முயன்றால் இலங்கைத் தமிழ்க்கல்விப் பாரம்பரியம் மீள்நிர்மாணம் செய்யப்பட சாதகமுள்ளது. ஏனென்றால்
உப பகுதிகள் சரியாக அமையும்போது தான் தனிமுதன்மைப் பிரிவு ஒழுங்கு பெறும்.

நமது சமூகம் நாகரிகமடையவில்லை என்பதற்கும், பாரபட்சம் தலைதூக்கியே உள்ளது என்பதற்கும் தார்த்திக்கரன்களே ஆதாரம். இதுபோன்ற பதிவை நீண்ட நாட்களாக எழுதவேண்டுமென எண்ணியிருந்தேன். ஆனால் தார்த்திக்கரன் இன் வாக்குமூலம் அதற்கு வலுச்சேர்த்துவிட்டது.

குறிப்பு- இதில் அனைத்து ஆசிரியர்களையும் நான் உள்ளடக்கிவிடவில்லை.   எனது உயர்தரத்தில் தமிழறிவினை அதிகரிப்பதிலும், எனக்கான தடைகளை அதிபரிடம் சென்று கெஞ்சி நீக்குவதிலும் எனக்குத் துணைபுரிந்த எனது உயர்தரத் தமிழ் ஆசிரியையை இவ்விடத்தில் நினைவு கூருகிறேன். அவ்வாறான ஆசிரியர்கள் இருப்பதால் தான் இன்றும் நாம் கல்வி பயிலும் பாடசாலைகள் "வித்தியாலயம்" என்று அழைக்கப்படுகின்றன போல.....

சுயாந்தன்.
## அபத்தங்களைப் பின்தொடர்தல்..

Comments

Popular Posts