2016ன் பாடல்களும் காரணக் கரலிகிதமும்

2016ன் பாடல்களும் காரணக் கரலிகிதமும்


திண்ணை இதழில்...

கட்புல, செவிப்புல ஊடகங்கள் மனிதனின் சிந்தனையோட்டத்தில் பெரும்பங்கு கொண்டவை. அதில் இசையின் பங்கு தனித்துவம் மிக்கது. தமிழின் இசை ஒரு காலத்தில் பண் வடிவிலும், நாட்டாரியலிலும், கர்நாடக இசை ரூபத்திலும் இருந்தது உண்மை. படிப்படியான உலகமயமாக்கலில் கிளாசிக்கில் இருந்து மேலோங்கி இயந்திர கால மனிதன் கேட்டு ரசிக்கக் கூடியதாக மாற்றம் கண்டுவிட்டது. இதற்கு முக்கிய காரணம் தமிழ்சினிமா பாடல்கள் ஒரு பங்கு. மேற்கில் திரைப்படங்களில் பாடல்கள்  டூயட் அல்லது சோலோவாக பாடும் முறை மிக அரிது. அவை தனித்த அல்பம் ஆக வெளியிடப்படும். Ex: Akon, Eminem, Shakira, Nas, Snoop Dog, Taylor Swift போன்றோரைக் கூறலாம். திரைப்படங்களின் பின்னணி இசைக்காக அங்கு இசையமைப்பாளர்கள் புறம்பாக இடம்பெறுவர். அதில் விதிவிலக்காக சில ட்ராக்குகள் (Track) பாடலாக இடம் பெறும். Ex: Hanz Zimmer, John Williams, Alexandre Desplat, James Howard, Thomas Newman, James Horner என்று பட்டியல் நீளும்.

ஆனால் தமிழில் நிலைமை முற்றிலும் மாறுபட்டது. தனி அல்பங்கள் அவ்வளவாகக் கவனிக்கப்படுவதில்லை. திரைப்படத்தில் இடம்பெறும் பாடல்களுக்கே கிராக்கி அதிகமுண்டு. அதனால் அல்பம் செய்பவர்களின் எண்ணிக்கை வலுவாக வீழ்ந்துவிட்டது. ஏ.ஆர். ரஹ்மான் திரைப்படங்களில் பணியாற்றியிருந்தாலும் சில அல்பங்களையும் வருடாவருடம் வெளியிட்டு வந்தார். பிற்காலத்தில் அதனை அவர் தவிர்த்து விட்டார். இளையராஜா, யுவன் போன்றோரும் இவ்வகையினரே. ஹிப்கொப் தமிழா ஆதி அல்பங்கள் மூலம் பிரபலமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.  அதற்கு அவர் கையாண்ட Hip Hop என்ற தமிழுக்கு புதிதான இசைவடிவம் முக்கிய காரணமாகும்.

தமிழிசை காலகாலமாக அழியா நிலையில் தொடர்ந்து வருகின்றது. 2016ம் ஆண்டின் சிறந்த பாடல்கள் எவை என்பதையும், அதற்கான சிறு குறிப்பையும் தற்போது நோக்குவோம்.

1. அவள் குழல் உதிர்த்திடும்.
=
2012ல் Independent இசையமைப்பாளராக அறிமுகமானதிலிருந்து சந்தோஷ் நாராயணன் அதிகம் கவனிக்கப்பட்ட இசையமைப்பாளராகவுள்ளார். பிரதீப் குமார், ப்ரியா ஹிமேஷ் ஆகியோர் பாடிய இந்தப்பாடலுக்கு விவேக் வரி எழுதியிருந்தார். மெலடியாகவும் ஜாஷ் இசைக்கருவிகளின் பாவனையாகவும் துளிர்த்திருந்த இந்தப்பாடல் பலராலும் விரும்பப்பட்டிருந்தது. மூன்று விதமாக மாறிவரும் குரல்பதிவுகள். மற்றும் இடையில் வரும் Chorus என்பன சிறப்பாக இருந்தது எனலாம்.

2. தள்ளிப்போகாதே.
=
‘அடியே’, ‘ஹோஸனா’, ‘உசிரே போகுதே’ போன்ற பாடல்களின் வடிவத்தில் ரஹ்மான் அமைத்த இந்தப்பாடலை சிட் சிறீராம், அபர்னா பாடியிருந்தனர். இடையில் வரும் ராப் இனை ஆர்யான் டினேஷ் கனகரத்னம் வழங்கியிருந்தார். தாமரையின் வரிகள் புதிய இசைக்கான புதிய வரிகள் போல தோன்றியிருந்தது. ‘கலாபம் போலாடும் கனாவில் நான் வாழ்கிறேன்’ என்ற வரியினை திரையிசையில் ஈடுசெய்ய தாமரையால் தான் இயலும்.
திரைப்படத்தைப் பார்க்காத பலர் விபத்தில் இந்தப்பாடலை வைத்தமைக்காக கௌதம் மேனனை கடிந்திருந்தனர். பின்னர் படத்துடன் பார்க்கும் போது அதன் ஆழம் புரியத் தொடங்கியது.

3. மாயநதி இன்று மார்பில்.
=
கவிஞர் உமாதேவியின் வரிகள் பாடலுக்குச் சிறப்புச் சேர்த்தது. அனந்து, பிரதீப், சுவேதா பாடியிருந்தனர். சந்தோஷின் Mastering பாராட்டுக்குரியது. இரண்டுக்கு மேற்பட்ட விதமாக இசையின் வடிவம் மாறிச் செல்லும். ஆழ்வுணர்வு செல்கையில் கோரஸ் குறைக்கப்பட்டிருந்தமை இசை நுட்பம் எனலாம். ‘நீயிருந்தும் ஒரு துறவை நானடைந்தேன்’ என்ற வரிகள் பௌத்த காருண்ய நிலைதான். இசை, வரிகள் இரண்டின் தரம் விமர்சகர்களால் பாராட்க்குள்ளாகியது.

4. அடியே அழகே.
=
ஹரிஸ் ஜெயராஜின் இசை உதவியாளராகப் பணியாற்றிய ஜஷ்டின் பிரபாகரன் இந்தப் பாடலின் இசையமைப்பாளர். வரிகளை விவேக் எழுதியுள்ளார். இன்னொரு இசையமைப்பாளரான ஷீன் ரோல்டன் இந்தப்பாடலைப் பாடியிருந்தார். கூடவே பத்மலதாவின் குரலும் மெலடிக்கு வலுச் சேர்த்தது எனலாம். ஊடல் தீர்ந்து போகும் தருணம் என்ற சந்தர்ப்பப் பாடலாக அமைந்தது. அநேக இளைஞர்களால் முணுமுணுக்கப்பட்ட பாடலாகவும் இது இருந்தது எனலாம்.

5. ஆண்டிப்பட்டிக் கணவா காத்து.
=
யுவன் – வைரமுத்து கூட்டணியில் அமைந்த பாடல். முந்தையகால இளையராஜா-வைரமுத்து கூட்டணியில் உருவான கிராமத்துக் காதல் பாடல்களை ஞாபகமூட்டியிருந்தது. ‘வெள்ளக்காரி காசு தீர்ந்தா வெறுத்து ஓடிப் போவா’ என்ற வரி அவரது கள்ளிக்காட்டு இதிகாசக் கிராம வாசனையை ஞாபகமூட்டிப் போகிறது. இசைக்கான Instrumental பாவனைகூட அதனுடன் லயிக்கச் செய்துள்ளது எனலாம்.

6. கண்ணம்மா கண்ணம்மா.
=
யுகபாரதியின் வரிகள் அவரது பெயருடன் இணைந்துள்ள பாரதியின் பாடலை திரும்ப வாசிக்க வைத்தது என்றால் மிகையல்ல.

‘வாலைக்குமரியடீ-கண்ணம்மா
மருவக்காதல் கொண்டேன்’

என்ற பாரதியின் முழுவரியின் கருவைக்கொண்டு இந்தப்பாடல் அமைந்தது போன்ற பேருணர்வு தென்பட்டது. ஏற்கனவே ரஞ்சித் பரோட்டின் இசையில் ‘நறும்பூக்கள் தேடும் திருத்தும்பியே’ என்ற பாடலை பாடிய நந்தினி ஸ்ரீகர் இந்தப்பாடலையும் பாடியிருந்தார் இமானின் இசையில். அந்தப்பாடலைக் கேட்கும் போதே தோன்றியது இது போன்ற சாத்வீக பாடகிகளை ஏன் தமிழிசை கவனிப்பதில்லை என்று. மிக உன்னதமான குரல் வளம் கொண்ட நந்தினியின் இசையசைவுகள் தான் இந்தப்பாடலை இரசிக்கச் செய்துள்ளது.

7. அவளும் நானும்.
=
பாரதிதாசனின் வரிகள். விஜய் ஜேசுதாசின் குரல். ரஹ்மானின் இசை. கௌதம் மேனனின் அழகான காட்சியமைப்பு. பாடலைக் கேட்க மட்டுமின்றி பார்த்து ரசிக்கவும் செய்தது.

‘மீனும் புனலும்
விண்ணும் விரிவும்
வெற்பும் தோற்றமும்
வேலும் கூரும்’

இதுபோல எத்தனை வரிகள் இசைக்கு வராமல் ஒளிந்துள்ளனவோ தெரியவில்லை. என்று தமிழ்க்கவிதைகள் மீதான மேதமை மீது புளகாங்கிதம் கொள்ளவைத்த பாடல் எனலாம்.
மீளவும் பாரதிதாசனை திரையில் கொணர்ந்தமை சிறப்புத்தான்.

2016ம் வருடம் பாரதி, பாரதிதாசன் கவிதைகளை ஞாபகமூட்டிய பாடல் வருடம் என்றும் கூறலாம் போல. அடுத்த வருடங்களிலும் இது போல மறைந்துள்ள பழங்கவிஞர்களின் வரிகளை திரைப்படத்தில் இசையாக்கி வெளியிடுவது தமிழுக்கும், அதன் வளமைக்கும் பெருமை சேர்க்கும் என்பது பொதுவான அபிப்பிராயம்.
==
இரட்ணேஸ்வரன் சுயாந்தன்.

http://puthu.thinnai.com/?p=34112

Comments

Popular Posts