நான்கு கவிதைகள்- தமிழகத்தின் மலைகள் இதழில்....
நான்கு கவிதைகள்-மலைகள் இதழ்.
1. விபத்து.
===
நெடுஞ்சாலையொன்றில்;
இடதுபக்கம் மட்டும் எல்லா வீதிச்சமிக்ஞைகளும்.
வலதுபக்கம் மட்டும் எல்லா கோயில்களும்.
நடுவீதியால் மனிதர்கள் மட்டும் பயணிக்கின்றனர்.
வாகனங்கள் அவர்களுக்கு மேலால் பறக்கின்றன.
தற்போதெல்லாம்
விளம்பரப் பலகைகளில்
கண்ணீர் அஞ்சலிப்
போஸ்டர்களைக் காணமுடிகிறது.
2. நத்தை நகர்கிறது.
=====
தனியாக அலையும்
நத்தைக்கு
குருட்டு வீதிகளின் சாளரம்
காற்றைத் திறந்து
விட்டுக் கொண்டிருக்கிறது.
பிணச் சாம்பல்களின்
வாசனையில் வந்த
தென்றல்
என் வீட்டு ஜன்னலுக்கால் புகுந்து
அகராதியை எரித்துப்
போகிறது.
கயிற்றில் காயப்போட்ட
சாரம் ஒன்று
தூரமான வானிலிருந்து வந்த
வாடைகளுடன் உறவாடி
மீளவும் நீரில் நனைகிறது.
நத்தைக்கு நான் போர்த்திய
ஈரச்சாரத்தை
எடுத்த வாடைக்காற்று,
அகராதியின் இறுதிப்பக்கங்களால் தன்னையே வாசித்து நகர்கிறது.
எங்களைப் போலத்தான்
நம்மைச் சூழ்ந்தவையும்.
என்ன ஒரு
நாங்கள்///நீங்கள்????.
3. தடையதிகாரம்.
====
தீராத
தீர்த்தம்
உன் பார்வைகள்.
ஏன் அப்படிப் பார்த்துச்
சிரிக்கிறாய்?
நிச்சயமாக அது ஒரு சிரிப்பேயில்லை.
நீ எந்த விரல்கொண்டு
என் புகைப்படங்களை
நகம் படாமல்
என் முகத்தில் கீறுவாய்?
ஒரு சிகரட் பற்றவைத்து
உதட்டில் உறிகிறேன்.
பாதி சிகரட் உடைந்து
வீழ்ந்தவுடன் எனது
உள்வயிற்றில் புகுந்த
உன் முத்தத் தீக்கள்
எனக்கான புகைகளை
அள்ளி அள்ளி
ஆகாயம் வரை வாய்வழியே வழங்குகிறது.
'புகைத்தல் தடை' என்ற
உனது பார்வைகள்,
எனக்கு உனது
சிரிப்பையும்,நகத்தையும்
ஞாபகமூட்டுகிறது....
====
4. கனவுகளின் வனாந்தரம்.
====
கனவுகளின் வனாந்தரத்தில்
நடந்துபோன களைப்பில்
பழைய காதல் கடிதங்களை
வாசித்துக் கொண்டிருந்தேன்.
ஒன்றில் முகவரி இருக்கவில்லை.
ஒன்றில் விழிப்பு இருக்கவில்லை.
ஒன்றில் முடிவுரை இருக்கவில்லை.
ஒன்றில் பொருள் இருக்கவில்லை.
ஒன்றில் எழுத்துக்கள் இருக்கவில்லை.
வெற்று வார்த்தைகள் அலங்கோலமாக அலைந்தன.
சிரித்துக்கொண்டே,
கனவுகளிலிருந்து மீண்டுவரப் பிரியங்களின்றி,
அந்த வெற்று வார்த்தைகளை முகவரி இல்லாமல் எழுதப்பட்ட கடிதங்களுக்கு எழுத்துக்களாக ஒன்று சேர்க்கிறேன்.
கனவு கலைந்த மாத்திரத்தில்,
பழைய காதல் கடிதங்களைத் தேடிப் பார்க்கையில்,
எஞ்சியது;
'பொருள்'
'உருவகம்'
'அமைப்பு'
'கனவுகள்'
ஏதுமே இல்லாத ஒரு கவிதை......
●
சுயாந்தன்.
http://malaigal.com/?p=9757
Comments
Post a Comment