கவிதைகளின் ஆழ்முகம்: Aesthetic View-2.

கவிதைகளின் ஆழ்முகம்: Aesthetic View-2.
======
"கவிதையானது காலாதீதங்களுக்கு இடையே நீண்டு கொண்டேயிருக்கும் மாயச்சங்கிலி" என்று கலாப்ரியா ஓரிடத்தில் கூறியிருந்தார். ஒரு கேள்விக்கான விடையை அவ்வளவு கவித்துவமாகக் கூறியிருந்தார். இந்த பிராணச் சுருக்கம்(For Poetry) காலாவதியாகாத பண்பினைப் படைப்புகள் தோறும் விளக்கி வருகிறது என்றே கூறவேண்டும். அதுவும் கவிதைகளின் படைப்பு நிலையினின்று நோக்கினால் அவ்வுண்மையின் அரங்கேற்றம் தபாற்காரனின் கடிதச் சைக்கிளின் பெல்லைக் கொண்டு கடிதங்களுக்குக் காத்திருக்கும் காதலர்/வாசிப்பவர்களின் இதயத்தை பதைபதைக்கச் செய்யக்கூடியது.  தேவதச்சனின் ஒரு கவிதை;

"சுடுகாட்டில்
காய்ந்து கருகி நிற்கும்
செடியில்
உச்சி நோக்கி
உட்கார்ந்திருக்கிறது, நத்தை.
ஆழத்தில், வெகு ஆழத்தில்
நகரும் அது
எந்தத் தீவில் இருக்கிறது
என்று, என்
கண்கள் சொல்லவில்லை."

குறைபாடற்ற சொற்கள் (Flawless Verse/Words) கொண்ட இக்கவிதையினை முதல் வாசிப்பில் மாத்திரம் புரிந்து கொள்ள நினைப்பது, நாமாகவே சொல் அடுக்குகளைப் போட்டு மனக் கவிதைகளை குழப்பிக்கொள்வதற்கு ஈடாகும். அதனையே சொல்லாட்சி (Rhetorical) செய்து வலிந்து நிற்கும் இடங்களை மீள்வாசிப்புடன் அணுகும் போது அக்கவிதையின் ஆழ்முகம் துலக்கமாகிவிடும்.

1.சுடுகாடு
2.செடி
3.உச்சி(Must be வானம்)
4.ஆழம்
5.தீவு
6.கண்கள்

இவை வெறுமனே காட்சிப்படுத்தப்பட்ட வார்த்தைகளின் அணிவகுப்புப் போல சாதாரண பார்வையில் தோன்றலாம். உண்மையில் அவ்-வார்த்தைகளின் நகர்த்துகையில்தான் (Movement) மொத்தக் கவிதைக்குமான பொருளும், கருத்தும் வெளிப்பட்டுநிற்கின்றது.

கவிதையினை நாம் தனிமனித போர்வை வழியில் நின்று பார்க்கும் போதிலே ஒவ்வொரு கண்ணோட்டமும் (Point Of View) மாறலாம். ஒருவர் புலமைத்துவ ரீதியில் கவிதைக்கான தேற்றங்களை அமைக்கலாம். இன்னொருவர் வெளியுலகினை ஐயப்பாடுகளுக்குட்படுத்தி சில கருதுகோள்களை முன்வைக்கலாம். ஆனால் வாதம் ஒன்று. கற்றதும் பெற்றதும் என்ற கோணத்தில் பார்வைகள் வேறு. வெவ்வேறுபட்ட அர்த்தங்களுக்கு உட்பட்டு நிற்கும் இக்கவிதையின் ஆர்ப்பரிப்பு ஒரு மனிதனின் மரணத்தையும் கூறலாம். அல்லது நான் உடலால் மரணித்து கண்களால் மாத்திரம் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கும் Paraphysics ஐயும் கூறலாம்.

"என் கண்கள் சொல்லவில்லை" என்பது கவிதையின் ஆரம்ப வார்த்தைகள் அனைத்துக்குமான புதிர்ச்சொல் போலவே தொழிற்படுகிறது. சுடுகாடு ஒரு நிலைத்த பூமியையும், அதேநேரம் அருகாமையில் மனிதரின் இருப்பையும் அடையாளப்படுத்துகிறது. கருகியசெடி ஒரு வேனிற் காலத்தின் கடுமையையும், இக்கவிதையில் உச்சி என்பதனை வானம் என்றே எடுத்தல் வேண்டும். "உச்சிமீது வானிடிந்து.." என்ற பாரதியின் வாசகத்தை இங்கு துணைக்கொள்ளலாம். உச்சி என்பதை தேவதச்சன் போன்ற சிந்தனைக் கவிகளின் கவியிடத்தைப்(Poetry Situation) பொறுத்து வானமாகவே நாம் கொள்ளவியலும். அடுத்துள்ள ஆழம் என்பது கிட்டத்தட்ட ஒரு Sphere இல் நிகழ்வது/இருப்பது. எந்த மட்டத்திலும் இருக்கலாம். தரையினின்று மிகத் தாழ்நிலம் எனவும் கருதவியலும். பௌதீகச் சம்பவங்களை கவிஞர் முடிக்கும் தறுவாயில் "தீவு" என்ற கொள்நிலச் சொல்லாடலையும் பிரயோகித்துவிடுகின்றார்.

அதேவேளையில்,
A.உட்கார்ந்திருக்கிறது.
B.நகரும் அது.
C.இருக்கிறது.
என்ற மூவகை அசைநிலைத் தொழிற்பாடுகள் ஒரு இயக்கத்தையும்(உயிரின்) இங்கு தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றது.

"சுடுகாட்டின் செடிமீது அமர்ந்துள்ள நத்தையானது மிக ஆழத்தினூடாக நகர்ந்து ஒரு தீவினை அடைகின்றது." என்ற தெளிவுரையை அரைகுறையாக இக்கவிதைக்கு மேற்சொன்ன அசைநிலைச் சொற்களைக்கொண்டு கூறமுடியும். இந்த அரைகுறைத் தெளிவுரையை முடித்து வைப்பதற்கு "என் கண்கள் சொல்லவில்லை" என்ற கவியின் வசனத்தை விவாதப் பொருளாக எடுக்கமுடியும். எளிதில் புரிந்துகொள்ள ஒரு உதாரணப் படமத்தை அடையாளமிடலாம்.

/"""முயல்-கண்கள்
ஆமை- நத்தை
தோல்வி- சொல்லவில்லை"""/
அதாவது "முயல் ஆமையால் தோற்றது" என்பது போல, நத்தையின் அசைவை/இருப்பை கண்கள் காணவில்லை என்றோ சொல்லவில்லை என்றோ கருதவியலும்.

ஆழமான(Profound), உலகம் மீதான அறிவார்ந்த பார்வை (Intellectual View Of Universe) என்பன ஒரு தேவதச்சன் கவிதைக்கான மூலத் தோற்றப்பாடுகள் எனவும் கூறலாம். ஒருசோறு பதம்போல மேற்சொன்ன ஒரு கவிதையே சான்றெனலாம்.

ஆரம்பத்தில் சொன்னது போல காலாதீதமாகாத கவிதைகள் மாயச்சங்கிலிகளாக நம்மை ஆழத்தில், வெகு ஆழத்தில் தொடர்கின்றன என்பது கவிதைகளுக்கான ஆழ்முகத் தொழிற்பாடு என்றே கூறவேண்டும்.

சுயாந்தன்.

Comments

Popular Posts