ஏ.ஆர்.ரஹ்மானின் கலைக்கூட விளக்குகள்.

ஏ.ஆர்.ரஹ்மானின் கலைக்கூட விளக்குகள்.

ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றிச் சுய அறிமுகம் செய்து அலுத்து விட்டது. "Mozart Of Madras", இசைப்புயல் (Musical Storm), "கிழக்கின் ஜோன் வில்லியம்ஸ்", "ஒஸ்கார் நாயகன்" இப்படியும் பலபுகழ் கூறி அவரை விழித்து ஏதேனும் எழுதலாம் என்றால், அதையும் நிறையப் பேர் எழுதத் தொடங்கிவிட்டனர். அதையும் தாண்டி, அவரது பாடல்கள் மீது சில ரசனைக்குறிப்புகள் எழுதலாம் என்பதே தற்போதைக்குக் கொஞ்சம் ஆசுவாசமளிக்கின்றது.

Lahari Music, Ayngaran Music,
Aditya Music, Lahari Music,
Sa Re Ga Ma, T-Series, Sony Music, Star Music, KM Musiq, Bayshore, Pyramid, Magnasound, Vega Music முதலான இந்திய இசைப்பதிவுச் சிட்டைகளும் (Label), N.E.E.T., Interscope முதலான சர்வதேச லேபிள்களும் ரஹ்மானின் இசை அல்பங்களைப் பிரபல்யப்படுத்துவதிலும், சரியான விதத்தில் உலகெங்கும் வழங்குவதிலும் பெரும்பங்கு வகித்துள்ளது எனலாம். ரஹ்மான் இவர்களுடன் சிறந்த உறவு பேணியதும் வெற்றியைத் தொட்டதற்கு சிறு காரணம் என்று கூறமுடியும். அவரது எண்ணற்ற சப்தங்களிலுருவான எனக்குப் பிடித்த ஒலித்துளிகள் இவை.

1. பொம்பே தீம்.
ரஹ்மானின் Notes க்கு புல்லாங்குழல் வித்துவான் நவீன் குமாரால் வாசிக்கப்பட்ட இசையோசைகள் தீமிற்கு முழுமை சேர்த்திருந்தது. திரைப்படத்தில் இந்தக் கருவிசை(Theme) இடம்பெறும் போது மாற்றீடான இன்னொரு இசையை மனது பிரஸ்தாபித்திருக்காது என்றே கூற வேண்டும். 2002 உருவான பலஸ்தீனிய திரைப்படமான "Divine Intervention" இலும் 2005 வெளியான நிகலஸ் கேஜின்  "Lord of War" என்ற ஹொலிவூட் படத்திலும், ஜீலியன் ஸ்னோபெல்லின்
"Miral" என்ற திரைப்படத்திலும் முக்கிய இடங்களில் பின்னணி இசையாக Bombay Theme ஒலித்தது பெருஞ்சிறப்பு எனலாம்.

2. தங்கத் தாமரை மகளே.
அந்தரங்கமான ஒரு பாடல் தளமாக இது அமைந்திருந்தது. பாடலைப் பாடிய எஸ்.பி.பி தேசிய விருது பெற்றிருந்தார். ஒருத்தி மீது மையல் கொண்டு போதையில் பாடல் பாடுவதாக(Emotionally Exhilarated) வருகிறது. "விக்கு விநாயக்ராம்" இன் "கடம்" மிகச் சிறப்பான பங்களிப்பைப் பாடலுக்கு அளித்தது. பாடலின் முடிவுவரை கடத்தின் பங்கு கேட்போரைச் சுண்டி இழுத்து விடுவதுடன், ரஹ்மானின் வாத்திய ஒழுங்கமைவு(Arrange) மெய்சிலிர்க்கவும் வைத்தது. தாபத்தின் தாகத்தை இசைவழியே வெளிக்கொணர  பாடலில் ரஹ்மான் மேற்கொண்ட Interludes மிக சிறப்பு மிக்கது. மால்குடி சுபாவின் Chorus மலைமீது ஏறிநின்று தனியே கத்துவதான பிரமையை உண்டாக்கியிருந்தது.

3. பச்சை நிறமே பச்சை நிறமே.
ரஹ்மானின் பஞ்சதன் பதிவுக்கூடத்தில் பாடல் பதிவுசெய்யப்பட்டது. அருவி, மிளகாய் வற்றல், காஷ்மீர் காடுகள், கிராமம், தாஜ்மஹால், ஏரி முதலான மணிரத்னம் இன் காட்சியமைப்புக்களைப் பாடல் ஈடுகட்டி இருந்தது எனலாம். நவீனின் புல்லாங்குழலும், புதிய இசைச் சந்தங்களும்  (Synthesizers) பாடலின் தரத்தை வண்ணமயமாக்கியது. அத்துடன் கருணை ரசம் அங்கங்கு பொங்கிவரவும் காணலாம். அதற்குக் காரணம் இந்தப்பாடல் "கரஹரப்பிரியா" இராகத்தில் இடம்பெற்றிருந்ததேயாகும். கைலாயத்தில் சிக்கிய ராவணன் இந்த இசையைப் பாடியே மீண்டதாக புராண வரலாறுண்டு. அலைபாயுதே திரைப்படத்திலும் அதனைக் காதலுக்கு ரஹ்மான்-மணிரத்னம் கூட்டணி பயன்படுத்தியுள்ளது போல.

4. கண்ணாமூச்சி ஏனடா.
ராகங்களில் பிரியப்பட்ட ராஜீவ் மேனன் இயக்கிய "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. இவரியக்கிய இரண்டு படங்களின் அநேக பாடல்கள் ராகம் தழுவியே அமைந்திருந்தது. இதுவும் அவ்வாறு தான். சமச்சீரின்றிக் குரலின் ஏற்றத் தாழ்வுகள் வந்து போகும். நட்டகுறிஞ்சி ராகத்தில் ஹிந்துஸ்தானிய இசை வாத்தியங்களை அதிகப்படுத்தாமல் ரஹ்மானின் பாடலொழுங்கமைப்பு சிறப்பாக அமைந்திருக்கும். ஒலிப்பேழையில் "கண்ணாமூச்சி" பாடல் இரண்டு Verson இல் இடம்பெற்றிருக்கும். மேற்சொன்ன ராக ஆலாபனைகளை ஜேசுதாசின் வேர்சனில் தெளிவுறக் காணலாம். மிக நேர்த்தியான கர்நாடக, தமிழிசை, மேலை, ஹிந்துஸ்தானிய பாடல் என ரஹ்மானைப் பாராட்டலாம்.

5. ஹோஸனா.
2010க்கு முன்பு வெளியாகிய ரஹ்மானின் பாடல்கள் புதுமையாகவே இருந்தன. அதையே அவர் தொடர்ந்து செய்து வந்தார். ஆனால் இந்தப் பாடலின் மூலமாக புதுமையிலும் புரட்சி செய்தார் என்றே கூறவேண்டும். ஹோஸனா என்ற சொல்லின் இலக்கிய ரீதியிலான அர்த்தம் "இப்போதே காப்பாற்று" என்பதாகும். விஜய் பிரகாஷ், சுஷானே மற்றும் பிளாஷே ஆகியோர் பாடலைப் பாடியிருந்தனர். ரப் இன் இடைச்செருகலால் பாடல் இளையோரிடையே மகுடவாசகம் போல வருடக்கணக்கில் முணுமுணுக்க வைத்தது. Backstreet Boys இன் அல்பம்களில் ஒலிக்கும் அரிய செமி மெலடி பாடல்கள் போலவும் இருந்தது.

6. நறுமுகையே நறுமுகையே.
இருவர் திரைப்படப் பாடலான இதனை பொம்பே ஜெயஸ்ரீ மற்றும் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் பாடியிருந்தனர். கர்நாடக இசை மற்றும் ஜாஸ்(Semi Part) இசையின் கோர்வையில் பாடல் உருவாக்கம் பெற்றது. இத்திரைப்படப் பாடல்களின் சிறப்பு யாதெனில் இதற்கான பாடல் பதிவுகளிலும் வாத்திய இசையிலும் பயன்படுத்தப்பட்ட கலைஞர்கள் அன்றும் இன்றும் துறை சார்ந்த விற்பனர்கள். குறிப்பாக லோய் மணடேஷா (Shankar-Eeshan-Loy Trio Band), உஸ்ராட் சுல்தான் கான், விக்கு விநாயக்ராம், ரஞ்சித் பரோட், சிவமணி, மோகன் பட் ஆகியோரைக் குறிப்பிடலாம். ஆபிரிக்க-கியூப ட்ரம்ப் வாத்தியமான Bongos சிவமணியால் வாசிக்கப்பட்டது சிறப்பம்சமாகும். கம்பீரநாட்டை ராகத்தில் இந்தப்பாடல் உருவாக்கப்பட்டிருந்தது. கடத்தின் ஓசை பாடலெங்கும் சரிவர ஒன்றித்துப் போனதனால் பாடலின் தெளிவு மேம்பட்டே இருந்தது எனலாம்.

7. காற்றே என் வாசல் வந்தாய்.
தர்பாரி-கனடா ராகத்தில் அமைந்த இந்தப்பாடல் உ.கிருஷ்ணன் மற்றும் கவிதா கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் பாடியிருந்தனர். பஞ்ச பூதங்களை மையமாகக் கொண்டு படத்தின் ஐந்து பாடல்களும் இசைக்கும். இந்தப்பாடல் காற்றினை வைத்து உருவாக்கம் பெற்றது. மிக அருமையான குரல்வளம் ஆத்மாவின் மையம் வரை சென்று வருகின்ற ஒரு உணர்வை ரஹ்மானின் இசை காட்டியிருந்தது. பாடல் இடம்பெற்ற ராகத்தின் சிறப்பு யாதெனில் தூக்கமின்மை, மற்றும் தூக்கத்துடன் சம்பந்தப்பட்ட நோய்களை இல்லாது பண்ணும் என்று ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.  மலரே மௌனமா என்ற வித்யாசாகரின் பாடலும், கல்யாணத் தேன்நிலா என்ற இளையராஜாவின் பாடலும் இதே ராகத்தில் அமைந்தது தான். தூக்கமில்லாதவர்கள் இந்த ராகத்திலமைந்த பாடல்களைக் கேளுங்கள்.

8. தள்ளிப் போகாதே.
சென்னையில் மார்கழி பருவத்தில் இந்தப்பாடலின் பதிவுகள் நடைபெற்றிருந்தது.
'அடியே', 'ஹோஸனா', 'உசிரே போகுதே' போன்ற பாடல்களின் வடிவத்தில் ரஹ்மான் அமைத்த இந்தப்பாடலை சிட் சிறீராம், அபர்னா பாடியிருந்தனர். சிட்ஸ்ரீராம் இப்பாடலுக்காக எவ்வளவு மினைக்கட்டு தனது வளத்தை மொத்தமாக வழங்கியுள்ளார் என்பதனை பாடலில் நீளும் Chorus சப்தங்கள் தெளிவாகக் காட்டி நிற்கிறது. இடையில் எதிர்பாராத விதமாக வரும் ராப் இனை ஆர்யான் டினேஷ் கனகரத்னம் வழங்கியிருந்தார். தாமரையின் வரிகள் புதிய இசைக்கான புதிய வரிகள் போல தோன்றியிருந்தது. 'கலாபம் போலாடும் கனாவில் நான் வாழ்கிறேன்' என்ற வரியினை திரையிசையில் ஈடுசெய்ய தாமரையால் தான் இயலும்.
திரைப்படத்தைப் பார்க்காத பலர் விபத்தில் இந்தப்பாடலை வைத்தமைக்காக கௌதம் மேனனை கடிந்திருந்தனர். பின்னர் படத்துடன் பார்க்கும் போது அதன் ஆழம் புரியத் தொடங்கியது.

9. நியூ யோர்க் நகரம் உறங்கும் நேரம்.
ரஹ்மானின் குரலும், இடையிசையினை நிரப்ப அவர் கையாண்ட Chorus உம் மிகச்சிறந்த Effort எனலாம். பாடலின் குரல் எங்கள் மீதே ஏதோவொரு உணர்வினைப் பிரதிபலிப்பது போன்ற உள்ளப் பொருமையை வெளிக்கொணர்ந்திருந்தது. "நாட்குறிப்பில் நூறுதடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா. எழுதியதும் எறும்பு மொய்க்கப் பெயரும் ஆனதென்ன தேனா." என்ற வாலியின் வரிகள் பாடலின் இசைக்கு வலுச்சேர்த்தது. "Ode to Love" என்பதாக தனிமையினதும், பருவகால மாற்றங்களதும் வெறுமை பாடலெங்கும் தவழ்ந்து வருகிறது. இப்போது கேட்டாலும் பாடல் அதன் ரசனையில் இருந்து வெகுதூரம் பாய்ந்து மனவுணர்வுகளை அசைத்தே தீரும்.

10. ஜோ பி மெய்ன்(ஹிந்தி)
இந்தியில் இளைஞர்களின் ரசனைக்கேற்ப படம் இயக்குபவர் இம்தியாஸ் அலி. Rockster என்ற இவரின் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலை மொகித் சவுக்கான் பாடியிருந்தார். படத்தின் 99% பாடல்களை அவரே பாடியிருந்தார். இந்த படப்பாடல்கள் அனைத்தும் பொலிவூட் சினியுலகின் மைல்கல் என்றே கருதலாம். சூபி இசை, குஜராத்திய, பஞ்சாபிய நாட்டுப்புற இசை, ஹுவாலி முதலானவற்றை இணைத்து பாடல்களை அளித்தார் ரஹ்மான். மொத்த இசைத்தொகுப்புமே அனைவரின் பாராட்டுக்கும் உள்ளானது. ஆனால் இந்தப்பாடல் என்னை அதிகம் ஈராத்திருந்தது. மொழி புரியவில்லையாயினும், வேலையற்ற ஒருவன் ஏமாற்றமற்ற கனவுகளுடன் கசங்கிப் போய் வீதிகளில் வதங்கி வாடிப் பாடுவதாகவே இப்பாடல் எனக்குள் ஒரு உணர்வளிப்பை ஏற்படுத்தியது. ரஹத் பதே அலி கான் (Rahat Fateh Ali Khan) இந்தப் பாடலைப் பாடியிருந்தால் அவரின் குரலில் ஹவாலி(Qawwali) இசை மிகத் தெளிவாகவும், துல்லியமாகவும்  இருந்திருக்கும் என்ற எண்ணம் அடிக்கடி உதிர்ப்பதுண்டு. (மொகித் ஒன்றும் சளைத்தவரல்ல. எனினும் ஒரு ஆவல். அல்பங்களில் இரண்டாவது வேர்சன் பாடலை எதிர்பார்த்து ஆர்வமுடன் காத்திருப்போரைப் போல).

ரஹ்மானின் கலைக்கூட விளக்குகள் ரசனையின் மின்சாரம் மூலமாகவே பிரகாசமாக ஒளிர்கின்றன. அவற்றின் ஆரம்ப இருப்பு பிரகாசமாகக் இருப்பதால் மின்சாரம் இல்லாமலும் எரியும். எனினும் ரசனை மின்சாரம் எப்போதும் இரட்டை வெளிச்சம் கொடுக்கும் வல்லமை மிக்கது.

# Isai Thamizhan..
# Cultural Icon Of Universal Tamilians.
# உந்தன் இசைகளின் குரல் தொலை தூரத்தில் இதோ.......

By: சுயாந்தன்.

Comments

Popular Posts