குற்றமும் கவிதையும்- நடு இதழ் பிரான்ஸ்.

குற்றமும் கவிதையும்- உலக சினிமா.

‘கொலைவினையராகிய மாக்கள் புலைவினையர்

புன்மை தெரிவாரகத்து’ – 33 ம் அதிகாரம்-கொல்லாமை-329.

என்ற வள்ளுவரின் குறள் இன்றைய சமூகக் குற்றங்களைப் பற்றி ஆராயும் போது ஞாபகம் வரும். கொலையைச் செய்பவர்க்கு அத்தொழில் சிறுமை என்று தெரியாது. இருப்பினும் அதுபற்றி அறிந்தவர்கள் அதனை இழிவாகவே எண்ணுவர். இதேபோல தாவ்தயேஸ்கியின் கருத்தில்;

‘வாழ்வின் வலிகள் மனிதனை இரண்டு விதமாகப் புரட்டிப் போடும். ஒன்று அது வாழ்க்கையின் மீதான வெறுப்பாக மாறும். மற்றொன்று நன்றாகப், பழுத்த, ஞானப்பழமாக மாற வழிவகுக்கும்.’ என்று கூறப்பட்டுள்ளது. இதில் முதலில் கூறிய வாழ்க்கையின் மீதான வெறுப்பில் உருவாகும் சைக்கோ தொடர் கொலைகாரன் பற்றிய திரைப்படம் தான் ‘I Saw The Devil’. மேற்கூறிய குறளும், தஸ்தயேவ்ஸ்கியின் கருத்தும் திரைப்படத்தின் சாராம்சம் எனலாம்.

ஆசிய சினிமாவின் மாறுபட்ட மற்றும் அகன்ற வகைத்( Wide Genre)திரைப்படங்களை படைக்கும் கிம் கி வூன்(Kim Jee Woon) இத்திரைப்படத்தின் இயக்குனராவார். லீ பியுங் ஹன் மற்றும் ஹோய் மின் ஸிக் (Choi Min Sik) ஆகியோரின் பிரதான செயலாக்க பாத்திரத்தில் திரைப்படம் உருவாகியுள்ளது.

உளவியல் திகில் என்ற வகையில் வெளியான இத்திரைப்படத்தில் நடைமுறைச்சாத்தியமான விடையங்களை திரையில் காட்சிப்படுத்தி இயக்குநர் வெற்றி கண்டிருந்தார் என்றே கூற வேண்டும். ‘அதீத வன்முறையின் எக்களிப்பு’ என்று படத்தின் தலைப்பை மறு-மொழியாக்கலாம். இத்திரைப்படம் 40 வரையான பிராந்தியவிருதுப் பரிந்துரைகளில் 15 வெற்றி விருதுகளையும் பெற்றுள்ளது. அத்துடன் 2011ம் ஆண்டு சூடானிய திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டுள்ளது.  அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட நியுயோர்க் ரைம்ஸ் சஞ்சிகை திரைப்படத்தின் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, இசை முதலிய சினிமாடிக் கூறுகளை ஒருங்கே பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இசையில் விருப்பம் கொண்ட தொடர்கொலைகாரன் (Serial Killer) ஒருவன் இந்த உலகம் எப்பொழுதும் எனக்கெதிராகவேயுள்ளது என்ற சமூக எதிர்ப்பு (Anti-Socialism) மனோநிலையில் கொலைகளை ஈவிரக்கமின்றிச் செய்கிறான். அவன் பெண்களை வன்புணரும்போது நிறம்சார்ந்த (Complexion)கேள்விகளை முன்வைத்து இச்சைகளைத் தீர்க்கிறான். அகண்ட உலகில் காணப்படும் இதுபோன்ற தர்க்கமில்லா காரணங்கள் திரைப்படத்தில் வன்முறைக்குப் பயன்பட்டுள்ளது என்பது பிரக்ஞை பூர்வமான உண்மை.

இத்திரைப்படத்தில் உயர்ந்த சினிமா தரத்துக்கு சில அம்சங்கள் மேம்பட்டுள்ளது சிறப்பம்சமாகும். அதாவது;

மனைவியை இழந்த கணவனின் மனோநிலை யதார்த்தமும், பழிவாங்கும் எண்ணமும் திரைப்படத்தின் பிரதான கதையோட்டம்.அதை அவன் தான் செய்யும்(உளவு) தொழிலுடன் மையப்படுத்தியே மேற்கொள்வான்.Film Noir திரைப்படங்கள் போல ஒளிப்பதிவாளர் லீ மோ கை (Lee Mo Gae)தனது பணியினைச் செவ்வியல் வடிவில் தந்துள்ளார்.திரைப்படத்தின் தொடக்கத்தில் இருந்தே உருவாகிவரும் முறைசார்ந்த (Orthodox)பின்னணிஇசை. சில இடங்களில் சொற்பமாகவே ஒலித்த இங்கிதம் பாராட்டுதல் மிக்கது.தொடர்கொலைகாரனாகவே மாறிய(Characterise) ‘ஹோய் மின் ஸிக்’ இன் உன்னதமான நடிப்பு (இது ஒன்றே இத்திரைப்படத்தை உலகசினிமாவின் காட்சிநிலையை விஸ்தரித்துச் செல்லக் காணலாம்)திரைப்படத்தில் உள்நுழையும் அனைத்துக் கதாமாந்தர்களும் யதார்த்தப் பிரதிபலிப்பைக் கையாளும் விதம்.படத்தின் கடைசி ஐந்து நிமிடங்களுக்குள் சொல்லப்படும் மனித உணர்வுகளின் ஆழ்நிலையும், அதிர்ச்சியான முடிவுகளும்.

இப்பொருண்மைகளைத் தவிர திரைப்படம் ஆங்காங்கே சில அருவருக்கத்தக்க தன்மைகளை உள்வாங்கியிருக்கும். குறிப்பாக பாலியல் வக்கிரங்கள் சகிக்க முடியாத அளவுக்கு திரைப்படத்தில் நிலைகொண்டிருக்கும். இதனை வரைட்டி(Variety) என்கிற அமெரிக்க வார இதழ் அழுக்குமிக்க ஆபாசச் சித்திரவதை (Ugliest Torture Porn) என்று விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் ‘குணம்நாடிக் குற்றம்நாடுவது போல்’அதீத வன்முறையின் கருத்தியல் சமூகத்தின் விளிம்பு நிலைகளைப் பிரதிபலிப்பது தானே. அதேபோக்கில் பல நிரூபணத்துவங்களைத் தன்னுள்ளே தடையின்றி எடுத்துச்  செல்வதனால் இத்திரைப்படத்தை ஆசிய சினிமாவின் முக்கிய படைப்பென்றே கருதலாம். குறிப்பாக திரைப்படத்தின் முடிவுக்குச் சற்று முந்தைய யாதார்த்தங்கள்.

இதேபோன்ற எலி-பூனைக் கதையில் வெளிவந்த No Country For Old Menதிரைப்படமும், ஆணாதிக்க வன்மத்துடன் படைக்கப்பட்ட ‘ஆரண்ய காண்டம்’ எனும்  தமிழ்ப்படமும் ஒரே வகையினவைதாம். தத்தம் பிராந்தியம் சார்ந்த வன்முறைகளின் சாரத்தை வெளிக்கொணர்வதில் திரைப்படங்களின் பங்கானது அளப்பரியது. கிட்டத்தட்ட ஒரு யுத்தக்குற்றத்தைப் பிரசுரிக்கும் தொலைக்காட்சியின் ஆவணப்படம் (Documentary) போன்றது.

தொடர்கொலைகாரன் சாவின் விளிம்பிலே நின்றுகொண்டு பழிவாங்கல் படலத்தில் தானே ஜெயித்ததாகவும், எதற்கும் தான் அஞ்சவில்லை, மன்னிப்புக் கோரமாட்டேன் என வியாக்கியானம் பேசுகிறான். அத்தருணத்தில் அவனது தாய், தந்தை, மகன் ஆகியோர் தத்தமது உறவுநிலைகளில் நின்று அவனை அழைப்பார்கள். அவனோ சில விநாடிகளில் மரணமடையப் போகிறான். அந்த நிலையில் அவன் அச்சமடைகிறான். அத்துடன் படம் பார்ப்போரிடையே ஒருவகை தகிப்பையும், அந்தக் கொலையாளனிடம்  பச்சாதாபத்தையும் உண்டாக்கிவிடுகிறது.

இதேபோன்ற முன்வைப்பைப் பின்வரும் ரமேஷ்- பிரேம் கவிதை கூறும்;

‘கண்விழித்த அவர்கள்

பயந்து நடங்கினர்.

அவன் தனது அங்கியில்

ஒட்டியிருந்த சாம்பலை உதறியபடி

வெற்றுப்பானையில் சிறுநீர் கழித்தான்.

பிறகு தொடுவானை நோக்கி நடந்தான்.

அவர்கள் பானையைச் சுற்றி

அமர்ந்து குனிந்து நோக்கினர்.

பெருங்கடலொன்று உள்ளே

அலையெழுப்பி ஆர்ப்பரிக்க

அவன் பாய்மரத்தை

இழுத்துக்கட்டிக் காற்றோடு ஏகினான்’.

எனவரும் இக்கவிதையிலே, ‘அவன் பாய்மரத்தை இழுத்துக்கட்டி காற்றோடு ஏகினான்’ என்று கூறுவது தொடர்கொலைகாரனது தவறு, பயம், கொலை அனைத்தையும் நிறுத்திக்கொண்டு மரணத்தைத் தழுவியது பற்றியாகும் என்று முன்வைக்கலாம். இங்கே கருத்தியல் ரீதியில் திரைப்படம் வேறு, கவிதைகள் வேறு. ஆனால் உணர்வு சார்ந்த திரைப்படங்களில் சில கவிதைகளின் முன்வைப்பு மிகச்சிறந்த விமர்சன நிரூபணத்துவமாகவே (Critic  Empiricism) இருக்கும்.

இதேபோல திரைப்படத்தின் இறுதியிலே  தனது மனைவியைக் கொன்றவனைக் கொன்றுவிட்டேன் என்று அல்லது பழிவாங்கிவிட்டேன் என்று ஹீரோ வருந்தி அழுவான். அந்நிலை ஒரு கவித்துவ நிலையைப் பிரசவிக்கிறது. அமெரிக்காவின் நவீனத்துவ படிமவாதக்(Modern Imagism) கவிஞர் வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ்  அவர்களின் கவிதையை ஞாபகமூட்டுகிறது.

அதில்;

‘ஐஸ் பெட்டியிலிருந்த

ப்ளம்ஸ்பழங்களை

நான் தின்று விட்டேன்.

ஒருக்கால் காலை உணவுக்காக

நீ வைத்திருந்ததோ என்னவோ..

என்னை மன்னித்துவிடு

ரொம்ப ருசி அவை

ஒரே தித்திப்பு சில்லென்று…’

என்ற கவிதையை திரையியல் ரீதியில் நோக்கினால் ஒரு இனம்புரியாத வேதனை மேலெழும். ‘என்னை மன்னித்துவிடு அவை ரொம்ப ருசி’ என்ற வரிகளை அவனது அழுகையுடன் படிமமாகக் கொண்டுசென்று வைத்தால் பழிவாங்கி விட்டேன் என்னை மன்னித்துவிடு மனைவியின் பிரிவாற்றாமை என்னை அப்படிச் செய்யத் தூண்டிவிட்டது என்பது போல அவன் அழுது கொண்டு செல்வான். இங்கு பழிவாங்கல் என்பது எங்ஙனம்  ஒருவனை வேதனையூட்டுகிறது என்ற கருத்தின் மேலோங்கல் அனுபவித்தவன் அறிந்திருப்பான்.

சமூகம்சார் சிந்தனை நோக்கில்; பழிவாங்குவதும், தொடர்கொலைகளும் மலிந்துள்ளது. இதில் ஏதோ ஒன்று ஒழிந்தால் தான் மற்றொன்று வீழ்வுறும் அல்லது நிறைவுறும். இதனைச் சிறந்த திரைக்கதைச் சாராம்சங்களால் கூறிய இயக்குநரை வெகுவாகப் பாராட்டலாம். படைப்பாக்க ரீதியிலும் ஆசிய சினிமா வரிசையிலும் மிகச் சிறந்த யதார்ததச் சித்திரம் இதுவெனலாம்.

இவற்றின் கூறுகளை எடுத்து தமிழ் சினிமாக்களில் வைத்து, அது ஒரு கோ-இன்சிடன்ஸ் என்று கூறுவதும், எமது படைப்புக்களை கோ-இன்சிடன்ஸ் யுக்திகளால் நாமே தாழ்த்திக் கொண்டும் உலக சினிமா Scope இல் பூஜ்ஜியமாக இருப்பதும் ஒரு துன்பியல் சம்பவம் தான்

இ.சுயாந்தன்-இலங்கை.

http://www.naduweb.net/article/i-saw-the-devil/

Comments

Popular Posts