பிரபா வர்மா எனும் பிறவிக் கவிஞன் ஓர் அறிமுகம். / இரட்ணேஸ்வரன் சுயாந்தன்.

பிரபா வர்மா எனும் பிறவிக் கவிஞன் ஓர் அறிமுகம். / இரட்ணேஸ்வரன் சுயாந்தன்.
==
113வது மலைகள் இதழில் பிரசுரமாகியது...
===

இம்முறை தமிழில் ‘கல்யாண்ஜி’ என்கிற வண்ணதாசனுக்கு ‘ஒரு சிறு இசை’ எனும் சிறுகதைத் தொகுப்பிற்காகச் சாகித்ய அகடமி விருது கிடைத்துள்ளது. அதேபோல மலையாள மொழிக்கான சாகித்ய விருது ‘பிரபா வர்மா’ க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது ஷியாமமாதவம் எனும் கவிதைத் தொகுப்புக்கு (Anthology) இவ்விருது கிடைத்துள்ளது.

கவிஞர், விமர்சகர், பாடலாசிரியர், பத்திரிகையாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், கல்வியியலாளர் என்று பன்முகம் கொண்டவர் வர்மா. கல்வியாளர்களால் இவர் ‘பிறவிக்கவிஞர்’ எனவும் கருதப்படவதுண்டு. இவரது படைப்புக்களின் உட்கூறுகளைப் பின்வருமாறு வகுக்கலாம்.
1. மரபையும், நவீனத்தையும் ஒருங்கே ஒன்றுசேர்த்துக் கிடைக்கும் கவிதையாக்கங்கள்.
2. சுயசிந்தனை (Original) மூலமாகக் கவிதைகளைத் திறம்பட எடுத்துரைக்கும் ஆளுமை.
3. ஆழமான காதலுணர்வுகளும், அளவுகடந்த கவித்துவ உருவமைப்புக்களும். (Poetic Images).
4. தத்துவ நுண்ணோக்கும், வாழ்வை வாழ்வதற்கான அடிப்படையான புரிதலும்.

பரந்ததூரம் உலாவரக்கூடிய இவரது பன்முக இலக்கிய ஆளுமையானது மலையாள மூத்த இலக்கியவாதிகளால் மதிப்புடன் நகர்த்தக்கூடிய ஒன்றாகவே இருந்துள்ளது எனவும் கூறலாம். அதனால் தான் சிறிய வயதில் திறமைக்கேற்ற விருதுகளையும், மதிப்புரைகளையும் பெற்றுள்ளார் எனக்கருதலாம். ஒன்பது கவிதைத் திரட்டுக்களையும், சமகால சமூக-அரசியல் வெளிகளை இலக்கியத்துடன் ஒப்பிட்டு நான்கு நூல்களையும், திறனாய்வுக்கட்டுரைகள் மூன்றும், ஊடகக் கற்கை மற்றும் பயணக்குறிப்புகள் தலா ஒன்றுமாக எழுதியுள்ளார். அத்துடன் இவரது கல்விசார்ந்த நூல்களும் பிரபலமானவை.

1975-1980 காலப்பகுதியில் கல்லூரி/பட்டப்படிப்புக் காலத்தில் மாணவர் அரசியலில் அதீத ஆர்வமுள்ளவராகவும் இருந்ததுடன், கவிஞராகப் பிரபலமாக முன்பு இந்திய மாணவர் ஒன்றியப் பிரதிநிதியாகவும் பதவிவகித்துள்ளார். இவையே பிற்காலத்தில் இவர் எழுதிய சமூக-அரசியல் விவாதங்களுக்கு அடிகோலியது எனலாம். “பாஸிசம் எதற்கு?” என்ற கல்விக்கட்டுரை நூல் இதற்குத் தக்க சான்றாகும்.

1990ம் ஆண்டில் வர்மாவின் “சூர்ப்பனகை” என்ற முதலாவது கவிதைத் தொகுப்பு வெளியாகியிருந்தது. இதன் தரம் கருதி வைலோப்பிள்ளி விருது தொகுப்புக்காக வழங்கப்பட்டது. இது பிரபல மலையாளக் கவிஞர் வைலோப்பிள்ளி ஸ்ரீதர மேனன் நினைவாக வழங்கப்படுவதாகும். (மலையாளக் கவிதைகளை றொமான்டிக் சகாப்தத்திலிருந்து நவீன யுகத்துக்கு மாற்றிய கவிஞருள் மேனனும் ஒருவர்)
அத்துடன் ‘அங்கனம்’ எனும் விருதும் வர்மாவுக்கு அளிக்கப்பட்டது.

தனது 37வது வயதில் “அரக்கப்பூர்ணிமா” எனும் இரண்டாவது கவிதைத் திரட்டையும் வெளியிட்ட வர்மா, இத்தொகுப்பினூடாக விமர்சகர்களாலும், வாசகர்களாலும் பெருங்கவனத்துக்கு உள்ளாகினார். 1995 கேரள அரசின் சாகித்ய அகடமி விருதை இத்தொகுப்புக்காகப் பெற்றார். இவ்விருது கேரள எழுத்தாளர்களின் உன்னத படைப்பாக்கங்களுக்காக வழங்கப்படுவதாகும். நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், திறனாய்வு, மொழிபெயர்ப்பு, பயணக்கட்டுரைகள் என்ற பகுப்பினடிப்படையில் விருது வழங்கப்படும். இதற்கு முன்பு இவ்விருதை விஜயலஷ்மி பெற்றார்.(பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவரின் மனைவி).
வர்மாவுக்குப் பின்பு ஆற்றூர் ரவிவர்மா 1996ல் தனது கவிதைகளுக்காக பெற்றிருந்தார்.

பிரபா வர்மாவின் சந்தன நாழி, ஆற்டம், கலாப்ரயாக, அவிச்சரிதம், அபரி கிரகம் முதலான பின்வந்த கவிதைநூல்கள் மலையாள வாசகர்களால் பெரிதும் விரும்பி வாசிக்கப்பட்டிருந்தது. மூன்று தசாப்தங்களாக பத்திரிகை, ஊடகத்துறையிலும் பணியாற்றி வருகிறார். ஆங்கிலம், மலையாளம் முதலான மொழிகளில் இவரெழுதிய கட்டுரைகள் பல இந்திய இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. 2002-2010 வரை ஹைராளி மற்றும் பீப்பிள்(People) ஆகிய மலையாளத் தொலைக்காட்சிகளில் செய்தி இயக்குநராகப் பணியாற்றியுமுள்ளார். பல்வேறு உள்ளக, வெளியக கலந்தாய்வு மாநாடுகளில் பங்குபற்றியுள்ளார். டோகாவில் இடம்பெற்ற சர்வதேச சந்திப்பில் ‘வளர்ந்து வரும் மக்களாட்சிமுறை’ ( Emerging Democracies) எனும் தலைப்பில் இடம்பெற்ற வர்மாவின் கட்டுரை முக்கியத்தும் மிக்கது. 1996ல் கேரள அரசின் சிறந்த பத்திரிகையாளர் விருதும் பெற்றுள்ளார்.

திரைத்துறையில் இவரது பங்கு முக்கியமானது. பாடலாசிரியராக வெகுஜன மக்களிடம் சென்று சேர்ந்துள்ளார். சீலாபதி, சாயானம், ஸ்திதி, கலாபம், நகரவாது, கிராம பஞ்சாயத்து, வர்ஷ, ஹரீந்திரன் ஒரு நிஷ்க்களங்கன் முதலான படங்களுக்கு வரிகளை எழுதியிருந்தார். ஸ்திதி என்ற படத்திலுள்ள “ஒரு செம்பனீர் போல பூவிருந்து..” என்ற பாடலின் வரிகள் இன்றும் அனைவராலும் கேட்கப்படுவதுண்டு. அதிலுள்ள “நீல இரவின் ஏகாந்தவேளையில் உனது கண்களின் ஞாபகம் மாய்வதில்லை” (நீல ராவிலே ஏகாந்ததியிலே…) என்ற வரிகள் பாரட்டத்தக்கதாக அமைந்திருந்தது. சில பாடல்களுக்கு 2006 மற்றும் 2013ல் அரசு விருதும் கிடைத்துள்ளது.
மலேசியன் டயரிக்குறிப்புகள் (Diary Of Malaysia) என்ற பயணக் கட்டுரையும் இவரெழுதிய அனுபவக் குறிப்புகளாகும். தனது பயணத்தில் இடம்பெற்ற சுவாரசிய அம்சங்களையும், ரசனை அனுபவங்களைம் அதிலிணைத்துள்ளார்.

பல விருதுகளின் சொந்தக்காரராக இவருள்ளார். அசான் கவிதை விருது, செங்கம்புழா புரஸ்காரம், மூளூர் விருது, கடவநாடு விருது, வெண்ணிக்குளம் விருது, மார் கிரேகரியஸ் விருது, வெண்மணி விருது, கேரளவர்மா கவிதை விருது, அபுதாபி ஷக்தி விருது என முப்பதிற்கும் அதிகமான விருகளைப் பெற்றுள்ளார். அண்மையில் இவர் பெற்ற சாகித்ய விருது மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகிறது.

1. சாகித்ய அகடமி விருது- ஷியாமமாதவம் தொகுப்பு:

இந்த ஆண்டு மலையாள மொழிக்கான சாகித்ய விருதை பிரபா வர்மாவின் ஷியாம மாதவம் பெற்றது. 2013ல் இந்நூல் வயலார் இலக்கியவிருது மற்றும் மலையத்தூர் விருது ஆகியவற்றையும் பெற்றமை சிறப்பம்சமாகும். எம்.லீலாவதி, கவிஞர் ஆலங்கோடு லீலாகிருஷ்ணன், மற்றும் வி.சுகுமாரன் ஆகிய ஜூரிமார் தலைமையில் இந்நூல் விருதுக்குத் தேர்வாகியிருந்தது.
ஷியாமமாதவம் கவிதை வடிவான நாவலாகும். 15 அத்தியாயங்களாக அமைந்தது. வேடனின் அம்புபட்டு இறக்கும் தன்மையுள்ளவனாக கிருஷ்ணனது மனதும், அம்சங்களும் இக்கவிதைநூலில் சித்திரிக்கப்பட்டுள்ளது. வழக்கமான கிருஷ்ண கதைகள், நாம் கேள்விப்பட்ட கண்ணன் கதைகளினின்று மாறியே அமைந்துள்ளது எனலாம். உறையவைக்கக் கூடிய கதையமைப்பு, அழுத்தமான கதையை விட்டு எழுந்திருக்கமுடியாத உருவமைப்பு என மிகச் சிறப்பான முறையில் வர்மா இந்நூலைக் கட்டமைத்துள்ளார். பதின்ம அடுக்காக அமைந்த வரிகளிலிருந்து (Metric Patterns) விலகிய மலையாளத்தின் மரபார்ந்த கவிதைமுறையை (Chandas, Alankaaraa, Dandakaranya) மீளவும் தனது ஷியாமமாதவம் படைப்பினூகக் அடையாளம் காட்டியுள்ளார். இதன்மூலமாக நவீனத்துடன் இணைந்துள்ள பாரம்பரியத்தின் இணைபிரியாத அம்சங்களைத் தனது படைப்பினூடாக வெளிக்கொணர்ந்துள்ளார். அநேகமான விமர்சகர்கள் இலக்கியப் பெரும்படைப்பாக (Magnum Opus) உள்ளதென ஷியாமமாதவம் மீதான விமர்சனத்தை வழங்கிவருகின்றனர்.

2. பட்டத்துவிழா கருணாகரன் விருது.
1925-1988 வரை வாழ்ந்து வந்த கருணாகரன் என்ற சிறுகதை எழுத்தாளர் நினைவாக இவ்விருது வழங்கப்படுகிறது. “பட்டத்துவிழா” என்பது அவரின் குடும்பப் பெயர். இந்த தசாப்தத்துக்கான சிறந்த இலக்கிய ஆளுமையாக பிரபா வர்மா தெரிவாகியுள்ளார். கூடவே தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வர்மாவின் ஷியாமமாதம் எனும் படைப்பு மலையாள இலக்கியவுலகில் வளம் சேர்த்தது விருதுக்குக் காரணமாகும். பெருமாள் முருகனுக்கு அவரது மாதொருபாகன் படைப்புக்கான பரிசாக இது அமைகின்றது.

1991-2001 வரை பிரபா வர்மா அவர்கள் கேரள முதல்வரின் ஊடகச் செயலாளராகப் பணியாற்றினார். 2008-2012 வரை அகில இந்திய சாகித்ய அகடமி குழுவிலும் அங்கத்தவராக இருந்துள்ளார். இதே காலப்பகுதியில் கேரள சாகித்ய குழுமத்திலும் உபதலைவராக இருந்து சிறந்த படைப்புக்களைப் பகுப்பாய்வு செய்து வந்தார். கேரள முதல்வர் பினராயி விஜயன் இன் ஊடக ஆலோசகராகத் தற்சமயம் பணியாற்றி வருகிறார்.

கவிதைத்துறை, விமர்சனம்/திறனாய்வு, ஊடகத்துறை, சினிமாத்துறை, பயணக்குறிப்புகள் எனப் பலவற்றில் ஜொலித்து வருகின்றார் வர்மா.
அய்யப்பப் பணிக்கரின் பின்பு சிறந்த கல்வியியலாளராக இவரைக் கருதக்கூடிய வகையில் வர்மாவின் படைப்பம்சங்கள் பணிக்கருடன் ஒத்துப் போகின்றன என்றால் அது மிகையல்ல.
===
சுயாந்தன்.
==
http://malaigal.com/?p=9704

Comments

Popular Posts