சிம்பு என்கின்ற கலைஞனை எதிர்ப்பது பற்றி.

சிம்பு என்கின்ற கலைஞனை எதிர்ப்பது பற்றி.
========
"ஒரு உரிமையை நிலைநாட்டுபவர்
சந்தேகத்திற்குரிய
சிறிய புற்களையும்
வேரோடு பிடுங்கிவிடவே விரும்புகிறார்
அனுமதியின்றி பறக்கும்
எளிய வண்ணத்துப்பூச்சிகள்
அவரை அமைதியிழக்கச் செய்கின்றன."
---மனுஷ்ய புத்திரன் கவிதைகள்.

சமுத்திரமளவு தேனும் சொட்டளவு நஞ்சும் திரண்டு கண்ணெதிரே இருந்தாலும் நாம் விசனப்பட்டு சங்கடப்படுவது நஞ்சின் மீது தான் . இது தமிழ்க் கலாசாரச் சூழலுக்கு மிக ஒப்பான உதாரணம். மிகச் சிறந்த கலைஞனான சிம்புவை அவர் செய்யும் சிறுதவறுகளை (உங்களது கருத்தில் அது தவறு) முன்வைத்து அவரது ஒட்டுமொத்த ஞானத்தையும், படைப்புக்களையும் மழுங்கடிக்க நினைப்பது மிகவும் அபத்தமானது. இதைக் காட்டிலும் பெருந்தவறுகள் மறக்கவும் மன்னிக்கவும் படுகிறது.  அவரது "எவன்டி உன்னப் பெத்தான்", "Beep பாடல்", "லூசுப் பெண்ணே" முதலான பாடல்களைக் கருத்தில் வைத்து ஆர்ப்பாட்டங்களையும், ஊடக அதர்மங்களையும், இணைய அக்கிரமங்களையும் செய்வதென்பது வேதனைக்குரிய விடயம்.

மிகச் சிறு வயதிலிருந்து கலையார்வம் கொண்டு படிப்படியாக வளர்ந்த கலைஞனை தங்களது எடுத்தார் கைப்பிள்ளை வாதங்களுக்குள் அவரது அகன்ற ரசனைகளை ஆட்சிப்படுத்த நினைத்து விடுகிறார்கள். ஒவ்வொரு கலைஞனுக்கும் மாத்திரமல்ல, கலையனுதாபிகளுக்கும் இது சலனமான விடயம்தான் எனலாம். வார்த்தையால் விபரித்த கலைஞனை வார்த்தைகளால் எதிர்வினை (Op-Ed) செய்வதென்பது ஆரோக்கியமான நிலைப்பாடு. இதைவிடுத்து அவர் செல்லும் இடமெங்கும் ஒற்றை நிலைப்பாட்டினின்று ஒரே கேள்வியையும், ஒரே எதிர்ப்பையும் முன்வைப்பதென்பது எவ்வளவு Cliche ஆன விடயம்.

ஒருவர் வார்த்தைகளால் கலகம் செய்யும் போது உருக்குலைந்த எமது கொள்கைகளை எடுத்துப் போராட விளைகின்ற நாம், ஏன் நல்லது செய்யும் போது பொறாமைகளையும், கண்டுகொள்ளாமையையும்   கைக்கொள்கிறோம்.

சிலம்பரசன் எந்த ஆபாச வீடியோக்களையும் வெளியிடவில்லை. அவர் ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்றும் கேலி செய்யவில்லை. அவர் தனக்குப் பிடித்த பேச்சாளர் வாட்டால் நாகராஜ் என்றும் கூறவில்லை. ஈழப்பிரச்சனைக்காக தந்தையின் கட்சியுடன் சேர்ந்து அரசியல் செய்தவருமல்ல. அவர் செய்தது ஆழ்மன வெளிப்பாடுகளை இசையாக்கியது (அவரவர் நியாயங்களில் இருந்து). மனதில் உள்ளதை வெளிப்படையாக ஊடகங்களுக்குப் பிரஸ்தாபித்தது. இவற்றை சர்ச்சைகளாக்கி நல்லதொரு கலைஞனின் காலத்தை மறைத்துவைத்துவிட தமிழ் மக்களால் இயன்றுள்ளது என்பது மிக வேதனையளிக்கிறது.

இனிவருங்காலங்களிலேனும் அவரது படைப்புக்கள் மீதான விமர்சனங்களை அவர் மீதான சுயபரிசோதனை விமர்சனமாக பிரயோகிக்காமல் விடுவது சிறந்த கலைஞர்களை உருவாக்கிவிட வழிவகுப்பதாகவும் இருக்கும்.

இரட்ணேஸ்வரன் சுயாந்தன்.

Comments

Popular Posts