சாபம்


ஒருவனின் தலையில் துப்பாக்கியை வைத்துச் சுடுவதும் அதனால் வழியும் கண்ணீரையும் இரத்தத்தையும் சொரியவிட்டு வேடிக்கை பார்ப்பதுவும் அவர்களுக்குப் பிடித்தமான கலை. யாதவன் வெள்ளந்திகளின் கந்தர்வன். யார்க்கும் தீங்கு நினைக்காதவன். அவனுக்குள் கறுப்புநிற வள்ளலார் குடி இருக்கிறார் என்று ஒருமுறை மூத்தமாமன் சொல்லியிருந்தார். தொன்னூறுகளில் இயக்கத்தில் சேர்ந்திருந்தான். பல சமர்களை அழகுற அமைத்தவன். காந்தளூர்ச் சாலையில் ராஜராஜ சோழன் செய்த யுத்தம்பற்றி தனக்குள் ஒரு பிம்பம் போட்டுக்கொண்டிருப்பான். யுத்த முனைகளில் புகுந்தால் "கலமறுத்தருளிய" என்ற கதா சக்தியாக மாறிவிடுவான். தன்னை இன்னுமொரு ராஜராஜனாக நினைப்பதில் அவனுக்கு ஒரு விகாசம் இருந்தது. நிரம்பப் படித்தவரான மூத்த மாமனுக்கு யாதவன் ஒரு வள்ளலார் ஆகவே தோன்றினான். மூத்தமாமன் இறந்ததும் வள்ளலாரைத் தூக்கிக் கொண்டு அவன் இயக்கத்துக்கு ஓடிவந்துவிட்டான். 

ஒன்பது வருடங்கள் இயக்கத்தில் ஓடிப்போனது. ஒரு உறைபனி அதிகாலையில் அவனை பழைய ஹைலக்ஸ் ஜீப்பில் அழைத்துக்கொண்டு போனார்கள். யாதவன் ஒரு வருடம் வரைக்கும் சித்திரவதைக் கூடத்தில் மாட்டியிருந்தான். அந்தச் சித்திரவதைக்கூடம் மூன்றுபக்கமும் கடலால் ஆனது. அதனைப் பார்ப்பவர்கள் சிறை என்றும் அதன் உள்ளே சென்றவர்கள் சித்திரவதைக் கூடாரம் என்றும் அழைத்தனர். வாகனம் காட்டு வழியில் மாட்டிய எதையும் விடாமல் மொட்டை டயரால் ஏற்றிக்கொண்டே போனது. போகும் போது காடு அதிர்ந்தது. ஒரு மயிலின் அகவல் ஓசை யாதவனின் காதில் வீழ்ந்தது. கட்டப்பட்ட இரண்டு கண்களின் கரும் ஒளி இடுக்கால் அவன் அதனைக் கவனிக்க முயன்றான். பின்பு மனதில் ஏற்றினான் அந்த அழகினை மீட்டினான். 

"உன் வைராக்கியங்களுக்குள் நான் தொலைவேனடி பிரமிளா...
என் நிர்வாணங்களுக்குள் 
உன்னை ஒளிப்பேனடி பிரமிளா..."  

விடத்தல் முள்ளின் இலைபோல சிறு பனித்துளிகள் இருந்தன. அவை செம்மண்ரோட்டில் வீழ்ந்து மிகையாகப் பறக்க எத்தணித்த தூசிகளை அடக்கிச் சென்றது. இது ஜீப்பில் இருந்தவர்களுக்கு மனக்கிளர்ச்சியை உண்டாக்கியது. நாம் நம்முடைய அடிமைகளை மட்டுமல்ல நம்முடைய நிலத்தையும் அடிமைபோல நடத்துகிறோம் என்று அவரவர் தமக்குள் எண்ணிப் பெருமையடைந்தனர். இதனை வெளியில் சொல்லமுடியாத அவஸ்தை அவர்களுக்குள் இருக்கவே செய்தது. 

“இவனை எங்கு வச்சு சுடப்போறம்” என்றான் முகிலன்.

மிக அமைதியாகவே ஜீப்பின் இடப்பக்கத்தில் அமர்ந்து வந்தார் 
லெப்.கேணல் அன்பு. இங்குள்ள வாகனங்களின் ஸ்ரேறிங் வலப்பக்கம் இருக்கும் இந்திய இராணுவம் இருந்த காலத்தில் இந்திய வாகனங்களின் ஸ்டேரிங்குகள் இடப்பக்கமே  இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அன்பு இயக்கத்தில் 
இருபது வருடம் வரை இருந்த சண்டைக்காரன். ஒரு முறை 
ஆனையிறவு யுத்தத்தில் இருபது இராணுவத்தினரை தனது கையால்
சுட்டுக்கொண்டிருந்தான். அவர்கள் சரணடைந்து பின்னால் கைகளைக் கட்டிச் சுடப்பட்டனர். அவர்களது சப்பாத்துக்கள் அனைத்தும் கழற்றப்பட்டு போராளிகளுக்கு வழங்கப்பட்டது. ஷொக்ஸ் மட்டும் மட்கிய தரையில் மணத்துடன் மண்ணில் இரத்தத்துடனும் பின் நெருப்புடனும் கரைந்து போனது. அன்புவுக்குச் சுடுவதும், கொலை செய்வதும், சுட்ட உடலங்களை எரிப்பதுவும் கை 
வந்த கலை. எல்லாக் கொலைக்கும்  முன்பும் ஒரு அமைதி 
குடிகொள்ளும். அன்பும் நீண்ட அமைதியில் ஆழந்தான். ஆயிரம் கொலை செய்தவர்களும் பலநூறு இனங்களை அழித்தவர்களும் வரலாற்றில் சரித்திரமாக நிற்கிறார்கள். துரோகிகளைக் களையெடுத்த அன்பு தன்னை ஒரு சரித்திர நாயகனாக எண்ணிக்கொண்டமர்ந்தான். அவனுக்கு சாத்திரியார் ஒருமுறை ஆஷ் கொலை பற்றி முழுமையாகச்  சொல்லும்போது வாஞ்சிநாதன் தனது சாதிக்காரனை எப்படி இழித்துரைக்கலாம் என்று கூறி  கொலையைச் செய்த வாஞ்சிநாதனை வஞ்சித்தான். 

யாதவன் நன்றாகக்  கவிதை எழுதுவான். அவனது கவிதைகள் பல உள்ளுணர்வால் இயல்பாகவே எழுதப்பட்டவை. அக்காலத்தில் புதுவை இரத்தினதுரை அனைத்துப் புலிகளுக்கும் ஆதர்சக்கவிஞர். அவர் எல்லாரையும் 
உசுப்பிவிட்டு இயக்கத்துக்குக் கவிதைகளால் ஆட்சேர்த்தபடி இருந்தார். 
யாதவன் யதார்த்தமாகச் சில விடயங்களை அணுகுவான். தனது ஒரு கவிதையில், 

“மரணம் யார்யார்க்கும் வந்தமரும்  
மரணம் மார்கழிக்கூதல் போல, தொடர்காலப் பனி போல,
பிரளயத்தின் முடிவு போல நம் விடியலை இயக்கும்" 

என்று 
எழுதியிருந்தான். இதை அந்நாட்களில் தன்னுடன் கூட இருந்த இயக்க 
நண்பர்களிடம் காட்டும் போது பலர் வியப்புற்று புரியாமல்
அகமகிழ்ந்து இருக்கிறார்கள். 
          
அன்பு வோக்கியில் “நெடுங்கேணியில் மக்களை ஒன்றுகூடி அந்த ஆலமர நிழலில் வந்து நிக்கச்சொல்லு. வந்து கொண்டு  இருக்கிறோம் குய்க்காக” என்று கனத்த மவுனத்தைக் கலைத்தான். ஒருபக்கமாகத் திரும்பி யாதவனைப் பார்த்துவிட்டு சிறிய உடம்பை ஆட்டி சௌக்கியமாக அமர்ந்தான்.  
 
முகிலனுக்கு யாதவனை ஏன்  சுடப்  போகிறோம்  என்பதை  விட எங்கு வச்சு எப்படி கூடப்போகிறோம் என்று மிகுந்த ஈர்ப்பு இருந்தது. 
போனமுறை ஒரு வாத்தியாரை அவனே சுட்டுக் கொன்றான்.  கணக்கு வாத்தியார் என்பதனால் அவனது வெறி மேலும் உக்கிரமானது. துப்பாக்கியைத் தூரம் வைக்காமல் காதுக்குள் வைத்தே சுட்டுவிட்டான்.
அந்த வாத்தியார் ஆமிக்கு காட்டிக் கொடுத்தவர் என்று இயக்கம் 
நம்பி இருந்தது. கணக்கு வாத்தியின் கணக்கு கணத்தில் முடிக்கப்பட்டது. 

பெரியதொரு ஆலமரத்தில் “கூடியன்ன” என்று பறவைகள் ஆரவாரம் செய்தபடி இருந்தன. அதிகமானவை காக்கைளும் கழுகுகளும் தான்
அவற்றின் கண்கள் பயங்கரமாக இருந்தது. கீழே நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் குழுமியிருந்தனர். அதில் ஒருவர் பைபிள் வைத்திருந்தார். 
அவரது முகம் சற்று வெதும்பியிருந்தது. பைபிள் வைத்திருந்தவரை இயக்கம் ஊருக்குள் இயேசுவின் சுவிஷேஸங்களைப் பரப்ப அனுமதி அளித்திருந்தது. அவர் மீதும் அவரது சுவிஷேஷங்கள் மீதும்  தளபதிகளுக்கு ஈர்ப்பு உண்டு. அநேகமான ஏ.கே 47 துவக்குகள் பௌத்தர்களிடம் அடித்துப் பிடுங்கியது எனவே பௌத்தத்தைத் தானே புலிகள் பரப்ப அனுமதிக்க வேண்டும் என்று ஏடாகூடம் பேசிய வெள்ளை வேட்டி இந்துக் குருவை போன கிழமைதான் புலிகள் வாகரையில் சுட்டிருந்தனர். ஒரு சில தளபதிகள் இயேசுவின் சுவிஷேஷங்களைக் கேட்க தமது பெயரை அன்டனி என்றும் விக்டர் என்றும் மாற்றிக் கொண்டனர். அந்த பெயர்கள்தான் கர்த்தருக்கு கேட்கும் என்று பைபிளில் சொல்லப்பட்டுள்ளதாக வேதக்காரர் சொன்னார். மேலே காக்கைகளையும் கூர்
மூக்குடைய கழுகுகளையும் பார்த்தபடியிருந்தார் கர்த்தரின் தூதர். 

எண்பது மைல் தாண்டி வந்தமையினால் இடையில் பனி உலர்ந்து தூசி வாகனம் மீது படிந்திருக்க வேண்டும். ஜீப் வரும் போது அதனை வரவேற்க என்று இரண்டு காகங்கள் ஜீப்பின் கண்ணாடியில் முன்
பக்கத்தால் கரைந்து கொண்டே ஆலமரத்தின் பட்ட கெப்பில்
சென்றமர்ந்தன. 
தரதரவென்று யாதவனை இழுத்து வந்தார்கள். அந்த ஜீப்பில் அன்பைத் 
தவிர ஆறு தடியர்கள் இருந்தார்கள். அன்பு இழைத்தவன். கொலையே 
வாழ்வென இருந்தவன். நாட்டுக்கோழி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் 
போது கூட ஒருவரைச் சுட வேண்டும் என்றால், தட்டைத் தூக்கி எறிந்து விட்டு வருபவன். இயக்கத்தில் பலர் அப்படியே இருந்தனர். அன்பு கொலையே வாழ்வென இருந்ததால் இளைத்திருந்தான். இயமன் கூட இவனது உடலைத் தூக்கிச் செல்ல விரும்பமாட்டான். அப்படியென்றால், வள்ளுவர் தவறிழைத்து விட்டாரா?  "கொல்லாமை மேற்கொண்டொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிருண்ணும் கூற்று" 

யாதவன் அந்தக் கூட்டத்தில் இணைந்து தவறு செய்து விட்டான். அவன் ஏதோ ஒரு உணர்வு வேகத்தில் வந்திருக்க வேண்டும். யாரும் அவனைத் திட்டவில்லை. அடிக்கவில்லை. அந்தநாட்களில் வீட்டில் திட்டினாலோ அடித்தாலோ இயக்கத்தில் போய் சேர்ந்து விடுவார்கள். இதனால் அப்போது பெற்றோர் பிள்ளைகளைத் திட்டுவது குறைவாயிருந்தது.  யாதவனின் தாய் எத்தனையோ தடவைகள் “யாதவா நீ இயக்கத்த  விட்டு வாப்பா, எங்கட காணியில மிளகாய் நல்லா வரும் அதச்செய். இல்லயெண்டா எங்கட வயலத்தான் தேவண்ண குத்தக செய்யிறார். நீ  வேளாண்மைய செய்யப்பா” என்று கெஞ்சாத வண்ணம் கெஞ்சினாள். செய்வினை செய்துதான் இயக்கத்துக்கு ஆள் எடுப்பாங்களோ என்று கூட மகன்களையும் மகள்களையும் பெற்ற தாய்மார் எண்ணிக்கொள்வார்கள். தன் மகன் இயக்கத்துக்குப் போனதில் இருந்து இயக்கத்தின் மீது அந்தத் தாயானவள் சாபம் போட்டுக்கொண்டே இருந்தாள். இயக்கம் என்பது ஏதோ பப்படப் பக்டரி என்ற நினைப்பு அவளுக்கு இருந்தது. நீரோட்டம் இல்லாத செயற்கை அருவிதான் இயக்கத்தின் போராட்டம் என்பது மூத்தமாமனின் தத்துவம். 

 யாதவனின்  கண்கள் 
கறுப்புத் துணியால் கட்டப்பட்டிருந்தது. ஆலமரத்தின் விழுதொன்று 
கீழே இறங்கியிருந்தது அதற்கு இடையில் கொண்டு யாதவனின்  இரு கைகளையும் வைத்தார்கள்  தடியர்கள். உருவிச்சுருக்கு அல்லாமல் இறுக்கச் சுருக்கை அவன் கைகளில் போட்டனர். உருவிச்சுருக்கை மாடு பிடிக்கும் அனுபவ ஆட்கள் போடுவார்கள். இந்த முடிச்சை கொலைவெறி உள்ள யாரும் போடலாம்.  யாதவனின் கைகள் பத்துத்தலை நாகம் தலைகீழாகப் படம் எடுப்பது போல்  மேலும் கீழும் சுழன்று நின்றாடியது. எந்த விசும்பலும் அவனிடம் இருக்கவில்லை.  “இவன் எங்கட தமிழ் பெட்டைய கற்பழிச்சுக் கொண்டிட்டான். இவனை கொல்லச் சொல்லி தமிழ் அண்ணர் ஓடர் போட்டிருக்கார்” 
என்று காடதிரக் கத்தினான் அன்பு. அவனது குரலைக் கேட்டு 
மேலிருந்து கிளிகளும், சிட்டுக்குருவிகளும் ஆலம்பழத்தைப் போட்டு 
விட்டு பறந்து சென்றன. காகங்களும் கழுகுகளும் காத்திருந்தன. 

காதல் கலங்கிய நதியா?. காட்டாற்று வெள்ளமா?. காதல் நீரின் துடிப்புத்தானா. அது உப்பு நீரின்  துடிப்பாகவே யாதவனுக்கு இருந்தது. யாதவன் பிரமிளா என்ற பெண்ணைக் காதலித்திருந்தான். இரண்டு வருடக்காதல்.  ஜெயசிக்குறு யுத்த இடப்பெயர்வின் போது 
அவளைக் கடற்கரைச் செம்மலையில் கண்டிருந்தான். ஆனால் தாமதமாகவே தனது காதலைச் சொன்னான். அவளும் மிகத் தாமதமாகவே காதலுக்கு ஓமென்றாள். ஈச்சம்முள்ளுக் குற்றிய கடுக்கல் போலவே அவனை அவள் திட்டவாள்.  திட்டுவது ஏன் என்ற காரணம் இல்லாமல் திட்டுவாள். 
அவனும் அதனை மகிழ்வுடன் ஏற்றுக் கரைவான்  அவளுள்.  இன்றைய நாளில் மல்லாவியிலோ,பனங்காமத்திலோ,பாண்டியன்குளத்திலோ  எங்கோ ஒரு அரச மரத்தடி நிழலில் இருந்து 
அழுதிருப்பாள் பிரமிளா. அவள் பாலி ஆற்றின் தீரங்களை அழுதழுது உப்பாக மாற்றுவாள். அந்தப் பாலியம்மன் வெகுண்டெழுவாள். பாலியம்மன் செட்டிச்சி என்று நாவலர் வழியான கதைகளின் மூலம் அறிகிறோம். செட்டிச்சி கேட்கமாட்டாளா, கரையாரச்சி அழுத கண்ணீர் செட்டிச்சியை கரைக்காதோ என்று?

அன்பு துப்பாக்கியை லோட் செய்தான்.  இந்த முறை முகிலன்  சுட வேண்டியது. அன்பு தானே சுடப் போறன் என்று சொன்னான். 
காரணமும் இருந்தது. நெடுங்கேணி மாறாயிலுப்பை அம்பட்டர்கள் அதிகம் வாழும் ஊர்ப்பகுதி. இங்குதான் அன்புவின் தாயார் பிறந்திருந்தார். 
அன்புவின் தந்தை யாழ்ப்பாணத்தவர். தமிழ்ச்செல்வனின் 
சொந்தக்காரன் வேறு. இறந்த பெண்ணின் நெருங்கிய உறவினன்
அன்பு அதனால் அந்த வெறி அவனுக்குள் இருந்தது. இயக்கத்தில் 
சாதி என்ற ஒன்று தலைமைப்பீடத்தில் இருக்கவில்லை. ஆனால்
வெள்ளாளர்களாலும் இதர உயர் சாதியாலும் பாதிக்கப்பட்ட கீழ்ச்சாதி 
மக்கள் வெள்ளாளர்கள் மீது சற்று வெறியில் இருந்தனர். வெள்ளாளர்கள் தமது சாதிய வெறியை எந்த இடத்திலும் விட்டுக்கொடுப்பதில்லை. அதுவும் வன்னி வெள்ளாளர்கள் வெறிபிடித்தவர்கள். தளபதிகளில் வெள்ளாளர்கள் மிகக் குறைவு. யாதவனின் நெருங்கிய உறவினர்கள்தான் அமுதாப்பும், ஜெயமும். கீழ்ச்சாதி என்று வெள்ளாளர் ஒதுக்கியவர்களில் 
சிலர் தமது வெறியை இயக்கத்தில் வந்து தீர்த்துக் கொண்டனர். அன்பு முன்னே வந்தான். யாதவனின் கண்களில் இருந்து கண்ணீரே 
வரவில்லை. மூச்செறிந்தான் கலங்கிய நதி போல இரண்டு 
மாதங்களுக்கு முன்பிருந்தான். அப்போதுதான் அவன் கடைசியாக அழுதது. தன்னைச் சுடப்போகிறான் என்று அறிந்த பின் அவன் அழுகையை நிறுத்திக் கொண்டிருந்தான். இரண்டு மாதம் தேக்கி வைத்திருந்தது அவன் அந்த வைராக்கிய 
மூச்சினைத்தானா? கண்ணீரை, நினைவுகளை இல்லையா? 
இயலாமையின் தூண்டில் மூச்சென்ற மீனைக் கவ்வுகிறது. பின்பு  மீண்டுமொரு மீன். மீண்டும் மீண்டும் மீன்கள் மீன்கள் மீன்கள்….. 

அன்பு கிட்ட வந்து சொன்னான்  “வன்னியான் உனக்கே 
இவ்வளவு, என்டா அம்பட்டன் எனக்கு எவ்வளவு இருக்கும்” தேக்கி வைத்த வக்கிரங்களைச் சொரிந்தான் அன்பு. அவன் ஆரம்பநாட்களில் வெள்ளாளரின் 
ஒதுக்குதலுக்கு ஆளாகியிருந்தான். சிங்களவர்கள் 
மீது எவ்வளவு வெறி வைத்துள்ளானோ அதே அளவு வெறி வெள்ளாளர் மீதும் கொண்டிருந்தான். ஆனால் அன்பு நிஜமாகவே 
தமிழீழம் கோரியே போராடினான். அவன் அப்பழுக்கற்ற தமிழ்க் கொலைகாரன். ஆத்மார்த்தமான போராளி என்றும் நம்பினான். அவன் கொன்றதில் அதிகம் சிங்களவர்களைத்தான். அவன் பொது வெளியில் தன்னைத் 
தமிழன் என்றும், தனிப்பட்ட பழிவாங்கல்களில் அம்பட்டன் என்றும் ஒரு திரையை வரிந்திருந்தான். அனுதாபங்களைத் தேடினான். ஆக்ரோசங்களால்
மீந்தான்.  வன்முறையே வாழ்வாகி மட்கிப்போய் நின்று 
கொலையுதிர்த்தான்.
அன்பு வைத்திருந்த துப்பாக்கி ஒட்டுசுட்டான் காட்டுக்குள் ஆழ 
ஊடுருவிய ஆமிக்காரர்களைக் கொன்று அவர்களிடமிருந்து அந்த 
வெற்றியின் நினைவாக அவன்  கைப்பற்றிய ஆயுதம். இராணுவம் ஆழ ஊடுருவ கதவாக இருந்தது நெடுங்கேணிதான். அந்த 
துப்பாக்கியை யாதவனின் தலையின் இடப்பக்கத்தில் வைத்தான். சில்வண்டுகளின் சத்தம் ஆக்ரோசமாக ஒலித்தது. காகம் கரைந்தது. கழுகுகளின் சிறகடிப்புத் தீவிரமானது. தமிழீழம்  தமக்குண்டு என்ற ஆக்ருதியில் மக்கள் வேடிக்கை பார்த்தனர். சூடு பட்டுத் தலை வீழ்ந்தான் யாதவன். துப்பாக்கிச் சன்னம் யாதவனின் மூளைக்குள் இருந்து வெளியேறவில்லை. அவிழ்க்கப்படாத கை முடிச்சுகளில் பத்துத் தலை 
நாகம் பறந்தோடியது. சில் வண்டுகள் நிசப்தமாயின. காகம்  மேலும் கரைந்தது. கழுகுகள் மேலும் சிறகடித்தது. உச்சஸ்தாயியில் மகிழ்வை அந்தச் சிறகோசை அனுப்பிக்கொண்டு இருந்தது யாருமற்ற வானுக்கு.
முகிலன் இறுக்கமுடிச்சை அவிழ்த்து விட்டான். ஏற்கனவே இறந்து போன யாதவன் அடிபட்ட அட்டைபோல மேலும் சுருண்டிருந்தான். அடிபட்ட நல்ல பாம்பு போல வயிறு தெரிய கறுப்பு உடலைப் பிரட்டிக் கிடந்தான். அன்பு வெறியடங்காதவனான துப்பாக்கியில் எஞ்சிய சன்னங்களை யாதவன் மீது கடும்  பனியில், ஆட்கொள்ளும் குளிர் 
போலப் பொழிந்தான். சன்னங்கள் தீர்ந்ததும் தானே ஜீப்பை எடுத்து 
யாதவனின் தலை மீது ஏற்றினான். தலை சீர் கெட்டுப் போனது. யாதவனைப் பெற்றவுடன் தாய் அவனது தலையைப் பிடித்து பிடித்தே வளர்த்தாள். மிக அழகான தலை அவனுக்கு. தலையில் எண்ணெய் வைக்க மாட்டான், கறுகறு முடி. கைச்சீப்பை வைத்து தலையைச் 
சீர்படச் சீவி விடுவான்.  அத் தலை அழகாக இருக்கும். பிரமிளா கூட யாதவனின் தலையைப் பிடித்தே உதட்டில் முத்துவாள். அவனது தலை உடம்பை விடப் பெரிது. மூளை நரம்புகள் புடைத்ததாலும் அறிவு கூடியதாலும் அப்படி மண்டை பெரிதானது என்று மூத்த மாமன் சொல்வார். பிரமிளா இன்று தலையைப் பிடித்தால், யாதவனின் தலை அவள் கையோடு வருமல்லவா?. அவள் விரும்பிய தலை அவளுக்கு சிதைந்த ரூபத்தில், அவள் காணாத அரூப நினைவுகளுடன் உத்தரிக்கிறது. அன்பு தன் தடியர்களை ஏற்றிக் கொண்டு தமிழீழத்தின் இதயப் 
பகுதிக்கு விரையலானான். 

யாதவனின் தாயும், மருமகனும் யாதவனை இயக்கச் சிறையில் 
காணச்சென்றிருந்தனர். ஒரு கிழமை அலைக்கழிப்புக்கு மத்தியில் அனுமதி கிடைத்தது. மணல்  தரையில் சிறையின் வெளிப்பக்கத்தில் 
இருவரும் அமர்ந்திருந்தனர்.  இரண்டு காலையும் இணைத்துக் கட்டிய மாட்டுச் சங்கிலி அவனுக்குப் போடப்பட்டிருந்தது. கை விலங்கு 
அவிழ்க்கப்படவில்லை. இரண்டு கால்களிலும் குண்டூசி ஏற்றப்பட்டு 
மணற்றரையில் நடந்து வந்தான்.  தரையில் அழகுக்காக 
வைக்கப்பட்டிருந்த செங்கல் மீது ஏறியதும் “அம்மா” என்றான்
யாதவன். அந்தச் சிறையில் வைத்தே வீரென்று தாய் கத்தி 
அழுகிறாள். எதிர்த்திசையில் அலை அடித்துக் கொண்டே இருக்கிறது. அலை வந்து கடலில் உடைந்த கப்பலை மோதுகிறது. கடல் அலைக்கு கப்பலின் அலுமினியத் தகடுகள் கூசுகிறது. ஆனாலும் அதனைத் தாங்கிக்கொண்டு அலை அடிக்கிறது. கப்பலின் ஒரு பக்கம் உடைந்து வீழ்ந்தது. அதன் மேலே வெற்றியின் குறியீடு என்று போர்ட் போடப்பட்டு இருந்தது. மருமகன் அதையே பார்த்து மெதுவாக அழுது கொண்டு இருந்தான்.
யாதவன் வைராக்கியமானவன். இலகுவில் அழ மாட்டான். பாடசாலை படிக்கும்போது நண்பன் ஒருவனுடன் பந்தயம் கட்டினான். தன்னை அழவைத்தால் பத்து ரூபாய் தாறன் என்று. அந்த நண்பன் எப்படி எல்லாமோ முயன்றான். வட்டாரியால் எடுத்து  மாதவனின் குண்டியில் குத்தினான். அப்போது கூட அழவில்லை யாதவன். ஒரு தருணத்தில் மருமகனை மடியில் வைத்திருந்து அழுதே விடுகிறான். சப்தங்களற்ற நொடி. கடற்கரை வரையும் ஒரு கால்வாய் வெட்டினால் இந்தக் கண்ணீரை லாவகமான மணலில் தள்ளாடும் நண்டுகள் காவிச் 
செல்லக்கூடும். வீழும் துளி கால்வாயில் ஒழுகிக்கடலைச் சேரும் நீராகும். தன்னை ராஜராஜனாக நினைத்து அழுதானா? 
இல்லையே, ராஜராஜன் பதினைந்து மனைவியர் கொண்டு 
செம்மையாக வாழ்ந்தானே,  அவன் மரணம் வரையும்  மிக உயரிய 
சிறப்பையன்றோ பெற்றிருந்தான். யாதவன் எதற்கு அழுகிறான்.
பெருஞ்சத்தங்கள் இல்லாத துளிர்ப்பு அது. அப்படியொரு அழுகையை 
கபிலர்  கூடப் பாடியிருக்கமாட்டார். ஆனால் அவன் அழுகிறான்
அவனுக்குத் தெரிந்திருந்தது. இன்னும் இரண்டு மாதங்களில் சுட்டு விடுவார்கள் என்று. சிறையில் அவனது யூனியர் ஒருத்தன் காவலுக்கு நிற்கும் போது "அண்ண உங்கள சுட்டே ஆகவேண்டும் என்று சொல்லுறாங்கள்" என்று கூறியது அவன் நினைவை தாழ்த்தியது. அவன் நினைத்துப்பார்க்கிறான் பிரமிளாவை; பிரமிளாவின் உதடு அழகான குளுக்கோரசம் ரொபி போன்றது. அவளது உதட்டைக் கடித்துக்கொண்டே ராத்திரியில் ஏறியிறங்கி மடியில்  தூங்கியிருக்கிறான். அவளது மலைமார்பில் ஆராய்ச்சி செய்திருக்கிறான். அவளது கண்களில் வாழ்ந்திருக்கிறான். கண்ணோட்டம் கண்டிருக்கிறான். அவன் அழுதான். அழுதுகொண்டே இருந்தான்.
மருமகன் பொலிக்கொடி சுற்றிப் பிறந்த போது அவனைத் தூக்கி 
மகிழ்ந்ததை நினைத்து விசும்புகிறான். ஊரில் வயல் செய் நிலத்தை விட்டு நாடுகாண் காதையில் இறங்கியதை நினைத்தழுதான். அவன் அழுகிறான்  மீன் போல அழுகிறான். 
மீன்கள் அழுத கண்ணீர் கடலை நிரப்பும் என்று அழுகிறான். 

சுடப்பட்ட யாதவனின் உடலம் நான்கு மணி நேரம் வரை 
எடுக்கப்படவில்லை. பைபிள் வைத்திருந்த அந்நபர் ஏதோ ஒரு 
நற்செய்தியைப் பாடி விட்டுப்போனார். அடுத்து பெரிய சேர்ச்சுக்கு தளபதி ஒருவர் வரவுள்ளதால் அவருக்கு ஆசி வழங்கப்போனார் பைபிள் காரர். காகமும் கழுகும் ஆலமரத்திற்கு 
மேல்  நின்று வட்டமிடுகின்றன. சற்று நேரம் கழித்து வட்டமிட்ட காகம் கழுகினை ஏமாற்றி விட்டு யாதவனின் அருகே வந்தமர்கிறது. காகங்கள் முதலில் கைகளைத்தான் கொத்திப் பார்க்கும். யாதவனின் கைகள் சிவந்தவை. அந்தச் சிவப்பு ஆண்மையின் குறியீடு. சிவந்த கைகளைத் தங்கள் கன்னங்களில் வைத்துக்கொள்ளப் பெண்கள் விரும்புவர். செங்கையான் சிதிலமுற்றான், சேற்றுத்தண்ணீர்கூட அவனுதடு சேரவில்லை என்று எங்கிருந்தோ முணுமுணுப்பு கேட்டது. ஒற்றைக்கழுகு சிதறியகண்ணைக் கொத்தி எக்காளமிட்டது. காகம் கைகளையே கொத்திக் கொண்டிருந்தது. அந்தக் காகம் அவன் இறக்கவில்லை 
என்றே நம்பியிருந்தது. 
யாதவனின் தாயும் தமக்கையும் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வர முன்பே பாதியுடல் தின்னப்பட்டிருந்தது. யாதவனின் இரண்டு கைகளிலும்  காகத்தின் கரி ஏறியிருந்தது. நிலத்தில் ரத்தம்
கொட்டியது. காகத்தின் அலகுகள் சிவப்பு நிறமாக மாறியிருந்தது. 
தாய் அழுதாள். அவள் விம்முகிறாள். தான் தடவி உருவாக்கிய 
அவனின் தலை டயரில் நசுங்கியது கண்டு தலையில் அடித்து 
அழுகிறாள். அந்த டயரைத் தடவி மண்ணை இழுத்து ஆலமரத்து விழுதில் எறிந்து அழுகிறாள். நெஞ்சை அறைந்து அழுகிறாள். அவளது அழுகை ஒரு சாபம் போல வன்னிக்காட்டில் ஒலித்தது. அது கடல்களை மேவியும் போய்க்கொண்டிருந்தது. “அறம் யெமனடா உங்களுக்கு” என்று சிவப்பு அதிகாரமும் 
சொல்கிறாள். ஒரு ஆலம் விழுதில் சாய்ந்து தலையை இடித்து 
அழுகிறாள். அவள் அழுகையைப் பிரசவிக்க அழுகிறாள் என்பதை 
விட ஒரு சொல் இங்கில்லை. அந்த ஆலமரம் நிறைய மரணங்களைக் கண்டது. கண்ணுக்குத் தெரியாத விதை எத்தனை உயிர்களை இளைப்பாறச் செய்துள்ளது. இயக்கத்துக்கு யாதவனின் மரணம் தண்டனை. தாய்க்கு அது கண்ணீர்ச் சாபம். ஆனால் யாதவனுக்கு அது விடுதலை. மரணம் விடுதலை.... மரணம் மாபெரிய விடுதலை...
கற்சிலைமடுவில்தான்  பண்டாரவன்னியனை வெள்ளையன் கொன்று வென்றான். அங்கு அவனுக்கு சிலை எடுக்கப்பட்டுள்ளது. கற்சிலைமடுவின் 
குளத்துக்கு அருகில் யாதவன் புதைக்கப்பட்டான். நினைவுக்கல் 
இல்லை. பிணமாலை இல்லை. நினைவுநாட்களில்லை.
அவனைப்புதைக்க இடம் தேடியபோது யாரும் இடம் கொடுக்கவில்லை. அவனை சொந்த ஊருக்கு கொண்டுவர நாணிப்போனாள் தாய். பெண்கொலை செய்தான் என்று தண்டனை வழங்கினார்கள். எப்படியும் ஊர் அதையே ஏற்கும். பிறகு எப்படி மானத்தை இழப்பது.  இறுதியில் அனாதையான அவன்  புதைந்து போனான் கற்சிலைமடுவில். பண்டாரவன்னியன் வீரனாக வாளோடு நின்றான். யாதவன் அலரிமரம் மண்டிய நிலமாகிப்போனான்.  ராஜராஜன் என்று தன்னை நினைத்தவன் தான் செத்தபின் 
எரியுண்டு, புதையுண்டு போக ஒரு நிலமின்றிக் கரைந்து போனானே. அவனது காந்தளூர் நினைவுகள் எங்கே போனது. 

நெடுங்கேணி வழியாக ஆழ ஊடுருவிய இராணுவ அணி புலிகளின் தளபதிகளை இலக்கு வைத்துப் படுகொலைகளைச் செய்தது. காடுகளில் மாட்டிய தமிழ்ப் பெண்களையும் கற்பழித்துக் கொலை செய்தனர். புலிகளின் குரல் வானொலி அதனை மறைத்தது. ஏனைய ஊர்ச்செய்திகள் அதனைச் சொன்னது. சில பத்திரிகைகள் அதனை எழுதியது. ராணுவத்தின் படுகொலை யுக்தி அகோரமாக இருக்கும். பெண்கள் மாட்டிவிட்டால், அவர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் 
கொல்வதில்லை. பெண்களைக் கற்பழித்து விட்டு பின்னர் அவர்களது 
உள்ளாடைகளைக் கழுத்தில் மாட்டி உறுதியான மரத்தின் கொப்பில் இறுகிக் கட்டி விடுவார்கள். மார்பு பெருத்த பெண்களின் உள்ளாடைகளின் இரண்டு நுணியிலும் கிறீஸ் கத்தியால் ஓட்டை போட்டு விட்டே அதனை மரத்தில் சுருக்கிடுவர். அந்த உடலம் துடிதுடிக்கும்போது துப்பாக்கியைப் பெண்ணுறுப்பில் நுழைப்பார்கள். அந்த ஜீவன் மெதுவாகச் செத்துப்போகும். அவச்சாவு வன்னியைச் சூழ்ந்தது. நீண்ட நாட்களின் பின்
நெடுங்கேணி வேதக்காரன் அந்தச் செய்தியை ஈழநாடு பேப்பரில் படித்தான்.  கழுகு,காகம் ,காகம் கொத்திய இடக்கை என்று ஞாபகம் அவனைச் சுழன்றடித்தது. நான்கு வருடங்கழித்து ஆண்டான் குளத்தில் ஒரு கற்பழிப்பு. அதுவும் ஈழநாட்டில் வந்தது. அவன் பைபிளைத் தொட்டுக் குழறினான். அன்புக்கும் ஆசி வழங்கினேனே என்று கர்த்தரிடம் இறைஞ்சினான். ஆலம் விழுது நினைவுகள் அவனைச் 
சிறைப்பிடித்து ஆட்டியது. எல்லோரும் இடம் பெயர்ந்து போனார்கள்.
காகமும் , கழுகும் ,கிளியும் பறந்து போனது. ஆலமரம் தன்மூலாதாரத்தை விட்டு, இன்னுமொரு விழுது நட்டு தன்னந்தனியே 
நின்று துணுக்குற்றது…. அன்பு இப்போது கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஜி.எஸ் ஒருத்தர் மீது துப்பாக்கியை மெதுவாக வைக்கிறான். படாரென்ற சன்னம் ஜி.எஸ் மூளையைச் சிதைத்து இழுத்துக் கொண்டு தாய்மாரின் சாபத்தை ஞாபகமூட்டியது. கடல் கப்பலின் இரும்புப் பட்டையை அடித்துக்கொண்டு இருந்தது. அதைப் பார்த்து ரசிக்க யாருமே அங்கில்லை. அந்த மருமகன்தான் எவ்வளவு அதிர்ஷ்டக்காரன்.....
கடல் அன்றைக்கு இப்படி உத்தரிக்கவில்லை.....

00

( *ஷங்கர் Alias யாதவன் )

சுயாந்தன். 14/05/2020. 

00

Comments

Post a Comment

Popular Posts