நகுலனின் நங்கை

ஆண்களுள் சிறந்தாரை நம்பி என்றும் பெண்களுள் சிறந்தாரை நங்கை என்றும் கூறுவது நம் தமிழர் வழக்கு. கம்பர் திருமுடி சூட்டுப் படலத்தில் பூமியின் சிறப்பைக் கூறுவது போல் 
"நல் நெடும் பூமி என்னும் நங்கை" என்று குறிப்பிடுவார். இது பெண் மீது கம்பர் கொண்ட பெருமதிப்பு.  பெண்ணைப் பற்றிய கவிதைகள் பரிபாடல் தொடக்கம் இன்றைய கவிஞர்கள் வரையும்  எழுதி வருகிறார்கள். பலர் பெண்களைக் காதல் தேவதை என்றோ, கனவுக் கார்முகில் என்றோ இன்னோரன்ன வரிகளால் எழுதுகின்றனர். அதில் அனைத்துமே வாசிக்கும் படியாக இல்லை என்பது என் திண்ணம். 

ஒரு இடைக்காலப் பாடல் உண்டு. 
"நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திரப் பூப்பறித்தேன். நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி" என்று ஒரு சினிமா பாடல் உண்டு. அதில் எஸ்.பி.பி உருகிக் கரைந்து இசையைப் பகிர்ந்திருப்பார். அந்த நங்கை வெறும் சினிமாவுக்காக உருவாக்கப்பட்ட அற்பங்குறியீடு. இசை அதனை மிகையான மரியாதையாக்கி மலர்ந்தி விடுகிறது

இந்த நங்கை இப்போது நவீன கவிதையில் நந்நங்கை ஆக்கப்பட்டிருக்கிறாள். அவள் தத்துவத்தின் நித்ய சைதன்யம் போல் உருவகிக்கப்படுகிறாள். அவளுக்குக் குறிப்பான ஒரு பெயர் இடப்படுகிறது. அவள் இறந்த பின்னும் நினைவோடையில் அமரும் வேனிற்காலக் குயிலோசை போலத் தொடர்ந்து இசைக்கிறாள். அவளுக்கு ஓய்வு என்பதே இல்லை. ஆத்மாவைப் புணரும் கவிஞனின் வக்கிரம் போலல்லாமல் ஒரு போதம் இங்கு சொல்லப்படுகிறது. எல்லாமும் அவளாகிப் போனாலும் எதுவும் மாறவில்லை. மிகச் சாதாரண கவிதை இது. ஆனால் அசாதாரணமான தருணங்களில் ஓங்கி ஒலிக்கும். மரங்களுக்குக் கீழிருந்துதான் சகல சக்திகளும் போய்ச்சேரும். மேலிருந்து மழையும் வெயிலும் தாங்கி நிற்கும் மரங்களை மூழ்கடிக்கும். அதுதான் நகுலனின் சுசிலா. அவரது நினைவுப்பாதை ஆகட்டும் வாக்குமூலம் ஆகட்டும் யாவையும் சுசிலாவைத் தாங்கியே ஒலிக்கும். அது அசாதாரணமான வெளிப்பாடு. அனைவரின் படைப்புக்களிலும் ஒலிக்காத நந்நங்கையின் மீதான புனைவு. கம்பருக்கு நங்கை ஒரு பூமித்தாயாகவும், இளங்கோவுக்கு நங்கை ஒரு பிடாரியாகவும் தோன்ற நகுலனுக்கு நங்கை முதல்வி ஆகவும், நந்நங்கை ஆகவும் Promotion பெறுகிறாள். அது நினைவோடையில் இருந்து எழும் சித்திரம். எனக்கும் எக்காலத்துக்குமான ஒரு பெயருண்டு. அது மனோ என்பது போல ஒலிக்கிறது. அவள் என்னுள் இருக்கிறாள். அவளே அனைத்துமான நித்ய சைதன்யம். பெண்டிருள் சிறந்தவள் அவள் என்ற விகாசம் என்னை எப்போதும் வழிநடந்துகிறது தனிமையிலும், தூக்கத்திலும். 

00


"அவள் 
இகர முதல்வி
அவளை நான்
சுசிலா என்று
சொல்வதுண்டு
இது அகத்துறை
அவள் 
சேர நாட்டு நந்நங்கை
அவள் ஒல்லியாக இருப்பதால்
உயரமாகத் தோன்றுகிறாள்
அவள் 
அழகு சுமந்து 
இளைத்த ஆகத்தாள்.
அவள் நாம ரூபங்களைத் தாண்டிய 
நித்ய சைதன்யம்.

அவள் இப்பொழுது இங்கில்லை
என்றாலும் என்ன
அவள் ஆவி ரூபமாக
அனைத்துலகமாக
அகன்ற ஜோதியாக
இன்றும் என்னுள்ளில் 
நின்று ஜொலிக்கின்றாள்

அவள் இகர முதல்வி
அவளை நான் 
சுசிலா என்று சொல்வதுண்டு"
           -நகுலன்-
 

Comments

Popular Posts