கி.ராஜநாராயணனின் ஓர் இவள்.
நீண்ட நாட்களுக்கு முன்பு கி. ராஜநாராயணன் எழுதிய கோபல்லபுரத்து மக்கள் என்ற நாவலை வாசித்து இருந்தேன். உண்மையைச் சொன்னால் இலங்கையின் வட்டார வழக்குச் சொல்லுக்கும் கி.ரா புனையும் கரிசல் வெளிகளின் வட்டார வழக்குக்கும் கோடியளவு வித்தியாசம் இருந்தது. எனக்கு அப்போது சில சொற்களை உள்வாங்குவது கடினமாக இருந்தது. உதாரணமாக கரிசல் வழக்கில் கெளிமதம் என்றால் திமிர் என்று அர்த்தம். கெராக்கெட்ட என்றால் அதிர்ஸ்டம் கெட்ட என்று பொருள். இது போன்ற சொற்கள் எனக்குப் புதியவை. இதற்கு உதவியாகச் சில புரியாத பொருளை அறிய அகராதி உதவும் அல்லவா?. கரிசல் கதை சொல்லியின் புரியாத சொற்களை உள்வாங்க அவரே தொகுத்த "வட்டார வழக்குச் சொல்லகராதி" ஒன்றை வாங்கி அதன்மூலம் பொருள் கண்டுகொண்டேன். அகராதி கதையுடன் உட்செல்ல நமக்கு வெளியிருந்து உதவு தொழிநுட்பமற்ற சாதனம் எனலாம்.
கி.ரா |
நம்துணையானவர்களை நம்மால் எப்போதும் புரிந்துகொள்ள முடியாது. புரிந்து கொள்வது போல ஒரு பாசாங்கைச் செய்யலாம். இதனால்தான் என்னவோ நம் துணைகள் நம்முடன் சண்டையிடும் தருணங்கள் தோறும் "என்னைப் புரிந்து கொள்ளவே மாட்டியா" என்ற வினாவை எழுப்புகின்றனர். கி.ரா எழுதிய "ஓர் இவள்" கதையை வாசிக்கும் ஒவ்வொருவரும் இந்த உணர்வைக் கண்டடையலாம். கதையின் தொடக்கமே "மஞ்சம்மாவுடன் பத்துவருசம் குப்பை கொட்டியாகிவிட்டது. அவளை அவனால் புரிந்து கொள்ள முடியலைதான்" என்றுதான் அமையும். மிக அழகான கதை.
மஞ்சம்மா, கணவன், மூன்று பிள்ளைகள் இவர்களது வீட்டுக்கு பூனைக்குட்டி ஒன்று கொண்டுவரப்படுகிறது. அதன்மேல் கணவன் அதிக பாசம் காட்டுகிறான். அதனால் எரிச்சலடைந்து அவள் அந்தப் பூனைக்குட்டியைக் Corner செய்யப் பல வழிகளால் அவனுக்கு அறியப்படுத்துகிறாள். இவளை ஓரளவு புரிந்தவன் என்பதால் பெரிதாக எடுக்காமல் விடுகிறான். பின்னர் இவர்களது மூன்றாவது பையன் "பாண்டி" விளையாடுகிறான். அதை ஆரம்பத்தில் ரசித்துப் பார்க்கும் மஞ்சம்மா, பின்னர் கணவன் பூரித்துப் போய்த் தூக்கியதும், பையனைக் கண்டிக்கிறாள். பின்னர் குழந்தையைக் கொஞ்சுகிறாள். இது அவனுக்கு பாரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. கதையைக் குறுகச் சொல்லும்போது சாதாரணமாகத் தெரியும். ஆனால் கதைசொல்லிய நுட்பம், கற்பனைகள், நகைச்சுவை உணர்வு அனைத்துமே அபாரமானது. மிகச் சிறிய கதை. எவ்வளவு நுட்பங்கள் இதற்குள். பூனைக்குட்டி பற்றித் தந்தையின் வர்ணனையும், அருவித்துறையில் குளிக்கும் பெண்ணின் கூந்தலை வியக்கும் கணவனைக் கடியும் மஞ்சம்மா பற்றிய சித்திரமும் எவ்வளவு அழகானது. கரிசல் எழுத்தின் பீஷ்மர் மட்டுமல்ல கி.ரா, அவர் தமிழ் இலக்கிய மரபின் இரண்டாயிரம் வருடத்துத் தொடர்ச்சி. அவரது கதைகளை நாம் வாசிக்கும் போது எத்தனை வியப்பு. அவை அத்தனையும் அவரது நுட்பங்களாலும் வர்ணனைகளாலும் கதைசொல்லும் திறத்தாலும் ஆனது.
பெண்களின் மனம் ஆண்களிடம் எப்படி நெருங்குகிறது. அதனை எதிர்கொள்ளமுடியாத ஒவ்வொரு ஆணும் எப்படி முழிக்கிறான். எதில் ஒருவன் லயித்தாலும் இந்தப் பெண்கள்தான் ஒருவகை எதிர்ப்பை அல்லவா கூறுகிறார்கள். இது நமக்கான நம்துணைகளின் மனநிலையல்லவா?. அதனை நாம் பாசாங்குடன் தானே அணுகுகிறோம். கதைகளின் அழகியலை நாம் கி.ராவிடம் இருந்தே கற்றுக்கொள்ள வேண்டும்.
00
கதையிலுள்ள வட்டார வழக்குகளின் பொருள்.
1. காடி- கால்நடைகளுக்கான தீவனம், கூளம் போடும் பலகையமைப்பு.
2. மோக்கால்- நுகந்தடி.
3. திமிலோகம்- பரபரப்பு.
4. பிரியக்கால்- நிறைந்த பிரியம்.
5. கெச்சட்டம்- சந்தோஷ ஆரவாரம்.
Comments
Post a Comment