நதி காற்று நாம்.

பதின்ம வயதுகளில் காதல் என்பதைப் பிரசவிக்க ஆணுக்கும் பெண்ணுக்கும் கவிதை என்பதே அத்தியாவசியமான அணுவாக  இருந்தது. அதனால்தான் போல மனத்தின் செயற்பாடே கவிதை என்றும் குறிப்பிடுவர். எனது பதின்ம வயதுகளில் "யாயும் யாயும் யாராகியரோ" என்ற பாடல் பாடசாலை இலக்கியத் தமிழ் நூலின் மூலம் அறிமுகமாகியிருந்தது. அதைப்பற்றிச் சிலாகித்து ஒருசிலர் பேசிக்கொள்வர். அந்த ஒருசிலரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு மேற்கொண்டு பேசாத ஒருத்தனாக நான் இருப்பதுண்டு. இயற்கையையும் பருப்பொருட்களையும் கொண்டு அப்போது கவிதை எழுதும் மாணவனாக மாத்திரமே நான் இருந்துவந்தேன். காதல் கொள்ளும் நண்பர்கள் பலர் என்னிடம் கவிதை கேட்டு வாங்கித் தமது காதலை வளப்படுத்த முனைவர். பலருக்கு அது சாத்தியமாகியும் உள்ளது. "உனது கவிதையை நீ எழுது" என்று வியாக்கியானம் பேசும் அளவுக்கு கவிதையின் சித்திரங்கள் எனக்கு அப்போது விரிந்திருக்கவில்லை. இப்படி எழுதிக் கொடுப்பது என்பது எனக்கு அன்றை நாட்களில் ஒருவித பெருமையுணர்வாக இருந்தது. இந்த உணர்வு கவிதை பற்றிய தேடலை மிகக் குறுக்கியே வைத்திருக்கும் என்று சொல்லமுடியும். இன்றும் மொன்னைத்தனமாகக் கவிதை எழுதும் பலர் நமது பகுதிகளிலும், பொதுவான தமிழிலக்கியச் சூழலிலும் உள்ளனர். அந்தக் கவிதைகளை நாம் வாசிப்பது நமது நேரத்தை வீணடிக்கும் செயற்பாடு. பதின்ம வயதுக் காதலைப்போல உணர்வை மட்டுமே கொண்டியங்கும் தன்னுணர்வற்ற நிலை. 

00

நிலா நீ வானம் காற்று என்றொரு காதல் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன். இது மிக அற்புதமான மீட்டலைத் தரும் இசையால் ஆனது. இஸ்லாமிய சூபியிசமும் நவீன கலப்புத் தமிழிசையும் சேர்ந்து உருவான ஒன்று. பாடலின் தொடக்கம் சூபியிசத்தால் ஆனது.  இசை வெறுமனே தனியான மரபுக்கூறுகளால் உருவாக்கப்படும் போது அதன் அழகியல் சற்று ஆயாசத்தை உருவாக்கும். பல இசைமரபுகளின் கலப்பு என்பது நமக்கு புதிய சுகம் அளிப்பது. மரபான சங்கீதம் நம் பண்பாட்டின் தொடர்ச்சியை நமக்கு அளிக்கிறதென்றால், இதுபோன்ற கலப்பிசைகள் நம் பண்பாட்டு ரசனைகளையும் அழகுணர்வையும் இன்னொரு தளத்துக்குக் கொண்டு செல்கிறது. அல்லது அறிமுகஞ்செய்கிறது. இதில் "நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்" என்றொரு  வரி வரும். இது எனக்கு சுகுமாரனின் கவிதை ஒன்றை ஞாபகப்படுத்துகிறது. 

                                  சுகுமாரன்

"நதியோடு புரண்டோடிய
ஒரு குளிர் தருணத்தில் அசைவுகள் இழந்து
நானும் நீரானேன்

நான்
இன்னொரு நதி.

கால்பாவாமல் மிதந்திறங்கிய
ஒரு அடர்த்தியற்ற தருணத்தில் கனம் மறந்து
நானும் காற்றானேன்.

நான்
மற்றொரு காற்று.

நதி துழாவிய காற்றால் உடல் களைந்து உன் உயிர் வெளியில் படர்ந்த நேரம் நானும் நீயானேன்.

நான் 
உன் பிரதியுடல்"

    -சுகுமாரன். (பூமியை வாசிக்கும் சிறுமி)


                 . நிலா நீ வானம் காற்று

இன்னொரு நதியும், இன்னொரு காற்றும்  என்று உருவான ஒருவன், அந்த நதியும் காற்றும் பரவும் உடல்களற்ற ஆத்ம வெளியில் சங்கமிக்கிறான். அந்தச் சங்கமத்தில் அவன் அவளின் பிரதி உடல் என்றே ஆகின்றான். ஒரு நதியில் நனையும் ஒருவன் இன்னொரு நதியாகிப் போவது எத்தகைய தரிசனமாக இருக்கவேண்டும் பாருங்கள். அவன் நீராகிப் போவதே ஒரு ஜென் நிலை அல்லவா?. "சிவலிங்கம் என்பது ஒரு விதையாகும். மரம் வடக்கில் கங்கைக்கரையிலே இருக்கிறது. அங்கிருந்து பரவுகின்ற நதியுடன் நிலமெல்லாம் லிங்கம் முளைக்கின்றது" என்று ஒரு கதையில் எழுதப்பட்ட வரிகளை ஒன்றை வாசிக்கும் போது இந்த இரண்டும் எனக்குள் ஒரு உறவைக் கொண்டுவந்து சேர்க்கிறது. எப்படியான உறவு?. நாம் என்றோ, நமது ஆத்மார்த்தம் என்றோ பிறிதொன்றுடன் பிரதியாகும் நிலையன்றல்லவா இது. அதனை மெய்சுகம் என்றல்லவா நம் காதல் பாடல்கள் கூறுகின்றன?.  ஆனால் இதனை வள்ளுவர் சொன்னதுபோல  "உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு" என்று தானே சுகுமாரன் கூறுகிறார். காதலின் இணைவில் உடலுக்கும் உயிருக்கும் உள்ள வித்தியாசங்களை நமது காலத்தின் அன்றாடங்கள் நமக்குச் சொல்கின்றன. அதில் பிரதானமான ஊடகம் கவிதை. கவிதைக்குள் இருப்பது கவிஞனின் இன்னொரு உயிர்.

 

Comments

Popular Posts