ஊமைச்செந்நாயை வாசித்தல்


நீண்ட நாட்களுக்கு முன்பு ஊமைச்செந்நாய் தொகுப்பு வாசித்திருந்தேன். அதனைப் பற்றி எழுதவேண்டும் என்ற அவா அடிக்கடி எழும். பின்னர் புகைபோல வந்து மறைந்துவிடும். ஜெயமோகன் அண்மைய நாட்களில் மிக உச்சமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். தமிழில் முன்னெப்போதும் நிகழாத ஒரு கைங்கரியம் என்றே கூறமுடியும். அது மூன்று மாதங்களுக்கு உள்ளாக 69 கதைகளை எழுதிக்குவித்து விட்டார். இதனை வாசிக்க நான் தினமும் நள்ளிரவு பன்னிரண்டுமணிக்குத் தவம் கிடந்து, பின்னர் வாசித்துவிட்டே தூங்குவதுண்டு. ஒருசில கதைகள் வாசித்துக் கொண்டே இருந்தபோது தூங்கியிருந்தேன். காலை விழித்ததும் முதல் வேலையாக ஜெயமோகன் பக்கம் செல்வதுதான். 

ஊமைச்செந்நாய் தொகுப்பை நான் வாசித்து முடித்தபோது சிலகதைகள் எனக்குள் சன்னமாய் பாய்ந்துகொண்டே இருந்தன.

இத்தொகுப்பில் காடன்விளி, யட்சி, இரு கலைஞர்கள், திருமுகப்பில், காமரூபிணி, ஊமைச்செந்நாய், மத்தகம் என்று ஏழு கதைகள் இடம்பெறுகின்றன. 
 அவற்றின் வாசிப்பு அனுபவம் நெகிழ்வான ஒரு மனக்கனிவை எனக்குள் ஏற்படுத்திற்று என்றே கூறுவேன். துரையும் ஊமைச்செந்நாயும் ஒருபக்கம் கேசவனும் பெரிய தம்புரானும் அருணாச்சலனின் தம்பியும் என்று என் மனதுள் வியாபிக்கத்தொடங்கியது. இன்னொருபக்கம் யட்சியும் நீலியும் மேலும் தனது ஆணுடம்பை அறுத்து வீசிய நம்பூதிரியும் என்று நீளமான அமானுஷ்யங்கள். 

மத்தகம் கதை என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒன்று என்றே சொல்வேன். அதனை ஒரு குறுநாவலுடன் ஒப்பிடலாம். அனைவருக்கும் சாத்தியப்படாத அழகியல் கூறுகள் மத்தகம் கதையில் உள்ளது. எனது சிறுவயதில் யானையை மிருகக் காட்சிசாலையில்தான் கண்ட அனுபவம் உண்டு. வளர்ந்த பின்னர் கதிர்காமம் செல்லும் வழிகளிலும் கந்தளாயின் காட்டுப்பாதைகளிலும் மிகச்சாதாரணமாகப் பகலில் யானைகள் நடமாடும். அவ்வழி செல்லும்போது அவற்றின் நடமாட்டம் எனக்குள் பதகளிப்பை ஏற்படுத்தும். தந்தத்தில் ஏறி முத்தம் கொடுத்தால் என்ன என்றெல்லாம் தோன்றும். ஆனால் மிருகம் என்ற அந்நியநிலை என்னைத் தள்ளியே வைத்திருந்தது. ஒருசிலரிடம் அந்தக் காட்டுயானை பிச்சை வாங்கி சாப்பிடும். அவர்களில் சிலர் அதற்கு பழங்களைத் தூர இருந்தே வைப்பர். அதனைக் காண்கையில் மிக வேதனையாக இருக்கும். எங்கள் பகுதிகளில் யானை என்பது ஒரு காட்டு அரக்கன் என்ற சித்திரமே பரவலாக உள்ளது. அதனை எக்காலமும் நீக்கமுடியாது. அவற்றை வேட்டையாடும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழும். ஒரு யானையின் இறப்பினை நேரில் பார்க்கும் சாதாரண மனிதனுக்கு ஏற்படும் நெகிழ்வு அல்லது ஒரு துயரம் மத்தகம் கதையை வாசித்தபோது உணரமுடிந்தது. கதைசொல்லி கோரமானவன் என்பதை அவன் அருணாச்சலனிடமும் அருணாச்சலம் விரும்பிய பெண்ணிடமும் காட்டும் வக்கிர உணர்வில்  இருந்தே அறியமுடிகிறது. அதற்கு முன்பும் பின்பும் அவன் ஒரு நாயகன் என்ற தொனி எதிரொலித்தது. இறுதியில் அவனுக்கான நாயக பாவம் யானைமீதான கழிவிரக்கத்தில் இருந்து ஏற்றப்படுகிறது. இது எவ்வளவு பெரிய கதைநுட்பம். ஜெயமோகன் கதையின் கதைமாந்தர்களின் அநேக வேர்கள் இந்துஞான மரபின் தரிசனங்களால் உந்தப் பெற்றவர்களே. அந்தக் கதை மாந்தர்கள் தொன்மங்களின் நவீன வடிவம். மீள எழுதப்படும் வடிவக்காரர்கள். மத்தகம் கதையில் வரும் பெரியதம்புரான் நமக்கு எவ்வளவு பெரிய அவஸ்த்தையை மனதளவில் ஏற்படுத்துகிறார். அந்த அவஸ்தை மனிதனுக்கும் மிருகத்துக்கும் இடையில் ஏற்படுகின்ற காருண்ய உறவால் ஏற்பட்ட ஒன்று. அந்தக் காருண்யம் கடைசிவரை நீடிக்கிறது. ஆனால் அதன் தொடர்ச்சி வேறொரு வடிவில் தொடர்கிறது. அந்த யானையும் அவனை ஏற்றுக் கொள்கிறது. அல்லது அவன் அதனைத் தன்வயப்படுத்துகிறான். 

ஊமைச்செந்நாய் கதை ஒரு யானையை வேட்டையாடப்போகும் வெள்ளைக்காரன் பற்றியும் அவனுக்கு அடிமைச்சேவகம் புரியும் இந்திய மலைக்காரன் பற்றியதாகும். வெள்ளைக்காரன் அந்த இந்தியனை நாய் என்றே விழிக்கிறான். நாய் நமக்குத் தரும் சித்திரம் எவ்வகையானது?. அது ஒரு நன்றியின் குறியீடு. உதிரியாக அது ஒரு காவல்காரன்.  நாயை எவ்வளவு உதைத்தாலும், அடித்தாலும் அது எக்காரணம் கொண்டும் எஜமானை நீங்குவதில்லை. அந்தச் சித்திரத்தைப் புரட்டி இக்கதைமீது நாம் வைத்தோமாக இருந்தால் இக்கதை நம்மை நாயின் உலகுக்கோ வேட்டையாடும் வெள்ளையனின் கொடூர மனதுக்கோ கூட்டிச்செல்லும். இக்கதையில் ஊமைச்செந்நாய் என்பதை ஒரு மனிதக் கதாபாத்திரமாகக் கூட நம்மால் நினைக்க முடியாத அளவுக்கு அந்த வெள்ளையன்  நடத்துகிறான். அதுதான் ஜெயமோகன் கதைசொல்லும் நுட்பம். அடிமைச்சேவகன் யானைத் துப்பாக்கியை எடுத்துப் பார்க்கிறான். அதனைக் கண்ட துரை இனிமேல் துப்பாக்கி எடுத்தால் கொன்று விடுவேன் என்று வசவு மொழி பொழிகிறான். மேலும் மேலும் அச்சேவகனின் பிறப்புப் பற்றியும் கேவலமாகத் திட்டுகிறான். நாயின் குணம் பொறுத்தல் அல்லவா?. ஒரு கட்டத்தில் பெரும் யானையைத் தந்தத்துக்காக வேட்டையாடிய துரைக்கு காண்ணாடி விரியன் பாம்பு கடித்து விடுகிறது. அப்போது காடு முழுக்க   அலைந்து அவன் மருத்துவம் செய்து பிழைக்கவைக்கிறான். இதனால் வெள்ளையன் உருகிப்போகிறான். தானும் தனது நாட்டில் அடிமைதான். எந்த நிகழ்வுக்கும் போகமுடியாத ஒருவன் என்று உருகியுடைகிறான். என்ன வேண்டுமானாலும் கேள் என்று சேவகனிடம் கேட்கிறான். அவன் எதுவும் பறையாமல் இருக்கிறான். அவன்தான் ஊமைச்செந்நாய் ஆயிற்றே!. சேவகன் மீது காட்டு நாய்கள் குதறும்போது துரை காப்பாற்றிவிட்டு தனது பட்டியால் அவனை மீட்க முனைகிறான். அப்போது அந்தச் சேவகன் வெள்ளையனின் முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டு அந்தப்பட்டியில் இருந்து கையை விடுகிறான். இறந்து போகிறான். எவ்வளவு வைராக்கியம் அவனுக்குள் இருக்கவேண்டும். நாய் என்ற உணர்வைத் தனது மரணத்தின் தறுவாயில் அவன் கலைத்துப் போடுகிறான். அவன் தனது அடிமை வாழ்வினை உதறி எறிகிறான். எவ்வளவு அழுத்தமான கதையுணர்வு இது. அந்த யானையின் மரணத்தையும், வெள்ளையனின் மனமாற்றத்தையும், சேவகனின் மரணத்தையும் மீறி ஒரு இருவு முழுக்கத் தூங்கவிடாத சப்தம் இந்தக் கதைமீது பொழியப்பட்டுள்ளது. 

00

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலைப் பற்றி  நம்மாழ்வார் பாடிய திருமொழியில் வாசித்த அனுபவம் உண்டு. சைவர்களுக்கு எப்படி மாணிக்கவாசகரோ வைணவர்களுக்கு நம்மாழ்வார். நாஞ்சில் நாடன் கூட ஒரு கட்டுரையில் கூறுவார் தமிழை ஆழ்வார்களிடம் இருந்து கற்க வேண்டும் என்று. அதிலும் நம்மாழ்வாரின் பக்தித் தரிசனம் மிகச்செறிவான நயம்மிக்கது. திருமுகப்பில் என்ற கதையில் ஜெயமோகன் "அவர் அன்று கண்டதை பத்துவருடம் கழித்துத்தான் நான் கண்டேன்" என்று முடிப்பார். திருவட்டாறு ஆதிகேசவன் கோயிலில் படுத்திருக்கும் விஷ்ணுவைப் பார்த்துவிட்டுச் சென்ற காளி சரண் என்ற மேற்கிந்தியத் தீவுக்காரர் ஆதிகேசவனின் தத்துவத்தில் மூழ்கியிருந்தார் போலும். அவர் அன்று கண்டது என்பது என்ன என்று சொல்லாமல் விடுகிறார் ஜெயமோகன். அதாவது அது வாசகர் தெரிவு. அதற்கு நாம் பல தரிசனங்களை முன்வைக்கலாம்.  அண்மையில் நம்மாழ்வார் ஆதிகேசவன் கோயிலைப்பற்றிப் பாடிய பின்வரும் பாடல் ஒன்றை வாசித்திருந்தேன். அப்பொழுதுதான் இந்தக் கதையின் ஞாபகமும் வந்தது.  

"வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பல வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே"

அந்த கதையில் வரும் அறிதல் அல்லது காட்சியை இந்தப் பாடலில் நாம் காணமுடிகிறது அல்லவா?. "மா ஞாலம் பிறப்பு அறுப்பான் கேட்டாயே மட நெஞ்சே" என்பதை காளிசரண் கண்டுகொண்ட தரிசனமாக நாம் கண்டுகொள்ள முடியும். அத்துடன் கடவுளைக் கறுப்பு நிறமாகச் சித்தரிப்பது நாட்டார் தெய்வ வழிபாட்டின் நடைமுறை. ஆனால் விஷ்ணு இதில் மிகக் கரியனாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். "இதுதான் கடவுள், மனிதர்களின் கடவுள்" என்றும் காளிசரண் பிரமித்துச் சொல்கிறார். இது நம்மையும் நம் மரபையும் பிணைத்து வைக்கிறதல்லவா?. மனிதர்களின் கடவுள் என்பது எவ்வளவு உயரிய எண்ணம்.  தொகை மதங்களின் பன்மைத்துவத்தில் மனிதர்களின் கடவுள் என்பது மிக மிக அழுத்தமான அடையாளமாகும். 
கடவுளைக் கரியனாக உருவகிக்கும் இந்துஞான மரபின் மற்றொரு படிமம் இது. அதனால்தான் வெளியில் நிற்பவனுக்கு அது உலகளாவிய மனிதனுக்கான கடவுள் என்று உணர வைத்துள்ளது. 

00

"இட்டகவேலி நீலியும் மேலங்கோடு யட்சியும்" ஜெயமோகனின் குலதெய்வங்கள் என்று அடிக்கடி கூறுவார். அதனால்தான் என்னவோ தனது கொற்றவை புனைவிலும் "நீலி சொன்னது" என்றும் பல்வேறு கதைகளிலும் நீலியையும் யட்சியையும் ஒரு கதைப்பொருளாக அமைத்திருப்பார். யட்சி கதை ஜெயமோகன் சாகசப் பாணியில் எழுதிய ஒரு கதை. அதாவது தாய்- மகன் - பேத்தி என்ற மூன்று பேரின் உறவுத் தொடர்ச்சியில் தாய்- பேத்தி இருவருக்கும் இடையில் யட்சி பொதுவான குறியீடாகிறது. அதாவது அந்த குலதெய்வம் இவர்களைப் பின்தொடர்கிறது என்றல்லவா இந்த மரபைப் புரிந்து கொள்ளலாம்?. செயற்கையான முறையில்தான் தாய் தனக்கு யட்சி கதைகள் சொன்னாள் என்று மகன் நினைக்கிறான் (ஊகம்). ஆனால் தனது மகள் பைக்கில் சிறுகூந்தல் தீபரப்பிச் செல்கிறது என்று கதைசொல்லியாக உணர்வது அவருக்குள் யட்சி பற்றிய நம்பிக்கைகளைப் பரப்புகிறதோ என்று நமக்கு தோன்ற வைக்கிறது. ஆனால் முக்கியமான விடயம் யாதெனில் இங்கு ஈ.எம்.எஸ் என்ற கம்யூனிச அரசியல்வாதி பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. அவரது பிம்பம் உயர்த்திப் பிடிக்கப்படுகிறது. ஆனால் பாருங்கள் நீலி, யட்சி பற்றிய பிம்பங்களை அவர்களால் அப்புறப்படுத்தவே முடியவில்லை. இது மரபார்ந்த விவகாரம் அல்லவா?. 

இதுபோல்தான் இரு கலைஞர்கள் என்ற கதையும்.நாம் அழுவதைக் காண ஒரு நண்பனும், அதனை நிறுத்த ஒரு குருவும் தேவை. இந்தக்கதை எனக்கு ஞாபகப்படுத்துவது ஜெயகாந்தன்- இளையராஜா- ரமணர். ஆனால் சில இடைத்தொடர்புகள்தான் உள்ளன. இந்தக்கதை எழுத்தாளனுக்கும் இசையமைப்பாளனுக்கும் இடையில் உள்ள தியானம் தொடர்பான அறிநிலை என்றே வரையறுக்கின்றேன். 

00

ஜெயமோகன் கதைகளை வாசிக்கும்போது பரந்த அறிவும் பரந்த வாசிப்பனுபவமும் அடையலாம் என்பதைத்தாண்டி, அதனை அடைவதற்கு மேற்குறித்த இரண்டு தகுதிகளும் நம்மிடையே ஏற்பட்டிருக்க வேண்டும். காமரூபிணி கதை இவ்வகையான ஒன்று. அதில் அமானுஷ்யங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதுபோலத்தான் மத்தகம் கதையும். அதில் வரலாறு கொட்டிக்கிடக்கிறது. இப்படி இத்தொகுப்பினை யாவரும் வாசித்துப் புரியாமல் தலையைக் குடைவதைவிட்டுத் தகுதியானவர்கள் இதனுள் புகுந்தால் இன்னொரு கட்டத்துக்குக் கதைகள் உங்களைக் கூட்டிச்செல்லும். இன்று பலர் எழுதும் பேய்க்கதைகளும் தேவதைக் கதைகளும் ஜெயமோகனின் சாகசத்தின் உந்துதல்கள்தான். நம் சுயமறியும் தருணங்களாகக் கூட அவை அமையலாம். ஒரு சிறந்த எழுத்தாளன் தன் வாழ்நாளில் சாகசக் கதைகளை எழுதாமல் போவதில்லை. சாகசம் என்பது மானுடன் தன் உச்சத்தில் நிற்கும் ஒரு புள்ளி என்பது ஜெயமோகன் கருத்து. வாசகனின் உச்சம் என்பது அவன் அதனுள் தன்னை முயங்கச்செய்தலேயாகும்.  

Comments

Popular Posts