கருணாகரன்: ரத்தங்களின் எழுத்துச் சாட்சியம்.

கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தைப் பார்த்தபின் அத்திரைப்படம் வெளிவந்த காலத்தில் ஒருசிலர் எதிர்மறை விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். குறிப்பாக இனப்பிரச்சனை தொடர்பான தெளிவான சித்திரம் அதில் காட்சிப்படுத்தப்படவில்லை என்பதே அந்தச் சிக்கல்பாடு. அந்தத் திரைப்படத்தைப் பார்க்கும் போது பல யதார்த்தங்கள் தவறவிடப்பட்டு இருந்தன என்றே நினைக்கின்றேன். குறிப்பாக மாங்குளம் வழியான இடப்பெயர்வைக் காட்டுவதற்கு அங்கு புவியியல் அமைப்பாக மலை காட்டப்பட்டிருக்கும். இது எவ்வளவு பெரிய அபத்தம். மாங்குளம் முல்லைநிலம். பசுங்காடுகளை மட்டுமே நாம் காணலாம். இதுபோல ஏராளம் யதார்த்த ஒவ்வாமைகள் அதில் இடம்பெற்றிருக்கும். வணிக நோக்கத்துக்காகச் சினிமாவை எடுப்பவர்களிடம் நாம் நமது குரலை ஒலிக்கச் செய்யுமாறு கோருவது சாத்தியமற்ற ஒன்று. இந்தக் கருத்தை நான் இங்கே கூறக் காரணம் யாதெனில் தற்போதைய ஈழத்து இலக்கியங்கள்தான். இங்கு வலிப்து எழுதப்படும் கவிதைகள் இத்திரைப்படம் போன்று அதீத செயற்கைத்தன்மையால் ஆனவை. அவை இந்நிலத்தின் அசலைப் பிரதிபலிப்பவை அல்ல.

யாரைத் தொட்டாலும் அவர் முதலில் கவிஞராகிறார். குறிப்பாகக் கவிதை என்றால் என்ன, அதன் மீது எத்தனை மஹாகவிகள் நின்றார்கள், இன்றைய கவிதையின் திசை என்ன என்று அறியாத பலர் இன்று இங்கே கவிதை எழுதுகின்றனர். பெண்கள் பலர் இங்கே கவிதை எழுத வந்துள்ளனர். அது வரவேற்கப்படவேண்டிய ஒன்று. ஆனால் மொன்னைத்தனமாக எழுதிக்கொண்டு அதனைக் கவிதை என்று சொல்வதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தப் பொருளற்ற கவிதைகளை எழுதும் பெண்களை ஊக்குவிக்க என்றே ஒரு கூட்டமே இங்கே உள்ளது. உண்மையைச் சொன்னால் கவிதை இப்போது இங்கே எழுதப்படுவது இல்லை..அல்லது அதில் திருப்தி இல்லை என்றே கூறமுடியும். யுத்தகாலத்தின் சித்திரத்தை எழுதுகிறோம் என்று ஆயிரம் கவிஞர்கள் உண்டாகிறார்கள். சங்க இலக்கியத்தின் தொகுப்பில் முந்நூறாண்டுகள் ஆனது ஆயிரம் கவிஞர்கள் உருவாக. ஆனால் இங்கே அது விலக்காகியுள்ளது. 

நான் கருணாகரன் அவர்களின் கவிதைகளை வாசிக்கும்போது உணர்ந்த உண்மை யாதெனின், அவரது யுத்தச் சித்திரங்கள் அசலானவை. இவை பற்றிச் சில குறிப்புகளை இறுதியில் காண்போம். இது நினைவினைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது என்பதனால் அங்கும் இங்கும் கருத்துக்கள் சிதறியமையும்.

                             கருணாகரன்

00 

இலங்கை எழுத்தாளர் செ.கணேசலிங்கன் அவர்களுடைய சடங்கு நாவல்  வெளியீட்டு விழாவில் தி.ஜானகிராமன் விமர்சனம் என்பது கலைஞனுக்குத் தேவையற்ற ஒன்று, விமர்சனம் கலைஞனை அழித்துவிடும் தன்மையுள்ளது, இப்போது பூவைப் பிச்சு மோந்து பார்ப்பது போல விமர்சனத்தை ஆரம்பித்துள்ளனர் என்றும் கருத்துக்களைச் சொல்லியிருந்தார். அதற்கு சி.சு.செல்லப்பா முதிர்ந்த எழுத்தாளர்கள் இப்படிச் சொல்வது அழகல்வ என்று காய்ந்து தள்ளினார். இதனை சி.சு. செல்லப்பா வெளியிட்ட எழுத்து இதழைப் படிக்கும் போது அறியமுடிந்தது. வெங்கட் சாமிநாதனும், பிரமிளும் (தர்மு பிரசாத்) மேற்கொண்ட விமர்சன விவாதம் தமிழிலக்கியப் பரப்பில் பாரிய விவாதங்களை அவிழ்த்து விட்டது. இந்த விமர்சன மரபுக்கு நீண்ட வரலாறு உண்டு என்றே நினைக்கிறேன். ஆறுமுகநாவலரும் வள்ளலாரும் மேற்கொண்ட சனாதன சமயவாதம், இதே காலத்தில் சத்தியவேத பாதுகாவலன், இந்து சாதனம்  ஆகிய இரண்டு இதழ்களும் தமக்குள் பரஸ்பரம் மோதிக்கொண்டன. இந்தச் சமயவாதங்கள் பிற்காலங்களில் சிறு இதழ்களில் இலக்கிய மோதல்களாக மாறி அதன் மூலம் வாசகப் பரப்பும் கலைஞர்களின் படைப்பு எழுச்சியும் உயர்ந்தது என்றே கருதமுடியும். தி.ஜா கூறிய கருத்தை சி.சு. செல்லப்பா தீவிரமாக மறுத்திருந்தமையும் சி.சு எழுதிய மறுப்புரையும் விமர்சகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தது என்றே சொல்லவேண்டும்.  இந்த கலை விமர்சனம் ரசனை வெளிப்பாடுகளை ஆழமாகக் கொண்டதாகவே இருக்க வேண்டும். மாறாக இட்டுக்கட்டிய கோட்பாடுகளைக் கொணர்ந்து கலை இலக்கியங்களை அணுகுவது வரண்ட இலக்கிய வெளிப்பாடு என்றே கூறவேண்டும். தமிழின் படைப்பிலக்கிய மரபு செவ்வியல் இலக்கியங்களுடன் தொடங்குகிறது என்றால், அதன் விமர்சன மரபு அதற்கு உரை எழுதியவர்களுடன் தொடங்குகிறது. தொல்காப்பியர்தான் தமிழின் முதல் மரபார்ந்த விமர்சகர். 

கலை இலக்கிய விமர்சனம் தமிழின் படைப்பெழுச்சியைத் தீர்மானிக்கும் சக்தி. அது எப்போதும் அவசியமான ஒன்று. மௌனி எழுதிய "எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?" என்ற
வசனம் என்னை எப்போதும் தொந்தரவு செய்யும். அதனை நான் எப்படி வரையறுக்கிறேன் என்றால், இனங்காணப்பட்ட படைப்பு ஒன்றின் மீது விமர்சகனின் நிழல் விழவேண்டும். எது? எவை? எப்படி? எங்ஙனம்? என்ற கேள்விகள் இதனால் தொடர்ந்து எழும். இது இலக்கியத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல உதவும். 

நான் இலங்கையில் இருக்கின்ற காரணத்தால் இங்குள்ள இலக்கிய நிலவரங்களை முதலில் வெளிப்படையாக எழுதவேண்டும் என்று நினைக்கிறேன். இங்கு பிரதானமாக குழு மற்றும் பிரதேசவாத  இலக்கிய பிரார்த்தனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அது அழுத்தமான குறியீடாக அமைந்துவிடுகிறது. இதனால்தான் யார்பக்கமும் செல்லாத சுயாதீன இயக்கம் என்பது எமது இலங்கை தமிழ் இலக்கிய வளர்ச்சியில் இப்போது தேவையான ஒன்றாகவுள்ளது. துரதிஷ்டவசமாக இந்த சுயாதீனத்தின் குறியீடாக ஒருசிலரே இங்குள்ளனர். எமது மூத்த வழிகாட்டிகளான கவிஞர் கருணாகரன், கவிஞர் நிலாந்தன் (அரசியல் விமர்சகர்) போன்றவர்கள் எழுத்து உலகில் பயணிக்கும் நபர்களை ஊக்குவித்து வருகின்றனர். அல்லது வழிகாட்டுகின்றனர். தற்போது நிலாந்தன் பெருமளவு அரசியல் சித்தாந்தங்களைப் பற்றியே எழுதிவருகிறார். அவரால் எழுதப்பட்ட அரசியல் சார் கவிதைகள் சிலவற்றை இன்றும் மிகச் சிறந்தவை என்றே சொல்வேன். கருணாகரனும் அப்படியானவர்தான். இங்கு இலக்கியம் பேசும் பலர் தமிழ்நாட்டுக் எழுத்தாளர்களையோ, கவிஞர்களையோ பற்றி, நாம் சிலாகித்து எழுதினால் கடும் விமர்சனம் செய்துகொள்வர். அண்மையில் போகன் சங்கரின் கவிதைகள் பற்றி தொடராக எழுதி வந்தேன். அதற்கு சிலர் என்னை அழைத்து இங்குள்ள இயங்கும் கவிஞர்களைப் பற்றி எழுதுங்கள் என்றார். உண்மையில் அப்படி யார் இருக்கிறார்கள்?. அநேகமானவர்கள் கட்டுப்பெட்டிகள் தான்.  ஒன்று மொழிபெயர்ப்புக் கவிதையைக் கொணர்ந்து தான் எழுதியது என்று சொல்வது, இல்லை பட்டி மன்றத்தில் வாசிக்க வேண்டிய உணர்ச்சி வசனங்களைக் கவிதைகள் என்று கூறுவது. இதுதான் இங்கு கவிதைகள் பற்றிய நிலவரம். ஆனால் புனைகதை முயற்சியிலும் விமர்சனங்களிலும் சிலர் ஈடுபடுகின்றனர். குறிப்பாக இந்த இடத்தில் புனைகதைகளை எழுதிவரும் அனோஜனையும், ப. தெய்வீகனையும் (புலம்பெயர்ந்தவர்) குறிப்பிட முடியும். அனோஜனின் கதைகள் பதின்பருவங்கள் தாண்டியவர்களின் பாலியல் உணர்வுகள் தொடர்பாகவும், தெய்வீகனின் கதைகள் சிறந்த உரைநடையில் கதைசொல்லும் நேர்த்தியும், சம்பவத்தைச் சித்தரித்தல் தொடர்பான நுட்பமும் கொண்டவை. அண்மையில் அவனை எனக்குத்தெரியாது என்ற பெயரில் ஒரு கதை எழுதியிருந்தார். வாசித்தால் இது தெரியும். இதைவிட இந்தியாவில் இருந்து சில இலங்கை நபர்கள் எழுதிவருகின்றனர். அவர்கள் தம்மை பிரமிளின் அந்தஸ்துக்கு கொண்டுவரவேண்டும் என்ற வேட்கையில் எழுதித் தள்ளுகின்றனர். அவர்களது சில கதைகளும் குறிப்பிடத்தக்க முயற்சி என்றே கூறவேண்டும். 

கவிதைகள் பற்றியே பேசவேண்டும் என்று இந்தக் கட்டுரையை எழுதினேன். ஆனால் சில அபிப்பிராயங்களும் பேசவேண்டியாயிற்று. இலங்கையில் தமது வாசிப்பைத் தொடங்குபவர்களுக்கு அல்லது தொடங்கி அமரவும் முடியாமல் அலைபவர்களுக்கு நான் சில கவிஞர்களை முன்மொழிவதுண்டு. அதில் எந்த இலங்கைக் கவிஞர்கள்  இடம்பெறுவதில்லை. எமக்கு இரண்டு தலைமுறைகள் முந்திய முன்னோடியான கா.சிவத்தம்பி, கைலாசபதி போன்ற ஆய்வாளர்கள் கவிதைகளை கோட்பாட்டில் இருந்தே அணுகினார்கள். அது ரசனையில் பாரிய தேக்கத்தை உண்டாக்கியது. அதனைத் தவிர்க்கவும் கவிதைகளைப் புதிய தளத்தில் இருந்து நோக்கவும் இந்த முன்மொழிவு என்னிடம் நீண்ட காலமாகவே இருக்கும். தேவதச்சன், ஜெ.பிரான்சிஸ் கிருபா, தேவதேவன், கலாப்ரியா, சுகுமாரன், எம்.யுவன், க. மோகனரங்கன், யூமா வாசுகி போன்ற இன்னோரன்ன கவிஞர்கள் எனது தெரிவாயிருக்கும். யுத்தம் முடிந்த பத்து வருடங்களில் இதில் குறிப்பிட்டுள்ள சில கவிஞர்களே 
இங்கே அறிமுகமாகியுள்ளனர். தேவதச்சன், சுகுமாரன் போன்றவர்களை என் காலத்தின் பெருங்கவிஞர்கள் என்று நான் சொல்வேன். 

தேவதச்சனின் ஒரு கவிதை உண்டு.

"நினைவு என்றால் என்ன
அது ஒரு நீர் அருந்தும் மீன்வாய்.
நினைவு என்பது யார்
எங்கோ மணலில் அரைகுறையாய் 
புதைந்து கிடக்கும் 
ஒரு நண்டு.

நினைவு என்பது எதற்கு
ஆரம்பத்தை அடித்துத் துவைத்து
பிழிந்து பிழிந்து
தொங்கவிட.

நினைவு என்பது எங்கே
இதோ பனைக்குப் பனை தாவும்
செஞ்சூரியனின் விளிம்பில்.

நினைவு என்பது எப்போ
நீரை கீழிருந்து அல்ல
மேலிருந்து பற்றும் விரலில்
சொட்டும் அப்போ"

என்ன? யார்? எதற்கு? எங்கே? எப்போது? என்று ஒரு தத்துவ விவாதம் போல இந்தக் கவிதை நகர்கிறது பாருங்கள். நினைவு என்பது மீன்வாயா?. இதைக் கேட்கும் போதே எமக்குள் ஒரு அழகுணர்வு பற்றிக் கொள்கிறதல்லவா?. நீங்களும் நானும் மீன் நீர் அருந்துவதை கண்டிருக்கிறோமா. நினைவுகள் கடல் போலவா, குளம் போலவா, குட்டை போலவா, மீன் தொட்டி போலவா. இல்லை இல்லை அவை மீனின் வாய் போன்றவை. மனதுக்கு அடைக்கலம் தயும் எவ்வளவு அழகான கவிதை பாருங்கள். அதன் பின்னர் விரியும் கேள்விகள்தான் எவ்வளவுக்கு கவிதை மனதைக் கூராக்குகிறது. இந்தக் கவிதைப் பிரம்மம் தான் நான் கருதுவதும் வேண்டுவதும். 

சிறந்த காதல் கவிதைகளை நாம் குறுந்தொகையிலும் காணலாம், ஆண்டாள் பாசுரங்களிலும் காணலாம். ஆனால் சமகாலத்தில் காதல் கவிதைகள் எப்படி எழுதப்படுகின்றன. நிலா, தனிமை, மலர் இவைதான் அவர்களுக்குக் குறியீடு. ஆனால் இவற்றை வைத்துச் சிறந்த கவிதைகள் எழுதுபவன் தான் சிறந்த கவிஞன். அவன் நாம் கண்டடையாத வழிகளில் தனது கவித்துவக் காட்டாற்றைத் திறந்து விடுகிறான். க. மோகனரங்கன் எழுதிய உறங்காப்பத்து மிக நீளமான சிறந்த கவிதை. அது செவ்வியலின் வாசிப்போடு எழுதப்பட்ட படைப்பு. பழைய காலச்சுவடு இதழ்களைத் தட்டியபோது உறங்காப்பத்து என் கண்ணில் பட்டது. அதில் ஏழாவது பத்தில் ஒரு கவிதையுண்டு. கிட்டத்தட்ட திருவாசகத்தின் சாயலும் குறுந்தொகையின் மொழியும் கலந்த நவீன கவிதை. செவ்வியலுடன் சேர்ந்து பயணிக்கும் எந்தவொரு விமர்சகனும் பேசத்தயங்காத கவிதை உறங்காப்பத்து.
 
"காதலின் மிக் கணியிழையார் கலவியிலே விழுவேனை மாதொரு கூறுடைய பிரான்"

 என்பார் மாணிக்கவாசகர்.
 
"கைதொட எட்டி
கண்தொட எட்டாத
தொலைதூரம் வரை
கட்டமிட்டு நின்றன
ஸ்ருதி பாறைகள்
இசையின் வெளியில்
வட்டமிட்டது ஒருநிழல்" 

என்று பிரமிள்  பியானோ பற்றி எழுதிய கவிதை ஒன்றும் உள்ளது. 

அந்த மொழிகளுக்குரிய பிம்பம் மோகனரங்கனின் கவிதையில் 
எதிரொலிக்கிறது.
 
"கண் தொட எட்டாது
கை பட எட்டாது 
நழுவும் 
உனதுடலை
உச்சரிக்கத் தித்திக்கும் ஒரு
சொல்லாக்கி 
உள்ளுக்குமுள்ளே கிடத்தினேன்
உருவேறத் திருவாகிய அச்சொல்''

நவீன கவிதை என்பதே செவ்வியலின் வாய்ப்பாட்டையும் மரபின் கட்டற்ற தன்மையையும் உள்ளடக்கியதுதான். அதில் நவீன மனம் என்பது சுழலும் மையப்புள்ளிதான். நாம் வேண்டுவது இதுவல்லவா? எத்தனை காலங்களுக்குத்தான் வலிகளை மட்டுமே பாடுவோம். வலிகளையும் சேர்த்து செவ்வியலுடன் திணை துறை கடந்த பாடல்களையும் பாடுவோமே. அது தான் அன்புக்கும் படைப்பு எழுச்சிக்கும் நல் வெகுமானமாக இருக்கும். 

விமர்சனம் என்பது என்ன தி.ஜா சொன்னது போல தேவையற்றதா?. தேவதச்சன் சொல்லும் நினைவு போல கலையின் ஆரம்பங்களையும் மத்திகளையும் முடிவுகளையும் அடித்துத் தொங்கவிடும்  நாம் எல்லோரும் வேண்டும் கடும் பிரயத்தனம் அல்லவா?

00

கருணாகரன் எழுதிய படுவான்கரை குறிப்புகள் நமது காலத்தின் ஆவணம் என்றே சொல்லமுடியும். ஒரு யுத்தத்தை வார்த்தை எப்படி எதிர்கொள்ளும். ஒவ்வொரு வார்த்தையையும் கவிதைகள் எங்ஙனம் சுமந்து நிற்கும். நம்பிக்கையின்மையின், பெரும் இரத்தப் பிரளயத்தின் சுவடுகள் இக்கவிதைகளில் மேலோங்கி நிற்கிறது. 

"நான் எரிந்து கொண்டிருக்கும் சுடலை.
நான் எரிந்து கொண்டிருக்கும் பிணம்.
நான் எரிந்து கொண்டிருக்கும் உயிர்"

மீத்துயரை எடுத்து வைக்கும் வரிகளின் உள்ளர்த்தங்கள் பல உருவகத்தாலானது. இளம் உள்ளங்களின் அற்பமான வன்முறைகள் எதையும் சாதிக்காத தோல்வியால் ஆகிறது.

"காற்றிலே எழுந்து வானிலே உயர்ந்த வெற்றிக்கொடி காலடியில் வீழ்ந்து இரத்தச் சேற்றிலே புதைந்தது"

கவிதைகளில் இங்கு நிகழ்ந்த யுத்தச் சம்பவங்களை அழகியலுடன் இணைத்து அளித்தவர்கள் இருவர். ஒருவர் நிலாந்தன். மற்றையவர் கருணாகரன். இவர்கள் இருவரும் களத்தினில் இருந்தவர்கள். அந்தச் சம்பவங்களை கவிதையாக வெளிப்படுத்தியவர்கள். நிலாந்தனுக்கு ஒரு யுகபுராணம் என்றால் கருணாகரனுக்கு இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள். 

இரத்தங்களின் எழுத்துச் சாட்சியங்கள் இங்கு பலரால் செயற்கை முறையில் வியாபாரம் ஆக்கப்படுகிறது. பலர் போலியாக அழுது விசும்புகின்றனர். கப்பல்கட்டி நாடுபிடிக்க ஏங்குகின்றனர். நமக்கு இப்போது தேவை ஒரு படிப்பினைதான். கருணாகரன் எழுதிய நெருப்பைத் தின்னும் வாழ்க்கையின் நுனியில் அறுந்து தொங்கிச் சிதைந்த கனவிலும் மூண்டிருந்த தீ இன்று அணைக்கப்பட்டுள்ளது. அது முற்றிலும் அணைக்கப்படுவதே நமது படிப்பினையாகும். 


"யாரும் எதிர்பார்க்கவில்லை
அப்படித்தான் அது நிகழுமென்று ஆனால் அது நிகழ்ந்தது.

நீங்களும் நானும் சாட்சிகளாயிருந்தோம்
உங்களுக்கும் எனக்கும் சாட்சியாயிருந்தது அது.

அப்படித்தான் அது நிகழ்ந்து கொண்டிருந்தது
தியானத்தினுள்ளே சுடரும் ஒளியாய்"

Comments

Popular Posts